Tuesday, 25 June 2013

என் தமிழர் மூதாதை

எல்லோரா குகை

தமிழ் இலக்கியம், ஆழம் காணமுடியாத ஓர் அமுதக்கடல். அதனுள் சங்கத்தமிழ், இதிகாசம், புராணம், சமயம், பக்தி, கவிதை, இசை, நாட்டியம், வரலாறு, கிராமியம், பாமரம் என எத்தனையோ வகையான இலக்கிய ஆறுகள் சங்கமம் ஆகின்றன. அத்தகைய பெருங்கடலினுள் மூழ்கி முத்து எடுப்பதென்றால் முடிகின்ற காரியமா? எனினும் முயன்றால் முடியாதது ஒன்று இருக்குமா? மூழ்கினேன். முத்தை எடுத்தேன். கிடைத்ததோ அற்புதமான ஓர் ஆரணி முத்து. தமிழ் இலக்கியம் யாவற்றிலும் பவனிவரும் பேராளன், இலக்கியச் சுவையின் இனிமையில் மூழ்கையில் என்னைப் பலமுறை திகைக்க வைத்த அருளாளன். ஏழிசையாழ் இராவணன் என திருஞானசம்பந்தரால் போற்றப்பட்ட இசையாளன். அவனே எம் தமிழர் மூதாதை.

கதை கேட்கும் வயதில் என் பாடசாலை ஆசிரியரால் மிகவும் கொடியவனாக, காமுகனாக, அரக்கனாக வர்ணிக்கப்பட்டவன். ஆனால் என் தந்தையோ வல்லவன், நல்லவன் என்றார். இதில் யார் சொல்வது சரி? எதை நான் நம்புவது? எனக்குள் சிறு போராட்டம். 

தந்தையிடம் சென்றேன். ‘நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது?’ என்றேன்.

‘உனக்குச் சந்தேகம் இருக்குமானால் நான் சொல்வதை நீ நம்பாதே! இப்புத்தகங்களைப் படி. இவை என்ன சொல்கின்றனவோ அவற்றையும், அவற்றைச் சொன்னவர்கள் யார்? அவர்களுக்கு எம் மூதாதையர் என்ன மதிப்புக் கொடுத்திருந்தார்கள்? என்பதையும் கருத்தில் கொண்டு நீயே சிந்தித்து முடிவெடு’ எனக் கூறி, எனக்கு முன் இருபதிற்கும் அதிகமான புத்தகங்களையும், ஏட்டுச் சுவடிகளையும் கொணர்ந்து வைத்தார். 

அந்தக் குண்டு குண்டு புத்தகங்களிடையே ஐந்தாறு சிறு புத்தகங்களும் இருந்தன. என் வயதிற்குத் தகுந்தது போல் ஒன்றை எடுத்தேன். நேரு சிறையில் இருந்த பொழுது பிரியதர்சினிக்கு (இந்திரா காந்திக்கு), எழுதிய கடிதங்கள் அடங்கியது, அது. சிறுபிள்ளைகளுக்கு உலக வரலாற்றின் அரிச்சுவடியை விளக்கக்கூடிய நல்ல நூல். அதில் ‘இராமாயணப்போர் ஆரிய - திராவிடப் போரேயாகும். தென்னாட்டில் வாழ்ந்த திராவிடர்களைக் குரங்குகள் என்றனர்’ என நேரு குறிப்பிட்டிருந்தார். தமிழர்களையே அரக்கர்களாகவும் குரங்குகளாகவும் இராமாயணத்தில்  வர்ணித்திருப்பதை அதனால் அன்று அறிந்தேன்.

அடுத்து ‘போகர் தந்த பரிசு’ என்ற இன்னொரு மிகச்சிறிய புத்தகத்தை எடுத்தேன். போகர், பதினெண் சித்தர்களில் ஒருவர். அவரே நவபாசானத்தால் பழனி முருகன் சிலையைச் செய்தவர். சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கியவர். சித்த மருத்துவம் பற்றி போகரால் எழுதப்பட்ட பல நூல்கள் இருக்கின்றன. அவரோ இராவணனை மாபெரும் சித்தனென்றும், சித்த மருத்துவனென்றும் புகழ்ந்ததோடு அவனது நாட்டையும், கோட்டையையும் மட்டுமல்ல அவனது சமாதியையும் கூடக் குறிப்பிட்டுள்ளார்.

‘போகர் ஏழாயிரம்’ என்ற நூலில் இராவணனைப் போகர் இராவணனார் என பெருமதிப்புடன் குறிப்பிடுவதைக் கீழுள்ள பாடலில் பாருங்கள்.
“கூறுவேன் இலங்கைபதி மார்க்கந்தன்னை 
           கொற்றவனே புலிப்பாணி மைந்தகேளு
தேறுபுகழ் நவகண்டந் தன்னிலப்பா 
           தேர்வேந்தர் ராஜர்களின் கோட்டைதன்னில்
வீறுபுகழ் இராவணனார் கோட்டையப்பா 
           விண்ணாழி கோட்டையது விளம்பப்போமோ
மாறுபடாக் கோட்டையது வளப்பஞ்சொல்வேன் 
           மகத்தான வசதிகள் மெத்தவுண்டே”                  
                                                                            - (போகர் 7000, 6வது காண்டம் - 84)  
சிலேடையாக மனிதவுடலை இராவணன் கோட்டையாகக் குறிப்பிடுவதாயினும் இலங்கையையும் இராவணனையும் போகர் எத்தனை பாடல்களில் குறிப்பிடுகிறார் என்பதை இந்நூலைப் படித்து அறியலாம்.

சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களால் போற்றப்படுகின்ற பன்னிரு திருமுறைகளையும் பாடிய அருளாளர்களும் இராவணனின் பெருமையைச் சொல்வதைக் கண்டேன். மூன்று வயதில் தேவாரம் இயற்றத் தொடங்கிய திருஞானசம்பந்தர் முந்நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட தேவாரங்களில் இராவணனைப் பாடியுள்ளார்.
“கொடித்தேர் இலங்கைக் குலக்கோன்           
                                           - (ப.திருமுறை: 1: 33: 8)  
தென்னிலங்கையர் குலபதி                             
                                          - (ப.திருமுறை: 2: 107: 8 

திருஞானசம்பந்தர் முதலாம், இரண்டாம் திருமுறைகளில் 'இலங்கைக் குலக்கோன், தென்னிலங்கையர் குலபதி' என இராவணனக் குறிக்கக் கையாண்ட  சொல்லாட்சிகள் இராவணனை என் தமிழர் மூதாதையாக எனக்குக் காட்டியது. இந்தியாவில் இருக்கும் இலங்கையிலிருந்து பிரித்துச் சொல்வதற்காக, ‘தென்னிலங்கையர் குலபதி’ என்று  ஈழத்தின் திருக்கேதீஸ்வரப் பதிகத்தில் பாடியும் நாம் கண்டு கொள்ளவில்லை. 'இராவணன் மேலது நீறு' என்று அடிக்கடி மேடையில் சொல்வதைக் கேட்ட அளவுக்கு, ஒரு நாளாவது எந்த மேடையிலும் இலங்கைக் குலக்கோன்’ என்றோ தென்னிலங்கையர் குலபதி’ என்றோ யாரும் சொல்லக் கேட்டதில்லை. ஏன்? அப்படிச் சொல்வது கேவலம் என நினைத்து புறக்கணித்தோமா? புரியவில்லை. 

இலங்கையில் வாழ்ந்த தமிழர்களை இயக்கர் எனவும், நாகர் எனவும் அழைத்ததையும் கண்டேன். திருஞானசம்பந்தர் இராவணனை இயக்கரின் அரசனாகச் சொல்கிறார். 
“வானினொடு நீரும் இயங்குவோருக்கு
            இறைவனாய இராவணன்”                     
                                          - (ப.திருமுறை: 1: 53: 7)
இராவணன் காலத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்கள் வானிலும் [வானில் விமானத்திலும்] நீரிலும் [நீரில் கப்பலிலும்] இயங்கித் திரிந்ததால் இயக்கர் என அழைக்கப்பட்டனர் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். 

அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. இறைவனை இசையால் போற்றிப்பாடி, இறைவனுக்குப் பெயர் வைத்தவன் யார்? என்பதையும் கூறியுள்ளார். 
“சாமவேதமோர் கீதம் ஓதியத் தசமுகன் பரவும்
          நாமதேய முடையார்                             
                                        - (ப.திருமுறை: 2: 92: 8)
இராவணன் சாமகீதம்பாடி வணங்கிய பொழுது வைத்த பெயரே, இறைவனின் பெயராக நிலைத்து இருக்கின்றது என்கிறார். அவை மட்டுமல்ல, இறை என்ற சொல்லை நினைத்து நினைத்து பயிற்சி செய்து பழகியவனாம் என்பதை
இறை பயிலும் இராவணன்”                             
                                      -(ப.திருமுறை: 3: 66: 8)
எனக்கூறிப் போற்றியுள்ளார்.

இராவணன் யாழிசையில் வல்லவன் என்பதை 
ஏழிசை யாழ் இராவணன்”                            
                                     - (ப.திருமுறை: 3: 117: 8)
என்றும்
“விரலினால் நீடி யாழ் பாடவே                           
                                    - (ப.திருமுறை: 3: 24: 8)
எனவும் தேவாரத்தில் எடுத்துச் சொல்லி அவனை ஓர் இசையாளனாகக் காட்டியுள்ளார்.

இவ்வாறெல்லாம் திருஞானசம்பந்தர், தான் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாவது பாடலில் இராவணனைப் பாடியிருக்க, திருநாவுக்கரசர் பத்தாவது பாடலில் பாடியுள்ளார்.
“கங்கை நீர் சடையுள் வைக்க காண்டலும் மங்கையூட
தென்கையான் தேர்கடாவிச் சென்றெடுத்தான் மலையை” 
                                 - (ப.திருமுறை: 4: 34: 10)
தெற்கத்தையான் ஆன இராவணன் தேர் ஓட்டிச் சென்று மலையை எடுத்தான் எனக்கூறும் திருநாவுக்கரசரே 
தென்னவன் மலையெடுக்க சேயிழை நடுக்கம் கண்டு”   
                                 - (ப.திருமுறை: 4: 43: 10)
என இன்னொரு தேவாரத்தில், தென்னவன் என இராவணனைச் சொல்கிறார். 

பாண்டியர்களைத் தென்னவர் எனப் பேசும் சங்க இலக்கியமும் இராவணனையும் தென்னவன் என்றே குறிக்கின்றது. 'மதுரைக்காஞ்சி' பாடிய மாங்குடி மருதனார். 
“........ அமர் கடக்கும் வியன்றானைத்
தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின்”            
                                        - (மதுரைக்காஞ்சி: 39 - 40)
என்று ‘போரினை வெல்லும் மாபெரும் படையுடைய தென்னவன் என்னும் பெயருள்ள இராவணன் பகைவர்களால் நெருங்க முடியாத வலிமையுடையவன்’ என்கிறார், 

இப்படி இராவணனைத் தென்னவன் எனப்பாடிய மாங்குடி மருதனாரை
“ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி 
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பிற் 
புலவர் பாடாது வரைக என் நிலவரை”               
                                       - (புறம்: 72: 13 - 16) 
என தலையாலங்கானத்து செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் புறநானூற்றில் கூறியுள்ளான். 

சங்ககாலப் புலவர்களுக்கு தலைவனாக மாங்குடி மருதனார் இருந்திருக்கிறார். புலவர்களின்  பெருமதிப்பைப் பெற்ற மாங்குடி மருதனாரால் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு பாடப்பட்டதே மதுரைக்காஞ்சி. அதில் இராணனை 'தென்னவன்’ எனச் சொல்வதைப் பார்த்தோம். 

ஒன்றை நாம் இங்கு கவனிக்க வேண்டும். போராற்றல் மிக்க அரசனுக்கு முன் அவனது குலப்பெயரான ‘தென்னவன்’ என்னும் பெயரை ஓர் அரக்கனுக்கு சொன்ன புலவரை அவன் புகழ்ந்து பாடியிருப்பானா? அத்துடன் ‘தன்னை இகழ்ந்த அரசர்களை வென்று சிறைப்பிடிக்காவிட்டால் மாங்குடிமருதனைத் தலைவனாகக் கொண்ட புலவர்கள் என்னைப் பாடாது போகட்டும்’ என்று சபதம் செய்திருப்பானா? இதனால் விளங்கும் உண்மை என்ன? இரண்டாயிர வருடங்களுக்கு முன் இராவணன், தென்னவன் ஆகவே கருதப்பட்டான். பாண்டியருக்கும் இராவணனுக்கும் உள்ள தொடர்பை அறிய பாண்டியன் நெடுஞ்செழியனும், மாங்குடி மருதனாரும் உதவினர்.

