Monday, 3 June 2013

அச்சமில்லை அச்சமில்லை


இன்றைய உலகிலே பிச்சைக்காரர் இல்லாத நாடு இல்லை. பிச்சை எடுத்தல் என்பது மிகவும் தரக்குறைவான செயல் என்றும் தன்மானாம் உள்ளவர்களால் பிச்சை எடுக்க முடியாது என்றும் சொல்கின்றோம். ஆனால் பாரதியாரோ
“பிச்சை ஏற்று உண்ணும் வாழ்க்கை 
          பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை”
என்று முழங்கி இருக்கிறார்.

இதனால் ஒன்றைமட்டும் நாம் புரிந்து கொள்ளலாம். பிச்சை எடுப்பதும், தன்மானமும் வேறு வேறானவை. பிச்சை எடுப்பவனும் தன்மானம் உடையவனாக வாழலாம். தன்மானமுடையவனும் பிச்சை எடுக்க நேரிடலாம். ஈழத்தின் வன்னி மண்ணிலே தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழினம் இன்று உணவுக்கும், உடைக்கும், வாழும் வீட்டிற்கும் உலகநாடுகளிடம் பிச்சைக்கு கையேந்தி நிற்கின்றது. அதுமட்டுமா இளம்பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் தம் பிள்ளைகளின் நல் வாழ்வுக்காக நாளும் உயிர்ப்பிச்சை கேட்டு அலைகின்றனர். இதனால் அவர்களின் தன்மானம் போய்விட்டதா என்ன?

உலகின் அரசியல், பொருளாதாரச் சூதாட்டத்தின் இடையே ஒருவர் மாறி ஒருவர் ஈழத்தமிழினத்தைப் பகடைக்காயாகக் குலுக்கிப் போடுகின்றனர். உலகநாடுகளின் இந்தக் குலுக்கலில் தமிழினத்துக்கு பெரும்பயன் ஏதும் கிடைத்துவிடப்போவதில்லை. அவர்களிடும் பிச்சையை அவர்களே வேறுவழியில் சுரண்டிக் கொள்வார்கள். உலகநாடுகளின் வெகுமானத்திற்கு காத்திராது, தன்கையே தனக்கு உதவி என்பதை தமிழர்களாகி நாம் முதலில் உணர்ந்து செயல்பட வேண்டும்.

பிச்சை என்னும் சொல் பிறரிடம் கையேந்துதல் என்ற கருத்தை மட்டும் சொல்லவில்லை. அது வெகுமானம், பரிசு, மரியாதை, பாராட்டு, மேம்படுத்தல் என்ற பல கருத்துக்களில் சொல்லப்படும் சொல்லாகும். 
“பாத்திரம் அறிந்து பிச்சை இடு”
என்பது முதுமொழி. ‘அம்மா! தாயே! பிச்சை! என்று கூறி, பிச்சை எடுப்போர் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தையா இந்த முதுமொழி ‘பாத்திரம்’ என்று சொல்கிறது? 


இல்லவே இல்லை. இங்கே பாத்திரம் என்பது தன்மையைக் குறிக்கிறது. அவரவர் தன்மைக்கு, அல்லது அவரவர் தேவைக்கு வேண்டியதையே கொடுக்க வேண்டும். 

ஒரு குழந்தைக்கு பரிசுப்பொருள் ஒன்றை நீங்கள் கொடுக்க வேண்டுமானால் வளர்ந்தோர் பயன்படுத்தும் பொருளைக் கொடுப்பது சரியா? ஓர் ஆணுக்கு பெண்ணின் உடையைக் கொடுக்கலாமா? பனியில் நடுங்குபவனுக்கு எதைக் கொடுக்க வேண்டும், நெருப்பில் எரிந்தவனுக்கு எதைக் கொடுக்கவேண்டும் என்பதை நாமே முடிவெடுக்க வேண்டும்.  அதை உணர்த்தவே இந்த முதுமொழி எழுந்தது.

ஈழத்தில் வாழும் நம் தமிழ் உறவுகளைக் காக்கவேண்டிய மனிதநேயப் பொறுப்பு எமக்கு இருக்கிறது. உலக வல்லரசுகள் கொடுக்கும் பணத்தைவிடவா, புலம் பெயர்ந்து வாழுகின்ற நாம் கொடுத்து விடப்போகின்றோம், என நீங்கள் நினைக்கலாம். ஆனால் மழைத்துளியாக வீழும் சிறுதுளி பெருவெள்ளமாக ஓடுவதைப் பார்க்கிறோமே! அப்படி நாம் துளி துளியாகக் கொடுப்பதும் கோடியாக கோடானுகோடியாக மாறும். எடுத்துக்காட்டாகச் சொல்வதானால் இலண்டனில்  நூறு ஆயிரம் [100,000] ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு மாதத்திற்கு ஆளுக்கு ஒரு பவுண் கொடுத்தால் நூறாயிரம் பவுண் மாதம் சேரும். ஒரு வருடத்தில் எவ்வளவு இலங்கைக் காசு கிடைக்கும் என்பதை கணக்குப் பாருங்கள்.
1 ஆள் = £1.00
100,000 பேர் = £100,000.00
1 வருடத்திற்கு  = 12 x £100,000.00 = £1,200,000.00
அது இலங்கைக்காசாக மாறும்போது = 200 x £1,200,000.00 = Rs 240,000,000
இப்படி இலண்டன்வாழ் தமிழரில் நூறு ஆயிரம் பேர் மட்டும் கொடுத்திருந்தாலே இத்தனை வருடத்தில் எத்தனை பில்லியன் இலங்கைக் காசு நம் உறவுகளைச் சென்றடைந்திருக்கும்? 

புலம்பெயர் நாடுகளில் இருந்து எத்தனையோ அறக்காவலர்கள் நம்மவர்க்கு உதவி செய்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் தாம் கொடுத்ததை படமெடுத்து ஊடகங்களில் போட்டு உலகறியச் செய்கின்றனர். அந்தச் செயல் நல்லதல்ல. அவற்ருள்ளும் தமது உற்றாரின் நினைவு நாட்களுக்கு முதியோர் இல்லத்தில் வாழும் முதியோருக்கும் சிறுவர் இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்கும் உணவளித்து அவற்றைப் படம் எடுத்து வலைத்தளங்களில் போடும் நம்மவர்களையும் ஊடகங்களையும் என்னென்று அழைப்பது? தமது தாய் தந்தையரை தமது குழந்தைகளை எவராவது இப்படி படம் எடுத்துப் போட்டால் அவர்களது மனம் என்ன பாடுபடும் என்பதை ஒரு கணப்பொழுதாவது  சிந்தனை செய்யமாட்டார்களா? அச்சிறுவர்களில் சிலர் உலகமே வியந்து பார்க்கும் மேல் நிலைக்கு வருவார்கள். அப்போது அவர்களாகச் சொல்வது வேறு, நாம் இழிவுபடுத்துவது வேறு. 

நம் ஈழத்தமிழ் இனத்து இளம் தலைமுறையினர் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழவேண்டுமானால் வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாது கொடுங்கள். கொடுப்பதையும் மேடை போட்டு ஒலிவாங்கியில் சொல்லிக் கொடுக்காதீர்கள். அப்படிச் செய்வது இளம் தலைமுறையினரைக் கோழைகளாய் வாழ வழிசெய்துவிடும். ஒருவரின் திறமைக்கு மேடை ஏற்றிப் பெருமைப் படுத்திக் கொடுப்பது வேறு, இல்லாமைக்குக் கொடுப்பது வேறு என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். 

பிள்ளைகளின் கல்விக்கோ அன்றேல் தொழில் இல்லாதோருக்கு கைத்தொழிலை ஏற்படுத்திக் கொடுப்பதே நன்று. இருளில் வாழும் நம் உறவுகளுக்கு விளக்காக இருந்து ஒளிஏற்ற வேண்டிய கடமை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய எமக்கு இருக்கிறது.  எனவே பாத்திரம் அறிந்து பிச்சை இடுங்கள். எம் குழந்தைகளும் பாரதியார் சொன்னது போல 
“பிச்சை ஏற்று உண்ணும் வாழ்க்கை 
          பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை”   
என அச்சம் இல்லாது தலைநிமிர்ந்து ஈழத்தமிழர்கள் நாம் என மார்தட்டி வாழ்வார்கள்.

ஈழத்தமிழரின் விடியலுக்காக, புலம் பெயர்ந்து வாழும் லகத் மிழர் விளக்கு [உதவி] ஏற்றலாமே!
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment