Wednesday, 5 June 2013

தமிழ்வாழ வழிசெய்து வைப்போம்

எழுதியவர் - பண்டிதர் மு ஆறுமுகன்
1956

Old Parliament, Ceylon - Photo: source Wikipedia
ஈழமணித் திருநாட்டின் பாராளுமன்றத்தில் ‘சிங்களம் மட்டும் அரசகரும மொழி’ [Sinhala Only Official Language Act] என்ற சட்டம் 1956ம் ஆண்டு யூன் மாதம் 5ம் திகதி நிறைவேற்றப்பட்டது. அதற்குமுன் ஆங்கிலமே அரசகரும மொழியாக இருந்தது.
அந்தத் தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து, அன்றே இலங்கை பாராளுமன்றத்துக்கு முன்பாக, காலி முகத்திடலில் தமிழர்கள் சத்தியாக்கிரகம் இருந்தனர். அந்தச் சத்தியாக்கிரகத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்றனர். என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகனும் பங்கேற்றார். ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிங்களக் காடையர்களால் அவர்கள் தாக்கப்பட்டார்கள். எனினும் அவர்களைச் சிங்களவரே காப்பாற்றினர். அக்கலவரத்தின் பின்னர் எனது தந்தையால் அன்று இரவே எழுதப்பட்ட பாடல் இது:

ஈழமணித்திரு நாட்டில் - தமிழ்
       வாழவழி செய்து வைப்போம்
கோழைத் தமிழர் களாமோ - எவர்
       கூறுவர் முன்னின்று பார்ப்போம்

சிங்களம் நன்று தமிழ்தான் - இங்கு
       தீதென்று கூறிடப் போமோ
சங்கந் தெரிந்த தமிழை - எவன்
       தாழ்வு வரச்சதி செய்வான்

கல்லுருளைப் பெரும்பான்மைப் - பலம்
       காட்டி தமிழை மறைத்தார்
மெல்லத் தமிழன் விழித்தான் - இனி 
       மேன்மைத் தமிழ் அரசாளும்

மக்கள் அரசென்று கூறி - தமிழ்
       மாண்பை அழித்தல் அழகோ
இப்புவி வாழ்விற் தமிழர் - உயிர்
       இன்பத் தமிழை மறப்பரோ

வேற்றுமொழிபல கற்போம் - எங்கள் 
       மேன்மைத் தமிழை மதித்தால்
மாற்றுமொழி கற்று வாழ - நம்
       வாழ்வென்ன தெய்வ மருந்தோ

எண்சாண் உடம்பு வளர்க்க - எவன்
       இன்பத் தமிழை மறப்பான்
வெங்காயக் கோழை அலிகள் - எம்
       மேன்மைத் தமிழரில் இல்லை

தேவர் சமண முனிவர் - திருச்
       செல்வச் சமய குரவர்
நாவர் சங்கச் சான்றோர் - இன்று
       நம்நிலை கண்டு நகைப்பர்

 எலியென்ன செய்த ததனில் - நீ
       ஏற்றமாய் யாது செய்தாய்
புலியென்ன வாழ்ந்த தமிழர் - குலப்
       புதல்வர் தம்பாடு புகல்வாய்!

குறிப்பு:- 
இந்தச் சட்டமே தமிழ், சிங்கள் இனவாதத்துக்கு காரணமாக எழுந்த பல இனக்கலவரங்களை உண்டாக்கியது  . அச்சட்டம் நிறைவேறி 64 ஆண்டுகள் ஓடிவிட்டன.         

No comments:

Post a Comment