Tuesday, 24 December 2013

இலங்குதல்லோ பல்லழகு!



ஒருவன் தன் தங்கையிடம் மச்சாளைப் பற்றி சொல்வதற்கும், தனது நண்பர்களிடம் சொல்வதற்கும் உள்ள வேறுபாட்டை கீழேயுள்ள நாட்டுப்பாடல்கள் காட்டுகின்றன. 

அநுராதபுரத்தில் இருக்கும் ஆலங்குளம் என்ற இடத்தில் வாழ்ந்த இளைஞன் ஒருவன் தன் வீட்டிற்கு வந்திருந்த மாமன் மகளின் சிரிப்பைப் பார்த்தான். அவள் சிரிக்கும் போதெல்லாம் பற்கள் மின்னின. அவளின் சிரிப்பின் மின்னலிலே அவன் சிக்கிக்கொண்டான். மின்னலில் சிக்கியவன் நிலை என்னாகும்? அந்த மின்னலின் வீச்சு எப்படி இருக்கிறது என்பதை அவனுக்கு அருகேயிருந்த தங்கையிடம்

மச்சான்: புத்தப்புது சட்டியில பொன்
                      உருக்கி வார்த்தது போல்
             எங்கமச்சி பல்லொளிவு 
                     எங்கும் துலங்குது காண்

எனச் சொல்கிறான். தங்கையிடம் சொல்லியும் அந்த மின்னலின் தாக்கம் அவனைவிட்டு நீங்கவில்லை. மாலை நேரம் தன் நண்பர்களைப் பார்க்கப் போனான். நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்க முன்னிரவு நேரமாக வானமெங்கும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டிச் சிரித்தன. அந்த நட்சத்திரச் சிரிப்புகளுக்கிடையே வெள்ளி மின்னலிட்டுச் சிரிப்பதைப் பார்த்தான். உடனே தன் மச்சாளின் பல்லழகைத் தனது நண்பர்களிடம்

மச்சான்: செவ்வானந் தன்னில் சிறந்த
                       வெள்ளி பூத்தது போல்
              என்மச்சி வாய் திறந்தால்
                       இலங்குதல்லோ பல்லழகு
                                 - நாட்டுப்பாடல் (ஆலங்குளம் [1950 முந்தியது] - அநுராதபுரம்)
                                            - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

எனச் சொல்லி மகிழ்ந்தான். பாருங்கள் மச்சாளின் பல்லின் ஒளிர்வைத் தன் தங்கையிடம் சொன்ன போது எங்க மச்சி என்று சொன்னவன், நண்பர்களிடம் சொல்லும் போது என் மச்சி என உரிமையுடன் சொல்கிறான். அவளின் பல்லழகை நட்சத்திரங்களுடன் ஒப்பிடவும் அவன் மனம் இடம் தரவில்லை. எனவே நட்சத்திரங்களை விடக்கூடிய ஒளிவீசும் வெள்ளியுடன் ஒப்பிடுகிறான். எந்த அளவுக்கு அவன்  காதல்வசப்பட்டான் என்பதை இந்த நாட்டுப்பாடல் காட்டுகிறது.

குறிப்பு:
1958ம் ஆண்டு அநுராதபுரத்தில் நடந்த இனக்கலவரத்திற்கு முன் பன்னெடுங்காலமாக தமிழர்களால் ‘ஆலங்குளம்’ என  அழைக்கப்பட்ட அந்த இடம்  ‘ஆலங்குளம’ என சிங்களத்தில் அழைக்கப்படுகிறது. எனினும்  பழைய காணி உறுதிகளில் ஆலங்குளம் என்றே இருக்கின்றது. 1977ம் ஆண்டு மீண்டும் அநுராதபுரத்தில் நடந்த கலவரத்தில் ஒரே நாளில் அங்கிருந்து 5000 மேற்பட்ட தமிழர் புலம் பெயர்ந்தனர். தமிழரின் மூன்று Cinema Theatres [சிற்றம்பலம், விஜேந்திரா, New Vijenthira] தீக்கிரையாக்கப்பட்டன. தற்போது அங்கு ஒன்று கூட இல்லை. என்னே மனித மன வளர்ச்சி!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment