Friday 11 May 2012

ஆம்பல் - பகுதி 1

ஆம்பல் மலர் 

நமது தமிழ் மூதாதையர்களான சங்கத்தமிழர்கள் ஆம்பல் என்ற சொல்லை இரண்டாயிரத்து ஐந்நூறு  வருடங்களுக்கு முன்பே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை தொல்காப்பியம் காட்டுகிறது. அவர்கள் ஆம்பல் என்ற சொல்லை ஓர் பேரெண்ணின் பெயராக மட்டுமல்லாமல் பூ,  கிழங்கு, தேன், குழல், பண் [இராகம்], வண்ணம்[வர்ணம்] அணிகலன், மருந்து போன்ற பலவற்றைக் குறிக்க பயன்படுத்தியிருப்பதை பண்டைய தமிழ் இலக்கியங்களும் சொல்கின்றன.

நன்னீர்க் குளங்களில் ஆம்பல் வளரும். அவற்றின் இதழ்கள் கூர்மையாக இருக்கும். பொய்கையில் அழகிய ஆம்பல் மொட்டுக்கள் இருந்தன என்பதை
“பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை”      
                                        -  (குறுந்தொகை: 370) 
எனும் குறுந்தொகை வரிகள் காட்டுகின்றன. புங்குடுதீவிலும் நன்னீர் இருந்ததற்கும் இருப்பதற்கும் அங்கு இருக்கும் ஆம்பல் குளமே சாட்சி.
ஆம்பல் எவரும் நடாமல் தானாகவே கரும்பு நட்ட பாத்தியில் முளைக்குமாம். அதனை
“கரும்பு நடுபாத்தியில் கலித்த ஆம்பல்”                
                                        - (ஐங்குறுநூறு: 65)
என ஐங்குறுநூறு சொல்கிறது.
கிழக்கே தெரிகின்ற விடிவெள்ளியின் இருள் நீங்க அதிகாலையில் ஆம்பற்பூ மலர்வதை 
“கணைக் கால் ஆம்பல் நாறு தண் போது 
குணக்குத் தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும்”  
                                         - (நற்றிணை: 230)    
என படம் பிடித்து நற்றிணையில் எமக்குக் காட்டுகிறார் சங்கப் புலவரான ஆலங்குடி வங்கனார்.

வெள்ளாம்பல்

ஆம்பல் அதிகாலையில் மலரும் என்பதையும் அது தாமரை இனத்தைச் சேர்ந்தது என்பதையும்  மிக அழகாக ஐங்குறுநூற்றின் பாடல் வரியில்
“கன்னி விடியல் கணைக்கால் ஆம்பற் தாமரை போல”   
                                                - (ஐங்குறுநூறு: 68)
என்று சொன்ன  சங்ககாலப் புலவரான ஓரம்போகியார் வேறொரு பாடலில் 
“வயன்மலர் ஆம்பற் கயிலமை நுடங்கு”       
                                                - (ஐங்குறுநூறு:72)
என ஆம்பல் வயலில் மலர்வதாகக் காட்டுகின்றார். 
வயல்களிலே வெள்ளாம்பல் பூத்திருந்தை நற்றிணை
“வயல் வெள் ஆம்பல்”                 - (நற்றிணை: 290)
எனக் கூறுகிறது.
அரக்காம்பல்

அரக்கு நிறத்திலும் ஆம்பல் பூத்தது. அதன் மொட்டு விரிவதைக் கண்ட பறவைகள், நீரில் தீ பற்றியது என நினைத்து பயந்து குஞ்சுகளை தமது சிறகுகளால் மூடுமாம் என முத்தொள்ளாயிரம் சொல்கிறது.
“அள்ளற் பழனத்து அரக்காம்பல்  வாய்நெகிழ
வெள்ளம் தீப்பட்டதென வெருவி - புள்ளினம்
தன் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும்”      
                                            - (முத்தொள்ளாயிரம்)
ஆம்பல் தேன்
சங்கத்தமிழர் ஆம்பல் மலரில் இருந்து தேன் எடுத்திருக்கிறார்கள் அந்த ஆம்பல் தேனைக் குடித்திருக்கிறார்கள்.  அந்தத் தேன் குடித்த வாய்கூட ஆம்பல் பூவின் மணமாக இருந்ததை
“ஆம்பல் நாறும் தேன்பொதி துவர்வாய்”    
                                          - (குறுந்தொகை: 300: )
என சிறைக்குடி ஆந்தையார் என்ற சங்ககாலப்புலவர் கூறியுள்ளார்.
ஆம்பல் கிழங்கு
தாமரை மொட்டும், தண்டும் போல் நீர்நிலையும், வாய்க்காலும் இருக்குமாறு பண்டைய தமிழர் நீர்நிலைகளை அமைத்தனர். எங்கெல்லாம் நிலம் பள்ளமாய்  நீர் தங்கியதோ அங்கெல்லாம் சலதாரையுடன் (மதகுடன்) கூடிய கயங்களைக் (குளங்களைக்) கட்டினர். நீர் நிறைந்த பள்ளத்தில் இட்ட வித்து வறட்சியால் சாவாது எனக்கூறுமிடத்தில் நீர்நிறைந்த பள்ளத்தை கயமென அழைத்ததை புறநானூறு
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது”     
                                                 - (புறம்: 137: 5)
என்று காட்டுகிறது.
மலைபடுகடாம் என்ற சங்க நூலில் பெருங்கௌசிகனார்
"குமிழி சுழலுங் குண்டு கயமுடுக்கர்
அகழ் இழிந்தன்ன கான் யாறுநடவை”
என தாமரைமொட்டும் தண்டும்போல் குளமும் ஆறும் இருப்பதைக் காட்டுகிறார். இவ்வரிகளில் இன்றைய தமிழராகிய எமக்கு விளங்காத வகையில் குமிழி சுழலும் குண்டு, கயமுடுக்கர், அகழ் இழிந்த எனும் சொற்களை பயன்படுத்தியுள்ளார். இச்சொற்கள் பண்டைய தமிழர் நீர்ப்பாசன (irrigation) தொழில் நுட்பத்தில் பாவித்த சொற்களாகும். 
குளத்திலிருக்கும் தண்ணீரை ஆற்றினுள் ஊற்றும் வாய் ஊற்றுவாய் எனப்படும். ஊற்றுவாயை குமிழி என்றும் சொல்வர். குண்டு என உருண்டையான கல்லை அழைத்தனர். ஒன்றை இயக்குதலே முடுக்குதல். கயமுடுக்கர் குளங்களின் நீர் மட்டத்தை கட்டுபடுத்தி இயக்கும். அதனால் குளங்களில் இருந்து வெளிவரும் தண்ணீர், நீர்க்குத்தாக விழுமிடம் முடுக்கர் எனவும் அழைக்கப்படும். ஊற்றுவாயில்(குமிழி) சுழலும் உருண்டையான கல் (குண்டு) அந்தக் கயங்களின்  கயமுடுக்கர் ஆக இருக்கும். மீண்டும் ஒருக்கால் அவ்வரியைப் பார்ப்போம்.
"குமிழி சுழலுங் குண்டு கயமுடுக்கர்
அகழ் இழிந்தன்ன கான் யாறுநடவை

ஊற்றுவாயின் கயமுடுக்கர் 

அதாவது, அகழியில் நீர் ஏறி இறங்கி வழிவது போல காட்டாற்று வழியானது, குளத்தின் ஊற்றுவாயில் சுழலும் குண்டில் தண்ணீர் குத்தாக வழிந்தோட  இருந்ததாம். கமத்தொழிலிலும் நீர்ப்பாசனத்திலும் சங்க காலத்தமிழர் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்திருந்தால் இவ்வளவு அரிய நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி இருப்பார்கள்? இரண்டாயிர ஆண்டுகட்கு முன் வாழ்ந்த பண்டைத்தமிழரின் நீர்ப்பாசனத் தொழில்நுட்ப அறிவை எடுத்துக் காட்டும் வரலாற்று பதிவே இவ்வரிகளாகும். இந்த வரலாற்றுப் பதிவை எமக்கு விட்டுச்சென்ற பெருங்கௌசிகனாரை நாம் போற்ற வேண்டும்.

தேன் உள்ள ஆம்பல் மலர்கின்ற குளங்களின் மதகுகளில் வழியும் நீரின்(தூம்பு) ஓசை நிறைந்து (பொங்கு) காடுகள் இருந்ததை  
“அம்கள்வாய்க் கயம்வளர் ஆம்பல் தூம்புடைப்
பொங்கு காடு”                                              
                                                 - (சூளாமணி: 368: 1 - 2)
என சூளாமணியில் தோலாமொழித் தேவர் காட்டுகிறார்.

புனல் அம் புதவு [வான்கதவு]

ஈழத்திலும் ஆம்பல் நிறைந்த குளங்களும் அவற்றில் இனிமையான ஒலியோடு நீர்வழிந்தோடும் வான்கதவுகளும் இருந்ததை புறநானூறு சொல்கிறது. நன்னாகனார் என்னும் புலவர் ஓவியர் வழி  (மயனின் வழித்தோன்றல்) வந்தவனாகிய நல்லியக்கோடன் என்னும் அரசனை புகழும் இடத்தில் அதனைக் கூறியுள்ளார். ஓரை என்னும் விளையாட்டை விளையாடும் அழகிய நகைகளை அணிந்த இளம் பெண்கள், பன்றி[கேழல்] உழுத சேற்றில் இருந்து புலால் மணக்கும் ஆமை[யாமை] முட்டைகளையும் தேன் மணக்கும் ஆம்பல் கிழங்குகளையும் எடுக்கின்ற, இனிய (இழுமென) ஒலியுடன் நீர்வழிந்தோடும் வான்கதவுள்ள(புனல் அம் புதவு) மாபெரும் இலங்கைத் தலைவன்[பெருமா இலங்கைத் தலைவன் என நல்லியக்கோடனை புறநானூறு விளக்கிக் காட்டுவதைப் பாருங்கள்.
“ஓரை ஆயத்து ஒண்தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின்,
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத்
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின்,
பெரு மாவிலங்கைத் தலைவன்,”                    
                                                    - (புறம்: 176: 1 - 6)

புங்குடுதீவிலும் ஆம்பல் குளம் இருந்தது. அக்குளம் வரட்சியால் ஆம்பல் மலரையும் கிழங்கையும் இழந்ததால் ஒருசிலர் இன்று ஆமைக் குளம்  அழைக்கின்றனர். அக்குளத்திலும் மீண்டும் ஆம்பல் மலரும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
ஆம்பல் அணிகலன்














சங்ககாலத் தமிழர் பெண்கள் அணிந்த ஒருவகை வளையலை ஆம்பல் என்ற பெயரால் அழைத்தனர். ஆம்பல் அணிகலனாகிய (வள்ளி) வளையலை அணிந்த மகளிர் குன்றுகளில் ஏறி நீரில் பாய்ந்து விளையாடியதை பரணர் 
“ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
 குன்று ஏறிப் புனல் பாயின்”             - ( புறம்: 352 : 5 - 6)

என புறநானூற்றில் பாடியுள்ளார். அந்த அணிகலன் குளங்களில் இயற்கையாகப் பூத்த ஆம்பல் மலர்களால் ஆனதாகவும் இருந்திருக்கலாம். சங்கத்தமிழர் ஆம்பல் என்ற பெயரால் வேறு எவற்றையெல்லாம் அழைத்தனர் என்பதை தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment