Tuesday 23 July 2013

குறள் அமுது - (71)


 குறள்:
"ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது"                                     - 886

பொருள்:
ஒன்றாகச் சேர்ந்து ஒற்றுமையாய் வாழ்பவர்களிடையே பகைமை உண்டாகுமானால் எந்த நேரத்திலும் உயிரோடு இருத்தல் அரிதாகும். 

விளக்கம்:
ஒற்றுமை இன்மையை ஒன்றாமை என்று சொல்வர். ஒருவரோடு ஒருவர் ஒன்றி இணைந்து வாழ்வோரே ஒன்றியார். பொன்றுதல் என்றால் இறந்து போதலாகும். பொன்றாமை ஒன்றுதல் உயிர் வாழ்தலாகும். ஒன்றாகச் சேர்ந்து வாழும் கணவன் மனைவி இயிடையே ஆயினும், காதலரிடையே ஆயினும், ஒரே ஊரில் வாழ்வோரிடையே ஆயினும், ஒரே நாட்டில் வாழ்வோர் இடையே ஆயினும் ஒற்றுமையின்மை தோன்றினால் எந்தநேரத்திலும் உயிரோடு வாழ்தல் மிகவும் அரிய காரியமாகும். ஏனெனில் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தவர்களிடையே பகைமை தோன்றிவிட்டால் வலியவர் மெலியவரின் உயிரை எடுப்பார் என்பதை அழகாக இக்குறள் எடுத்துச் சொல்கிறது.

இக்கருத்தை தமிழ் இனத்துக்காக திருவள்ளுவர் சொல்லி இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் சென்றும் தமிழராகிய நாம் இன்னும் அதனைச் சற்றும் சிந்தித்துப் பார்க்காது இருக்கிறோம். அந்தப் பெருந்தகையின் சொற்களை சிந்தை செய்திருப்போமேயானால் இன்று இந்த உலகிலேயே தலை சிறந்த ஆற்றலும் அறிவும் உடையோராய், எமது தொழில் நுட்பம், கலை, பண்பாடுகளைப் பேணிப் பாதுகாத்து வளர்க்க எமக்கென்று ஒரு நாடு உள்ளவர்களாக வாழ்ந்திருப்போம்.

ஒற்றுமையின்றி வேற்றுமை தோன்றினால் அந்த மனிதமனங்களிடையே பகைமையும், வெறுப்பும், வஞ்சகமும் தலைதூக்கும். நல்ல நிழலைத்தருகின்ற மரமென்று நல்லபாம்புப் புற்று இருக்கும் மரத்தடியில் வீடுகட்டி வாழமுடியுமா? எந்த நேரத்திலும் அந்தப்பாம்பு கடித்து, எமது உயிரை எடுக்கக்கூடும். அது போலவே உட்பகை தோன்றிய வீடென்றாலும், நாடென்றாலும் இருக்கும்.
முப்பது வருடங்களின் முன்

அன்று திருவள்ளுவர் சொன்ன இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக ஈழத் தமிழினத்தின் உயிர்களும் உடைமைகளும் எறிக்கப்பட்டு, பறிக்கப்பட்டு, அநாதைகளாக்கிய செயல் நடந்து இன்றுடன் முப்பது வருடங்கள் ஓடிவிட்டன.  நாம் நம் நெஞ்சமதைக் கனலாக்கி எரித்தாலும், அந்நினைவு எரியாது கனன்று கொண்டே இருக்கிறதே. நம் இளம் சந்ததியினரை விளிப்போடு வாழச் செய்வதற்கு

"ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது" 

என இக்குறளை எடுத்துச் சொல்வோம்.

No comments:

Post a Comment