Sunday, 9 October 2011

தீவுப்பகுதி மக்களின் வாழ்வில் பெருக்கு!

பெருக்கமரம்


















இயற்கையின் அற்புதங்களைப் பார்த்து இரசிப்பதற்கே நாம் மனிதராய் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும். ஏனெனில் இயற்கை தன்னுள் ஒளித்து வைத்துள்ள இரகசியங்களை பார்த்து மகிழ எமது வாழ்நாள் போதாது. உண்மையைச் சொல்வதானால் உலகின் இயற்கை அள்ளித் தந்த மாபெரும் அற்புதங்களுள் பேரற்புதம் பெருக்குமரமே.  உலகிலுள்ள உயிர்களிலே ஆறாயிர (6000) வருடங்களுக்கு மேலாக உயிர் வாழும் அதிசய பெருக்கு மரத்தை நீங்கள் மேலேயுள்ள படத்தில் பார்க்கிறீர்கள். இப்பெருக்குமரம் உலகில் வாழும் உயிரினங்களிலே வயதான  மிகப்பெரிய உயிரினம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது. பெருக்குமரம் போறையுமுள்ள மரமாதலால் ஆபிரிக்காவிலுள்ள இம்மரப்போறையுள் மதுபானக்கடை (Bar) வைத்திருக்கிறார்கள். இதை  உயிருள்ள மதுபானக்கடை என்றும் சொல்லலாம்.
பெருக்கு மரங்கள் வெப்பமண்டலக் காடுகளில் வளரும். ஆபிரிக்கா, மடகாஸ்கர், அரேபியா, இந்தியா, இலங்கை, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் வளர்கிறது. இதனை போபாப் (baobab) என அழைப்பார்கள். இதில் பலவகை இனம் உண்டு. நம் நாட்டில் வளரும் இனத்தை அடன்சோனியா டிஜிடேட்டா (Adansonia Digitata) என்பார். இவ்வகைப் பெருக்கு மரத்தை முதன்முதலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  மைக்கேல் அடன்சன் என்னும் தாவரவியலாளர் (1727 - 1806) கண்டு பதிவு செய்ததால் அவர் பெயரில் அடன்சோனியா என அழைப்பர். இதன் இலை பெரும்பாலும் ஐந்தாகப் பிரிந்து கைவிரல் போலிருப்பதால் டிஜிடேட்டா என்பர். 
தமிழில் பெருக்குமரம், பெருக்கமரம்  என இடத்துக்கிடம் வெவ்வேறு பெயர்களால் இன்று அழைக்கப்படுகின்றது. பரு - பெரு - பெருகு - பெருக்க - பெருக்கு யாவும் பருத்தலை, உப்புதலைக் குறிக்கும். இதிலே பெருக்கு என்பது பருமனை மட்டுமன்றி பல்கிப்பெருகி வருகின்ற நீரோட்டத்தை, திரவஓட்டத்தைக் குறிப்பதை வெள்ளப்பெருக்கு, ஆற்றுப்பெருக்கு, குருதிப்பெருக்கு, கண்ணீர்ப்பெருக்கு போன்ற சொற்கள் காட்டுகின்றன. பெருக்குமரம் அதிகவெப்பமான காலத்திலும் கூட ஆயிரக்கணக்கான லீற்றர் தண்ணீரை தன்னிடத்தே சேகரித்து வைத்திருக்கும் இயல்புடையது.  இக்காலத்தில் நாம் குழாயில் நீர் எடுப்பது போல, தீவுப்பகுதி மக்கள் நீரற்ற காலத்தில் இம்மரத்தின் வேரை வெட்டி ஆழ்கிடங்கு அமைத்து தண்ணீர் எடுத்துக் குடித்தனர். சுரக்குடுவைக்குள் இம்மர இலைகளை விட்டு மூடிக்கட்டி மரத்தில் தொங்கவிட்டும் நீர் சேகரித்து (transpiration) குடித்துள்ளனர். மரத்தின் பருமனை கருத்தில் கொண்டு, வரட்சியான காலத்திலும் மரத்திலிருந்து நீர் பெருக்கெடுத்து வந்ததால் பெருக்கு என அழைத்திருக்கலாம். 

வைத்தியபரிபாடையும், ஆயுர்வேத பாராவாரமும் பெருக்கு மரத்தை பூரிமரம், யானைப்புளியமரம், பப்பரப்புளி என்ற பெயர்களால் தமிழர் அழைத்ததைச் சொல்கின்றன. யானைகள் இதன் பட்டையை உரித்து விரும்பி உண்ணும். யானையும் மனிதனும் அதன்  பட்டையையும் நாரையும் உரித்து எடுத்தாலும், இயற்கையாகவே உள்புறமாக வளர்ந்து அதனை ஈடுசெய்து கொள்கிறது. சிங்களத்தில்  அலிய கஹ (யானைமரம்) என்பார்கள். இம்மரம் தமிழகத்திலும் இருக்கின்றது. குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, அழிந்துபோன கொற்கைப் பகுதியிலும் மட்டுமின்றி பொதிகை மலையிலும் காவிரியாற்றுப் படுக்கையிலும் இருப்பது இது இயற்கைத் தேர்வாய் தமிழ்நிலத்தில் உண்டான மரம் என்பதைக் காட்டுகிறது. ஆதலால் அறிஞர் சிலர் பெருக்குமரம் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையாக நீண்டு சென்றதும் கடல்கோளால் அழிந்ததுமான குமரிக்கண்டத்தைச் சேர்ந்தது என்பர். உதாரணமாக புங்குடுதீவின் மேற்கேயும் நெடுந்தீவின் கிழக்கேயும் இருப்பதுடன் ஈழத்தின் வடமேற்கு கரையோரங்களில் பெருக்குமரம் இருப்பதும் இதற்கு வலுச்சேர்க்கின்றது. 

புங்குடுதீவு பெருக்கமரம்

ஆனால் பலரும் 700 வருடங்களுக்கு உட்பட்ட மரமே ஈழத்திலும் தமிழகத்திலும் இருக்கிறது என்றும் முஸ்லீம் படையெடுப்பின் பின் அரேபியர் கொண்டு வந்தனர் எனவும் எழுதுகின்றனர். அப்படியானால் சித்தர்களின் சித்தமருத்துவத்தில் எப்படி பெருக்குமரம் புகுந்தது? முஸ்லீம் படையெடுப்பின் பின்பா சித்தர்கள் யாவரும் வாழ்ந்தனர்?  சங்க இலக்கியமும் தேவாரமும் சொல்லும் பெருமரம் இதுவா? வேறா? அன்றேல் பெரியமரமா? விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள். 
ஈழத்திலுள்ள வயதுகூடிய பெருக்குமரம் மன்னார் பள்ளிமுனையில்  உள்ள பெருக்குமரமே என்று பலரும் எழுதுகின்றனர். அதற்கு 727 வயதாகிறது. அது 19.51 மீற்றர் சுற்றளவும் 7.5 மீற்றர் உயரத்துடனும் நிற்கிறது. அதைவிடப் பெரிய பெருக்குமரம் ஈழத்தில் இல்லையா?
எனது தந்தை கல்வெட்டு ஒன்றை படிஎடுக்க (copy) குதிரைமலைப் பகுதிக்கு என்னைக் கூட்டிச்சென்றார். அதற்குமுன் எனக்கு விபுலானந்தரின் யாழ்நூலை கற்பித்தபோது ‘பெருக்குமர நாரும் யாழ் நரம்பாகப் பாவிக்கப்பட்டது’ எனக்கூறி  நெடுந்தீவு (கிழக்கு), புங்குடுதீவு (புளியடித்துறை), பூனகரி, மன்னார், மாந்தை (திருக்கேதீஸ்வரம்), குதிரைமலை, முனீஸ்வரம். பொன்பரப்பி, சிலாபம், திருகோணமலை முதலான இடங்களில் பெருக்குமரத்தைப்  பார்க்கலாம் எனவும் சொன்னார். மாபெரும் பெருக்குமரம் குதிரைமலையிலிருந்து வில்பத்து செல்லும் வழியில் காட்டிற்குள் இருப்பதாகவும் கூறினார். சிலவற்றை நேரே கூட்டிச்சென்று காட்டிய போதும் அதனைக் காட்ட அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. ஆதலால் கல்வெட்டு படிஎடுக்க  குதிரைமலை சென்றபோது  அந்த மாபெரும் பெருக்குமரத்தையும் காட்ட அழைத்துச் சென்றார். ஓர் ஆற்றை படகில் கடந்து, காட்டிற்குள் சென்று அம்மரத்தைப் பார்த்தோம்.
அது  பள்ளிமுனை பெருக்குமரத்தைவிட இரண்டு மடங்கு கூடிய பருமனாய் பூவும் காயுமாக தேன்கூடுமாய் பரந்து நின்றது. அது பெரியபோறையும் பொந்துகளும் வௌவால்களும், குரங்கு அணில் போன்ற விலங்குகளும் பூச்சிகளும் பறவைகளுமாய் இருந்து. அப்பெருக்கு மரத்தை உயிரினங்களின் சரணாலயம் என்று சொல்லலாம் என அன்று நினைத்தேன். அம்மரத்தை 1976ம் ஆண்டு பார்த்தேன். ஆயிரவருடங்கள் வாழும் மரமாதலால் அது இறந்திருக்காது. ஆதலால் அம்மரம் இப்பொழுதும் அங்கு இருக்குமென நம்புகிறேன். தந்தையைப் போல் நெஞ்சத்துணிவுடையோர் அந்த மாபெரும் பெருக்கு மரத்தைத் தேடிப்போகலாம். அதன் வயது ஆயிரவருடத்திற்கு மேலேயே இருக்கும்.  பெருக்கு மரத்திற்கு வயதைக்கணிப்பதற்கான ஆண்டு வளையங்கள் இருக்காது. அதன் சுற்றளவைக் கொண்டே வயது கணிக்கப்படுகின்றது. 
போத்துக்கீச, ஒல்லாந்த ஆட்சிக்காலங்களில் அவர்களை எதிர்த்த நம்மவர்கள் பெருக்கு மரப்போறைகளில் ஒளித்திருந்து அவர்களை அம்பெய்து கொன்றதால் அவர்களாலும் அவர்களுக்கு துணைபோன நம்மவர்களாலும் அம்மரங்கள் வேரோடு வெட்டிச்சாய்க்கப்பட்டன. அத்துடன் அவர்கள் பிடித்த சிறைக்கைதிகளை போறைக்குள் அடைத்து சிறைவைத்தனர். அப்படி அடைபட்ட சிறைக்கைதிகள் யாராலும் மீட்கப்படாத போது உண்ண உணவில்லாது அதற்குள்ளே இறந்தனர். அப்படி இறந்தவர்களின் எலும்புக்கூடுகளை பெருக்குமரப் போறைக்குள் கண்ட பிற்காலத் தமிழர்களால் பெருக்குமரம் ஆள்விழுங்கி என்றும் பேய்மரம் என்றும் அழைக்கப்பட்டது. பேய்க்கு பயந்த நம்மவர்களும் பெருக்குமர அழிவுக்குக் காரணமாயினர். 

உலகில் நடந்த போர்களும் ஆக்கிரமிப்புகளும் மனிதத் தன்னலமுமே உலக இயற்கையின் இயற்கைத் தேர்வை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த உலகம் எமக்கே சொந்தம் என மனிதர்களாகிய நாம் நினைக்கிறோம். மனிதனைத் தவிர்ந்த மற்றைய உயிர்களுக்கு இந்த உலகம் சொந்தமில்லையா? எத்தனை கோடி உயிரினப் பேதங்கள் நிறைந்த அற்புதமான உலகில் வாழ்கின்றோம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே பெருக்கமரம். அதன் வாழ்நாளில் எத்தனை எத்தனை ஆயிரம் உயிர்களுக்கு அது இருக்க இடத்தையும் உண்ண உணவையும் அள்ளிவழங்குகிறது? பெருக்குமரத்தைவிடச் சிறந்த கொடையாளி உலகில் எவரும் இருக்கமுடியாது. இம்மரத்தை நெருப்போ சூறாவளியோ அழிப்பது கடினம். யாழ்ப்பாணம், புங்குடுதீவு, நெடுந்தீவு, பூனகரி, மன்னர், மாந்தை, சிலாபம் பக்கம் இருப்பவர்களில் யாராவது காக்கை குருவி எங்கள் சாதி என நினைப்பீர்கள் ஆனால் பெருக்கு  விதைகளை நட்டு வளருங்கள். ஆயிரவருடங்கள் உங்கள் பெயர் நிலைத்திருக்கும். பெருக்கு மரத்தால் தீவுப்பகுதி மக்கள் என்னென்ன பலனடைந்தனர் என்பதைப்பார்ப்போம்.

பெருக்கமரப்பூ























சித்தர்கள் செய்த சித்தமருதுவத்தில் இம்மரத்தின் எல்லாப் பகுதிகளும் உபயோகப்பட்டுள்ளன. குருதிப்பெருக்கைத் தடுக்க பெருக்குப் பழத்தின் சதையைக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு நரம்புத்தளர்ச்சியை தடுக்கும் ஆற்றலும் உண்டு. பழச்சாற்றை சின்னமுத்து போன்ற அம்மை நோய்களுக்கு  பூச்சாகப்  பூசினர். வெப்பக்காலங்களில் ஏற்பட்ட தொற்றுக்காச்சலுக்கு மருந்தாக பெருக்குஇலையை அவித்து நீரைக்கொடுத்தனர்.  நஞ்சுபூசிய அம்பு தைத்த காயங்களைக் கூட இதன் பட்டையின் சாற்றைப் பிழிந்துவிட்டு பட்டையின் நாரால் கட்டி சுகப்படுத்தினர். ஒதியமரப் பட்டையைப் போல் பெருக்குமரப் பட்டையும்  கோடாலி கொண்டு வெட்டிய காயங்களையும், முதலை, கரடி, புலி போன்ற மிருகங்கள் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களையும் மாற்றியது. பெருக்குமரப்பட்டை ஊறவைத்த நீரால் ஆண்குழந்தைகளைக் குளிப்பாட்டினர். அந்நீரில் குளித்த குழந்தை வீரனாக வருவான் என நம்பினர். அதனால் தான் நம் முன்னோர் பெரும் வீரர்களாய் இருந்தனர் போலும். பட்டையை அவித்து எடுத்த நீரை பல்வலிக்கு வாய் கொப்பளிக்க பாவித்தனர்.  பெருக்கு மரப்பூ ஊறிய நீரை, பொருளை ஒன்றோடொன்று ஒட்டும் பசையாகப் பயன்படுத்தினர். 
யாழ்ப்பாணத்தில் இருந்த மிகப்பெரிய பெருக்குமரத்தைப் பற்றி படத்துடன் நூறு வருடங்களுக்கு முன்பே மக்மில்லன் ( H F MacMillan) என்பவர் எழுதியுள்ளார். பெருக்குமரங்கள் நம் நாட்டில் வடமேற்குக் கரையோரத்திலும் யாழ்ப்பாணத்திலும் தீவுப்பகுதியிலும் ஆயிரவருடங்களுக்கு மேலாக  இருந்துள்ளன. அப்பகுதி மக்களுக்கு பெருக்கமரமும் பனைமரம் போல் உண்ணும் உணவை அள்ளிக்கொடுத்துள்ளது. பெருக்குஇலையை குளம்பாக வரையாக சமைத்து சாப்பிட்டனர். இலையைக் காயவைத்து இடித்து அரிசிமாவுடன் கலந்து களியாகவும் பிட்டாகவும் (விடத்தல் இலைபோல்) உண்டனர். பெருக்கம் பழத்தைத்தின் உள்ளே இருக்கும் பழுப்புநிற சதையை உண்டும், சாறு பிழிந்து சாற்றை குடித்தும் மகிழ்ந்ததுடன் அச்சாற்றை புளிக்கவைத்து மதுமானமாகவும் அருந்தினர். கிளைகளில் இருந்து கிடைத்த கொம்புத்தேனையும் மதுவாகக் குடித்தனர்.
பழத்தின் சதையை காயவைத்து மாவாக்கி மாரிகாலத்தில் உண்ணும் உணவுக்காக சேகரித்து வைத்தனர். அந்த மாவையும் ஒடியல்மாப் போல பாவித்தனர். நாம் இன்று கூட இலண்டனில் பெருக்குப் பழத்தின் மாவை வாங்கலாம். 250 கிராம் பெருக்குப் பழமாவின் விலை £14.99 மட்டுமே. கீழேயுள்ள படத்தைப் பார்க்கும் போதாவது பெருக்கு மரத்தை அழித்ததால் நாம் இழந்தவை எவை என்பது தெரிகிறதா ?


பெருக்குப் பழமா

கிட்டதட்ட 500 வருடங்களாக அந்நிய (போத்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய ) ஆட்சியின் கீழ் கட்டுப்பட்டு கிடந்ததால் நாமிழந்தவை ஏராளம். கோதுமைமாவின் வரவால் சத்துக்கள் நிறைந்த பெருக்குமாவை நாம் இழந்தோம். பெருக்கு கொட்டையை பச்சையாகவும், காயவைத்தும் வறுத்தும் தோலுரித்து உண்டனர்.  நெடுந்தூரம் செல்வோர் பெருக்குமரத் துண்டை தம்முடன்  எடுத்துச்சென்றனர். தண்ணீர் தாகம் ஏற்பட்டால் பெருக்கு மரத்துண்டை வாயில் போட்டு உமிந்து (அதிமதுரம் போல்) தாகத்தைப் போக்கினர். இம்மரத்தில் நீர்த்தன்மை இருந்ததால் விறகாக எரிக்க சிரமப்பட்டனர். பொந்தும் போறையும் நாருமுள்ள மரமாதலால் வயிரமற்று இருந்தது. அதனால் ‘பெருக்கு பெருத்தாலும் (உத்திரத்திற்கு) வளைக்கு உதவுமா?’ என்ற பழமொழியும் ஏற்பட்டது. முகட்டுவளைக்கு உதவாவிட்டாலும் கட்டுமரங்களும் சிறுபடகுகளும் செய்து மீன்பிடிக்கவும் ஆறுகளைக் கடக்கவும் உதவியது. "பெருக்கு நீர் போல பிறருக்கு உதவு", "பெருக்குமாப் பிட்டும் பொரிச்சமீன் குழம்பும் போல" போன்ற முதுமொழிகளும் நம்முன்னோர் வாழ்வில் பெருக்கின் பங்கை எடுத்துச் சொல்லும்.  
இவை மட்டும் அல்லாமல் இம்மரப்பட்டையில் இருந்து நார் எடுத்தனர். உள்பட்டையில் இருந்து ஒருவகை நாரும் வெளிப்பட்டையிலிருந்து இன்னொருவகை நாரும் எடுத்தனர். நாரின் தன்மைக்கு  ஏற்ப மீன்பிடிக்கும் வலை, பாய், கயிறு என வெவ்வேறு பொருட்கள் செய்ததோடு ஆடையும் நெய்தனர். மரநாரால் நெய்த ஆடைக்கு ‘சீரை’ என்று பெயர். ஈழத்தில் வாழ்ந்த தமிழர் பெருக்கு மரநாரால் ஆடை நெய்து உடுத்தனர் என்பதற்கான ஆதாரத்தை 
                                
“பெருக்கு பட்டையில
              பட்டுசெஞ்சி தந்தவரே
 கருக்கலுக்க வந்து 
              கட்டிவிட்டு போனாலென்ன”  

                          - (நெடுந்தீவு நாட்டுப்பாடல்)
என்றும் 

“பெருக்கு பட்டெடுத்து பட்டுசெஞ்சி தந்தாலு
கருக்கலுக்கு வந்துநின்னு கட்டிகிடு என்னாலு
கருக்குமட்ட வண்டிகட்டி கழனியடி வந்தாலு
எருக்குபாலு கஞ்சிசெஞ்சி எட்டிநின்னு        தந்திடுவெ”

- (மாந்தை நாட்டுப்பாடல்)


என்றும் கன்னிப்பெண்கள் தமது காதலர்க்குப் பாடிய நாட்டுப்பாடல்கள் தருகின்றன. இப்பாடல்கள் என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களால் 1936களில் சேகரிக்கப்பட்ட ஈழத்து நாட்டுபாடலின் தேட்டத்தில் இருந்தன.

யாழ்ப்பாணமக்களின் இசைக்கருவியான யாழின் நரம்புகள் (கம்பிகள்) மட்டுமல்லாமல் மற்றய நரம்பிசைக்கருவிகளின் தந்திகளும் பெருக்குமர நாரால் கட்டப்பட்டன. இசையோடு இசைந்து வாழ்ந்த யாழ்ப்பாணத் தீவுப்பகுதித் தமிழர் யாழை மறந்ததால் யாழ்மீட்டத் தேவையான யாழ்நரம்பைக் கொடுத்த பெருக்குமரத்தையும் மறந்தனரோ! 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment