Monday 23 December 2013

குறள் அமுது - (83)


குறள்:
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து                          - 90                                    

பொருள்:
 அனிச்சம் பூவை முகர்ந்தால் வாடும். ஆனால் கொஞ்சம் முகம் சலித்துப் பார்த்தாலே விருந்தினர் நெஞ்சம் வாடும்.

விளக்கம்:
விருந்தினர் நெஞ்சம் எப்படிப்பட்டது என்பதை இத்திருக்குறள் சொல்கிறது. விருந்து கொடுப்போர் விருந்தினர்க்கு விருந்தை எப்படி மகிழ்வோடு அன்பாய் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படை உண்மையை திருவள்ளுவர் தெட்டத் தெளிவாகாக் கூறியுள்ளார்.

தொட்டால் சுருங்கி நாம் தொட்டதும் வாடிவிடுவது போல அனிச்சம் பூ நாம் மணந்து பார்த்தால் வாடிவிடும். எமது மூச்சிக் காற்றின் வெப்பம் அனிச்சம் பூவை வாடவைக்கும். அனிச்சம் பூ இதழ்கள் அவ்வளவு மென்மையானவை. அந்த அனிச்சம் பூவைவிடவும் விருந்தினர் நெஞ்சம் மென்மையானது. ஏனெனில் அனிச்சம் பூவை நம் கையில் எடுத்து மூக்குக்கு அருகே கொண்டு சென்று மணந்தால் அதுவாடும். ஆனால் விருந்து கொடுப்போர் ஆறு ஏழு அடி தூரத்துக்கு அப்பால் இருந்தாலும் நம் முகத்தைக் கொஞ்சம் சுழித்துப் பார்த்தாலே விருந்தினர் நெஞ்சம்  வாடிவிடும்.

ஒப்புடன் முகமலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே அமிழ்தமாகும்
முப்பழமொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினொடு கடும்பசி ஆகுந்தானே‘                - (விவேகசிந்தாமணி: 5)

உப்பில்லா கஞ்சியை மனம்மகிழ்ந்து தந்தால், அது அமிழ்தமாய் சுவைக்கும். விருந்து உண்பதற்குப் போக முன்பே நம்மைப் பிடித்திருந்த [கப்பிய] பசி, விருந்து கொடுப்போரின் கடுகடுத்த பார்வையால் கடும்பசியாக மாறும். அவமானத்தால் நெஞ்சம் துவள்வதால், அன்றேல் கொதிப்பதால் பசியற்றுப் போக, அந்த உணவின் மேல் வெறுப்பு வரும். வெறுப்போடு உணவை உண்டால் அது சீரணிக்காது. உணவு சீரணிக்காவிட்டால் வருத்தம் வரும். விருந்து கொடுப்போரின் முகக்கடுகடுப்பு விருந்து உண்டவருக்கு சீரணமின்மையை உண்டாக்குவதால் இருந்த பசியோடு பெரும்பசியை அது உண்டாக்குமாம்.

விருந்தினரை அன்போடு உளம்கனிந்து வரவேற்று விருந்து கொடுங்கள்.  அனிச்சம்பூ முகர்ந்தால் வாடும். ஆனால் விருந்தினர் நெஞ்சமோ நீங்கள் முகம் சுழித்துப் பார்த்தாலே வாடிவிடும் என்பதை மறக்காதீர்கள் என்கிறார் திருவள்ளுவர்.

No comments:

Post a Comment