Wednesday, 10 July 2013

குறள் அமுது - (70)


குறள்:
“உயர்வுஅகலம் திண்மை அருமை இந்நான்கின்
அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல்”                    - 743

பொருள்:
உயரம், அகலம், வலிமை, எளிதில் கைப்பற்ற முடியாத தன்மை ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரண் என்று நூல் கூறும்.

விளக்கம்:
சங்ககாலத்தில் நாட்டைப் பாதுகாக்கக் கட்டப்பட்ட செயற்கை அரண் எப்படி இருந்தது  என்பதை இக்குறள் கூறுகிறது. பண்டைய தமிழ் அரசர்கள் பலவகையான மதில்களால் தமது காவல் அரண்களைக் கட்டினர். நால்வகை மதிலரண்களில் உயரம் மட்டும்  உடையது ‘மதில்’ எனவும், உயரமும் அகலமும் உள்ளது ‘எயில்’ எனவும், உயரமும் அகலமும் திண்மையும் சேர்ந்தது ‘இஞ்சி’ என்றும், உயரம், அகலம், திண்மை மூன்றுடன் பிறரால் எளிதில் கைப்பற்ற முடியாத அருமையும் உடையது ‘சோ’ எனவும் அழைக்கப்பட்டது.

தானே இயங்கி அம்பு எய்யும் வில்லும், படைவீரர்களாகிய எயினரும் இருக்கக்கூடியதாக எயில் அகலமாகக் கட்டப்பட்டது. அம்மதிலில் இருந்து அம்பு எய்யும் தொழில் நடந்ததால் அதற்கு எயில் என்று பெயர். கருங்கற்களின் மேல் செம்பை உருக்கி வார்த்துக் கட்டப்பட்டதால் இஞ்சி அரண் இறுகி உறுதியுடையதாக இருந்தது. இஞ்சல் என்றால் இறுகல் என்ற கருத்தைத் தரும். அதனாலேயே அவ்வரண் இஞ்சி எனப் பெயர் பெற்றது.

இலங்கையில் இருந்த இஞ்சி அரணை கம்பர் 
“ செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்”    - (கும்பகர்ணன் வதைப்படலம்: 159)
என்கிறார். அதுமட்டுமல்ல அரண்களிலே மிகச்சிறந்த அரணான ‘சோ’ அரண் கூட இலங்கையில் இருந்ததை இலக்கியங்கள் சொல்கின்றன. 

இளங்கோவடிகளும் 
“சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த”
என்று திருமாலின் பெருமையை சிலப்பதிகாரத்தில் கூறியுள்ளார். ‘சோ’ அரண் மற்றைய மூன்று அரண்களின் தன்மையும் கொண்டதால் அவற்றின் பெயர்களாலும் அவ்வரண் சுட்டப்பட்டது. 

ஒரு நாட்டின் அரண் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் கூறுகின்ற நூல் தமிழ்மொழியில் இருந்ததை '... இந்நான்கின் அமைவு அரண் என்று உரைக்கும் நூல்' எனத் தெளிவாகத் திருவள்ளுவர் இக்குறளால் எமக்கு அறியத்தந்துள்ளார். அரண் என்றால் உயரமும் அகலமும் உறுதியும் அருமையும் உடையதாக இருக்க வேண்டும் என்று பண்டைய தமிழ் நூல் கூறும் என இக்குறள் சொல்கிறது. ஆதலால் சோ அரணே உண்மையான அரணாகும்.

No comments:

Post a Comment