எப்போது நமது உடல் மண்ணோடு மண்ணாகும் என்பதை நாம் அறியமாட்டோம். ஆனால் என்றோ ஒரு நாள் நாம் எல்லோரும் அந்நிலையை அடைந்தே தீருவோம். அதில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருக்காது. நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்று, எப்போது நிற்கிறதோ அப்போது எமது உயிர் எம்முடலில் இருந்து போய்விடும்.
உயிர்க்காற்றாகிய ஒட்சிசன் இல்லாவிட்டால் நாம் உண்ணும் உணவு நம் உடலிமுள் சென்று சேராது. நம் உடலில் இருக்கும் இரத்தம், தசை, நரம்புகள், நிணநீர், மூளை, தோல், எலும்பு, எலும்புமச்சை, சுக்கிலம் போன்றவற்றின் உயிரணுக்கள் உயிர்வாழ்வதும் உயிர்க்காற்றாலேயேயாகும். ஆதனால் நம்முன்னோர் மனிதவுடலைக் காற்றடைத்த பண்டம் என்றனர்.
நம் உடலாகிய காற்றடைத்த பண்டத்தை மிக அழகு தமிழில் “காயமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்த பையடா!” என்றும் கூறினர். பலூனுக்குள் இருக்கும் காற்று பலூனைவிட்டுப் போனதும் தரையில் வீழ்ந்து அலங்கோலமாகக் கிடப்பதைப் போல மனிதர்களும் உயிர்மூச்சு போனதும் விறைத்த உடலாய் வீழ்கின்றனர். அப்படி உடல்கள் வீழ்வதைப் பார்த்த அனுபவமே ‘காயமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்த பையடா!’ எனச் சொல்லவைத்தது.
காயப்பை ஒன்று சரக்குப் பலயுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்கு உள்னின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே
- (திருமந்திரம்: 2122)
- (திருமந்திரம்: 2122)
என்று திருமூலரும் சொல்கிறார். காயம் என்பது உடம்பு. அதாவது தோலால் போர்த்த எமது வெளியுடம்பு. அதுவே காயப்பை. நம்மிடம் உடலாகிய ஒரு காயப்பை இருக்கிறது. அதற்குள் பலவைகையான சரக்குகள் இருக்கின்றன. அந்த சரக்குகளே எமது உடலை நோய்யில்லாது இயக்குகின்றன. அவற்றுக்குத் தூய காற்றும் உணவும் கிடக்காவிட்டால் நோய் உண்டாகும்.
நமது உடம்பாகிய காயப்பையினுள் [தூல உடலுக்குள்], மாயப்பை ஒன்று உண்டு [சூக்கும உடல்]. மாயம் - பொய்த்தோற்றம். நிலையான உடம்பு போன்ற பொய்த்தோறத்தைக் கொடுப்பது அந்த மாயப்பை. சூக்குமம் என்றால் கண்ணால் பார்க்கமுடியாத நுண்மையானது. அது அணுவினும் சிறியது என்பர். ஆனால் அதுவே எமது உடம்பு முழுவதும் நிறைந்தும் நிற்குமாம். அதைக் கொண்டு அகக்கண்ணால் மிகத்தொலைவில் நடப்பதையும் கேட்கலாம், பார்க்கலாம். அது ஒரு சிலருக்கே முடியும். ஒரு காயப்பையிலிருந்து, மாயப்பை இன்னொரு காயப்பையுள் புகுவதை நம் முன்னோர் கூடுவிட்டு கூடு பாய்தல் என்றனர்.
மாயப்பையினுள் இன்னும் ஒரு பை உண்டு. அந்தப்பை மாயாத பை. அதுவே நம் உயிர்ப்பை. எமது வினைப்பயனுக்கு தகுந்தது போல நாம் எடுக்கும் ஒவ்வொரு பிறவியிலும் காய்ப்பை மாறும். ஆனால் உயிராகிய கள்வனை வைத்திருக்கும் மாயப்பை உயிருடன் சேர்ந்தே திரியும். ஆனால் சாதாரண கண்ணுக்கு தெரியாது. திருவள்ளுவரும் உயிரானது இருப்பதற்கு இடமில்லாது உடம்பினுள் ஒண்டிக் குடித்தனம் இருப்பதாகச் சொல்வார்.
“புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு”
- (குறள்: 340)
- (குறள்: 340)
தூல உடம்பிற்குள் நிற்கும் போது அதனை உயிர், சூக்கும உடல் வழியாக இயக்கும். தூல உடம்பைவிட்டு உயிர் நீங்கும் போது சூக்கும உடம்பளவாய் உயிர் நிற்கும். [விண்வெளியில் ராக்கெட்டை இயக்கிச் சென்ற விஞ்ஞானி, ராக்கெட்டில் இருந்து இறங்கி விண்கல உடையோடு செல்வது போன்றது.]
பலவித பொருட்களை உடம்மெனும் பை வைத்திருக்கிறது. அதற்குள் மாயத்தோற்றத்தைத் தரும் மாயப்பை ஒன்று உண்டு. அந்த மாயப்பையினுள் இன்னொரு பையுண்டு. அது உயிர்ப்பை. உடம்பெனும் காயப்பையினுள் நின்ற உயிரெனும் கள்வன் புறப்பட்டால், மாயும் அப்பை மண்ணாகும். மாய் + அப்பை = மாயப்பை. அதனால் நாம் என்ன நடக்கிறது என்பதை அறியாது மயங்குகிறோம்.
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
இப்பாடலில் இரண்டு மாயப்பைகள் இருக்கின்றன.
முதலாவது மாயப்பை - பொய்யான தோற்றத்தைத் தரும் பை. அது சூக்கும உடல்.
இரண்டாவது மாயப்பை - மாயும் பை. அது தூல உடல்.
புக்கில் - நிலையான வீடு [சொந்தவீடு]
துச்சில் - ஒண்டி
No comments:
Post a Comment