Wednesday 10 July 2013

சங்ககால இலங்கையில் சமையல் நூல்


சங்க காலத்தில் இலங்கையை ஆண்ட தமிழ் அரசர்கள் பலர் மாந்தையைத் தலைநகராகக் கொண்டு அரசாட்சி செய்ததற்கு சங்க இலக்கியங்கள் சாட்சி பகர்கின்றன. அவை மாந்தையை மாந்தை என்றும் பெருந்தோட்டம் என்றும் குறிப்பிடுகின்றன. சங்ககால மக்கள் பெருந்தோட்டம் என்று அழைத்த இடத்தை நாம் இன்று மாதோட்டம் என்று அழைக்கின்றோம். 

“இலங்கு நீர்ப்பரப்பின் மாந்தையோர் பொருந”       
                                                            - (பதிற்று: 10: 28)
என்று பதிற்றுப்பத்தும்

“பெருந்தோட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்
குட்டுவன் மாந்தை அன்ன”                                      
                                                           - (குறுந்: 34: 5 - 6)
எனக் குறுந்தொகையும், சேரர்கள் ஈழத்தின் மாந்தையில் இருந்து அரசாட்சி செய்ததைக் காட்டும். சேரர்கள் மட்டுமல்ல ஓவியனான மயனின் வழிவந்த அரசர்களும்  ஈழத்தின் மாந்தையை ஆண்டார்கள். 

நல்லியக்கோடன் என்ற பெயருடைய அரசன் இலங்கையின் மாந்தையை அரசாட்சி செய்தான் என்பதை புறநானூற்றில் 
“பெருமா இலங்கைத் தலைவன் சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை     
                                                            - (புறம்: 179: 6 - 7)
என புறத்திணை நன்னாகனார் குறிப்பிட்டுள்ளார். 

அவன் ஓவியர் வழி வந்தவன் என்பதை
“தொன்மா இலங்கை கருவொடு பெயரிய
நன்மா இலங்கை மன்னர் உள்ளும்
மறுவின்றி விளங்கிய வடு இல் வாய்வாள்
உருப்புலித் துப்பின் ஓவியர் பெருமகன்
....................புரவலன் பேரிசை
நல்லியக் கோடனை”                                    
                                                            - (சிறுபாணா: 119 - 126)
என மிக விரிவாக சிறுபாணாற்றுப்படை சொல்கிறது.

சிறுபாணாற்றுப்படையின் இப்பாடல் வரிகளுக்கு கருத்து எழுதுவோர் பிழையாக எழுதுகின்றனர். அவர்களது கருத்துப் பிழையால் இலங்கைத் தமிழர் இன்று நாடற்று அகதிகளாக வாழ்கின்ற நிலைக்கு வந்தனர் என்றும் சொல்லலாம். காலங்காலமாக இலங்கைத் தமிழர் இலங்கையில் தொடர்ந்து வாழ்ந்து வருவதற்கு சங்க இலக்கியங்கள் சான்றாக இருக்கின்றன. அந்தச் சான்றுகளை இருட்டடிப்புச் செய்து, பிழையாகப் பொருள் கொள்வதால் இலங்கைத் தமிழர் நாடற்று வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்று சொல்வதில் தப்புண்டா?

ஓர் ஆய்வுக்காக சிறுபாணாற்றுப்படையின் 
“..............................போக்கறு மரபின்
தொன்மா இலங்கை கருவொடு பெயரிய
நன்மா இலங்கை மன்னர் உள்ளும்”
என்ற  வரிகளை எடுத்துக் கொள்வோம். 



இதனை எழுதிய சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார் என்ன கருத்தில் கூறியிருப்பார் என்பதைப் பார்ப்போம்.
“..............................போக்கறு மரபின் [அழிவற்ற மரபு]
தொன்மா [பழைமையான பெரிய] இலங்கை கருவொடு [பெருமையோடு] பெயரிய [பெயர்/புகழ் பெற்ற]
நன்மா [நல்ல செல்வம்] இலங்கை மன்னர் உள்ளும்”
‘தொடர்ந்து வரும் மரபுவழி, பழமையான பெரிய இலங்கையின் பெருமையோடு புகழ்பெற்ற, நல்ல செல்வமுடைய இலங்கை மன்னருள்’ என்பதே இதன் கருத்தாகும். அழிவற்ற மரபு என்றால் அது தொடர்ந்து வரும் மரபு தானே? இன்றைய இலங்கையை [Sri Lanka], சங்ககாலத்தில் ஆண்ட நல்லியக்கோடன் பற்றியே பாடல் சொல்கிறது. பாருங்கள் நல்லூர் நத்தத்தனார் போக்கறு மரபு என்று பரம்பரை பரம்பரையாக தொல்லிலங்கையில் வாழ்ந்த மன்னர்கள் என்று குறித்தும் நம்மவர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை. அது ஏன்?? புரியவில்லை.

ஆனால் ‘கருவொடு பெயரிய’ என்பதற்கு தாயின் கருவில் இருக்கும் பொழுது எனப்பொருள் கொண்டு   இதற்கு கருத்து எழுதுகின்றனர். தாய் கருவுற்ற போது இலங்கையில் இருந்தது பெயர்ந்து சென்று தமிழகத்து மாவிலங்கையை ஆண்ட மன்னருள்ளும் நல்லியக்கோடடன் சிறப்புப் பெற்றவன் என்றும் எழுதுகின்றனர். தமிழகத்து மாவிலங்கையை ஆண்ட மன்னர்களின் தாய்மார்கள் எல்லோருமே தொல்லிலங்கையில் கருவுற்றனரா! என்ற கேள்வி எழாதா? வேறு சிலரோ அதே கருத்தை சிறிது மாற்றி ‘அழிதற்கரிய முறைமையினையுடைய பழையதாகிய பெருமை மிக்க இலங்கையினது பெயரை, கருப்பதித்த முழுத்தத்திலேயே தனக்கும் பெயராகவுடைய நன்றாகிய பெருமையை உடைய மாஇலங்கையை ஆண்ட மன்னருள்ளும்’ என்று எழுதுகின்றனர். சிறுபாணாற்றுப்படைப் பாடல்களை படித்த பின்னர் சாவகச்சேரி - தனக்கிளப்பு - பூநகரி வழியாக மாந்தைவரை சென்று பாருங்கள், நத்தத்தனார் சொன்ன உண்மை விளங்கும்.


இலங்கையின் மாந்தையை சங்ககாலத்தில் ஆண்ட அரசனான அந்த நல்லியக்கோடனிடம் பாடிப் பொருள் பெறச் சென்ற பாணனின் அழுக்கடைந்த ஆடையைக் களைந்து, புத்தம்புது ஆடை அணிவித்து, பொன்னால் செய்த தட்டில் [பொற்கலத்தில்] உணவு கொடுத்தானாம். அந்த நல்லியக்கோடன் கொடுத்த பொற்கலமோ ஒளிபொருந்திய ஆகாயத்தில் கிரகங்கள் சூழ்ந்த சூரியனை பழித்துக்கூறும் படி ஒளியுள்ளதாக இருந்ததாம். அந்தப் பொற்றட்டில் வகை வகையாக உணவுகளைப் பறிமாறினார்கள். 

அந்த உணவுகள் இமயமலை போன்ற அகன்ற மார்பையுடயவன் எழுதிய நுணுக்கமான பொருள் விளக்கும் மடைநூலில் [சமையல் நூலில்] சொல்லப்பட்டதற்கு மாறாமல் இருந்ததாம். அந்த மடைநூல் அருச்சுனனின் அண்ணனான வீமன் எழுதியது என்று உரையாசிரியர் கருதுகிறார். யார் அந்நூலை எழுதியது என்பதை சிறுபானாற்றுப்படையைப் பாடிய நத்தத்தனார் குறிப்பிடவில்லை. எனினும் அவர் இரண்டாயிர வருடத்துக்கு முன்பே ஈழத்து மாந்தையில் மடைநூல் அதாவது சமையல் புத்தகம் பாவித்து அதன்படி சமைத்தார்கள் என்பதை ஒரு வரலாற்றுப் பதிவாகத் தந்திருக்கிறார்.
“பனிவரை மார்பன் பயந்த நுண் பொருள்
பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விரும்பின் தான் நின்று ஊட்டி"                  
                                            - (சிறுபாணா: 240 - 245)

நத்தத்தனார் மடைநூலை [சமையல்நூலை] வரலாறாகத் தந்ததோடு, சங்ககாலத் தமிழர் சூரியனைச் சூழ்ந்து கிரகங்கள் [கோள்மீன்] இருந்ததை அறிந்திருந்தனர் என்பதையும் வரலாறாகப் பதிவு செய்திருக்கிறார். 
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment