‘இசைத்தமிழ் அல்லது தமிழிசை எப்போது தோன்றியது?’ எனக் கேட்போருக்கு ‘தமிழ் என்று தோன்றியதோ அன்றே தமிழிசையும் தோன்றிவிட்டது என்று தலைநிமிர்ந்து விடை சொல்லலாம்.
தொல்காப்பியத்தின் மூன்றாவது பாவிலேயே இசை என்னும் சொல்லை தொல்காப்பியர் தருகிறார்.
“அவற்றுள்
அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும்
ஓரளவு இசைக்கும் குற்றெழுத்து என்ப” (தொல்: 1: 1: 3)
குற்றெழுத்துக்கள் ஐந்தும் ஒரு நொடிப்பொழுதே இசைக்கும் என்கிறார். பாருங்கள் தொல்காப்பியர் இற்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவரே குற்றேழுத்துக்கள் ஐந்தையும் ஒரு நொடி நேரத்தில் சொல்லவேண்டும் என்னும் கால அளவை ‘ஓரளவு இசைக்கும் குற்றெழுத்து என்ப’ என தனக்கு முன்னர் வாழ்ந்தோர் சொன்னதாகச் சொல்கிறார்.
எந்த மொழியாயினும் அதன் ஒலிவடிவத்திற்கு ஒலியே காரணமாகும். ஒலியில்லையேல் மொழியில்லை. ஒரு மொழியிலுள்ள எழுத்துக்களின் பிறப்பை ஒலியே வேறுபடுத்துகிறது. அந்த ஒலிக்குக் காரணம் காற்று. காற்றில் பரவும் ஒலி அலைகள் அதிர்வுகளுக்குத் தக்கபடி மாறுபடும். எமது செவிப்புலன்களைச் சென்றடையும் ஒலிநுண் அலைகளை இன்றைய தமிழர்களாகிய நாம் ஒலியன் என்கிறோம். அதனை பண்டைத் தமிழரான தொல்காப்பியர் வளியிசை என்று மிகவும் ஆழமான அழகிய சொல்லால் குறிப்பிட்டுள்ளார்.
“அஃதிவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்
மெய்தெரி வளியிசை அளவு நுவன்றிசினே” - (தொல்: 1: 3: 21)
‘இங்கு [இந்நூலில்] சொல்லப்படாது [நுவலாது], எமக்குள்ளிருந்து எழுந்து வெளியே வந்து ஒலிக்கும் எழுத்தின் உண்மைத் தன்மையை தெரிவிக்கும் வளியிசையின் [ஒலியனின்] மாத்திரையின் அளவைக் கூறினேன்’ என்கிறார். ஒவ்வொரு எழுத்தும் வரையறுக்கப்பட்ட கால அளவுள்ள வளியிசையை அதாவது ஒலியனை உடையது என்னும் அறிவியில் கருத்தை தொல்காப்பியர் இச்சூத்திரத்தில் சொல்கிறார். பாருங்கள், தமிழ் எழுத்தின் பிறப்பே நம் முன்னோருக்கு காற்றின் இசையாக - வளியின் இசையாகத் தெரிந்திருக்கிறது. [வளி என்றால் காற்று. வளி + இசை = வளியிசை].
தமிழ் இசைநூல் முறைப்படி தமிழெழுத்தின் ஒலிகள் ஒலிப்பதை
“அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளபென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்” (தொல்: 1: 1: 33)
எனத் தொல்காப்பியர், ‘தமிழ் எழுத்துக்களின் ஒலிகள் அதன் அளவுக்கு மேலும் நீண்டு ஒலித்தல் நரம்பிசைக் கருவியான யாழிசை நூலிலும் உள்ளதென இசைநூலார் செல்வர் எனப் புலவர்கள் கூறுவர்’ என்கிறார். இதில் தொல்காப்பியரின் காலத்திற்கு முன்பே தமிழிசையும் யாழிசை இலக்கண நூல்களும் தோன்றிவிட்டன என்பதை [இசையொடு சிவணிய - இசையோடு சேர்ந்த; நரம்பின் மறைய - நரம்பு இசையின் இலக்கணம்; உளபென மொழிப - உள்ளதெனச் சொல்வர்; என்மனார் புலவர் - எனப்புலவர் கூறுவர்], தொல்காப்பியர் எடுத்துச் சொல்லியுள்ளார். எனினும் நாம் அதனைக் கண்டுகொள்வதில்லை.
எழுத்ததிகாரத்தில்[1] அப்படிக் கூறிய தொல்காப்பியர், தமிழ் சொற்களின் இலக்கணத்தைக் கூறும் சொல்லதிகாரத்தில்[2]
“இசைப்பு இசையாகும்” (தொல்: 2: 8: 13)
என்கிறார். இசைப்பு - இசையின் போக்கு; சொற்களோ சுரங்களோ ஒன்றோடொன்று இசைந்து [சேர்ந்து] ஒழுகவேண்டும். அப்படி இருந்தால் இசை தோன்றும். அதாவது யாழின் இசைப்பு யாழிசையைத் தரும். குரலின் இசைப்பு குரலிசையைத் தரும்.
அடுத்து பொருளதிகாரத்தில்[3] செய்யுள் இலக்கணம் கூறும் தொல்காப்பியர்
“அசையும் சீரும் இசையொடு சேர்த்தி
வகுத்தனர் உணர்த்தல் வல்லோர் ஆறே” (தொல்: 3: 8: 10)
என, பிறருக்கு ஒன்றை எடுத்துச் சொல்லி உணர்த்த வல்லவர்கள் தமிழின் அசையையும் சீரையும் இசையோடு சேர்த்தற்கு வழி வகுத்தனர். அதாவது சீர் என்பதை சொல் என்று வைத்தால் சொல்லைப் பிரிக்கும் இடமே அசையாகும். கண்ணன் என்ற சொல்லை ஒரு சீர் எனக் கொண்டால் அதைப்பிரிக்கும் போது ‘கண்’ ஒரு அசையாகவும் ‘ணன்’ ஒரு அசையாகவும் வரும். சீர் பிரிந்து அசைக்கப்படுவதால் அதனை அசை என்றனர். சீர் அசைகளாகப் பிரிந்து பண்ணுக்கு அமைய ஓசை நயத்தைக் கொடுத்து, இசையை உண்டாக்க சீரில் உள்ள அசைகளை பிரிக்கும் முறைகளை வகுத்துக் கொடுத்தனராம். [ஒரு சீர் எங்கே அசைந்து கொடுக்கும் என்பதற்கான இலக்கணத்தை வகுத்தனர்.]
நாம் நினைத்த மாதிரி சீர்களைப் பிரிக்க முடியாது. சீர் எப்படி அசையாக பிரியும் என்பதற்கும் வரைமுறை (இலக்கணம்) இருக்கிறது. அதற்கமையவே அந்நாளைய செய்யுள்கள் இயற்றப்பட்டன. தொல்காப்பியத்தின் செய்யுளியல் அதனை விரிவாகச் சொல்கிறது. அத்துடன் இசையுடனான பாட்டு, பண்ணத்தி, வண்ணம் ஆகியவை பற்றியும் சொல்கிறது. வண்ணத்தில் மட்டும் இருபது வகையான வண்ணத்தைக் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அதில் வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம் மூன்றும் இசைப் பெயரையே தம்மோடு தாங்கி நிற்கின்றன. இவை முறையே வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்தால் ஆன பாடல்களாகும். வண்ணம் வடமொழியாளர் வாய்ச்சொல்லால் வர்ணம் என்ற பெயர் பூண்டு இன்று எம்மிடையே வலம் வருகிறது.
தொல்காப்பியம் ஐவகை நிலத்துக்கும் உரிய கருப்பொருள் பற்றிக் கூறும் இடத்தில்
“தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு
அவ்வகை பிறவும் கருவென மொழிப” (தொல்: 3: 1: 20)
என்கிறது. தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழின் பகுதியான பண் போன்றவற்றுடன் பிற கருப்பொருள் பற்றியும் சொல்வார்கள் என்கிறது.
எனவே தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே பண்டைத்தமிழர் ஐவகை நிலத்துக்கும் [குறுஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்] தனித்தனியே பறை, யாழ், பண் எனத் தமிழிசையில் மூழ்கி இருந்தனர் என்பதை தொல்காப்பியம் எடுத்துக்காட்டுகிறது. தொல்காப்பியமும் அதற்குப் பின் வந்த சங்க இலக்கிய நூல்களும், பண்டைத்தமிழரின் இசைக்கருவிகளையும் அவற்றை இசைத்தும் பாடியும் திரிந்த பாணரையும் பாடினியரையும் மிக நுட்பமாகப் படம்பிடித்து பதிவு செய்து இரண்டாயிரத்து அறுனூறு ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருக்கின்றன. ஆனால் தமிழராகிய நாம் அவற்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
இவற்றுக்கும் மேலாக கடல் கோளால் [ஆழிப்பேரலையால்] அழிந்து போன குமரிக் கண்டத்தில் பஃறுளி ஆற்றை வெட்டியவனாகச் சொல்லப்படும் வடிவம்பலம் நின்ற பாண்டியமன்னன் தலைச்சங்க காலத்தில் ‘ஏழிசை நூற்சங்கத்தில்’ இருந்தான் என்று பழைய தனிப்பாடல் ஒன்று சொல்கிறது.
“வடிவம்பலம் நின்றானும் அன்றொருக்கால்
ஏழிசை நூற்சங்கம் இருந்தானும்”
இவன் தொல்காப்பியர் காலத்திற்குமுன் வாழ்ந்தவன். அவன் காலத்திலேயே ஏழிசை நூற்சங்கம் வைத்திருந்த தமிழர்களுக்கு இசையைப் பிறர் தந்தார்கள் என்று சொல்வது வேடிக்கையாகத் தெரியவில்லையா? தமிழிசை - இசைத்தமிழின் இராகத்தைத் தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி.
வணக்கம் !.
ReplyDeleteமயன் பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ள விருப்பப்படுகிறேன். தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி./
நன்றி.
மின்னஞ்சல்: inthamil@gmail.com
Deleteவாழ்த்துக்கள்.