இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு - 1029
பொருள்:
தனது குடும்பத்தின் பெருந்துன்பத்தையே இல்லாமல் செய்பவனது உடம்பு, துன்பங்களை ஏந்தும் பாத்திரம் அல்லவா!
விளக்கம்:
இத்திருக்குறள் குடிசெயல்வகை எனும் அதிகாரத்தில் உள்ளது. கொள்கலம் என்பது பொருளைத் தாங்கி வைத்திருக்கும் பாத்திரம். இடும்பை என்றால் மாபெரும் துன்பம். அத்தகைய இடும்பைக்கும் துன்பம் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். பெரும் துன்பங்களைக் கண்டும் துன்பப்படாதவர்கள், துன்பத்தையே துன்பப்பட வைப்பார்கள் என்பதும் வள்ளுவன் வாக்கே. வறுமையிலும், துன்பத்திலும், துயரத்திலும் மனங்கலங்காதிருக்கும் ஆற்றல் எல்லா மனிதரிடமும் இருப்பதில்லை. அத்தகையோர் இலட்சத்தில் ஒருவரே இருப்பர்.
அந்த இலட்சத்தில் ஒருவரிடத்திலும் தான் என்னும் சுயநலமற்றுப் பொது நலன் பேணுவோர் எத்தனை பேர் இருப்பர்? அவர்களை இனங்காண முடியுமா? முடியும். அவர்கள் தாம் பிறந்த குடும்பம், தாம் பிறந்த குடி எனப் பொது நலம் பேணி, தமது உடலைப் பேணாது வருத்தி தம் குடும்பத்தின் அல்லது பிறந்த குடியின் எல்லாத் துன்பங்களையும் தாமே சுமப்பர். அவர்கள் துன்பங்களைச் சுமப்பதால் மற்றவர்கள் துன்பம் அற்று இன்பமாக வாழ்கின்றனர். இப்படி தான் பிறந்த குடும்பத்தின் நமைக்காக துன்பங்களைச் சுமப்பவரது உடலை கொள்கலம் என்கிறார்.
அப்படிப் படாத பாடுபட்டு உழைப்போரும் தமது உடலை வருத்துவர் அல்லாமல், உயிரை கொட்டிக் கொடுப்பரோ! ஈழத்தமிழ் இனத்தைச் சூழ்ந்த பெருந்துன்ப இருளை நீக்க, தம் ஆசைகளைப் பாசங்களைத் துறந்து, இன்னுயிரை கொல்கலமாக்கி கடலிடையே மின்னலிட்டு, தீயாய் மிளிர்ந்து, உலகுக்கு ஈழத்தமிழினதின் ஆற்றலை வெளிச்சமிட்டுக் காட்டிய நம் பிள்ளைகள் திருவள்ளுவரின் இக்குறளுக்கு ஒருபடி மேலே சென்று
“இடும்பைக்கே கொல்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உயிர்” ஆனார்கள்.
No comments:
Post a Comment