மண்ணை அளந்தோம்
பெண் சொன்ன சொல்லை
அளந்தோம் இல்லையே'
- நாட்டுப்பாடல் (மாந்தை)
- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
மாந்தையில் வாழ்ந்த ஒருவர் தன்மனக் கொதிப்பை, நாட்டுப்பாடலாக வடித்துவைத்துள்ளார். அவர் சொன்னது போலத் ‘தமிழர்கள் விண்வெளியை அளந்தார்களா?’ அதற்கு ஏதும் ஆதாரம் இருக்கிறதா? எனத் தேடிப்பார்த்தேன். என் தேடலுக்குக் கிடைத்ததை இங்கு தருகிறேன்.
‘ஆம்பல்’ இதழில் நான் எழுதியதை வாசித்த வாசகர் ஒருவர் ‘ஆம்பல்’ என்பது ஒரு பேரெண் என சிற்பநூல் குறிப்பதாக எழுதி இருந்தீர்கள். சங்க நூல்கள் ஆம்பல் என்பதை ஓர் எண் என்று குறிப்பிடுகின்றனவா என்று கேட்டிருந்தார்.
இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்வாழ்ந்த தொல்காப்பியர் தமிழில் உள்ள எண்களின் பெயர்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று சேரும் என்பதைக் கூறியுள்ளார். அதில் அவர் ஆம்பலின் பெயரை நேரடியாகச் சொல்லாவிட்டாலும் அவ்வெண் எவ்விதம் சேரும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். ஏழு என்ற எண்ணின் பெயர் மற்றைய எண்களின் பெயர்களுடன் எப்படிச்சேரும் என்பதை எடுத்துக் காட்டும் இடத்தில்
“ஆயிரம் வருவழி உகரங் கெடுமே” - (தொல்: 18: 96)
என்கிறார். அதாவது ஏழுகடல், எழுபிறவி என்று ஏழ் என்னும் எண்ணின் கணக்கை எழுதுவோம் அல்லவா! அப்படி எழுதும் நிலையில் இருந்து மாறி ஆயிரத்துடன் சேர்த்து எழுதும் போது ஏழாயிரம் என எழுதுவோம்.
ஏழ் + ஆயிரம் = ஏழாயிரம்
‘ஏழ்’ என்னும் எண் ஆயிரத்துடன் சேரும் பொழுது தன் நிலையில் மாறி [கெட்டு] ஏழாயிரம் ஆகின்றது.
ஆனால் ஐ, அம், பல் எனமுடியும் எண்களின் பெயர்களோடு (பொருட்களின் பெயர்கள் இல்லை) ஏழ் என்னும் எண் சேரும் போது தன் இயல்பில் மாறது அப்படியே இருக்கும் என்கிறார்.
“ஐ அம் பல்லென வரூஉம் இறுதி
அப்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும்” - (தொல்: 18: 98)
அதாவது சங்ககாலத் தமிழர் பாவித்த குவளை, வெள்ளம், ஆம்பல் என்னும் [ஐ, அம், பல் எனமுடியும்] எண்களின் பெயர்கள் ஏழுடன் சேரும் பொழுது ‘ஏழ்’ என்பது தன்னிலை மாறாது அப்படியே வரும்.
ஏழ் + குவளை = ஏழ்குவளை
ஏழ் + வெள்ளம் = ஏழ்வெள்ளம்
ஏழ் + ஆம்பல் = ஏழ்ஆம்பல்
ஏழுடன் சேரும் ஆயிரம் ஏழாயிரமாக மாறுவது போல் ஆம்பல் ஏழாம்பல் ஆகமாறாது. ஆம்பல் என்ற சொல்லை எண்ணாகப் பாவிக்கும் போது “ஏழ்ஆம்பல்” என்றே எழுத வேண்டும். இது தொல்காப்பியர் கூறும் எண்புணர்ச்சியின் இலக்கணமாகும்.
நூறு திரிலியனை [ஆம்பல் = 100,000,000,000,000 = one hundred trillion] பண்டைக் காலத் தமிழர் ஆம்பல் என அழைத்தனர். எழுநூறு திரிலியன் பொருளை, எழுநூறு திரிலியன் ஆண்டை [ஒளி ஆண்டு போல], எழுநூறு திரிலியன் நாளைக் கணக்கிடும்போது ஏழ்ஆம்பல் பொருள், ஏழ்ஆம்பல் ஆண்டு, ஏழ்ஆம்பல் நாள் என எழுதவேண்டும். ஆனால் ஆம்பல் மலர், ஆம்பல் கிழங்கு, ஆம்பல் குழல் போன்ற பொருட்களை அப்படி எழுதுவதில்லை. ஏழு ஆம்பல் மலர் கொய்தோம் என்பதை ஏழாம்பல் மலர் கொய்தோம் என எழுதவேண்டும். இதுவே தொல்காப்பியர் குறிப்பிடும் இலக்கணம்.
தூசுத்திரட்சி நெபுலா [Photo Source: NASA] [படம்: 2]
ஏனெனில் பண்டைத்தமிழர் அண்டவெளியின் தூசுத்திரட்சி, வளியின் சக்தியால் உப்பி கோளமாக மாற எடுக்கும் கால அளவை ஆம்பல் எண்ணால் குறித்தனர். ஆம்பல் மலர் போன்ற பொருட்பெயரையும், ஆம்பல் எண்ணுப் பெயரையும் வேறுபடுத்திக் காட்டவே இந்த இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
ஆம்பல் பற்றிய தரவை கீழுள்ள இணைப்பில் பார்க்கவும்:
https://inithal.blogspot.com/2012/05/1.html
https://inithal.blogspot.com/2012/05/2.html
https://inithal.blogspot.com/2012/05/1.html
https://inithal.blogspot.com/2012/05/2.html
பண்டைய காலத்தமிழர் “ஆம்பல் எண்ணால்” ஊழிக்கால அளவைக் குறித்தனர் என கடைச்சங்கப் புலவரான கீராந்தையார் கூறியுள்ளார். அவர் கூறியதைப் பார்க்க முன் இந்த உலகின் தோற்றத்தைப் பற்றி நாம் அறிவது நன்று. உலகிலுள்ள சமயங்கள் யாவும் உலக தோற்றத்தைப் பற்றி பலவகையான செய்திகளை பண்டைக்காலத்திலிருந்தே சொல்லிவருகின்றன.
எனவே நம் சமயங்கள் என்ன சொல்கின்றன? என்பதைப் பார்ப்போம். ஆதிகாலத்தில் இப்பிரபஞ்சம் முழுவதும் வெள்ளத்துள் மூழ்கி இருந்தது. அந்த வெள்ளத்துள் மிதந்து வந்த பொன்முட்டையே கடவுள். அவரே உலகைப்படைத்தார். இதுவே இருக்குவேதம் கூறும் “இரணிய கர்ப்பம்”. இந்து மதத்தின் உபநிடதங்களும், புராணங்களும் வானியற் கருத்தைக் கூறினும் கடவுளரை மிகைப்படுத்துவதால் சொல்லும் பாங்கில் தடுமாறுகின்றன. எனினும் யுகங்கள் தோறும் பிரமாவே உலகைப் படைத்தார் என்பதே பொதுவான கருத்தாகும்.
சைவசமயமும், இந்து சமயத்தின் புருஷஸூக்தமும் உலகின் தோற்றத்தை இன்றைய விஞ்ஞானக் கொள்கைக்கு அமைய கொஞ்சம் சொல்கின்றன. சமணசமயம் உலகிற்கு தொடக்கமும் முடிவும் இல்லை என்கின்றது. பௌத்த சமயமோ உலகம் இருக்கின்றது. அது முந்திய உலகில் இருந்து வந்தது. எவ்வாறு கோழியில் இருந்து முட்டையும், முட்டையில் இருந்து கோழியும் வருகின்றதோ அதுபோலவே என்கின்றது. இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்கள் உலகம் ஆறு ஏழு நாட்களில் படைக்கப்பட்டது என்கின்றன.
இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலி கி பி 16 - 17ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் சூரியன் பூமியைச் சுற்றவில்லை, பூமியே சூரியனைச் சுற்றி வருகின்றது என்னும் உண்மையைச் சொன்னதால் கத்தோலிக்க சபையினரால் இருட்சிறையில் அடைக்கப்பட்டு தன் கண்களையே இழந்தார். [முன்னூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட இத்தாலியர்கள் சூரியனே பூமியச்சுற்றி வருவதாக நம்பியிருந்தனர்.] கலிலியோ அன்று ஏற்றிவைத்த வானியற் கருத்து, இன்று மேற்குலகம் பிரபஞ்ச இரகசியத்தை அறிந்து கொள்ள துணைநிற்கின்றது.
