Saturday, 28 December 2013

ஒட்டக்கூத்தரா! புகழேந்தியா!

பாண்டியரின்  பொதிகைமலை


பாண்டியர்களும் சோழர்களும் பகைத்து போர் செய்து கொண்டாலும், அவர்களிடையே திருமணம் செய்துகொள்ளும் வழக்கமும்  இருந்ததை வரலாறு காட்டுகிறது. பாண்டியப் பேரரசனின் மகளை குலோத்துங்க சோழன் மணம் முடிக்க விரும்பினான். தன் விருப்பத்தை தனது குருவான ஒட்டக்கூத்தரிடம் சொன்னான். அவனின் விருப்பத்தை நிறைவேற்ற ஒட்டக்கூத்தரும் பாண்டியனிடம் சென்று பெண்கேட்டார். அதைக் கேட்ட பாண்டிய மன்னன், “பாண்டியரைவிடச் சோழரும், பாண்டிய நாட்டைவிடச் சோழநாடும் எந்தவகையில் சிறந்தது? எனச் சொல்லுங்கள்’ என்றான். அதற்கு ஒட்டக்கூத்தர் 

கோரத்துக்கு ஒப்போ கனவட்டம் அம்மானே
கூறுவதும் காவிரிக்கு வையையோ அம்மானே
ஆருக்கு வேம்புநிகர் ஆகுமோ அம்மானே
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே
வீரருக்குள் வீரனொரு மீனவனோ அம்மானே
வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே
ஊருக்கு உறந்தைநிகர் கொற்கையோ அம்மானே
ஒக்குமோ சோணாட்டைப் பாண்டிநாடு அம்மானே

‘சோழ அரசர்களின் குதிரையாகிய கோரம், பாண்டிய அரசர்களின் குதிரையாகிய கனவட்டத்திற்கு ஒப்பாகுமா? சோழரின் காவிரிக்கு இணையாக, வையைக் கூறுவதும் உண்டோ? ஆர் என்பது ஆத்திமரத்தின் இன்னொரு பெயர். ஆத்திப்பூ மாலைக்கு [சோழர் அணியும் பூமலை] வேப்பம்பூ மாலை [பாண்டியர் அணியும் பூமாலை] நிகராகுமா? சூரியனுக்கு [சோழரின் குலம் சூரியன்] சந்திரன் [பாண்டியரின் குலம் சந்திரன்] நிகராகுமா? வீரருக்குள் வீரனாய் இருப்போர் மீனவர்களாகிய பாண்டியரோ? வெற்றியையுடைய புலிக்கொடிக்கு மீன் கொடி சமமாகுமா? ஊர்களுக்குள் உறந்தைக்கு [சோழரின் தலைநகர்], கொற்கை [பாண்டியரின் தலைநகர்] ஈடாகுமா? சோழநாட்டோடு பாண்டிய நாட்டை ஒப்பிடமுடியுமா?’ என அம்மானைப் பாடலில் பதில் சொன்னார். அம்மானை என்பது பெண்களால் விளையாடப்பட்ட ஒருவகைப் பந்துவிளையாட்டாகும். 

சோழரின் ஆத்திப்பூ

பாண்டிய அரசனின் அவையிலே ஒட்டக்கூத்தர் இப்பாடலைச் சொன்ன போது அங்கே புகழேந்திப் புலவரும் இருந்தார். ஒட்டக்கூத்தர் யாரைப் பெண்கேட்டு வந்தாரோ, அந்தப் பெண்ணின் [பாண்டியனின் மகளின்] குருவே புகழேந்திப் புலவர். பெண்கேட்டு வந்த இடத்தில் மிக்க அகந்தையுடன் ஒட்டக்கூத்தர் பாடியது புகழேந்தியாருக்குப் பிடிக்கவில்லை. ஆதலால் ஒட்டக்கூத்தர் பாணியிலேயே பதில் சொன்னார்.

ஒருமுனிவன் நேரியிலோ உரைதெளித்தது அம்மானே
ஒப்பரிய திருவிளையாட்டு உறைந்தையிலோ அம்மானே
திருநெடுமால் அவதாரம் சிறுபுலியோ அம்மானே
சிவன்முடியில் ஏறுவதும் செங்கதிரோ அம்மானே
கரையெதிரல் காவிரியோ வையையோ அம்மானே
கடிப்பகைக்குத்  தாதகியங் கண்ணியோ அம்மானே
பரவை பரந்ததுவும் சோழன் பதந்தனையோ அம்மானே
பாண்டியனார் பராகிரமம் பகர்வறிதே அம்மானே

‘சோழ நாட்டிலுள்ள நேரிமலையிலா அகத்தியர் தமிழை விதைத்தார்? சிவனார் செய்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் உறந்தையிலா நடந்தது? திருமால் சிறுபுலியாகவா அவதாரம் செய்தார்? சிவனின் திருமுடியில் ஏறியிருப்பது சூரியனோ? திருஞானசம்பந்தர் விட்ட ஏடு காவிரி ஆற்றையா! வையை ஆற்றையா! எதிர்த்து கரை ஏறியது? பித்துப் பிடித்தோரைக் குணப்படுத்துவது ஆத்திப்பூங் கொத்தோ? கடல் பணிந்து தணிந்து நின்றது சோழனின் காலடியிலா? ஆதலால் பாண்டியரின் மாவீரம் சொல்லுக்குள் அடங்காது’ என்று புகழேந்தியார் சொன்னார்.

பாருங்கள் ஒட்டக்கூத்தர் சோழரைப் புகழ்ந்தும், பாண்டியரை நேரடியாகத் தாக்கிப் பாடியிருந்தும் புகழேந்திப்புலவர் வையைக் குறிப்பிட்ட இடத்தைத் தவிர எந்த ஒரு வரியிலும் பாண்டியரின் பொருளைக் கூறாது, கடைசியில் பாண்டியரின் மாவீரம் சொல்லில் அடங்காது என்கிறார். ஒட்டக்கூத்தரைப்போல் ஒக்குமோ என்றும் நிகர் என்றும் ஓர் இடத்திலேனும் புகழேந்திப்புலவர் பாண்டியரைக் குறிப்பிடவில்லை. ஆனால் சொல்லவேண்டியதை ஆணித்தரமாகச் சொல்லி இருக்கிறார். ஒட்டக்கூத்தரைப் பார்த்து, புகழேந்தியார் தொடுத்த கேள்விகளின் விடைகள் யாவும் பாண்டியரின் புகழையே எடுத்துச் சொல்கின்றன. 

‘சோழ நாட்டிலுள்ள நேரிமலையிலா அகத்தியர் தமிழை விதைத்தார்? அகத்தியர் பாண்டிய நாட்டிலுள்ள பொதிகை மலையில் தமிழை விதைத்தாரே! சிவனார் செய்த திருவிளையாடல்கள் யாவும் உறந்தையிலா நிகழ்ந்தன? திருவிளையாடல்கள் யாவும் மதுரையில் நிகழ்ந்தனவே! திருமால் சிறுபுலியாகவா அவதாரம் செய்தார்? திருமால் மீனாக அவதாரம் செய்தாரே! சிவனின் திருமுடியில் ஏறியிருப்பது சூரியனோ? சிவனின் திருமுடியில் சூடியிருப்பது சந்திரனே! திருஞானசம்பந்தர் விட்ட ஏடு, காவிரி ஆற்றையா! வையை ஆற்றையா! எதிர்த்துக் கரை ஏறியது? வையையை எதிர்த்து அல்லவா கரையேறியது! பித்துப்பிடித்தோரைக் குணப்படுத்துவது ஆத்திப்பூங் கொத்தோ? பித்துப்பிடித்தோரைக் குணப்படுத்து  வேப்பம்பூங் கொத்தே! கடல் பணிந்து தணிந்து நின்றது சோழனின் காலடியிலா? பாண்டியனின் காலடியில் அல்லவா! என்று புகழேந்தியார் கேட்ட கேள்விகளில் விடைகள் தொக்கி நின்றன. ஆதலால் பாண்டியரின் மாவீரம் சொல்லுக்குள் அடங்குமா? நீங்களே சொல்லுங்கள் ஒட்டக்கூத்தரா! புகழேந்தியா! யார் திறைமை மிக்கவர்?
இனிதே, 
தமிழரசி.

2 comments:

  1. ஆழ்ந்த தமிழ்ப்பற்று

    ReplyDelete
    Replies
    1. ஆம், ஒட்டக்கூத்தருக்கு. மகிழ்ச்சி.

      Delete