Friday, 19 July 2013

இலஞ்சப் புலிகள்

இலஞ்சம்
நம் தமிழ் முன்னோர்களால் கைக்கூலி என்றும், கையூட்டு என்றும் அழைக்கப்பட சொல்லை இப்போது இலஞ்சம் என்கின்றோம். இன்றைய உலகில் இலஞ்சம் இல்லாத நாடே இல்லை என்ற அளவுக்கு உலகம் எங்கும் இலஞ்சம் புரையோடிப்போய் இருக்கிறது. சேக்கிழார் மந்திரியாக வாழ்ந்தவர். அதனால் தான் என்னவோ ஒரு சரித்திர ஆய்வாளன் போல அன்றைய மக்களின் வாழ்வியலை தெட்டத் தெளிவாக பெரியபுராணத்தின் பல இடங்களிலும் பதித்து வைத்துள்ளார். அவற்றுள் ஒன்றாக அன்றைய தமிழரும் இலஞ்சம் கொடுத்தார்கள் என்பதையும் பதிவு செய்துள்ளார்.

திருநாவுக்கரசு நாயனார் வரலாற்றைச் சொல்லுமிடத்தில் - திருநாவுக்கரசு நாயனார் வாழ்ந்த காலத்திலேயே [கிபி 570 - 660]  இலஞ்சம் இருந்ததை சேக்கிழார் மெல்லக் கோடிட்டுக் காட்டுகிறார். திருநாவுக்கரசு நாயனாருக்கு சூலைநோய் வந்ததால் அதன் வேதனையைப்  பொறுக்க முடியாது, சமணசமயத்திலிருந்து மீண்டும் சைவசமயத்திற்கு மாறினார். அதனை அறிந்த சமணசமயத்தவர்கள் அரசனிடம் சொன்னார்கள். அரசனும் சமணசமயத்தைச் சேர்ந்தவன். அருள் உணர்வும் இல்லாதவன். சமணசமயமே[நெறி] அறிவென்ற மயக்கத்தில்[மருள்] வாழும் அரசன், மந்திரிகளைப் பார்த்துச் “அறிவுத்தெளிவுடைய[தெருள்கொண்டோர்] சமணர்கள் சென்ன தீயவனான திருநாவுக்கரசரைத் தண்டிப்பதற்கு [செறுவதற்கு], பொருளைப் பெற்றுக்கொண்டு விட்டுவிடாமல் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று சொல்கின்றான். அதனை 

அருள்கொண்ட உணர்வின்றி நெறிகோடி அறிவென்று
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித்
தெருள்கொண்டோர் இவர்சொன்ன தீயோனைச் செறுவதற்குப் 
பொருள்கொண்டு விடாது என்பால் கொடுவாரும் எனப்புகன்றான்”   
                                                   - (பெரியபுராணம்: 1355)
என மந்திரியாய் இருந்த சேக்கிழாரே குறிப்பிட்டுள்ளார்.

மந்திரிமார்கள் இந்தக்காலத்தில் மட்டுமல்ல அந்தக்காலத்திலும் மற்றவர்களிடம் கைக்கூலி வாங்கியே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை ஒரு வரலாற்றுப் பதிவாக சேக்கிழார் தந்துள்ளார். எனவே ஆயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளுக்கு மேலாக மந்திரிமார்கள் இலஞ்சப் புலிகளாக வாழ்ந்து வருகின்றனர் என்பதை நாமும் அறிந்து கொள்வோம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment