இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் வாழும் மனிதர்களாகிய எம்மிடம் எத்தனை எத்தனை விதமான வசதிகள் இருக்கின்றன. இயற்கையால் வந்த எத்தனை நோய்களை, இன்றைய விஞ்ஞான உலகம் முறியடித்து விட்டது. அதனால் போன நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களை விட இந்த நூற்றாண்டில் வாழும் மனிதர்கள் நோயற்று வாழ்கின்றனர். எனினும் எத்தனையோ புதுப்புது நோய்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. அளவுக்கு அதிகமான போக்குவரவு வசதிகளால், நாம் நடந்து திரிவதைக் குறைத்ததால் உடலின் எடை கூடி நோய்களுக்கு உள்ளாகின்றோம்.
அத்துடன் மோட்டார் வாகனங்கள் வெளிவிடும் அசுத்தக் காற்று, வளிமண்டலத்தை மாசுபடுத்துகிறது. புதிதாகப் பிறக்கும் குழந்தைகளும் அங்கக் குறைபாட்டுடனும் புத்திக்குறைபாட்டுடனும் பிறக்க அது வழிவகுக்கிறது. மாசுபடுத்தப்பட்ட காற்றை மனிதர் சுவாசிப்பதால் நோய்கள் உண்டாகின்றன. ஆனால் நாம் அவற்றைப் பற்றிய எதுவித சிந்தனையும் இன்றி, ஒவ்வொரு நாளும் வாய்க்கு உருசியான உணவைப்பற்றியும், எமதுடலின் அழகைப்பற்றியும், கவர்ச்சியான உடையைப்பற்றியும் சிந்திக்கிறோம்.
எனது உடல், எனது உணவு, எனது உடை என்று உடலுக்கே அழகு பார்க்கிறோம். ஆனால் மனித உடலோ
“இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய அத்தி வழும்பு ஒடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவம் அலால் உடல் ஒன்றெனலாமே”
- (திருமந்திரம்: 2125)
என்கிறார் திருமூலர்.
1. இதிலே இரதம் என்பது நாம் உண்ட உணவின் சாரமாகும் [chyme]. சாறு அல்லது சத்து என்றும் சொல்லலாம்.
2. உதிரம் என்பதை நாம் இரத்தம் என்றும் குருதி என்றும் சொல்கிறோம் [blood].
3. இறைச்சி எமது தசை [muscle].
4. தோல் [skin].
5. மேதை என்பது அறிவைச் சுட்டி மூளையைக் குறிக்கிறது [brain].
6. அத்தி என்றால் எழும்பு [bone]. இறந்தவர்களை எரித்தபின், மிகுதியாக இருக்கும் எரிந்த எலும்பை அத்தி என்போம் அல்லவா? எலும்பை நீரில் இடுதலை/சேர்த்தலை[அட்டல்] 'அத்தி அட்டல்' என்றனர். [அத்தி + அட்டல் = அத்தியட்டல்]. ஆனால் நாம் இன்று அத்தியட்டல் என்பதை அதன் பொருள் விளங்காது அந்தியட்டி என்றும் அந்தியேட்டி எனவும் எழுதுகிறோம், சொல்கிறோம். அந்தி வேளையிலா செய்கிறோம்? அதுவும் இல்லை.
7. வழு வழுப்பான தன்மையுடைய நிணத்திலிருந்து வரும் நிணநீர் வழும்பு எனப்படும் [lymph].
8. எலும்புக்குள் இருப்பது மச்சை [marrow].
9. சுக்கிலம் என்பது ஆண்களின் இந்திரியம் [semen]. பெண்களுக்கு சுரோணிதம் என்பர்.
இந்த ஒன்பது பொருளும் நமது உடம்பில் ஒழுங்காக இருந்தால் நோயின்றி வாழலாம். இவற்றை ஒழுங்காக இயக்குவது நாம் சுவாசிக்கும் உயிர்க் காற்றே. சுவாசிக்கும் காற்றில் மாசு இருந்தால் நோய்கள் வராமல் என்ன செய்யும்? அதனைச் சிந்தித்தால் காடுகளை அழித்து நாடுகள் நகரங்கள் கட்டி அழகு பார்க்க மாட்டோம். குப்பைகளை தெருக்களில் குவிக்கமாட்டோம். கழிவு நீரைத் தேக்கி வைக்கமாட்டோம். வீட்டில் உள்ளோர் யாவருக்கும் தனித்தனியே வாகனங்களை வாங்கி நிறுத்தமாட்டோம்.
அப்படி மனிதர் சிந்திக்காததனால் பாழாய்ப் போன நோயின் உருவமாக [பாழாம் உபாதி உருவம்] நிற்கிறோம்? எனவே நோயுள்ள எமது உடலை உடம்பு என்று எப்படிச் சொல்லலாம்? அதனாலேயே திருமூலர் பாழான நோய் உருவம் என்றார்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment