Wednesday, 3 July 2013

மடத்துவெளியில் இருந்த சத்திரம் எங்கே?

புங்குடுதீவு வெளிச்சவீடு

இலங்கையின் வரலாற்றில் இடம்பிடித்த தீவுகளில் புங்குடுதீவும் ஒன்று. அந்தச் சின்னஞ்சிறிய தீவும் தனக்கென கலைப் பண்பாட்டு வரலாற்றை வைத்திருக்கிறது. ஒவ்வொரு ஊரின் நாட்டுப்பாடல்களும் தத்தமது ஊர்களின் பண்பாட்டை வரலாற்றை எடுத்துச் சொல்லும். நாம் அவற்றை உணராது காலங்காலமாக நாட்டுப்பாடல்களைப் புறக்கணித்து வருகிறோம். அது ஒரு வரலாற்றுப் புறக்கணிப்பு என்பதை எப்போது நாம் உணர்வோம்? 

எடுத்துக்காட்டுக்கு கீழேயுள்ள நாட்டுப்பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பாடல்கள் புங்குடுதீவு மக்களால் நூறு வருடங்களுக்கு முன் பாடப்பட்டவை. ஆனால் இன்று வாழும் என்னால் புங்குடுதீவில் இருந்த சரலப்பிட்டி, எங்கு இருந்து? என்பதையோ, அங்கு இருந்த சத்திரத்தையோ அறிய முடியவில்லை. பலரிடம் கேட்டேன். கடைசியில் புங்குடுதீவில் சரலப்பிட்டி இருந்ததாக, இலண்டன் நாகபூசணி அம்மன் ஆலயக் குருக்களின் தந்தை சொன்னார்.  

இளைப்பாறிச் செல்ல உதவிய அன்னசாலைகளே சத்திரம் என அழைக்கப்பட்டன. புங்குடுதீவினூடாக மற்றைய இடங்களுக்குப் பயணம் செய்வோர் உண்டு, உறங்கிச் செல்லவே அந்தச் சத்திரத்தைக் கட்டியிருப்பர். 1940களின் தொடக்கத்தில் புங்குடுதீவுக்கு கார் வந்ததால் சத்திரத்தின் தேவையில்லாது போயிருக்கும். அச்சத்திரம் பயன்படுத்துவார் இன்றியோ, இயற்கை அழிவுகளாலோ அழிந்திருக்கலாம். சரலைப்பிட்டி இருந்த இடத்தையும், சத்திரத்தின் இடிபாட்டையும் கண்டறிந்தால் அது புங்குடுதீவின் வரலாற்றிற்கு உரம் சேர்க்கும். சரலம் என்றால் அறுகம்புல். எனவே அந்தப் பிட்டி அறுகம்புல் வளரும் இடமாக இருக்கும். 

சரலப்பிட்டிச் சத்திரத்தை, மானிப்பாய் உலகநாதர் மாதர் பரம்பரையில் வந்த, புங்குடுதீவு வள்ளனைச் சேர்ந்த வைத்தியநாரர், வைரவநாதர் சகோதரர்கள் பராமரித்தார்கள். அவர்களது முன்னோர் அந்தச் சத்திரத்தைக் கட்டினரோ தெரியாது. வல்லன் வெளிச்சவீட்டுக்கு அருகே இருந்த துறை, பெரியதுறை - பெருந்துறை என அழைக்கப்பட்டது. இலங்கையை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் பெருந்துறையிலிருந்து வேறு இடங்களுக்கு பருத்தி, சாயவேர் போன்ற பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. 

ஆதலால் சரலப்பிட்டிச் சத்திரம் வல்லன் வெளிச்சவீட்டுப் பக்கம்  அல்லது மடத்துவெளிப் பக்கம் இருந்திருக்கலாம். மடம் என்பதை சத்திரம் என்றும் சொல்வர். சரலப்பிட்டி மடம் இருந்த வெளியே மடத்துவொளி ஆகியிருக்கும். வைத்தியநாதரின் மகன் இராமலிங்கம் குடும்பத்துடன் மடத்துவெளியில் வாழ்ந்தார்.  அக்கட்டிடம் நீள்வட்ட வடிவமானது என்று என் பேரனார் சொன்னார்.  மடத்துவெளியில் வாழ்வோர் எராவது அருகம்புல் வளரும் பிட்டியில் நீள்வட்டமான  அந்நாளைய நாற்சாரம் வீடுபோல் இருக்கும் இடிபாட்டைத் தேடிப்பாருங்கள்.

வைத்தியநாதர், வைரவநாதர் இருவரும் மலேசியா சென்று வர்த்தகம் செய்தவர்கள். அவர்களது சகோதரியே ‘தனித்தமிழ்த்தந்தை’ எனப் போற்றப்படும் மறைமலை அடிகளைப் பெற்று, தமிழ்ப்பால் ஊட்டி வளர்த்த பெருமைமிக்க தாயாய் வாழ்ந்த சின்னம்மை. அவ்விருவரது சகோதரர்கள் கூட நாகபட்டனத்திலும் வேதாரணியத்திலும் வாழ்ந்தார்கள். 
மறைமலையடிகள்

கடைசிக் காலத்தில் சின்னம்மை அவர்கள் வல்லனில் நல்லதம்பி அவர்கள் வீட்டிற்கு அருகே வாழ்ந்தார். மறைமலை அடிகள் கடைசியாக அவரது தாயாரைப் பார்க்க 1916ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு புங்குடுதீவுக்கு வந்தார் என்பதையும் அறியமுடிகிறது. மறைமலை அடிகள் தமது தாயாருக்கு அனுப்பும் பணத்தை, தாயரார் அராலி தபால்நிலையத்திற்கு (அந்நாளில் புங்குடுதீவில் தபால் நிலையம் இருக்கவில்லை) சென்று மாற்றுவார். அப்படிச் செல்லும் பொழுது அராலியைச் சேர்ந்த இராமநாரர் வீட்டில் தங்குவார்.  சின்னம்மையின் தமையனான வைத்தியநாதரின் மகன் இராமலிங்கம் என்பவரை, அந்த இராமநாதரின் மகள் தையல்முத்து மணந்தார். எனவே அவர்களிடையே ஏதாவது உறவுமுறை இருந்திருக்க வேண்டும். சின்னம்மை கையெழுத்து இட்டு பணம் மாற்றிய அடித்துண்டு ஒன்று என் தந்தையிடம் இருந்தது. சின்னம்மை வாழ்ந்த வீட்டை அறிந்து பாதுகாப்பதும் புங்குடுதீவு வாழ் மக்களின் வரலாற்றுக் கடமையாகும். 

காட்டு வெள்ளம் ஓடிவந்து
          கரைதட்டும் கழுதைப்பிட்டி
சீட்டுக்கட்டு சளசளக்கும்
          சத்திரத்து சரலப்பிட்டி 

பெட்டக் கோழி முட்டையிட 
          பேணுகிற பெருங்காடு
கட்டக் கோழி கூவயில
          கழை எடுக்கும் கள்ளிக்காடு
                                                    - நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
                                       - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

தமிழில் கழுதை என்பது வடமேற்குத் திசையைக் குறிக்கும். வடமேற்குத் திசையில் இருக்கும் பிட்டி என்பதையே தனித்தமிழில் கழுதைப்பிட்டி என்பர். சரலப்பிட்டி சத்திரத்தில் தங்கிச் சென்றோர் சீட்டாடியதையும் [ஓலைச்சீட்டு] இந்த நாட்டுப்பாடல் வரலாறாகக் காட்டுகிறது. அத்துடன் பெருங்காட்டில் வாழ்ந்தோர் கோழி வளர்த்ததையும் கள்ளிக்காட்டில் வாழ்ந்தோர் விடியற் காலையில் எழுந்து கள்ளி மரங்களைக் கள்ளியாற்றில் தள்ளிக் கொண்டுபோக கழைக்கோல் [மூங்கில் கோல்] எடுத்துக் கொண்டு செல்வர் என்பதையும் சொல்கிறது.  
"சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்
குரங்கின் வன்பறழ் பாய்ந்தென இலஞ்சி
மீன் எறி தூண்டில் நிவக்கும்"
                                                    - (ஐங்குறுநூறு: 278)
என்கின்றது ஐங்குறுநூறு. பெருமூங்கிலை வெதிரம் என்பர். பெருமூங்கில் மரநுனியிலிருந்து குரங்குக்குட்டி தாவும்போது மூங்கில் கம்பு மீன்பிடிக்கும் தூண்டில் போல் நிமிரும் என்று சொல்கிறது. ஆதலால் பெருமூங்கில் கம்பைக் கழைக்கோல் என்றனர் என்பதை அறியலாம்.

புங்குடுதீவில் வாழ்ந்த நம் முன்னோர்கள் வாழ்வை எடுத்துக் காட்டும் நாட்டுப்பாடல்களைத் தேடிக் காப்பாற்றி எம்சந்ததியினருக்கு வைப்போமா?
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment