Friday, 7 June 2013

சங்கத்தமிழர் இசையில் யாழ்

படம் - வரலாறு.கொம்
உலகெலாம் பரந்து வாழும் இன்றைய தமிழன் தலைநிமிர்ந்து ‘நான் தமிழன்’ என்று பெருமிதமாகச் சொல்லி மகிழ்தற்காக, சங்கத்தமிழ்ச் சான்றோர் விட்டுச்சென்ற ‘நிலவறை நிதியமே’ சங்கத்தமிழ் நூல்கள் என்றால் அது மிகையாகாது. அந்த நிலவறையினுள் சென்று பார்ப்போமேயானால் இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், கட்டிடம், மருத்துவம், போர், தாவரவியல், விலங்கியல் வாழ்வியல் எனக் கலைச் செல்வங்கள் மண்டிக்கிடப்பதைக் காணலாம்.
எம் மூதாதையர் தேடிவைத்துச் சென்ற கலைச்செல்வங்களை மாற்றானுக்கு இரவல் கொடுத்து மறந்ததோடு, களவு கொடுத்தும் இருக்கிறோம். இன்று அவை மாற்றுடை உடுத்தியும், மறுபெயர் பூண்டும் எம்மிடமே திரும்பி வருகின்றன. அவற்றை எமது முன்னோரின் சொத்துக்கள் என்று அறிய முடியாதவர்களாக, மாற்றானின் கலைத்திறன் என அதிசயிக்கிறோம். இந்நிலை எமக்கு ஏன் வந்தது என்பதை, கலித்தொகையில் பாலைபாடிய பெருங்கடுங்கோ கேட்கும் கேள்விகளால் உணரலாம்.
“வீழுநர்க்கு இறைச்சியாய் விரல்கவர் பிசைக்குங்கோல்
ஏழும்தம் பயன்கெட இடைநின்ற நரம்பறூம்
யாழினும் நிலையில்லாப் பொருளையும் நச்சுபவோ?  
                                                             - (கலி: 8: 9 - 11)

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்?”   
                                                              - (கலி: 9: 18 - 19)

விரும்பிக் கேட்பவர்க்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்ற யாழை வாசிக்கும் போது, இடையே இருக்கும் நரம்பு ஒன்று அறுந்தால் ஏழு நரம்புகளும் பயன் அற்றுப் போகும். அத்தகைய யாழினும் பயனில்லாத பொருளையும் விரும்புவார்களா? ஏழு நரம்புகளால் யாழினுள் உண்டாகும் இனிய இசையானது பாடுபவர்க்கு, இரசிப்பவர்க்கு அல்லாமல் யாழுக்கு என்ன பயனைக் கொடுக்கும்?

மனித சிந்தனையைச் செதுக்கச் செய்யும் அற்புதமான கேள்விகள் இவை. இக்கேள்விகள் எடுத்தாளப்பட்ட காரணங்கள் வேறாயினும், இன்றைய தமிழர்களாகிய எம்மை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்விகளாகாக் கொள்ளலே மிகப் பொருந்தும்.

நாம் பொருள் பொருள் என்று பகட்டுக்கு மயங்கி, அல்லும் பகலும் உழைத்து எம்மையே அழிக்கிறோம். பொருளை விரும்பினோம். வள்ளுவன் சொன்ன செல்வங்களுள் தலையான செவிச் செல்வத்தை அள்ளி வழங்கும் இன்தமிழிசையைப் பாடாது புறக்கணித்தோம். ஆதலால் தமிழிசையையும் யாழையும் இழந்து நின்று, இன்றைய கர்நாடக இசைக்கு தமிழிசையே மூலம் என்பதையும் ஆய்ந்துணராது இருக்கிறோம். 

தமிழ்மொழி என்று தோன்றியதோ அன்றே தமிழிசையும் தோன்றிவிட்டது. தமிழ் தன் எழுத்தின் நீட்சியிலே இசை அமைதியை வெளிப்படுத்தும். அ.... ஆ ஆகும்போது [‘அ’ னா, ‘ஆ’ வென்னா ஆகும் போது] இசை தோன்றிவிட்டது. அதாவது குற்றெழுத்து நெட்டெழுத்தாக மாறுகையில் ஒரு மாத்திரை  [அ], இரண்டு மாத்திரையாகக் [ஆ] காலப்பிரமாணம் கொள்ளும் பொழுது இசை பிறக்கின்றது. இந்தக் கால அளவு தமிழிசைக்கு, ஏற்ற தாளத்தையும் தருகிறது.

இத்தகைய ஓர் அரிய மொழியை உருவாக்க எத்தனை ஆயிர வருடங்களாக அந்தச் சமுதாயம் இசையிலே மூழ்கித் திளைத்துப் பண்பட்டிருக்க வேண்டும்? இதனை
‘அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்”                            
                                                            - (தொல்: 1: 33)
எனத் தமிழ் இலக்கண ஆசிரியரான தொல்காப்பியர் உறுதி செய்துள்ளார். தமக்கு முன் வாழ்ந்த ‘யாழ்நரம்பு நூல்’ புலவர்கள் கூறுவதாக அவர் சொல்வதால் சங்ககாலத்திற்கு முன்பே தமிழிசை தோன்றி, யாழ் இலக்கண நூல்களும் உருவாகிவிட்டன என்பதை அறியலாம்.
கருக்கு வாள் அருள் செய்தான்

தான் பாடிய ஒவ்வொரு தேவாரப் பதிகத்திலும் எட்டாவது தேவாரத்தில் இராவணனைப் பற்றிக் கூறும் திருஞானசம்பந்தர்
ஏழிசை யாழ் இராவணனே”
                                                   - (ப.திருமுறை: 3: 117: 8)
விரலினால் நீடி யாழ் பாடவே
கருக்கு வாள் அருள் செய்தான்”                       
                                                   - (ப.திருமுறை: 3: 24: 8)
என்றெல்லாம் இராவணன் யாழ் மீட்டிப் பாடியதைக் காட்டி இதிகாச காலத்திலும் யாழிசை இருந்ததைச் சுட்டுகிறார்.

சங்கத்தமிழ் நூல்களிலே இசையமைக்கப்பட்ட நூல் பரிபாடலாகும். அது பழந்தமிழ் இசைக்கருவிகள் பற்றி பல செய்திகளைத் தருகின்றது. அத்துடன் சங்ககாலப் புலவர்கள் இசையமைபாளராக இருந்ததையும் ஒரு இசையமைப்பாளர் பாடலுக்கு வேறு ஒரு சங்ககாலப் புலவர் இசை அமைத்ததையும் காட்டுகிறது. 

சங்கத் தமிழர்கள் யாழிசையுடன் சேர்ந்து பாடியதை
“புரியுறு நரம்பும் இயலும் புணர்ந்து”              - (பரி: 18: 51)

“சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின்
காரெதிர் கானம் பாடினேம் ஆக”                 - (புறம்: 144: 2 - 3)

“விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணிக்
குரல்புணர் இன்னிசை தழிஞ்சி பாடி”             - (பதிற்: 57: 8 - 9)
என சங்கத்தமிழ் நூல்கள் எடுத்து இயம்புகின்றன. 

யாழிசைக்கு அடிநிலை ஒலியாக (ஆதாரசுருதியாக) குழல் இருந்ததை பாலைபாடிய பெருங்கடுன்க்கோ
“நரம்பின் தீங்குரல் நிறுக்குங் குழல் போல”      - (கலி: 33: 22)
எனச் செப்ப, யாழிசையும் பாட்டிசையும் ஒன்று சேர்வதற்கு ஆதாரசுருதியாக குழல் அமைந்ததை “குழல் அளந்து நிற்ப” எனக் கூறும் மையோடக்கோவனார், சங்ககால நடன அரங்கையே எமக்குப் படம்பிடித்து வைத்துள்ளார்.
புரிநரம்பு இன்கொளைப் புகல் பாலை ஏழும்
எழுப்புணர் யாழும் இசையும் கூடக்
குழலளந்து நிற்ப முழவெழுந்தூ ஆர்ப்ப
மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க      - (பரி: 7: 77 - 80)

இளங்கோவடிகளும் அரங்கேற்றுக்காதையில் மாதவியின் நடனத்தையும்
“குழல் வழி நின்றது யாழே”                          - (சிலம்பு: 3: 139)
என்று தொடங்கிக் காட்டுவதும் இங்கு நோக்கத்தக்கது.

யாழின் புரிநெகிழ்ப்பார் கை

“கவின்முகை கட்டவிழ்ப்ப தும்பி கட்டியயாழின்
புரிநெகிழ்ப்பார் போன்றன கை
'காந்தள் மொட்டுகள்  யாழின் நரம்பை நெகிழ்ப்பாரது கை போன்றிருந்தன' என்று நவிலும் இப்பரிபாடல் வரிகள், கைவிரல்களால் யாழ் நரம்பை நெகிழவைத்துச் சுருதி சேர்த்ததைப் பதிவு செய்துள்ளன.

பாடினி ஒருத்தி 
“வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்”   - (பொருநர்: 23)
யாழ் நரம்பை சீர் செய்து சுருதி கூட்டிய செய்தியை முடத்தாமக் கண்ணியார் தந்திருக்கிறார். 
வாரி - இது வார்தல் என்றும் சொல்லப்படும். சுட்டுவிரலால் யாழ் நரம்பை வாரி இழுத்தலாகும்.
வடித்தல் - சுட்டுவிரலையும் பெருவிரலையும் சேர்த்து யாழ் நரம்பை அழுத்தி இழுத்தலாகும்.
உந்துதல் - யாழ் நரம்பை மேலே இழுத்தலாகும்.
உறழ்தல் - யாழின் ஒரு நரம்பை விட்டு இன்னொரு நரம்பைத் தெறித்துப்பார்த்தலாகும்.

இப்படியெல்லாம் செய்து இசைக் கருவிகளூக்கு சுருதி சேர்க்க மிக மிக நுட்பமான ஒலியுணர்வு வேண்டும். அதாவது நுண் சுரங்களின் ஒலி வேறுபாட்டை உணர்வதற்குக் கூர்மையான செவிப்புலன் வேண்டும். சங்கத்தமிழர்கள் யாழின் சுர வேறுபாட்டைக் காதுகொடுத்துக் கேட்டு சுருதி சேர்த்ததை
“கைவைத் திமிர்பு குழல் காண்குவோரும்
யாழின் இளி குரல் சமங்கொள்வோரும்”     - (பரி:19: 41 - 42)
என்னும் நப்பண்ணனார் வாக்கை இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில்
“ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின்
ஒப்பக்கேட்கும் உணர்வினன் ஆகி”              - (சிலம்பு: 3: 59 - 60)
என வழிமொழிகின்றார். இளி - குரல் சமங்கொள்ளுதல் என்பது நரம்பைத் தளர்த்தியும் இறுக்கியும் இன்று நாம் வீணைக்கு ச  ப சுரங்களை (சட்ச பஞ்சம பாவம்) ஒப்பிட்டுப் பர்த்து சுருதி சேர்ப்பது போன்ற செயற்பாடாகும். 

சுருதி சேர்ப்பதைப் பழந்தமிழர் பண்ணல் என்றும் பண்ணு முறை நிறுத்தல் எனவும் அழைத்தனர். செவியை யாழ் நரம்புடன் ஒன்றவைத்து, நரம்பை மீட்டித் திவவினால் [நரம்பைத் தளர்த்தவும் இறுக்கவும் உதவும் உறுப்பு] சுருதி கூட்டி, யாழிசைத்துப் பாடிய அருளுடைய நெஞ்சினரை நக்கீரர் வரைகிறார்.
செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின்
நல் யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென் மொழி மேலவர் இன் நரம்பு உளர
நோய் இன்று இயன்ற யாக்கையர்”           - (திருமுரு: 140 - 143)

சுருதி சுத்தமான யாழிசையைக் கேட்டுக் கேட்டு சங்ககாலத் தமிழர்கள் இன்பம் நிறைந்த  நெஞ்சினராய், மென்மையாகப் பேசும் உயர் குணமுடையோராய், நோயற்ற உடலோடு வாழ்வாங்கு வாழ்ந்தார்கள். இது அவர்களது மேம்பட்ட வாழ்வியலைக் காட்டுவதோடு, நோயற்ற வாழ்வுக்கு மருந்தாகத் தமிழிசை இருந்ததையும் உணர்த்துகிறது.

கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇ

நரம்புகளின் சுருதியானது வெப்பநிலைகளின் மாற்றத்தால் மாறக்கூடியது. சுருதி சேர்க்கப்பட்ட யாழின் சுருதி மாறாதிருக்க பெண்கள் உடல்வெப்ப நிலையோடு அதற்குச் சுருதிகூட்டி மார்போடு அணைத்தபடி யாழை இசைத்தார்கள். இந்த அறிவியற் கருத்தை நெடுநல்வாடை தருகின்றது.
“தன்மையிற் திரிந்த இன்குரல் தீம் தொடை
கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇ
கருங்கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப    
                                                           - (நெடுநல்: 68 - 70)

பண் என்பது பாடலோடு பொருந்துவதாக இருக்க வேண்டும். 
“பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல்”       - (குறள்: 573)
இது வள்ளுவர் முடிவு.

காரைக்கால் அம்மையாரும் 
“துத்தம் கைக்கிளை விளரி தாரம்
உழை இளி ஓசை பண் கெழுமப் பாடி”                
                                                        - (ப.திருமுறை: 11: 1: 9)
இறைவன் ஆடியதைப் பார்த்து இரசித்துப் பரவசப்படுகிறார். அம்மையார் வரிசைப்படுத்தும் துத்தம் கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை எனும் இந்த ஏழு தமிழிசைச் சுரங்களில் ஓசையை இளங்கோவடிகள் குரல் எனக்குறிப்பது கவனிக்கத்தக்கது. இந்த ஏழு சுரங்களை பயன்படுத்திய சங்கத்தமிழ் இசையில் இருந்துதான் இன்றைய எழுபத்திரண்டு மேளகர்த்தா இராகங்களும் கர்நாடக சங்கீதமும் உருவானது என்பது யாவருமே மறுக்க முடியாத உண்மையாகும்.

இன்று சிலர் கர்நாடக சங்கீதமே உலக இசைக்கு மூலம் என்பதுபோல எழுதுகிறார்கள். அப்படி எழுதுவோர் ‘பழந்தமிழர் பண்ணமைந்த பாடல்களையே பாடினார்கள். அவர்களுக்கு இராகம் என்ற சொல்லே தெரியாது. ‘சதுர்த்தண்டிப் பிரகாசிகா’ என்ற நூலையெழுதிய வேங்கடமகி, எழுபத்திரண்டு மேளகர்த்தாக்களை உருவாக்கி, இராகம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்’ எனக் கூறுவது, பிழையாகும். வேங்கடமகி [கி பி 1625] பிறப்பதற்கு ஆயிர வருடங்களுக்கு முன் வாழ்ந்த திருநாவுக்கரசர் [கி பி 600] தமது தேவாரத்தில் 
“அந்தளி ராகம் போலும் வடிவர் ஆரூரனாரே”       
                                                   - (ப.திருமுறை: 4: 53: 5)
என 'இராகம்' என்ற சொல்லை எமக்காகப் பதிவு செய்து வைத்திருக்கிறார். திருநாவுக்கரசு நாயனார் பிறப்பதற்கு ஆயிர வருடங்களுக்கு முன்பே (கி மு 500) பண்டைத் தமிழர் வகுத்த தமிழிசையில் இன்று இருக்கும் 103 பண்களில் எத்தனை பண்கள் இராகம் என்ற சொல்லை முடிவாகக் கொண்டிருக்கின்றன தெரியுமா? நட்டராகம், நாகராகம், தக்கராகம், பழந்தக்கராகம், சோமராகம், மேகராகம், துங்கராகம், துக்கராகம், சீராகம், சூர்துங்கராகம் என ஒரு பட்டியல் இடலாம். எனவே இராகம் என்ற சொல்லை பழந்தமிழர் அறிந்திருக்கவில்லை என்று என்ன ஆதாரத்துடன் சொல்கிறார்கள் என்பது புரியாத புதிரே! 

பண் என்பதை இராகம் எனவும் நம் முன்னோர் அழைத்ததை இத்தேவாரம் காட்டுகிறது. சங்கத்தமிழர் யாழில் ஒரே பண்ணை முறையாக நிறுத்தி இசைத்ததோடு, பண்ணுப் பெயர்த்தும் (பண்ணை மாற்றியும்) இசைத்திருக்கிறார்கள். இன்னொருவகையில் சொல்வதானால் ஒரு பண்ணில் இருந்து இன்னொரு பண்ணைப் பிறப்பித்தல் எனலாம்.
“தீம்தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்கு        
                                                   - (பதிற்று: 65: 14 - 15)

ஆம்பல், செவ்வழி ஆகிய பண்களைக் கோவலர்கள் [இடையர்கள்] இசைத்தார்கள். அது உயிருருக்கும் இசையாக இருந்தது. 
“ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ
பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப
ஆருயிர் அணங்குத் தெள்ளிசை”                             
                                                    - (அகம்: 24: 12 - 14)

சங்ககாலத்தில் யாழிசையானது நகரங்களிலோ, பணக்காரரிடமோ முடங்கிக் கிடக்கவில்லை. கோவலரிடமும், பாவலரிடமும், பேரூரிலும், சிற்றூரிலும் விரவிக்கிடந்தது. அதை
“கைவார்நரம்பின் பாணர்க் கோக்கிய
நிரம்பாவியல்பிற் கரம்பைச் சீறூர்                         
                                                        - (புறம்: 302: 6 - 7)
என புறநானூறு எடுத்துக்காட்டுகிறது.

தாம் வாழ்ந்த நிலப்பண்புகளுக்கு அமைய காலங்களுக்கு ஏற்றவாறும், மனநிலைக்குத் தகுந்தவாறும், பண்ணமைத்து ஆண்களும் பெண்களும் வில்யாழ், சீறியாழ், பேரியாழ் என வகைவகையான யாழ்களில் பண்களை இசைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.
“சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி
யாழோர் மருதம் பண்ண”                                       
                                                         - (மதுரை: 657 - 658)

விளரி உறுதரும் தீந்தொடை நினையா”                
                                                          - (புறம்: 260: 2)

“நைவளம் பழுநிய நயம் தெரிபாலை”                    
                                                          - (சிறுபா: 36 - 37)

படுமலை நின்ற நல்யாழ் வடிநரம்பு”         - (நற்: 139: 4)

வில்யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி            
                                                             - (பெரும்பா: 182)

“தெறல் அருங் கடவுள் முன்னர் சீறியாழ்
நரம்பு இசைந்தன்ன”                                - (நற்: 189: 3 - 4)

“வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்
தொடைபடு பேரியாழ் பாலை பண்ணி”         - (பதிற்று: 46: 4 - 5)

பண்ணமைந்த யாழிசை தெய்வவழிபாட்டிலும், அறத்திலும், மறத்திலும், இன்பத்திலும் சங்ககாலத் தமிழருக்கு துணைநின்றது. அவர்களின் வீரவரலாற்றைக் கூறி எமக்கு அஞ்சா நெஞ்சமும், மான உணர்வும், நாட்டுப்பற்றும் தருவது புறநானூறு. அது தமிழரிசையினுள் யாழிசை வீரருக்கு வீரம் சேர்த்ததைப் பகரும். 

போர் முடிந்து வீரர்கள் வெற்றியோடு வீடு திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நகரமே மகிழ்ச்சியில் திளைக்கின்றது. ஆனால் அப்போரில் இறந்தவர்கள் எத்தனை பேர். கையிழந்து, காலிழந்து குற்றுயிராய் வருபவர் எத்தனை பேர்? பெண்களின் மனநிலை வீட்டுக்கு வீடு வேறுபடுகிறது. 

“அன்பான தோழியே! இவன் வேந்தனுக்கு உற்ற துன்பம் தீர்த்த பெருந்தகை. வீரநடை நடந்து வரும் இவன் காயப்பட்டுள்ளான். இரவ இலையும், வேப்பிலையும் வீட்டிலே செருகி, யாழொடு பல வாத்தியங்களை இசைத்து இவனைக் காப்போம் வா!” என தலைவி அழைப்பதாய்ப் புறநானூற்றில் அரில்சில்கிழார் ஒரு காட்சியைக் காட்டுகிறார்.
“தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க.....
............................ நெடுந்தகைப் புண்ணே”              - (புறம்: 281)

பறம்பு மலை [இன்றைய நிலை] - படம் விக்கிபீடியா

மூவேந்தர்களைப் பார்த்து, பறம்புமலையை உங்களது முயற்சியாலும் எடுக்கமுடியாது, போரெனினும் தரமாட்டான், ஆனால் அதைப் பெறும் வழி எனக்குத்தெரியும், சீறியாழ் வாசித்து விறலியர் பின்னேவர ஆடியும் பாடியும் பாரியிடம் சென்றால் அவனது நாட்டைப் பெறலாமெனக் கூறும் கபிலரின் மன ஆற்றலையும், யாழின் பெருமையையும் புறநானூறு பொதித்து வைத்துள்ளது. 
“தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன்
யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறே
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தல் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கு ஈயுமே”                                 
                                                         - (புறம்: 109: 13 - 18)

இவையாவற்றுக்கும் ஒருபடி மேலே சென்று 
“மேலோர் உறையுளும் வேண்டுநர் யார்
ஒருதிறம் பாணர் யாழின் தீங்குரல் எழ”                
                                                           - (பரி: 17: 8 - 9)
ஒருபக்கம் பாணரது யாழின் இனிமையான இசை எழுந்தால் தேவ உலக வாழ்வு யாருக்கு வேண்டும்? எனக்கேட்டு சங்கத்தமிழர் இசையில் யாழின் மேம்பாட்டை மிளிரச் செய்கிறார் நல்லழிசியார். சங்கத் தமிழ்ச்சான்றோர்கள் பெருமிதமாகச் சொல்லி மகிழ்ந்த யாழிசையைத் தந்த தமிழிசையையும் யாழையும் பேணாது மறந்த நாமும் தமிழர்களா?
இனிதே, 
தமிழரசி.

குறிப்பு: இவ்வாய்வு, ரசிகமணி டி கே சி [சிதம்பரநாத முதலியார்] அவர்கள் 'வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக நடந்து வரும் 'பொருநை இலக்கிய வட்டம்' (தமிழகம்) - 1000ஆவது வார நிறைவு விழா சிறப்பு மலர் - 2003ல் எழுதியது. பின்னர் 2007ல் இலண்டன் சுடரொளியிலும் வெளிவந்தது.

No comments:

Post a Comment