Wednesday, 19 June 2013

குறள் அமுது - (68)

குறள்:
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியாஅம்
சொல்லிய வண்ணம் செயல்”                        - 664     

பொருள்:
ஒன்றைச் செய்வேன் என்று கூறுதல் எல்லோருக்கும் எளிதாகும். ஆனால் சொல்லியபடி அதனச் செய்து முடித்தல் அருமையாகும். 

விளக்கம்:
நமது மனதின் உந்துதலால் நான் இப்படிச் செய்வேன், அப்படிச் செய்வேன் என்று சொல்லுவதும், அதை அப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லுவதும் எல்லோருக்கும் மிகவும் இலகுவான காரியமாகும். சொன்னது போல் எவரும் செய்து முடிபதில்லை. அதனாலேயெ சொன்னது போல் செய்து முடிப்பது என்பது மிக  அரிய செயலாகும் என திருவள்ளுவர் இக்குறளில் கூறியுள்ளார். ஏனெனில் சொல்லுதலும் செய்தலும், சொல்வார் செய்வாரின் இயல்பைப் பொறுத்தது. 

சிலர் அரும்பாடுபட்டு தமது கருமமே கண்ணாகச் செய்து முடிக்கும் செயலை, பலர் பெரும்பாடுபட்டும் செய்துமுடிக்க இயலாது திண்டாடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அதற்குக் காரணம் சிலரிடம் இருக்கும் மனத்திடமும், விடாமுயற்சியும், சோம்பல் இன்மையும், தன்நம்பிக்கையும் பலரிடம் இருப்பதில்லை. ஒருசிலருக்கு கிடைக்கும் நல்ல அரிய வாய்ப்புகள் பெரும்பாலானோருக்குக் கிடைப்பதும் இல்லை. 

வாய்ப்புக்கள் கிடைத்தாலும் மனவலிமையுடனும், விடாமுயற்சியோடும், செயற்பட்டாலும் கூட எத்தனையோ நல்ல விடயங்கள் போட்டி பொறாமைகளாலும், இயற்கைக் காரணிகளாலும், பொருளின்மையாலும், ஏன் சில நாடுகளின் அரசியல் கெடுபிடிகளாலும் கூடச் சொல்லியபடி செய்யமுடியாது தடைப்படுத்தப் படுகின்றன.

திருவள்ளுவர் இப்படிக்கூறி இருக்கிறாரே என்று நீங்கள் செய்து முடிப்பேன் என்று சொல்லிய  செயலைச் செய்யாது இருந்துவிடதீர்கள். அப்படி மனிதன் இருந்திருந்தால் இன்றும் காடுகளில்  மிருகங்களோடு மிருகங்களாகவே வாழ்ந்திருப்பான். சொன்னதைச் சொன்னபடி செய்தல் அரிய செயல் என்று சொல்கிறாரே அல்லாமல் செய்யமுடியாது என்று சொல்லவில்லை. எனவே எந்த நல்ல செயலையும் சொல்லியபடி செய்து முடித்து அரியவர்களில் ஒருவராய்  வாழ்வோம்.

No comments:

Post a Comment