Friday, 20 December 2013

பக்திச்சிமிழ் 73

தன்னை அறியும் அறிவு
- சாலினி -

இன்றைய சைவசயப் பெரியோர் என்று தம்மைக் கூறிக்கொள்வோரின் வழிகாட்டலில், எமது சைவசமயக் கொள்கையில் இருந்து எப்படித் தடம் புரண்டு செல்கிறோம் என்பதை நம்மவர்கள் இன்னும் உணரவில்லை. நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும் கோயில் என்றும் குளம் என்றும் சுவாமிமாரை அழைத்துப் பாதபூசை செய்து மகிழ்கிறோம். அந்த சுவாமிமாரை அழைத்து வருவோர் சுவாமிமாரின் பாதபூசைக்கும் சொற்பொழிவுக்கும் அறவிடும் காசால் சுவாமிமாரைப் பணத்தில் கொழுக்க வைத்து, தாமும் கொழுப்பதை நாம் எப்போது உணரப் போகிறோம். அதுவும் புலம்பெயர்ந்து வாழும் எம்மிடையே தான் இத்தகைய புதுப் பண்பாடு ஒன்று தோன்றிப் புரையோடிக்கொண்டிருக்கிறது.

‘அன்பே சிவம்’ என்றும், ‘சித்தத்தில் தித்திக்கும் தேனே’ சிவன் என்றும், சொன்ன சைவசமயம் இதனயா எமக்குக் கற்றுத்தந்தது? அன்னை மடியில் பிறந்து மண்ணின் மடியினுள் போவதற்கு முன்பு நாம் வாழும் வாழ்வுக்கு ஓர் அர்த்தம் வேண்டும். நாம் யார்? நமது எண்ணங்கள் யார்? யார்?, எவை? எவை? என்ற சிந்தனையற்று வாழ்தல் தகுமா? நம்மைப்போல் மானுடனாகப் பிறந்த மற்றவர் கால்களில் வீழ்ந்து நாம் வணங்க வேண்டுமா? அன்னை, தந்தை, ஆசிரியன், தெய்வம், இறந்த நம் முன்னோர் யாவரையும் வணங்குவதில் தவறே இல்லை. வேண்டும் மட்டும் எந்நேரமும் இவர்களை வணங்குங்கள். ஆனால் மாற்றார் கால்களில் வீழ்ந்து வணங்காதீர்கள்.

நம் முன்னோர்கள் இறைவனை நீளநினைந்து சுவைத்தவர்கள். அதனாலேயே சுந்தரமூர்த்தி நாயனார் 
“நீளநினைந்து அடியேன் உம்மை நித்தலும் கைதொழுவேன்”
எனத்தேவாரம் பாடினார். 

கடவுளை எப்படி நீளநினைக்க முடியும்? ஓரடியா? ஈரடியா? எந்த நீட்டல் அளவையால் அளந்து நினைப்பது? ஒரு நிமிடமா? இரண்டு நிமிடமா? ஓராண்டா? ஈராண்டா? அல்லது நம் வாழ்நாள் முழுவதுமா? அல்லது நாம் எடுக்கும் பிறவிகள் தோறுமா? என்ற கேள்விகள் எழத்தான் செய்யும். இறைவனை எப்படி நீளநினைப்பது என்பதை மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில்
“…………….. எழுகின்ற ஞாயிறே போன்று 
நின்ற நின்தன்னை நினைப்பற நினைந்தேன்
எனக் காட்டித் தந்துள்ளார். இறைவனின் எண்ணம் எமது சிந்தையில் இருந்து அறுந்து போகாது ஆற்றொழுக்குப் போல் தொடர்ந்து இருக்கவேண்டும். அதுவே நினைப்பற நினைத்தல் அல்லது நிளநினைத்தல் ஆகும். 

அப்படி நினைக்க எல்லோராலும் முடியாது. நாம் நினைக்கத் தொடங்கினால் அந்த நினைவை அது ஊட்டும். அந்நிலை முன்வினைப்பயனால் வருவதில்லை. மனப்பழக்கத்தல் வருவது. இந்த மனப்பழக்கத்தால் முன்னைய வினைகளை நாம் அறுத்து எறியலாம். அதற்கு நம்மை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். நம்மை நாம் அறிந்து கொண்டால் முற்பிறவியில் செய்திருந்த வினையை அவிழ்க்கலாம்.  இனிமேல் வரும் வினையையும் கசக்கிப் பிசைந்து எறியலாம். அதற்கு எம் சிந்தையிலே சிவனை வைத்தால் அவனருளால் அது நடக்கும் என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறியிருப்பதை கொஞ்சம் மனதில் இருத்தி சிந்தித்துப் பாருங்கள்.

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முந்தை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையினைப் பிடித்துப் பிசைவர்
சென்னியில் வைத்த சிவனருலாலே!”                          - (திருமந்திரம்: 2611)

எங்கும் நிறை பரம்பொருள் எம்மிடத்தில் இல்லாமல் இருப்பானா? சிந்திப்போம்! நம்முன்னோர் போல  தமிழராய் தலைநிமிர்ந்து வாழ எமது இளந்தலைமுறையினருக்கு கற்றுக் கொடுப்போம்.

No comments:

Post a Comment