Friday, 31 May 2013

குறள் அமுது - (66)


குறள்:
“துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை”                            - 669

பொருள்:
மிகவும் துன்பம் வந்தாலும் துணிவோடு அதனைப் பொறுத்துக் கொண்டு இன்பம் தரும் செயலச் செய்து முடியுங்கள்.

விளக்கம்:
ஒருவர் தாம் செய்யும் தொழிலில் வைக்கும் மனஉறுதியே, செய்யும் தொழிலுக்கு வேண்டிய உறுதியைக் கொடுக்கும். மன உறுதி அற்றோர் செய்யும் தொழில் சிறக்காது. எனவே எடுத்த செயலை மன உறுதியோடு செய்து முடிக்க மிக்க துணிவு வேண்டும். ஒரு செயலைச் செய்ய ஏன் துணிவு வேண்டும்? என்ற கேள்வி எழலாம். ஒரு செயலச் செய்யும் போது பல இடையூறுகள், துன்பங்கள் அடுக்கடுக்காக வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாது மனம் சோர்ந்து போகாது இருக்க துணிவு வேண்டுமே. நீங்கள் செய்யும் செயல் உங்களுக்கு மிக்க இன்பத்தை அள்ளித்தருமாக இருந்தால்,  துன்பம் வந்தாலும் மனம் சோர்ந்து துவண்டு போகாத நெஞ்சத் துணிவோடு, செய்க!’ எனத் திருவள்ளூவர் கட்டளை இட்டுள்ளார்.

இக்குறளிலே ‘துணிவாற்றி’ என்றோர் அழகிய சொல்லை அவர் எமக்குத்  தந்திருக்கிறார். எமக்கு வேண்டிய துணிவை நாமே ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை துணிவாற்றி - துணிவை உண்டாக்கி என்ற பொருளில் தந்துள்ளார். நாம் செய்யும் செயலை முழுமையாகச் செய்து முடிக்கவேண்டுமா? அதற்கான மனவலிமையை நம்மையல்லால் வேறு யாரால் ஏற்படுத்தித் தரமுடியும்?

முடிவில் நிலைத்த இன்பத்தை அள்ளி வழங்கும் செயலைச் செய்யும்போது அதிக துன்பம் வரலாம். அதைப் பொருட்படுத்தாது துணிவோடு பொறுத்தும், பொறுக்கமுடியாத இடத்து எதிர்த்தும் நின்று அதனைச் செய்து முடிக்க வேண்டும்.

இன்றைய உலக அரசியற் சூழ்ச்சிகளால் நிலைகுலைந்து நிற்கும் தமிழராகிய எமக்கு இன்பத்தை அள்ளித்தர இருப்பது எதுவோ! அதற்காக இனியும் எத்தகைய பெரும் துன்பம் வந்தாலும் எல்லோரும் சேர்ந்து துணிவோடு அச்செயலை செய்து முடித்து வாகை சூட வேண்டும் என்பதற்காக திருவள்ளுவர் சொன்ன மிகவும் அற்புதமான திருக்குறள் என இக்குறளைச் சொல்லலாம். 

Wednesday, 29 May 2013

ஔவையார் பெண்ணை பேடு என்றாரா? - பகுதி 2


நம் பண்டைத்தமிழ் முன்னோர் உலகினில் பிறப்போரில் சிலர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறுவதையும், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுவதையும் அறிந்திருந்தனர். அதனால் இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் இலக்கண நூலோர் தம் தன்மையில் மாறுபடுவோரை தமிழில் அழைக்கும் சொல் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் இலக்கணம் வகுத்தனர். அதனைத் தொல்காப்பியமும்
"ஆண்மை திரிந்த பெயர் நிலைக்கிளவி
ஆண்மை அறிசொற்கு ஆகுடன் இன்றே”
என்று சொல்கிறது.

ஆண்மை தன்மையில் இருந்து மாறியவரது பெயர்ச்சொல் ஆண்மையை அறியும் சொல்லுடன் சேர்ந்து வராது. ஆண்மை அறி சொல் என்றால் என்ன? இவன் ஆண் என்பதை அறியும் சொல் - ஆண்பால் என்பதை அறியும் சொல். மருத்துவன், அமைச்சன், வந்தான், படித்தான் என ‘ன்’ ஆகிய னகர மெய் எழுத்தில் முடியும் ஆண்பாலைக் குறிக்கும் சொல் ஆண்மை அறிசொல்லாகும். ஆண் தன்மையில் இருந்து மாறி (திரிந்து), பேடான பின்னர் பேடி வந்தான் என்றோ, பேடி படித்தான் என்றோ வராது. பேடி வந்தாள் எனவும், பேடி படித்தாள் எனவும் வரும்.

