Sunday 21 July 2013

மானமேது இப்போது!



யாழ்ப்பாணத் தீவக மக்கள் தமக்கென்றொரு அழுத்தமான பண்பாட்டுடன் வாழ்ந்தவர்கள். அவர்களது பண்பாட்டின் நறுமணத்தை நாட்டுப்பாடல்களிலும் நுகரலாம். புங்குடுதீவில் வாழ்ந்த அண்ணனுக்கு ஆண்குழந்தையும் தங்கைக்குப் பெண்குழந்தையும் பிறந்தது. அண்ணனும் தங்கையுமாகச் சேர்ந்து அந்தக் குழந்தைகள் வளர்ந்ததும் திருமணம் செய்து வைப்பதாகப் பேசிவந்தனர். அதைக் கேட்டு வளர்ந்த அண்ணனின் மகன் தங்கையின் மகளைச் சிறுவயதிலிருந்து காதலித்தான். அவளுக்கும் அது தெரியும். ஆனால் காலஓட்டம் இருவீட்டாரின் மனநிலையையும் மாற்றியது. இருவீட்டாரும் அவர்கள் திருமணத்தைப் பற்றி பேச்சே எடுப்பதில்லை. 

அவன் பன்னிரெண்டு வருடங்களாக அவளைக் காதலித்துக் களைத்துப் போனான். ஒருநாள் சாயந்தரம்  அவள் வீட்டுக் கன்று தாய்ப்பசுவிடம் பால்குடிக்க, கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. கன்றைத்  தேடிப்பிடித்துக் கட்டி இழுத்து வருவதற்காக, வீட்டின் கொல்லைப் புறம் கயிறு எடுக்க வந்தாள். கால் கொழுசுச் சத்தத்திலிருந்து அவள் வருவதை அறிந்த அவன், அவளைத் தன் கைகளுக்குள் கட்டிக் கொண்டான்.

எதற்காக அவளைக் கட்டி அணைத்தான் என்பதை அறியாதவள் போல் அவள் கேட்கிறாள். அவனது அணைப்புக்குள் இருந்த போதும் ஊரார் அறிந்தால் நடக்கக்கூடாதது நடந்துவிட்டது போல் ஒப்பாரி வைத்து அழுவார்கள். இருவரது பெயரும் அதனால் கெட்டுப் போய்விடும் எனத் துடித்தாள்.  ஊரென்ன சொன்னாலும் உறவென்ன சொன்னாலும் அவன் கவலைப்படப் போவதில்லை. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா? ஒரு மாமாங்கமாக [பன்னிரண்டு ஆண்டுளாக] அவளைக் காதலித்து பொறுமையைத் தொலைத்துவிட்டான். மற்றவர்களுக்காக அவளை இழந்துவிட அவன் தயாராய் இல்லை. ஒரு மாமாங்கமாகக் காத்திருந்த காதலர்க்கு மானமேது இப்போது?

உறவினரிடையே காதலுக்காகக் காத்திருந்து, காதலித்தவளுக்காகத் தன்மானத்தை கைவிட்ட அந்தப் புங்குடுதீவுக் காதலனால் காதல் வாழ்கிறது. புங்குடுதீவுக் காதலர் இருவரின் கையணைப்புக்குள் பிறந்த ஆசைக் கவிதை. உங்களுக்காக.

பெண்: கன்னுக்குட்டி காணமென்னு
                      கயிறெடுக்க வந்தவள
           கையிக்கிள்ள கட்டிகிட்ட
                      எண்ணமென்ன மச்சினரே!

ஆண்: கால்கொழுசு  சத்தமிட்டா
                    என்மனசு துடிக்குதல்லோ!
            நாலுபேரு அறிவாரோ
                      என்மனசு துடிப்பெல்லாம்

பெண்: ஊருசன மறிந்தாக்கா
                      ஒப்பாரி வைப்பாக! 
           பேருகெட்டு போயிடுமே
                     பேசாம போய்வாரும்

ஆண்: மாமன்மக என்னுசொல்லி
                    மனசபறி கொடுத்து
           மாமாங்கம் ஆயிடிச்சு
                    மானமேது இப்போது
                                                                  - நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
                                     - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment