Monday, 15 July 2013

ஒன்றெனும் ஒன்று





தமிழனாய்ப் பிறந்த திருமூலரால் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற முழக்கம், முழங்கப்பட்டு பல நூற்றுக் கணக்கான ஆண்டுகள் புரண்டோடிப் போயும் தமிமிழராகிய நாம் இன்றும் பல கடவுள் கொள்கை உடையவராகவே வாழ்கிறோம். தெய்வம் மட்டும் ஒன்றல்ல. எல்லா பொருள்களிலும் இருக்கும் மூலப் பொருளும் ஒன்றேயாகும். 

“ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!” என்று மணிவாசகர் காட்டியதை சிவபுராணத்தில் பாடுவோம் ஆனால் என்றும் அதனை மனதில் எடுத்துக் கொள்ளமாட்டோம். ஏகம் - ஒன்று; அநேகம் - பல. ஒன்றாயும் பலவாயும் இருப்பது எதுவோ அதுவே இறை. இறையே இறைவன். இறை என்றால் அணு. அணுக்களின் சேர்க்கையால் பல கோடி வகையான உயிர்களூம், பொருட்களும் தோன்றுகின்றன. அணுவாக ஒன்றெனெ இருந்தது 

“பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்ச்
சொல்லா நின்ற இத்தாவர சங்கமம்” 

ஆக பலவாகி நிற்கிறது. சைவசமயம் மட்டுல்ல, இன்றைய விஞ்ஞானமும் அதனையே உலக இயல்பின் உண்மை எனக் காட்டுகிறது. 

ஏகன் அநேகன் என இரண்டு. அந்த ஒன்றை இயக்கினாலே, அது அநேகம் ஆக மாறும். அந்த இயக்கத்திற்கு சக்தி வேண்டாமா? எனவே சிவம் சக்தி என அது இரண்டாகும். ஆனால் உண்மையில் அது ஒன்று. ஏனெனில் சிவத்துடனிருந்து சக்தி பிறக்கிறது. நம்முன்னோர் விஞ்ஞானத்தை மெஞ்ஞானத்துள் அடக்கினர். அணுக்கருவின் உள்ளே புதைந்து கிடக்கும் புரோட்டோனையும் நியூட்ரோனையும் சிவசக்தியாகக் கண்டனர். புரோட்டோனே கடவுள் துகளாகும். அதற்கு சக்தியைக் கொடுப்பது நியூட்ரோன் ஆகும். ஒன்றில் இருப்பது மற்றதில் இருப்பதில்லை.

இறை அது ஒன்றாகும். அது சிவம் சக்தியென இரண்டாகும். அதாவது அர்த்தநாரியாய் ஒன்றினில் இரண்டாகும். அது சிவமெனும் ஒன்றுக்குள் ஒன்றாய் இருப்பது. அதனையே கடவுள் என்கின்றோம். அது ஒன்றுமல்ல, இரண்டும் அல்ல. ஒன்றுபோல் இருக்கும் இரண்டு வடிவமும் அல்ல. அதனை ஒன்றெனெ நினைத்தால் ஒன்றாகும். சிவம் என நினைத்தால் சக்தியில்லை[சக்தி தெரியாது]. சக்தி என நினைத்தால் சிவம் இல்லை[சிவம் தெரியாது]. ஒன்றாய்ச் சேர்ந்து இருக்கும் பொருளது. சிவசக்தி எனும் அப்பொருளின் ஒன்றினில் இன்னொரு பொருள் இருக்கிறது. மற்றதில் அப்பொருள் இல்லை. ஆதலால் சிவம் சக்தி என்பது ஒன்றுடன் ஒன்று சேர்ந்த ஒன்றாய் விளங்கும் கடவுளாகும், என்கிறார் இராமலிங்க அடிகளார். அப்பாடலைப் பாருங்கள்.

ஒன்றது இரண்டது ஒன்றினில் இரண்டது
ஒன்றினில் ஒன்றது ஒன்றெனும் ஒன்றே
ஒன்றல இரண்டல ஒன்றினில் இரண்டல 
ஒன்றெனில் ஒன்றுள ஒன்றெனும் ஒன்றே
ஒன்றினில் ஒன்றுள ஒன்றினில் ஒன்றில
ஒன்றுடன் ஒன்றிய ஒன்றெனும் ஒன்றே

இதனை இன்றைய விஞ்ஞானமும் அணுக்கருவினுள் இருக்கும் புரோட்டோன், நியூட்ரோன் ஆகச் சொல்கிறது. அதுவே சிவசக்தி சங்கமமாகும். 
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
இறை - அது கடவுள் என்ற ஒன்றாகும் [ஒன்றது]
சிவம் சக்தி என அது இரண்டாகும் [இரண்டது]
சிவமாகிய ஒன்றினில் இருந்து சிவம், சக்தியென இரண்டானது.  பாதி பாதியாய் ஆனது - சிவசக்தி சங்கமம் [ஒன்றினில் இரண்டது
ஆனால் சிவம் எனும் ஒன்றினுக்குள் ஒன்றாய் இருப்பது [ஒன்றினில் ஒன்றது]
ஒன்று என்று சொல்லப்படும் பொருள் அதுவே ஆகும் - அதுவே கடவுள் [ஒன்றெனும் ஒன்றே]
அது ஒன்றாய் என்றும் நிலைத்து இருப்பதல்ல [ஒன்றல]
அது சிவம் சக்தி எனும் இரு பொருளாய் நிலைத்து இருப்பதுவும் அல்ல [இரண்டல]
அது ஒன்று போல் இருக்கும் இரண்டு வடிவம் அல்ல [ஒன்றினில் இரண்டல]
அதனை ஒன்றென கருதினால் [ஒன்றெனில்]
ஒன்றாகும் [ஒன்றுள]
ஒன்றாய்ச் சேர்ந்து இருக்கும் ஒரு பொருளது [ஒன்றெனும் ஒன்றே]
சிவசக்தி எனும் அப்பொருளின் ஒன்றினில் [ஒன்றினில்]
இன்னொரு பொருள் இருக்கிறது [ஒன்றுள]
மற்றதில் [ஒன்றினில்]
அப்பொருள்இல்லை [ஒன்றில]
சிவசக்தி என்பது ஒன்றுடன் ஒன்று சேர்ந்த [ஒன்றுடன் ஒன்றிய]
ஒன்றாய் இருக்கும் கடவுளாகும் [ஒன்றெனும் ஒன்றே]

No comments:

Post a Comment