இதேபோல் பெண்தன்மையில் இருந்து மாறியவரது பெயர்ச்சொல் பெண்மையை அறியும் சொல்லுடன் சேர்ந்து வராது. பெண்தன்மையில் இருந்து மாறி (திரிந்து) பேடான பின்னர் பேடன் வந்தாள் என்றோ, பேடன் படித்தாள் என்றோ வராது. பேடன் வந்தான் எனவும், பேடன் படித்தான் எனவும் வரும். இதனையே தொல்காப்பியர்

“ஆண்மை திரிந்த பெயர் நிலைக்கிளவி
ஆண்மை அறிசொற்கு ஆகுடன் இன்றே”
என்றும்

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே
உயர்தினை மருங்கின் பால்பிரிந்து இசைக்கும்”
என்கிறார்.

அதாவது பேடு மாற்றமடைகின்ற தன்மையைப் பொறுத்து ஆண்பால் பெண்பாலாகவும், பெண்பால் ஆண்பாலாகவும் சொல்லப்படும். 
“இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே”
என்பதால் சொல்லின் இறுதியைக் கொண்டு ஆணா, பெண்ணா என்பதை அறியமுடியாது என்கிறார்.

மகாபரதமும் ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறிய இரு பேடு பற்றியும் சொல்கிறது. அருச்சுனன், உருபசியின் சாபத்தின் மூலம் பிருகந்நளை என்ற பேடியாய் மாறினான் என்னும் இடத்தில் வீரம் மிக்க ஆண்மையாளனாகாக் சொல்லப்பட்ட அருச்சுனன், ஆண்தன்மை மாறி(ஆண்மை திரிந்து)  பிருகந்நளை என்ற பேடியாய் வீணனாய் நிற்கின்றான். பெண்ணாகப் பிறந்த அம்பை, பீஷ்மரால் பலவந்தமாகக் கடத்தப்பட்டு அவளது திருமணம் நின்றதால் சிகண்டி என்ற பேடனாய் மாறி பீஷ்மரைக் கொல்லுமிடத்தில் பேரழகுள்ள மங்கையாக சொல்லப்பட்ட அம்பை, பெண்தன்மை மாறி (பெண்மை திரிந்து) சிகண்டி என்ற பேடனாய் மாவீரனாய் நிற்கின்றாள். மகாபாரதம் மிக அழகாக ஆண் பேடியாக மாறுவதையும், பெண் பேடனாக மாறுவதையும் காட்டுகிறது. 

திருவள்ளுவர், ஆண்தன்மையில் இருந்து மாறி, பெண்தன்மை அடைந்த பேடியை, பயந்து நடுங்கும் தொடைநடுங்கியாக
“பகையகத்து பேடிகை ஒள்வாள்”
எனக்காட்டுகிறார்.

முதுமொழிக்காஞ்சியோ அஞ்சவேண்டியதற்கு அஞ்சாதிருத்தல் பேடியின் தன்மை என்கின்றது.
“கழி தறுகண்மை பேடியின் துவ்வாது”
அளவுக்கு அதிகமான வீரம் ‘கழி தறுகண்மை’ எனப்படும். பெண்தன்மையிலிருந்து மாறி ஆண்தன்மை அடைந்த பேடனை முதுமொழிக்காஞ்சி சொல்கிறது.

பேடியர் தமது கையை எருமையின் கொம்பு போல் வளைத்துப் பிடித்திருப்பர் என அகநானூற்றில் மருதனிளநாகனார் கூறியுள்ளார். இந்த உண்மையை நீங்கள் நேரிலும் சினிமாப்படங்களிலும் பார்த்திருப்பீர்கள். மணிமேகலை போன்ற சங்ககால நூல்களிலும் பேடுபற்றிய செய்திகள் இருக்கின்றன. எவருமே பேடு என்பதை பெண் என்று சொல்லவில்லை.

எம்மால் போற்றப்படும் சைவப்பெரியோர் என்ன சொன்னார்கள் பார்ப்போமா? திருஞானசம்பந்தர் இறைவனை
“பேடலர் ஆணலர் பெண்ணும் அல்லதோர்
          ஆடலை உகந்த எம் அடிகள்”
என்று மூன்றாம் திருமுறையில் கூற, 
“பெண்ணல்லை ஆணல்லை பேடுமல்லை
          பிறிதல்லை ஆனாயும் பெரியோய் நீயே”
என திருநாவுக்கரசர் ஆறாம் திருமுறையில் கூறியிருக்கிறார். இருவருமே பெண், ஆண், பேடு என மூன்றையும் கூறியிருப்பதைப் பாருங்கள். எனவே மனிதப்பிறப்பில் காலங்காலமாக பெண், ஆண், பேடு என்ற முப்பிறப்பும் இருப்பதைக் காணலாம். 

கல்வெட்டு : வரலாறு.கொம்

இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டில் கூட ‘பேடு’ எனும் சொல் எடுத்தாளப்பட்டு இருக்கிறது. அக்கல்வெட்டு, தேனிமாவட்டம் அருகே 2006ம் ஆண்டு பங்குனி மாதம் தஞ்சைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா இராஜனின் வழிகாட்டலில், அவரது மாணவர்கள் செய்த நடுக்கல் ஆய்வின் போது கிடைத்தது. அதில்
“கல் பேடு தீயன் அந்துவன் கூடல் ஊர் ஆகோள்”
என எழுதப்பட்டுள்ளது.

சங்ககால இலக்கியங்கள் நடுகற்கள் பற்றியும் ஆகோள் பற்றியும் நிறையவே சொல்கின்றன. ஆகோள் என்றால் பசுக்களை கவர்ந்து வருதலாகும். ஓர் அரசனின் போர் வீரர்கள், வேறோர் அரசனின் எல்லைக்குள் இருக்கும் பசுக்களைப் பிடித்து வருவார்கள். அதனால் இரு அரசர்களுக்கும் இடையே போர் நடக்கும். அக்கல்வெட்டு கூறும் பேடு தீயன் அந்துவன் அப்படி நடந்த போரில் இறந்துள்ளான். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய பேடன் என்பதை அவனின் பெயரைக் கொண்டு அறியலாம். அப்பெயர் தீயன் அந்துவன் என னகர மெய் எழுத்தில் முடிவதைப் பாருங்கள். அந்த நடுக்கல்லுக்கு உரிய பேடு தீயன் அந்துவன் - சிகண்டி போல் ஒருவரே.

இனி ஔவையாரின் பாடலுக்கு வருவோம்.   
“.............  கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது”
என்று சொன்ன ஔவையார் சங்ககால ஔவையார் போல இறுமாப்பு மிக்கவர். கம்பரையே
“எட்டேகால் இலச்சணமே! ஏமனேறும் பரியே!” என்றெல்லாம் திட்டி கடைசியில்
“ஆரையடா சொன்னாயடா” என்று கேட்டவர்.
அவரா பெண்களைப் பேடு என்று சொல்லியிருப்பார்?

“அரிது அரிது மானிடராதல் அரிது”
பெண்ணில்லாமல் எப்படி மானிடராக முடியும்?  பெண், ஆண், பேடு மூன்றையும் பெற்றெடுப்பவள் பெண் தானே! அது மட்டுமல்ல உலக இயற்கையின் உயிர்ப்பிலே உயிர்கள் யாவும் தொடர்நடை போடுவதும் பெண்ணாலே. பண்டைய தமிழ் இலக்கியங்கள் மானுடப்பெண்ணை, பேடு என்று சொல்லவில்லை. ஔவையார் பெண்ணைப் பேடு என்றாரா? நான் சொன்ன தரவுகளைக் கொண்டு நீங்களும் சிந்தித்துப் பாருங்கள் உண்மை புரியும்.
இனிதே,
தமிழரசி.

Tuesday, 28 May 2013

அடிசில் 56


சர்க்கரைப் பாணி [sharbat]
                                                                          - நீரா -
























தேவையான பொருட்கள்:
தண்ணீர்  -  500 மி.லீற்றர்
சர்க்கரை (சீனி)  -  250 கிராம்
குங்குமப்பூ  -  1 சிட்டிகை
ரோஸ் எசன்ஸ் - 1 தேக்கரண்டி

செய்முறை:
1. தண்ணீரில் சீனியைப் இட்டு கொதிக்கவைக்கவும்.
2. சீனி கரைந்து கொதிக்கும் போது குங்குமப்பூவும், ரோஸ் எசன்ஸும் சேர்க்கவும்.
3. பாணி கையில் ஒட்டாது, நீரில் விட்டவுடன் கரையும் போது இறக்கவும். (பாணியை நீரில் விட்டால் அடியில் உறைந்து கரையக்கூடாது).
4. இந்த சர்க்கரைப் பாணியை நீர்த்தன்மை இல்லாத போத்தலில் ஊற்றிவைத்து பாவிக்கவும்.
5. சர்க்கரைப் பாணிக்குள் பாலோ, நீரோ, இளநீரோ விட்டுக் குடிக்கலாம்.

பின்குறிப்பு:
1. ரோஸ் எசன்ஸுக்குப் பதிலாக நன்னாரி வேர், நெல்லிக்காய், பழங்களின் சாறு முதலியவற்றை இட்டும் சக்கரைப் பாணி செய்தும் பாவிக்கலாம். பனம்பாணி, பாலப்பாணி, நெல்லிப்பாணி, மாதுளம்பாணி என நம் முன்னோர் குடித்தனர். 
2. தமிழரின் சர்க்கரைப் பாணியே சர்பத் ஆனது என  முன்பு ஒருவர் எழுதி இருந்தார். அது ஆராயப்பட வேண்டிய விடயம்.