கம்பராமாயணத்தின் ஊர்தேடு படலத்தில், சீதையைத் தேடி இராவணனின் மாளிகையினுள் நுழைந்த அநுமன், அங்கே கட்டிலில் நித்திரை கொண்ட இராவணன் மனைவி வண்டோதரியைப் பார்த்து, சீதையோ என எண்ணி
“கானுயர்த்ததார் இராமன் மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு
மீனுயர்த்தவன் மருங்கு தான் மீளுமோ நினைத்தது மிகை”                                                            - (ஊர்தேடுபடலம்: 201)
என்று சொல்வதைக் கம்பன் எமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார். இதிலே இராவணனை 'மீனுயர்த்தவன்' என்கிறார். மீன் கொடியை உயர்த்திய இராவணனின் பக்கத்தில் சீதை இருப்பாளா? அதிகமாக நினைத்துவிட்டேன், என்றானாம் அனுமன். மீன் கொடியை உடையவர்கள் பாண்டியர்களே.  இது அனைவரும் அறிந்த விடயம். கம்பனும் இராவணனை மீன்கொடியுடைய பாண்டியனாகக் காட்டுகிறார். கம்பனுக்கு பல நூற்றாண்டுகளின் முன் வாழ்ந்த உருத்திரனாரும்
“மாவிலங்கைப் பதியினிலே மகரவீணைக் கொடிதுலங்க
நீரிலங்கு நிலமெங்கும் நிறைபுகழை நட்டவனாம்”
                                       - (மாந்தை மாண்மியம்: 327)
என தாம் எழுதிய மாந்தை மாண்மியத்தில் இராவணனை மகரமீன் வடிவான வீணைக் கொடி உடையவனாகவே சித்தரிக்கிறார். 

அத்துடன் வடமொழி  நூல்கள், இராவணனை நாக அரசனாகக் குறிப்பிடுகின்றன. சங்க இலக்கிய நூலானா பரிபாடலோ மதுரையை நாக நாடு என்கிறது. எல்லோராக் குகைச் சிற்பத்திலும்  நாகர்களுடனே இராவணன் வைக்கப்பட்டுள்ளான். எல்லோராவில் உள்ள அவனது சிற்பத்தை மேலே பாருங்கள். இராவணன், 'காவடி தூக்குபவன்'  போல் அல்லவா இருக்கிறான்.

இராவணன் கைலைமலையை திட்டமிட்டு எடுக்கவில்லை என்பதை திருஞானசம்பந்தர்
“எண்ணமது இன்றி எழிலார் கைலை மாமலை எடுத்த திறலார்”
                                         - (ப.திருமுறை: 3: 77: 8)
எனக் கூற, சுந்தரமூர்த்தி நாயனார், இவர்களுக்கு எல்லாம் ஒருபடி மேலே போய் இராவணனுக்கு இறைவன் அருள்செய்த திறத்தைக் கண்டே தான் இறைவனின் திருவடியை அடைந்ததாகாக் கூறுகிறார்.
“எறியு மாக்கடல் இலங்கையர் கோனைத் 
          துலங்க மால்வரைக் கீழடர் திட்டுக் 
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டு
          கோலவாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன்”
                                      - (ப.திருமுறை: 7: 55: 9)
எனச் சுந்தரமூர்த்தி நாயனார் சொல்வதிலிருந்து என்ன தெரிகிறது? தம் முன்னோன் வழி நடக்கவே சுந்ரமூர்த்தி நாயனார் விரும்பியது தெரியவில்லையா?

இவர்கள்மட்டுமல்ல ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், திருமூலர், ஆழ்வார்கள், திருமாளிகைத்தேவர், கண்டராதித்தர், சந்தான குரவர், அருணகிரிநாதர், தாயுமானவர் போன்ற சான்றோர் பலராலும் பாடப்பெற்ற பெருந்தகை.

இவ்வளவு பெருமை எல்லாம் பெற்ற இராவணனை 'என் தமிழர் மூதாதையாக' இனங்காணக் காரணமாய் இருந்தவர்களில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ரா பி சேதுப்பிள்ளை,  புலவர் குழந்தையனார், பாரதிதாசன், சுத்தானந்த பாரதியார் போன்றோர் மிக முக்கியமானவராவர். அதிலும் பாரதிதாசனே “என் தமிழர் மூதாதை” என்று பொன்னெழுத்துக்களில் செதுக்கிக் காட்டியவர்.

“தென் திசையைப் பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடடா!
அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத்தமிழன் 
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடை கொடுக்கும் கையான்
குள்ளநரிச் செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்
என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்!
இராவணன் காண்! அவன் நாமம் இவ்வுலகம் அறியும்
.............................. தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும்  நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பெஎன் மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்”
என்று எடுத்துச் சொல்லி இராவணனைப் பற்றிய தேடலை என்னுள் அள்ளிவிதைத்தவர் பாரதிதாசனே. 

என் தமிழர் மூதாதையான இராவணனின் பெருமைகளை தமிழ்ச்சான்றோர்கள் எடுத்துச் சொல்லியும் நாம் அவற்றைப் புறக்கணித்ததால் இன்று மாற்றான் நாட்டு வீதிகளிலே நிற்கின்றோம். இனியாகிலும்  தமிழர் மூதாதையான இராவணன் பற்றிய உண்மைகளை அறிவோமா?
இனிதே,
தமிழரசி.
[1996ல் எழுதியது]

No comments:

Post a Comment