பால்மய வெளியில் (Milky way) உள்ள நட்சத்திரங்களில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை துல்லியமாகாக் காட்டும் தொலைநோக்கி HST (Hubble Space Telescope) ஆகும். இதன் உதவியால் நட்சத்திரங்கள் எப்படி மீண்டும் மீண்டும் பிறந்து வாழ்ந்து இறக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தூசு வளியின் உந்து சக்தியால் திரண்டு உப்புதல் [Image Credit: NASA] [படம்: 3]
இன்றைய வானியல் (Astronomy) சரித்திரத்தில் முக்கிய இடம்பிடிப்பவை நெபுலாக்களே. நெபுலா என்பது மேகத்தைக் குறிக்கும் இலத்தீன் மொழிச் சொல்லாகும். அண்டவெளியின் வளியும் தூசியும் சேர்ந்த திரட்சியே நெபுலா. இந்த நெபுலாக்களில் இருந்தே நட்சத்திரங்கள் பிறக்கின்றன. வளியின் உந்து சக்தியினாலேயே நெபுலாக்கள் இயங்குகின்றன. மழைமேகங்கள் காற்றால் அலைவதுபோல் நெபுலாக்கள் காற்றின் உந்து சக்தியால் சக்கரமாகச் சுழல்கின்றன.
அண்டவெளியின் தூசித்திரட்சி வளியினுள் ஏற்படும் தன் ஈர்ப்புச் சக்தியினால் ஒன்றாக இணைந்து சுழன்று, இட்லி போல உப்பி பின்னர் கோளமாக மாறும் (self gravitating ball of gas). [படம்: 3] அந்த சுழற்சியால் ஏற்படும் வளியின் அழுத்தத்தாலும் வெப்பத்தாலும் அதன் கருவில் அணுப்பிணைவுச் சக்தியை உண்டாக்கி தானாகவே ஒளிரும் நட்சத்திரம் பிறக்கும். [படம்: 4]
ஒளிரும் நட்சத்திரம் தோன்றல் [Photo Source: NASA] [படம்: 4]
இதே போல் சூரியன் உண்டாவதற்கு முன் தோன்றிய நெபுலா ஒன்று (Pre-Solar Nebula) தன்னீர்ப்புச் சக்தியால் உப்பிப் பெருத்து உடைந்து சிதறியது (Gravitational Collapse). அவ்வாறு சிதறிய நெபுலாத் துண்டுகள் தன்னீர்ப்புச் சக்தியின் அழுத்தத்தால் மீண்டும் தனித்தனிக் கோளங்களாகி செந்தீயாக எரிந்து ஒளிவீசின(Hydrogen into Helium). சூரியன், சந்திரன், பூமி போன்றவையும் அப்படி உருவான கோளங்களேயாகும்.
வெள்ளிக்கிரகத்தில் எரிமலைக் குழம்பும் நிலமும் [Image Credit: NASA] [படம்: 5]
பூமி தோன்றி 4.54 பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த பூமியின் வெளிப்புறம் சூரியக் காற்றால் (Solar Wind) பனியும் மழையும் பெய்து குளிர்ந்தது. குளிர்ந்த பூமியின் உள்ளே இருந்து அதன் உள்ளீடு எரிமலையாக அடிக்கடி வெடித்துச் சிதறி மேல் எழுந்ததாலும் வால் நட்சத்திரங்கள் மோதியதாலும் நிலமும் கடலும் தோன்றின என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
வெள்ளிக்கிரகத்தில் அமிலமழை, முகில், மின்னலின் அறிகுறி
[Photo Source: NASA] [படம்: 6]
[Photo Source: NASA] [படம்: 6]
வானியல் பற்றி இன்றைய விண்வெளி விஞ்ஞானிகள் கூறும் கருத்துக்களை விடவும் மேலதிக கருத்துக்களை பண்டைய தமிழர் அறிந்திருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. பல நூற்றாண்டுகளாக மேலைநாட்டவர்களிடம் அடிமைப்பட்டு இருந்ததால் தமிழ்ச்சாதி தன்னைத் தானே தாழ்த்தி எடைபோடுகின்றது. பண்டைத்தமிழருக்கு விஞ்ஞானம் தெரியுமா? என அங்கலாய்க்கின்றது. தமிழனைத் தவிர வேறுயார் எதுசொன்னாலும் அதனை நம்புகின்றது. அந்த அறியாமையை எப்போது நீக்கப் போகின்றது.
தூசுத்திரட்சியால் உண்டாகும் நெபுலாக்களில் இருந்து எப்படி நட்சத்திரங்கள் தோன்றி அழிகின்றனவோ அப்படி இந்த உலகமும் தோன்றி அழிவதை கி பி இரண்டாம் நூற்றாண்டில் [கலிலியோவிற்கு 1500 வருடங்களுக்கு முன்னர்] வாழ்ந்த கீராந்தையார் என்னும் சங்ககாலத் தமிழ்ப்புலவர் கூறியதைப் பார்த்த பின்னராவது தம் எண்ணத்தை தமிழ்ச்சாதி மாற்றிக்கொள்ளுமா?
“தொன்மறை இயற்கையின் மதியோ…
………………. ……… ……. மரபிற்றாகப்
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி யூழூழ் செல்லக்
கருவளர் வானத்து இசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளிக் கிளர்ந்த ஊழூழ் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
உணமுறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும்
உள்ளீடாகிய இருநிலத்து ஊழியும்
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை……….”
- (பரிபாடல்: 2: 1 - 15)
- (பரிபாடல்: 2: 1 - 15)
தொன்றுதொட்டு வரும் இயற்கையின் நியதிப்படி சந்திரனும் ஏனையவையும் அழிந்த ஊழியின் முடிவில் மீண்டும் உலகம் தோன்றுவதை இப்பரிபாடல் சொல்கிறது.
இப்பரிபாடலில் வரும் ஊழ் என்பது தோன்றுதலையும், ஊழி என்பது ஒன்று தோன்றி செயல்படும் கால அளவையும், ஊழூழ் [ஊழ் ஊழ்] என்பது முறைமுறையாய் முதிர்வதைக் குறிக்கும்.
1. இயற்கையின் முறைப்படி பசுமையாய் [பசும்] அழகாய்க் [பொன்] காட்சிதரும் நிலமும் [உலகமும்] மண்ணும் பாழ்பட்டு அழிய, வெளியாகிய வானமும் இல்லாத [விசும்பில்] ஊழியும் (நெய்தல்)
2. முறைமுறையாகக் [ஊழூழ்] கடந்து செல்லக், கருவான பரமாவணு வளர்வதற்கு [கருவளர்] ஏற்ற வானத்தின் ஒலியில் [இசையில்] உண்டான [தோன்றி] உருவம் அறியப்படாத [உருவறி வாரா] ஒன்றன் [முதல்] ஊழியும் (குவளை)
3. உந்தித் தள்ளும் காற்றால் [உந்துவளிக்] உப்பிய [கிளர்ந்த] ஊழூழ் ஊழியும் (ஆம்பல்)
4. செந்நிறத்தீயால் ஒளிரும் [சுடரிய] ஊழியும் (சங்கம்)
5. பனியும் குளிர்மழையும் [தண்பெயல்] பெய்த [தலைஇய] ஊழியும் (கமலம்)
6. அவ்வூழிகளும் கழிந்து போக [அவையிற்று], பெருவெள்ளத்துள் [உணமுறை வெள்ளம்] மூழ்கி, ஆரவாரத்துடன் [ஆர்தருபு] மீண்டும் வலிமையுடன் [பீடுயர்] பீண்டி [பருத்து], அவற்றிற்கும் உள்ளீடாகிய இருநிலத்து [நிலம், கடல்] ஊழியும் (வெள்ளம்)
என்று சொல்லப்படும் இந்த ஊழிகளின் நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம் கமலம், வெள்ளம் என்னும் எண்கள் குறித்திட்ட பெயர்களது கால அளவு கழிந்த பின்பு உயிர்கள் வாழ்வதற்கான ஏழாவது ஊழி தொடங்கும் என்கிறார்.
நட்சத்திரங்கள் கிரகங்கள் தோன்றி அழிவதைப்பற்றி இன்றைய விண்வெளி விஞ்ஞானிகள் கூறும் கருத்துடன் சங்ககாலப் புலவரான கீரந்தையாரின் பாடல் சொல்லும் கருத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
இன்றைய வானியல்
விஞ்ஞானிகளின் கருத்து
|
சங்கப்புலவரான கீரந்தையாரின் பாடல் சொல்லும் கருத்து
|
கீரந்தையாரின் ஊழிக்கால அளவு
(பண்டைத்தமிழர் எண்களில்)
|
இன்னும் அறியப்படவில்லை
|
விண்ணும் மண்ணும்பாழ்பட்டு அழிந்ததால்
ஆகாயம் இல்லாத ஊழி
|
நெய்தல்
|
இன்னும் அறியப்படவில்லை
|
கருவளர்வதற்கு ஏற்ற வானத்தின் ஒலியில் [இசையில்] உருவான உருவமில்லாத ஊழி
ஆகாயவூழி
|
குவளை
|
வளியின் திரட்சியால் உண்டாகும் நெபுலா சுழன்று உப்புதல் [படம்: 3]
|
கருவைச் சுற்றிச் சுழல்கின்ற காற்றால் [உந்துவளி] உப்பிய [கிளர்ந்த] ஊழி
காற்றூழி
|
ஆம்பல்
|
தன்னீர்ப்புச் சக்தியின் அழுத்தத்தால் நெருப்பாக எரிந்து ஒளிவீசுதல் [படம்: 4]
|
செந்நிறத் தீயால் ஒளிரும் [சுடரிய] ஊழி
நெருப்பூழி
|
சங்கம்
|
சூரியக்காற்றால் பனியும் மழையும் பெய்து குளிர்தல் [படம்: 6]
|
பனியும் மழையும் பெய்த ஊழி
நீரூழி
|
கமலம்
|
எரிமலைகளாலும் வால் நட்சத்திரங்களாலும் நிலமும் கடலும் உண்டாதல்
[படம்: 7]
|
வெள்ளத்துள் மூழ்கியிருந்த நிலம் மீண்டும் மேலெழுந்து வருவதற்காக எரிமலையைக் கக்கும் இருநிலத்தூழி
(இருநிலம் - நிலமும் கடலும்)
|
வெள்ளம்
|
இந்த அட்டவணை கிரகங்கள், நட்சத்திரங்கள் தோன்றி அழிவது பற்றி சங்கத்தமிழர் அறிந்திருந்த ஆறுபடிநிலைகளில் நான்கு நிலைகளையே இன்றைய விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. மற்றைய இரண்டு நிலைகளும் இன்னும் அறியப்படவில்லை.
கீரந்தையார் ஏழாவது ஊழிக்கால அளவைக் கூறவில்லை.
‘ஊழி ஏழான ஒருவ போற்றி’ - (ப.திருமுறை:6: 55: 8)
என்னும் திருநாவுக்கரசு நாயனாரின் தேவார அடியைப் போல் திருவாசகம், திருமந்திரம் போன்றவையும் தமிழரின் விண்வெளி அறிவை எடுத்துக் காட்டுகின்றன.
பண்டைய தமிழர் இயற்கையை உள்வாங்கி ஆன்மீகத்தை உருவாக்கிக் கொண்டனர். அவர்கள் கண்ட ஆன்மீகம் கண்மூடித் தனமானதல்ல. இயற்கையோடு இசைந்ததே இறைவன் என்பதை மற்றவர்களை விட மிகத்தெளிவாக கீரந்தையர் இப்பாடலின் முடிவில் கூறுகின்றார்.
கீரந்தையாரின் சங்கப்பாடல் வரிகள் சொல்லும் இவ்வுலகின் தோற்றம், இன்றைய விஞ்ஞானக் கருத்துக்களுடன் கைகோத்து நடைபோடுவதோடு, விண்வெளி விஞ்ஞானிகளால் இன்னும் அறியப்படாதவற்றையும் சொல்வதை மேலே இருக்கும் அட்டவணையில் பார்த்திருப்பீர்கள். சங்கத்தமிழர் ஆகாயத்தை தம் கண்களால் மட்டும் பார்த்து இவ்வாறு துல்லியமாக கோள்களில் நடக்கும் மாற்றங்களையும் அவற்றிற்கு எடுக்கும் காலங்களையும் குறித்திருக்க முடியாது. உலக தோற்றத்தோடு ஆகாயவூழி, காற்றூழி, நெருப்பூழி, நீரூழி, இருநிலத்தூழி என ஐம்பூதங்களின் தோற்றத்தையும் கீரந்தையார் குறித்திருக்கும் பாங்கு போற்றுதலுக்கு உரியதாகும்.
கீரந்தையாரின் இப்பரிபாடல் 1800 வருடங்களுக்கு முன்பே நன்னாகனார் என்ற சங்ககாலப் புலவரால் இசையமைக்கப்பட்டு பாலைப் பண்ணில் கடவுள்வாழ்த்தாகப் பாடப்பட்டது. எமது இசைக் கலைஞர்கள் இப்பரிபாடலுக்கு மீண்டும் இசையமைத்து (முழுப்பாடலையும் அல்ல) அரங்குகளில் பாடினாலாவது எம் முன்னோரின் அரிய கண்டுபிடிப்புகள் உலகின் காதுகளைச் சென்றடையாதா?
இனிதே,
தமிழரசி.
[2009, ஆம்பல் இதழுக்கு எழுதியது]
No comments:
Post a Comment