Monday, 27 May 2013

புயலடித்துச் சென்ற வள்ளம்

எழுதியவர் - பண்டிதர் மு ஆறுமுகன்
[தினகரன் ஞாயிறுவாரமலர், கொழும்பு; 11/02/1951]
                    
புயல் அடித்தது! பெரும் புயல். 
அது ஆயிரத்துத் தொளாயிரத்து இரண்டாம் ஆண்டு இருபதாந்தேதி அடித்தது.
நயினாதீவிலும் நல்ல புயல்.

எத்தனயோ தென்னை, பனை, வாழை இவையெல்லாம் முறிந்து பெயர்ந்து தரைமட்டமாயின. கடல் வீறிட்டுப் பெருகி அலைமோதியது. சனங்கள் வீட்டுக்கு வெளியே போகமுடியவில்லை. அப்படியே இருந்து விட்டார்கள். என்ன செய்வார்கள்? புயலுடன் பெரிய மழையும் ‘சோ’ எனப் பொழிந்தது.

அன்று இரவு புயலும் மழையும் இன்னும் மோசமான நிலையை அடைந்துவிட்டன. கடல் பெருகிக் குதித்து ஓடியது. ஆதலால் கடற்கரையில் வழக்கமாகக் கட்டிவைக்கும் வத்தைகள், வள்ளங்களைத் திரும்பவும் பெலமாகக் கட்டி வைக்கமுடியவில்லை.

இலங்கையில் முதற்தரமான குளிகாரர் நயினாதீவில் இன்றும் இருக்கிறார்கள். கீழைக்கரை ஓரக்காரர் இவர்களிடம்தான் குளியோடப்பழகியவர்கள் என்றுகூடச் சொல்வார்கள். அத்தகைய வீராதிவீரர் நயினாதீவில் உள்ள குளிகாரர். அவர்களால் கூட அந்த வள்ளங்களைப் பெலனாகக் கட்டி வைக்கக் கொந்தளித்த கடல் அன்று இடங்கொடுக்கவில்லை. இயற்கை சீறினால் அதனோடு மனிதவலிமை போராட முடியுமா? ஆகவே நடப்பதைக் கண்டு கொள்வோமெனப் பேசிக்கொண்டு அனைவரும் வீடுகளிலே இருந்தார்கள்.

“வெட்டி அடிக்குது மின்னல் - கடல்
          வீரத்திரை கொண்டு விண்ணைப் பிளக்குது
கொட்டியிடிக்குது மேகம் - கூ
          கூவென்று விண்ணைக் குடையிது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
          தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய - மழை
          எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!”
 என்ற மகாகவி பாரதியார் பாடலை நயந்து உறுமிக்கொண்டிருந்தது அந்த இரவு. 


அதிகாலையில் சேவல்கள் கூவவில்லை. மயில்கள் அகவவும் இல்லை. ஏன்! பட்சிகள் எல்லாம் குளிரில் நடுங்கும் ஓசையொழிய வேறு வழக்கமான ஆனந்தப் பாடல்கள் எவையும் நடைபெறவில்லை. ஆதலால் அன்று காலை சோகக்காட்சியையே இயற்கை சித்திரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பரிதாபமான நிலையைப் பார்த்துப் புயலும் மழையும் சிறிது ஓய்ந்தன. இரவு முழுதும் எப்பொழுது விடியுமென அவாவுடன் இருந்த வள்ளக்காரர் (பழய கறுப்பன் தன்னுடைய பணத்தைப் பார்க்கப் பாராங்கல்லைப் புரட்டப் போன) ஆசையோடு ஓடிப்போனார்கள். அவர்களுக்கு முன் மனங்கள் துடித்துக் கொண்டு போயின. அதிட்ட சாலிகளின் வள்ளங்கள் கட்டுப்பட்டபடியே கிடந்தன.

ஆனால் தெற்கு நயினாதீவில் ‘நீலாத்தை’யுடைய வள்ளத்தைக் காணவில்லை. கட்டி இருந்த கயிறு அறுந்து கிடந்தது. நயினாதீவுக் கரையெல்லாம் ஓடியோடித் தேடினார்கள் காணவில்லை. கண்ணுக்கு எட்டு மட்டும் பார்த்தார்கள் காணப்படவேயில்லை. இவர்களுடைய வள்ளம் ‘முத்துக்கொம்பன்’ - “அது அறுத்துக் கொண்டு போய்விட்டது.” என்ற வதந்தி அவசர தந்தி போல் நீலாத்தை வீட்டிலுள்ளாருக்கும் எட்டியது. அவர்களும் கடற்கரைக்கு ஓடிப்போனார்கள். செகிடாத்தை கதிர்காமர் அவர்களுள் முக்கியமானவர். முத்துக்கொம்பன் வந்த பின்புதான் அவர்கள் குடும்பத்துக்கு ஊரவர்கள் பெரிதும் கடமைப்பட்டார்கள். கட்டப்பட்ட முத்துக்கொம்பன் கயிற்றை அறுத்துக் கொண்டு போய்விட்டது. அது இல்லாமல் அவர்கள் குடும்பம் இனி எப்படி வாழ்வது? என்ற கவலை நீலாத்தையை ஒரு உலுப்பு உலுப்பியது. கடற்கரையில் விழுந்து கதறினார். குடும்பத் தலைவன் நிலைதளர்ந்து போனால் மனைவி மக்கள் என்ன செய்வார்கள்? அவர்களும் விழுந்து கட்டி அழுதார்கள். அவர்களைச் சுற்றி ஒரு சனக்கூட்டம் அனுதாபத்துடன் கூடிவிட்டது.

அந்த நாளில் ஒரு செட்டியாரின் தாபனத்தில் நயினை நாகமணிப்புலவர் கணக்குப்பிள்ளையாக இருந்தார். அவரும் கடற்கரைக்குப் போனார். அவருடைய நண்பர் செல்லப்பரும் அங்கே போயிருந்தார். ஓர் இடத்தில் சனக்கூட்டம். அதிலிருந்து கூக்குரல் கேட்டது. புலவரும் செல்லப்பரும் விரைந்து போனார்கள். முத்துக்கொம்பனைக் காணவில்லை. அதனால் அதன் சொந்தக்காரர் கதறுவதாக அறிந்தார்கள். அவர்களின் புலம்பலைப் பார்க்க இவர்களுக்கும் மனங்கசிந்தது. செல்லப்பர் தாராளமான பெரிய மனுசன். கொஞ்சம் நகைச்சுவையும் உடையவர். தனது நண்பரைப் பார்த்து “புலவரே! இந்தச் சோகக்காட்சியை ஒரு பாடலாக்கலாமே” என்றார். 



 அப்போது பாடப்பட்டது பின்வரும் பாடல்.

“சீர்கொண்ட கலியுகத் தொன்பான நூற்றாண்டில்
          செகிடி கதிர்காம புதல்வன்
சென்ற நீலாத்தை மன்னார்ப் பகுதியால் நயினை
          சேர்த்திட்ட சிதவல் அலவன்
ஊர்கொண்ட அவர்கள் குடிஉய்யவே தினமும்மீன்
          உயிர் கொண்ட கங்காளமும்
ஒரு மாதமளவில் எட்டுத்தரம் பழுது பார்த்து
          உற்ற வைரப் பொக்கிஷம்
கூர்கொண்ட ஆணியால் இடையெங்கும் இன்றியே
          குழி கொண்ட கங்காளமும்
குடி சனத்தைத் திமிலரடி தேடவிடும் முத்துக்
          கொம்பனெனும் நாமதேயன்
சூர்கொண்ட கதிர்காமரோடு மனைமக்களும்
          சூழ்ந்து கட்டிப் புலம்பச்
சுபகிருது வருஷம் ஐப்பசி மாசம் இருபதில்
          சொந்த ஊர் மருவினாரே”

நீலாத்தை ஆயிரத்துத் தொளாயிரமாம் ஆண்டு மன்னாருக்குப் போயிருந்தார். முத்துக்கொம்பனை மன்னாரிலே கண்டுவிட்டார். பேய்பிடித்தது போல முத்துக்கொம்பனை அவருக்குப் பிடித்துவிட்டது. நெடுங்காலம் மன்னாரில் தொழில் செய்து திரிந்தபடியால் முத்துக்கொம்பன் என்ற பெயர் அப்படியே இருக்க, வள்ளம் மெருக்காய் (சிதவல்) நண்டு போல கோதாகி இருந்தது. அப்படி இருந்தாலும் அதனை மன்னாரில் இருந்து நயினாதீவுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டார். 

ஒவ்வொரு நாளும் அது தொழிலுக்குப் போய் மீன் வேட்டையாடி அவர்களின் குடியை உய்வித்துக் கொண்டு வந்திருக்கிறது. ஆக ஒரு மாசத்தில் எட்டே எட்டு முறை தான் கரைக்கு இழுத்து ஓட்டை உடைசல் அடைத்து வைரப் பொக்கிஷமாக்கிக் கொள்ளுவார்களாம்.

ஆனால் கூரான உளி கொண்டு அடிக்கடி நெடுங்காலங் கலப்பத்துப் பார்த்து வந்திருந்தபடியால் புறப்பக்கம் மாத்திரம் (எள்ளுப்போட இடமின்றி) குழியாக கங்காளம்போல இருந்தது. இவ்வளவு சித்திரமான முத்துக்கொம்பன் திமிலரடியை ஊர்ச்சனங்கள் தேடுமளவுக்குப் பெருஞ் செல்வாக்குடன் நின்றது. அந்த முத்துக்கொம்பனை அவர்களுடைய உயிருக்குச் சமானமாக நேசித்தார்கள்.

நன்றி இல்லாத முத்துக்கொம்பன் புயலடித்த சாட்டை வைத்துக்கொண்டு வந்த ஊரில் இருந்து மறைந்துவிட்டது. கதிர்காமர் பெரிய வீராதிவீரர்தான், என்றாலும் அவர் அதனிடத்தில் வைத்திருந்த மதிப்பும், அதனோடு பட்ட சிரமமும், அதனால் கிடைத்த புகழும் அவரையும் அவரது குடும்பத்தையும் நிலை தளர்த்து கட்டிஅழ வழி செய்தது. மறைந்து போகிறவர்களுக்கு தொல்லை தீர்ந்ததே என்ற நிம்மதி. அப்புறம் தம்மால் இன்பம் அநுபவித்தவர்களை திரும்பிப்பார்க்கும் நிலைமை உலக வழக்கில் இல்லைத் தானே. 

போனவர் போய்விட்டாலும் அவரைத் தொட்டு அநுபவித்தவர்கள் இன்னும் கொஞ்ச நாள் அநுபவிக்க இருந்தாரில்லையே என்று துயரப்பட்டுக்கொண்டு இருப்ப, “சுபகிருது வருஷம், ஐப்பசி  மாசம் இருபதில் சொந்த ஊர் மறுவினாரே” என்றல்லவா! பாடுகிறார். ஆம், பிறந்த இடத்துக்கு - மன்னாருக்கு - வாங்கிய இடத்துக்கே போய்விட்டது. கட்டி வைத்த கட்டு அறுந்தால் வாங்கிய இடத்துக்குப் போகுந்தானே. அதனைப் புலமைக்கண் கண்டு நமக்குக் காட்டுகிறது. 

குறிப்பு:
எனது தந்தையாரால் எழுதப்பட்ட ‘புயலடித்துச் சென்ற வள்ளம்” என்ற இக்கட்டுரையில் எடுத்துச் சொல்லப்படும் நயினை நாகமணிப்புலவரின் பாடல் புயலடித்துச் சென்ற வள்ளத்தை மட்டும் சொல்லவில்லை. சுபகிருது வருடம், ஐப்பசி மாதம் இருபதாந் திகதி [20-10-1902]அன்று தீவுப்பகுதி எங்கும் வீசிய பெரும் புயல் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவையும் சொல்கிறது என்பதை என் தந்தையின் இக்கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.
இனிதே, 
தமிழரசி. 

Sunday, 26 May 2013

தீயாய் என்னுள் எழுகின்றாய்!


தீயாய் என்னுள் எழுகின்றாய்
          தீந்தமிழ் சுவையை தருகின்றாய்
நீயார் என்று உணராமல்  
          நினைத்தே கழித்தேன் வாழ்நாளை
பேய்மன எண்ண ஆசையினால்
          பெரிதும் உழன்றேன் துன்பத்துள்
தாய்நீ யென்று அறிந்ததுவும்
          தாவி அணைத்தேன் தாளிணையே!
இனிதே,
தமிழரசி.

Saturday, 25 May 2013

தாமரையில் தவளை இருந்தால் என்ன?


மலர்களிலே நிறைந்த தேனும் நல்ல மணமும் அழகும் உள்ள மலர் தாமரை மலராகும். யாராவது ‘பூ’ என்று சொன்னால் தாமரைப்பூவையே நம் முன்னோர் நினைத்தனர். அதனை 
“செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி
பாதம் போற்றும் வாதவூர் அன்ப
பா எனப்படுவது உன் பாட்டு
பூ எனப்படுவது பொறிவாழ் பூவே”          
                               - (நால்வர் நான்மணிமாலை: 40)
நால்வர் நான்மணிமாலையின் கடைசிப்பாடலான இப்பாடலால் அறியலாம்.

























பாட்டு என்றால் மாணிக்கவாசகரின் திருவாசகம், பூ என்றால் வரிவண்டு வாழும் பூ - அதாவது தாமரைப் பூ என்கிறது இப்பாடல். பொறி என்பது வரிவண்டு. வரிகளையுடைய வண்டு எது? தேனீயே வரிவண்டாகும். தேனீக்களில் பலவகையுண்டு. அவற்றில் ஒன்று வரிவண்டாகும். இந்த வரிவண்டுகள் பெரும்பாலும் நீர்நிலைகளில் வளரும் தாமரை போன்ற மணமுள்ள மலர்களை நாடிச்சென்று தேனை எடுக்கும். பல பொறிமுறைகளை அறிந்து அவை தேன் கூடுகளைக் கட்டுவதால் பழந்தமிழர் தேனீயை 'பொறி' என அழைத்தனர். அதனால்
“பூ எனப்படுவது பொறிவாழ் பூவே 
என்கிறார். 

தேனீ, தேன் கூட்டில் அல்லவா வாழும். ஆனால் இப்பாடலோ தேனீ தாமரைப்பூவில் வாழும் என்கிறது. தாமரைப்பூவில் தேனீக்கள் தேன் அருந்துவதைப் பார்த்திருக்கும் நம்மில் எத்தனை பேர் அவை அதில் வாழ்வதை பார்த்திருக்கிறோம்? எனவே இப்பாடல் சொல்வது சரியா? என்பதை கடைச் சங்கப் புலவரான நக்கீரரிடம் கேட்டுப் பார்ப்போமா? 
“மாடம் மலிமறுகின் கூடல் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்
கண் போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன்”             
                              - (திருமுருகாற்றுப்படை: 71 - 77)

என்று திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றைக்காட்டி, அங்கே முருகன் இருப்பதாகக் கூறுகிறார்.

முருகன், ‘மாடம் [உப்பரிகை, நிலாமுற்றம் (balcony)] உள்ள வீடுகள் நிறைந்த[மலி] தெருக்களையுடைய[மறுகு] மதுரையின்[கூடல்] மேற்கே[குடவயின்], கரிய நிறமான சேறு[இருஞ்சேறு] உள்ள அகலமான[அகல்] வயலில் மலரும்[விரிந்து வாய் அவிழ்ந்த] முள்ளிருக்கும்[முள்] தண்டுள்ள[தாள்] தாமரைப் பூவிலே இரவில் தூங்கி[துஞ்சி], அதிகாலையில்[வைகறை] தேன்மணக்கும் [கள்கமழ்] நெய்தற்பூவை ஊதி, சூரியன் உதித்ததும்[எல்பட] கண் போல மலர்ந்திருக்கும் கருங்கற்குளங்களிலுள்ள மலர்களில் சென்று அழகிய சிறகையுடைய[அஞ்சிறை] வண்டின் கூட்டம்[அரிக்கணம்] இரையும்[ஒலிக்கும்] திருப்பரங்குன்றில் உறைபவன்’ என்கிறார்.


இதில் நக்கீரர் கூறும் ஒரு விடயத்தை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். ‘தேன் எடுக்க வரும் வண்டுகள் தாமரைப்பூவிலே இரவில் தூங்குகின்றன’ என்று கூறுகிறாரே, ஏன் அவை தேன் கூட்டில் தூங்காமல் தாமரைப் பூவில் தூங்குகின்றன? பூக்களில் சென்று தேனெடுக்கும் வேலைக்காரத் தேனீக்கள்  தமது தேன்கூடுகளில் இருந்து பல மைல் தொலைவில் இருக்கும் தேனுள்ள பூக்களில் சென்று தேனைச் சேகரிக்கின்றன. அப்படிச் செல்லும் தேனிக்கள் சூரியன் மறையமுன் மீண்டும் தேன்கூடுகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்படும். அப்போது காலநிலை வெப்பத்திற்காக (இரவு நேரம் வெப்பநிலை குறைவதால்) இரவில் கூம்பி பகலில் விரியும் பூக்களில் தங்கி, இரவைக் கழிக்கின்றன. இப்போது தான் மேற்கு உலகநாட்டினர் இரவில் கூம்பும் தாமரை மலரினுள் வெப்பம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். பூக்கள் ஏன் பூச்சிகளைக் கவர்கின்றன என்பதை ஆராய்ந்த போது இதனைக் கண்டுபிடித்திருகிறார்கள். ஆனால் இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே தாமரை மலர் இரவில் கதகதப்பாக இருக்கும் என்பதை படுமரத்து மோசிகொற்றன் என்னும் சங்ககாலப் புலவர் கூறியுள்ளார்.  

அவர் தாமரை மலரின் வெப்பநிலையை மட்டும் அப்பாடலில் சொல்லவில்லை. பெண்களின் உடல் வெப்பநிலை - வெப்பகாலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் சிறிது வெப்பமாகவும் இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் தாமரை மலரை மட்டுமல்ல, பெண்களையும் நன்றாக ஆராய்ந்து பார்த்திருக்கிறார் போலும். 

தலைவன் ஒருவன் தன் நெஞ்சிற்கு சொல்வதாக, படுமரத்து மோசிகொற்றன் சொல்வதைப் பார்ப்போம். அவரது தலைவி, ‘உலக உயிர்களால் முற்றாக அறியப்படாத பொதியமலையில் இருக்கும் சந்தனம் போல கோடையில் குளிர்ச்சியாக இருக்கிறாள். பனிக்காலத்திலோ, வெப்பத்தை வாங்கும் சூரியக்கதிர்கள் மறையக் கூம்பி, நுண்மையாக அசைகின்ற வெயிலை சேமித்த தாமரை மலரின் உள்ளிடத்தைப் போல சிறிது வெம்மையாக இருக்கிறாளாம்.



















“மன் உயிர் அறியாத் துன் அரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப
வேனிலானே தண்ணியள் பனியே
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென
அலங்கு வெயிற் பொதித்த தாமரை
உள்ளகத் தன்ன சிறு வெம்மையளே!”      
                                          - (குறுந்: 376)

பாருங்கள்! இந்தப் பாடலில் அவர் 
“வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென
அலங்கு வெயிற் பொதித்த தாமரை
உள்ளகத் தன்ன சிறு வெம்மை”
என்ற வரிகளில் அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை, மிகவும் நுட்பமான தமிழ்ச்சொற்களால் சொல்லியிருக்கும் பாங்கு போற்றுதற்கு உரியதாகும். பண்டைய நம் சங்கச் சான்றோர் அறிந்து சொன்ன இத்தகைய விஞ்ஞான நுட்பங்களை நாம் அறியாது இருப்பது எமது அறியாமை இல்லையா?

தாமரைமலர் சேகரித்து வைத்திருக்கும் கதகதப்பான சூட்டின் காரணமாக தேனீக்கள் தாம் தங்கிப் போகும் இரவு விடுதிகளாக கூம்பிய தாமரை மலரைத் தேர்ந்து எடுத்தன போலும். 

தாமரை வளரும் சுனைகளையோ, குளங்களையோ, பொய்கைகளையோ பார்த்தறியாது எங்கோ தொலைதூரத்தில் காட்டில் தேன் கூடுகளில் பிறந்து வளர்வன தேனீக்கள். ஆனால் அவை தாமரை மலரின் மணத்தாலும் நிறத்தாலும் கவரப்பட்டு அவற்றைத்தேடி சின்னஞ்சிறு சிறகுகளால் பறந்து வருகின்றன. தாமரைப்பூக்கள் தம்மை நாடி தேடிவரும் தேனீகளுக்கு தேனையும் கதகதப்பான வெப்பத்தையும் கொடுக்கின்றன. தாமரையின் அழகு, நிறம், மணம், தேன், கதகதப்பு யாவற்றையும் எங்கோ பிறந்த தேனீ தேடிவந்து பெற்றுச் செல்கிறது. 

ஆனால் தவளையோ தாமரை வளரும் அந்தப் பொய்கையிலோ குளத்திலோ பிறந்து தாமரையோடு வளரும். அப்படி தாமரையோடு வளரும் தவளைக்கு தாமரைமலரின் அழகோ, நிறமோ, மணமோ, அதன் தேனின் சுவையோ, அது கொடுக்கும் கதகதப்போ தெரியாது. அதுபோல எத்தனையோ சிறந்த அறிஞர்களின் அறிவை, ஆற்றலை அவர்களுடன் சேர்ந்து பழகும் அறிவிலிகள் அறிவதில்லை. ஆனால் நாடுவிட்டு நாடு வாழ்வோராயும், வேற்று மொழிபேசுவோராயும் இருந்தாலும் கற்ற அறிஞர்கள், மற்ற அறிஞர்களை இனங்கண்டு ஒருவரோடு ஒருவர் பேசி நட்புக்கொண்டு இன்புறுவர் என்கின்றது விவேகசிந்தாமணி.


“தண் தாமரையின் உடன்பிறந்தும் தண்தேன் நுகரா மண்டூகம்
வண்டோ கானத்திடை இருந்தும் வந்து கமலமது உண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லர் நல்லோரைக்
கண்டே களித்து அங்கு உறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே”

இந்தப்பாடல் சொல்வது போல எம்வீடுகளில் கணவனிடம் இருக்கும் ஆற்றலை மனைவியும், மனைவியிடம் இருக்கும் திறமையை கணவனும், தாம் பெற்ற பிள்ளைகளிடம் இருக்கும் சிறந்த வல்லமையைப்  பெற்றோரும் அறிந்து கொள்வதில்லை. ஒவ்வொருவரின் திறமையையும் மற்றவர் மதிப்பவராக வாழ்ந்தால் எல்லோரும் இன்பமாக வாழலாம். 

இந்த விவேகசிந்தாமணிப் பாடல் இன்றைய தமிழர்களாகிய எம்மை தவளைகளாகவும் பண்டைய சங்ககாலச் சான்றோரை தாமரை மலர்களாகவும் காட்டுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. எல்லிஸ் என்ற தனது பெயரை, எல்லீசன் என்ற தனித்தமிழ்ப் பெயராக மாற்றி வாழ்ந்த பிறநாட்டு அறிஞர் போன்ற எத்தனையோ பிறமொழியாளர்களைக் கவர்ந்த சங்க இலக்கியம் நம் தமிழ் மக்களால் புறக்கணிக்கப்படுவது அதனைக் காட்டுகிறது அல்லவா?

சொல்விளக்கம்:
எல்பட - சூரிய ஒளி படும்போது; சூரியன் உதிக்க 
வாங்குகதிர் -  வெப்பத்தை வாங்கும் சூரியக்கதிர்
தொகுப்பக் - மறைய 
ஐயென - நுண்மையாக
அலங்கு - அசைகின்ற
பொதித்த - சேமித்த  
உள்ளகத்து - உள்ளிடத்து 
இனிதே,
தமிழரசி.