சமணமுனிவர்கள்
மனிதவாழ்க்கையில் தவறு செய்தவர்கள் தாம் தவறு செய்ததாக ஒப்புக்கொள்ளுதல் மிகஅரிதாகவே கணப்படுன்றது. எனவே தாம்விட்ட பிழையை ஒப்புக்கொண்டு, அதை எண்ணி வருந்தி, திருந்தியவர்களை நம் முன்னோர் பெரியோர்களாக மதித்தனர்.
தனது வாலிபப்பருவத்தில் சமணசமயத்தில் சேர்ந்து தருமசேனர் என்ற பெயருடன் மூர்க்கனாய் திரிந்தவர் திருநாவுக்கரசு நாயனார். பின்னர் தமது பிழையை உணர்ந்து திருந்திய போது தான் வாழ்ந்த இழிநிலையை
“குண்டாக்கனாய் உழன்று கையில் உண்டு
குவிமுலையார் தம்முன்னே நாணம் இன்றி
உண்டியுகந்து அமணே நின்றார் சொற்கேட்டு
உடனாகி உழிதந்தேன் உணர்வொன்று இன்றி” - (ப.திருமுறை: 6: 3: 7)
என்று அவரே சொல்கிறார்.
இன்றைய தமிழ் சினிமாக்களில் வரும் குண்டர்கள் போல குண்டக்கம் (வஞ்சனை) செய்யும் மூர்க்கனாய் தடுமாறினாராம். இளமையான பெண்களின் முன்னே வெட்கம் இன்றி எதுவித உடையும் அணியாமல் நின்று உணவைப் பெற்று உண்டு மகிழ்ந்தாராம். உடை உடுத்தாத சமணர்களின் சொற்களைக் கேட்டு அவர்களுடன் சேர்ந்து நல்லுணர்வு இல்லாது திரிந்தேன் [உழிதந்தேன்], என்கிறார். ஆடை அணியாதவர்கள் என்றகருத்தில் அமணர் என்று அழைத்த சொல்லே சற்று மருவியதால் இப்போது சமணர் என்கிறோம்.
இருந்து உணவை உண்டால் இருக்கும் போதோ, இலையின் கீழோ, எறும்பு போன்ற சிற்றுயிர்கள் அகப்பட்டு இறந்து போகும் என நினைத்து சமணர்கள் நின்றே உணவை உண்பர். அதனால் தமது உணவுப் பாத்திரத்தை [குண்டிகை] உறியில் வைத்து சுருக்கிட்டு முடித்து கையில் தூக்கிக் கொள்வர். பல் துலக்குவதால் பல்லுக்கிடையே வாழும் உயிர்கள் அழிந்து போகும் என்ற காரணத்தால் சமணர் பல் துலக்குவதில்லை. அதனால் அவர்களின் வாய் எப்போதும் ஊத்தவாயாய் நாறிக்கொண்டு இருக்கும். அப்படிப்பட்ட சமணர்களுக்கு ஒரு குண்டனாய், புரியாணிச் சோற்றினை[கறிவிரவு நெய்சோற்று] கையில் வாங்கி உண்டு, என்னைப் பார்ப்போருக்கு பொல்லாத வெறுப்பைத்தரும் காட்சிப்பொருளாய் ஆனேன், என்று கூறி வருந்துவதைப் பாருங்கள்.
“உறிமுடித்த குண்டிகை தம்கையில் தூக்கி
ஊத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக் கனாய்க்
கறிவிரவு நெய்சோறு கையில் உண்டு
கண்டார்க்குப் பொல்லாத காட்சியானேன்” - (ப.திருமுறை: 6: 3: 8)
இப்படி சணர்களைப் பற்றிக்கூறும் தேவாரங்களைப் படித்துப்பார்த்தால் புரியும் அன்றைய காலகட்டத்தில் திருநாவுக்கரசரின் மனத்துன்பமும் அதனால் ஏற்பட்ட தாக்கமும். ஒருவர் தாம் வாழ்ந்த இழிநிலையை பெரிதும் சொல்வதில்லை. அப்படிச் சொல்வதற்கு மிகத்திடமான பண்பட்ட மனம் இருக்கவேண்டும். திருநாவுக்கரசு நாயனார் அத்தகைய ஒரு செம்மல் என்பதை அவரது தேவாரப்பதிகங்கள் எடுத்துக் கூறுகின்றன. பொல்லாத காட்சியானேன் எனச்சொல்ல எவருக்கு முடியும்?
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment