Wednesday, 18 December 2013

தானடங்காப் பேதையர்



நம்மிடையே வாழும் ஒருசில அறிவாளிகள் ‘தாம் அதிகம் படித்திருக்கிறோம்’ என்று எண்ணியோ அன்றேல் ‘மற்றவர்களுக்கு ஏதும் தெரியாது’ என்று எண்ணியோ இறுமாப்புடன் இருக்கின்றனர். இப்படிப்பட்டோர் இன்று நேற்று அல்ல திருவள்ளுவர் காலத்திலும் வாழ்ந்திருக்கின்றனர். அதனாலேயே திருவள்ளுவரும் அத்தகைய அறிவாளிகளை ‘தானடங்காப் பேதையர்’ என அழைத்தார் போலும்.

ஒருவருக்கு தான் கற்ற கல்வியால் வந்த அறிவு, தான் பிறந்த குலத்தால் வந்த உயர்வு, இயற்கையாகவே உள்ள கருணை உள்ளம், உலகெலாம் போற்றும் புகழ், அளவிடமுடியாத செல்வம், கைம்மாறு கருதாமல் தன்னிடம் உள்ளதை அள்ளி வழங்கும் கொடைத்தன்மை, நற்பண்பு, நல்லொழுக்கம், அரிய தவத்தால் வந்த மனத்தூய்மை, நெருங்கி நட்புக்கொள்ளும் தன்மை, இன்னொருவருடன் ஒப்பிட்டு சொல்லமுடியாத வலிமை, எப்போதும் உண்மை பேசுதல், மிகவும் தூய்மையாக இருத்தல், பேரழகு ஆகிய பதின்நான்கு நலன்களும் இருப்பினும் அவரிடம் அடக்கம் இல்லாத இறுமாப்பு இருக்குமானால் அந்த நற்பண்புகள் யாவும் அழிந்து போகும் என்கிறது பிரபோத சந்திரோதயப் பாடல்.
கற்றறிவு குலமேன்மை கருணைபெரும்
          புகழ்செல்வம் கைமா றெண்ணாது
உற்றதுதவும் கொடைசீர்மை ஒழுக்கம்அருந்
          தவநியமம் உறவின் கேண்மை
மற்றெதிரிலாத் திண்மை வாய்மைமிகுந்  
          தூய்மைகுணம் வனப்பு யாவும்
பெற்றிடினும் அடக்கமிலாப்  பெருமிதத்தால் 
          அத்தனைக்கும் பிழையுண்டாமால்

                                          - (பிரபோத சந்திரோதயம்: 33)

நாம் நம்மிடம் இருக்கும் நற்பண்புகளில் பிழைவராமல் வாழவேண்டுமானால் அடங்கி நடத்தல் நன்று. இதனை உணர்ந்தே நம் முன்னோர் தமது அநுபவுண்மையை ‘கற்றவர்க்கு அழகு கற்றுணர்ந்தடங்கல்’ என்று சொல்லிச் சென்றனர் போலும்.
“ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையர் இல்”                                                       
                                            - (குறள்: 834)

அடக்கம் இல்லாத ஒருவரிடம் எத்தனைவகையான நற்குண இயல்புகள் இருந்தாலும் பட்டம் பதவி, செல்வம் இருப்பினும் அவையாவும் பண்பான நெஞ்சுள்ளோர் கண்ணுக்குத் தெரிவதில்லை. கல்விகற்றுத் தெளிந்த அறிஞராய் பிறருக்குப் புத்திமதி கூறுபவராய் இருந்தும் அடக்கம் இல்லாதோரை திருவள்ளுவர் 'தானடங்காப் பேதையர்' என்று மட்டும் சொல்லாது அதற்கு மேலே சென்று 'பேதையிற் பேதையர்' என ஏன்சொன்னார் என்பது புரிகிறதா?
இனிதே,
தமிழரசி. 

No comments:

Post a Comment