மன்னாரில் வாழ்ந்த கன்னி ஒருத்தி ஓர் இளைஞனைக் காதலித்தாள். அவன் அவளை இரவில் சந்தித்துப் பேசுவது வழக்கம். ஒருநாள் மாந்தைக்குப் போய்வருவதாகச் சொல்லிச் சென்றான். ஆனால் அவன் சொன்ன நேரத்துக்கு வரவில்லை. அதனால் அவன் மேல் கோபம் கொண்டு ‘புத்தி தடுமாறி வேறேங்கும் போய்விட்டானா? நடு இரவாகி ஆந்தை கத்தும் நேரமும் வந்துவிட்டதே இன்னும் அவன் வரவில்லையே!’ என்ற தன் மனஏக்கத்தைத் தோழிக்குச் சொல்கிறாள். காதலன் வரவை எதிர்பார்த்திருந்த காதலியின் மனஏக்கத்தைச் சொல்லும் நாட்டுப்பாடல் இது.
காதலி : மாந்தைக்குப் போனவரு
மதிமயங்கிப் போனாரோ
ஆந்தை அலரும் நேரமடி
ஆள்வரக் காணேனடி
- நாட்டுப்பாடல் (மன்னார்)
- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
2009ல் நடந்த போரின் பின்னரும் கூட மாந்தைக்கும் மன்னாருக்கும் இடையே பெருங்காடு இருக்கிறது. அங்கே புலி, கரடி, மட்டுமல்ல மதங்கொண்ட யானைகளும் திரிகின்றன. கொடிய விலங்குகள் திரியும் காட்டினூடாக காதலியைக் காண வருபவன் அவன். நேரம் போகப்போக கொடிய விலங்குகளின் நடமாட்டமும் கூடும். அதனால் அவனுக்கு ஏதும் துன்பம் நேருமோ என்ற துடிப்பும் கோபமும் சேர்ந்து நாட்டுப்பாடலாக வடிவெடுத்திருக்கிறது.
அந்நாளில் வாழ்ந்த காதலிகள் ஏன் ஆந்தை அலறுவதைக் கண்டு பயந்தார்கள் என்பதை சங்க இலக்கிய காதலர்கள் மூலம் நாம் அறியலாம். பெற்றோரும், உற்றாரும், ஊராரும் தூங்கிய பின்னர் காதலர்கள் சந்தித்துக் கொள்வது வழக்கம். மன்னாரில் வாழ்ந்த காதலியைப் போல சங்ககாலக் காதலியும் காதலன் வரவுக்காக அவளது ஊரின் நுழைவாயிலில் இருந்த குடிநீர்ச் சுனையிருந்த பூம்பொழிலில் தோழியுடன் காத்திருந்தாள். காதலன் வரவில்லை. நேரமோ உருண்டது. அப்பூம்பொழில் மரத்திலிருந்த கூகை [பேராந்தை] மெல்ல ‘க்கூம், க்கூம்’ எனக் குரல் எழுப்பத் தொடங்கியது.
அப்போது
“எம்ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முதுமரத்து உடன் உறை பழகிய
தேயா வளை வாய்த் தெண்கண் கூர்உகிர்
வாய்பறை அசாஅம் வலிமுந்து கூகை
மைஊன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்
எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல்நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றா தீமே” - (நற்றிணை: 83)
என்று பேராந்தையிடம் கெஞ்சினாள்.
‘எங்கள் ஊர் நுழைவாயிலில் உள்ள குடிநீர்துறை அருகே, கடவுள் வீற்றிருக்கும் முதிய மரத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட கூகையே! வளைந்த வாயையும் தெளிவான பார்வையுள்ள கண்ணையும் கூரான நகங்களையும் வாயே பறையாக ஒலிப்பதால் கேட்போரை அச்சம் கொள்ளச்செய்யும் வலிமையும் உடையாய்! ஆட்டிறைச்சி [மைஊன்] புரியாணியோடு [தேர்ந்தெடுத்த நெய்விட்டு சமைத்த வெண்சோறு], சுட்ட வெள்ளை எலியும் நிறையவே தந்து உன்னைப் பேணிக்காப்போம். அன்பு குறையாத எம் காதலர் வரவை விரும்பி நித்திரையும் கொள்ளாது மனக்கலங்கும் வேளையில் மற்றவர்கள் பயந்து விழித்துக் கொள்ளும்படி உனது கடுங்குரலால் அலறாது இருப்பாயாயே!’ எனக் கெஞ்சினாள் என்று பெருந்தேவனார் என்னும் சங்ககாலப் புலவர் பாடியுள்ளார்.
ஆந்தை அலறினால் பெற்றோரும் ஊராரும் விழித்துக்கொள்வார்கள் என்ற பயத்தால் ஆட்டிறைச்சி புரியாணி மட்டுமல்ல ஆந்தைக்குப் பிடித்த வெள்ளெலியையும் பிடித்து சுட்டுக் கொடுக்க அந்நாளைய காதலிகள் ஆயத்தமாக இருந்திருக்கிறார்கள். மன்னார்க் காதலியும் சங்ககாலக் காதலியைப் போலவே மற்றவர்கள் விழித்துக் கொள்வார்கள் என்பதற்காக ‘ஆந்தை அலரும் நேரமெடி ஆள்வரக் காணேனடி’ எனத் துடிதுடித்தாளோ!
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment