Thursday, 18 July 2013

தமிழிசை - 1



மனிதமனம் அழகுணர்ச்சி உடையது. இனிமையை விரும்புவது. அந்த இனிமையை இசையில் கண்டவன் மனிதன். இசை மனிதமனத்தைப் பண்படுத்துகின்றது. மொழியிணர்வைக் கடந்து மனிதரை ஒன்றுபடச் செய்யவல்லதும் இசையே. இசைக்கு மொழிவேறுபாடு கிடையாது. ஆதலால் இவ்வுலகின் தனிமொழி இசையாகும். இசை என்ற சொல்லானது மனதை வயப்படுத்துவது, அசைவிப்பது என்ற கருத்தைத் தரும். அது உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்தது. அதுமட்டுமல்லாமல் இன்பத்தைத் தருவது, எழில்மிக்கது, எழுச்சியைக் கூட்டுவது, வீரத்தை ஊட்டுவது, இறையுணர்வை பெருக்குவது யாவும் இசையேயாகும்.

இசையால் இறைவனை இசைவித்தவன் இராவணன். அதாவது இறைவனை தன்வயப்படுத்தியவன். ஆதலால் சமயகுரவர் நால்வராலும் போற்றப்பட்டவன். சிறுகுழந்தையான சம்பந்தரின் மழழையில் “ஏழிசையாழ் இராவணன்” எனப்பாடப்பட்டவன். திருநீற்றின் பெருமையை கூறிய இடத்திலும் “இராவணன் மேலது நீறு” என்று மந்திரம் செய்திருக்கிறார். அவரின் கண்ணுக்கு மற்றைய எல்லோரது உடம்பிலும் பூசிய திருநீற்றைவிட, இராவணன் உடம்பில் இருந்த திருநீறே தெரிந்திருக்கிறது. ஏன்? அவன் தூய்மையான சிவபக்தன். அத்தகைய சிவபக்தனும், இசைவல்லவனுமான இராவணன் வாழ்ந்த நாடு, நம் நாடு. எனவே இசையைப் போற்றி, இசையோடு [புகழோடு] வாழவேண்டியது எமது கடமை.

திருநாவுக்கரசரும் சூலைநோயின் வயிற்றுவலியால் 
“தேற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு
             துடக்கி முடக்கியிட  
ஆற்றேன் அடியேன்”
எனக் கதறுகிறார். அந்த ஆற்றா நிலையிலும்
“சலம்பூவொடு தூப மறந்தறியேன்
           தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்”
என்று தமிழோடு இசைபாடுவதை தான் மறப்பதில்லை என அழுத்திச் சொல்லி இருக்கிறார். 

அதன் உண்மையை சுந்தரமூர்த்தி நாயனார் 
“நீர் தமிழோடு இசை கேட்கும் 
           இச்சையால் காசு நித்தம் நல்கினீர்”
என்று திருவீழிமிழலையில் இறைவன் திருநாவுக்கரசரின் தமிழிசையைக் கேட்டு, காசு கொடுத்ததைச் சொல்லுமிடத்தில் உறுதிப்படுத்துகிறார். 

தமிழ் இசை அது மிகமிகப் பழமையானது. பழந்தமிழ் உரைஆசிரியர்கள் தரும் உரையிலிருந்து தமிழிலே பல தமிழிசை நூல்கள் இருந்திருப்பதை அறியலாம். இசை நூல், இசை நுணுக்கம், இசைக்கூறு, இசை விளக்கம், பாட்டும் பண்ணும், பாடற் பண்பு, பண் அமைதி, பண்வரி விளக்கம், தாள சமுத்திரம், தாளவகையோத்து, சிற்றிசை, பேரிசை போன்ற பலவகைப்பட்ட இசைநூல்கள் அந்நாளில் இருந்ததை பட்டியலிட்டிருக்கிறார்கள். எத்தகைய உன்னத நிலையில் தமிழிசை இருந்திருந்தால் இத்தனை தமிழிசை நூல்கள் உருவாகியிருக்கும்?

பண்டைத் தமிழ்மக்கள் சுரங்களையும் சுருதிகளையும் இராகம் உண்டாக்கும் விதிகளையும், நன்கு உணர்ந்து பன்னிரண்டாயிரம் இராகங்களைப் பாடிவந்தார்கள் என்று பழந்தமிழ் இசை நூல்கள் கூறுகின்றன. பழந்தமிழ் இசைநூல்களில் அழிந்ததாகக் கருதப்பட்ட பஞ்சமரபு என்ற நூலில் கிடைத்த பாடல்களைத் தொகுத்து ‘பஞ்சமரபு’ என்ற பெயருடன் வெளியிட்டிருக்கிறார்கள். வாத்திய மரபு என்ற நூல் ஓலைச்சுவடியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைத்திருக்கிறது. இன்றைய இசையறிவுக்கும் எட்டாத பல அரிய கருத்துக்களை இந்நூல்கள் தருகின்றன. பண்டைய தமிழிசை நூல்கள் மட்டுமல்ல கல்வெட்டுக்கள், சிற்பங்கள், ஓவியங்கள் யாவுமே தமிழிசையின் தொன்மையைப் புலப்படுகின்றன. இவற்றுக்குக் காரணம் என்ன?  சிந்திப்போமா?

No comments:

Post a Comment