Monday 9 December 2013

கொக்கைப் போலக் காத்திருங்கள்


தமிழ்ப்பாக்களுக்கு அழகைக் கொடுப்பது அணியாகும். அணி என்றாலே அழகு என்றே பொருள் தரும். அணிகள் பலவகை. பாக்கள் சொற்களால் ஆனதால் சொல்லணி சிறப்புடையதாகக் கருதப்படும். ஒரு சொல் - வெவ்வேறு கருத்துக்களைத் தரும் சொல்லணியில், ‘மடக்கு சொல்லணி’ என்று ஒருவகை உண்டு.  

நாம் வைத்திருக்கும் ஒரு பொருளை ஒருவன் பறித்துக்கொண்டு ஓடினால் அவனை மடக்கிப் பிடியென்போம். குடையை மடக்கி வைப்போம். அதுபோல் ஒரு சொல்லோ, ஓர் எழுத்தோ மடங்கி வந்து பாவிற்கு அழகைக் கொடுத்து மெருகேற்றுவதால் மடக்கு சொல்லணி என்று அழைக்கப்படும். அதனை தண்டியலங்காரம்

“எழுத்தின் கூட்டம் இடை பிறிது இன்றியும்
பெயர்த்தும் பொருள்தரின் மடக்கு எனும் பெயர்த்தே”   
                                                  - (தண்டியலங்காரம்: 92) 
எனச்சொல்கிறது. பாவில் வரும் சொற்களில் உள்ள எழுத்துக்கள் இடையிலே பிரியாமலும், அதே சொற்கள் பிரிந்தும் வேறு வேறு கருத்துக்களைத் தருமெனில் அது மடக்கு எனும் பெயர் பெறும் என்கிறது தண்டியலங்காரம்.

ஒருவர் ஒன்றைச்செய்வதற்கு ஏன் தகுந்த காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும் என்பதைச் சொல்லவந்த திருவள்ளுவர் காலம் அறிதல் என்னும் அதிகாரத்தின் முதலாவது குறளில்
“பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது”                                 
                                                          - (குறள்: 481)
என்கிறார். அதாவது வலிமைமிக்க ஆந்தையை காகம் பகலில் வெல்லும். அது போல அரசன் தன் பகையை வெற்றிகொள்ள ஏற்ற நேரம் பார்க்கவேண்டும் என்கிறார். பத்தாவது குறளில்
“கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்து ஒக்க சீர்த்தவிடத்து”                                         
                                                            - (குறள்: 490)
என்கிறார். மீன் வரும்வரையும் காத்திருக்கும் கொக்குப்போல காலம்வரும்வரை காத்திருக்கவும். காலம் வாய்க்கும் போது கொக்கு மீனைக் குத்துதல் போல மிகவிரைவாகச் செயலைச் செய்து முடிக்கவேண்டுமாம். 
திருவள்ளுவர் சொன்ன இந்த இரண்டு குறளின் கருத்துக்களை காளமேகப் புலவுரும் சொல்கிறார். கவிநயம் சொட்டச்சொட்ட ஓர்எழுத்து மடக்குச் சொல்லணிப் பாவில், காளமேகப்புலவர் பாடியிருக்கும் அப்பாடலைப் நீங்களும் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.


“காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா”

திருவள்ளுவர் சொன்ன இரு குறளுக்கும் காளமேகப் புலவர் கொடுத்த விளக்க உரை புரிந்ததா? காளமேகப் புலவரின் விளக்க உரையைக் கொஞ்சம் பிரித்துப் படிப்போமா?
“காக்கைக்கு ஆகா கூகை கூகைக்கு ஆகா காக்கை
கோக்கு கூ காக்கைக்கு கொக்கு ஒக்க - கைக்கைக்கு
காக்கைக்கு கைக்கு ஐக்கு ஆகா”

“காக்கைக்கு [காகத்துக்கு] ஆகா [ஆகாது] கூகை [ஆந்தை] கூகைக்கு [ஆந்தைக்கு] ஆகா [ஆகாது] காக்கை [காகம்]
கோக்கு [அரசனுக்கு] கூ [பூமி] காக்கைக்கு [காப்பதற்கு] கொக்கு [கொக்கைப்] ஒக்க [போல]  - கைக்கைக்கு [பகைமையை எதிர்த்து] (கைக்கை - கசப்பு, வெறுப்பு, பகைமை)
காக்கைக்கு [காப்பதற்கு] கைக்கு [ஆற்றல் உள்ள] ஐக்கு [அரசனுக்கு] ஆகா [முடியாது]”

ஆந்தைக்கு பகலில் கண் தெளிவாகத் தெரியாததால் காகம் ஆந்தையைப் பகலில் வெல்லும். காகத்திற்கு இரவில் கண் தெளிவாகத் தெரியாததால் ஆந்தை காகத்தை இரவில் வெல்லும். பகையை வெல்ல காலம் மிகமுக்கியமானதாகும். 

காகமும் ஆந்தையும் ஒன்றுக்கொன்று பகையானவை. எனவே காகத்திற்கு ஆந்தையைப் பிடிக்காது. ஆந்தைக்கு கூகையைப் பிடிக்காது. அரசன் பூமியைக் காப்பதற்கு கொக்கைப்போலக் காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும். இல்லை என்றால் பகையை எதிர்த்துக் காப்பதற்கு ஆற்றலுள்ள அரசனுக்கும் முடியாது என்கிறார். இப்போது காளமேகப்புலவரின் விளக்க உரை புரிந்ததா?

காளமேகப்புலவரின் இப்பாடல் ஓர் எழுத்து மடக்குச் சொல்லணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இனிதே,
தமிழரசி.

2 comments: