பூவுலகில் ஏன் பிறந்தேன்
இரவு வருவதாகச் சொன்ன காதலனின் வரவு பார்த்து காதலி ஒருத்தி, ஈழத்தின் மாந்தையில் நித்திரை இன்றி விழித்திருந்தாள். அவளைக் காண இரவென்றும் பாராது காதலன் வந்தானா இல்லையா என்பதை அறிய முடியாது துடித்தாள். அவளின் உள்ளத்துடிப்பை அறியாத அவளது வீட்டாரும் தூங்காது விழித்திருந்தனர். குளிர்காற்றும் வெளியே வீசியது. அக்காற்றில் மரத்து இலை குழைகள் வீழும் ஒலியும், புல்லசையும் சத்தமும் கூடக் கேட்டது. காற்றின் இரச்சலில் அவன் வந்ததற்கு அறிகுறியாகக் கொடுக்கும் சத்தம் கேட்கவில்லை. வெளியே எழுந்து சென்று வந்தானா என்று பார்க்கவும் முடியவில்லை.
அவள் காதலிப்பது வீட்டாருக்குத் தெரியாது. காதலனை எப்படிக் காண்பது? அவளுக்கு அவள் மேல் வெறுப்பு வருகிறது. அந்த வெறுப்பால் ‘இந்த உலகத்தில் ஏன் பிறந்தேன்’ என வருந்துகிறாள். அந்த வருத்தம் ஒரு நாட்டுப்பாடலைத் தந்தது.
காதலி: இல்லும் எதிரி இலை
குழையுந் தான் எதிரி
புல்லும் எதிரி இந்தப்
பூவுலகில் ஏன் பிறந்தேன்
- நாட்டுப்பாடல் (மாந்தை)
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
மாந்தைக் காதலி போலவே சங்ககாலத்திலும் காதலி ஒருத்தி, காதலன் வரவு பார்த்து நித்திரை இன்றிக் காத்திருந்தாள். ஆனால் அவர்கள் செய்து கொண்ட ஏற்பாட்டின்படி காணமுடியாது போய்விட்டது. அடுத்த நாள் அவனைக் கண்டபோது, அவன் வரவு பார்த்து முதல் நாள் தாம் விழித்திருந்ததை தோழி அவனுக்குச் சொல்கிறாள்.
“கொன்ஊர் துஞ்சினும் யாம் துஞ்சிலமே
எம்இல் அயலது எழில் உம்பர்
மயில்அடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே” - (குறுந்: 138)
‘பெருமைமிக்க ஊர் உறங்கினாலும், எமது வீட்டிற்குப் பக்கத்திலுள்ள எழில் மலையில் மயிலின் அடிபோன்ற இலையையுடைய நொச்சி மரக்கிளைகள் உதிர்த்த நீலமணி போன்ற பூக்கள் வீழ்ந்த சத்தத்தைக் கேட்டுக் கொண்டு நாம் உறங்காது விழித்திருந்தோமே’ என்கிறாள்.
மாந்தையின் நாட்டுப்பாடலைத் தந்த காதலிக்கு ஆறுதல் சொல்ல ஒரு தோழிகூட இருக்கவில்லை. அன்பாக ஆறுதல் சொல்லவும் யாருமில்லாத சலிப்பால் ‘ஏன் பிறந்தேன்’ என வருந்துகிறாள். சங்ககாலக் காதலிக்கோ தோழி இருப்பதால் ஆறுதல் கிடைத்தது. அவளது வாழ்க்கையில் சலிப்பு எற்படவில்லை. அந்த வேறுபாட்டை இந்த ஆசைக்கவிதைகள் எமக்கு எடுத்துச் சொல்கின்றன.
No comments:
Post a Comment