Wednesday 19 October 2011

இன்பமா! துன்பமா! மாயையா!

மனோரஞ்சித மலர்

மானுடவாழ்க்கையில் இன்பம் துன்பம், பிறப்பு இறப்பு, வரவு செலவு, உறவு பகை, ஆக்கல் அழித்தல் என்ற மாயைக்குள் நாம் தடுமாறிக் கொண்டிருக்கின்றோம். இந்தத் தடுமாறுதலுக்கெல்லாம் அவரவரது மனநிலையே காரணமாகும். நாம் அதனைப் புரிந்து கொள்வதில்லை. புரிந்தவர் சொன்னாலும் நாம் நம்புவதில்லை. எமக்கு என்று ஓர் அனுபவமுதிர்ச்சி ஏற்படும் போதே அவற்றை நாம் நம்ப முற்படுகிறோம். அதற்குள் எம் வாழ்நாளில் அரைவாசியைத் தொலைத்துவிட்டு நிற்போம். அதுவும் அவரவர் குடும்பசூழல், நண்பர், வாழுமிடம், அறிவுமுதிர்ச்சி போன்றவற்றால் மாறுபடும்.

எமது வாழ்வில் சிறுசிறு வெற்றிகள் கிடைக்கும் போது எம்மால் ஒன்றைச் செய்யமுடியும் என்று நம்பிக்கை கொள்கின்றோம். மனம் மட்டற்ற மகிழ்ச்சியில் குதிக்கின்றது. எம்மைச் சூழ இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் யாவருமே மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். எம்மால் சாதிக்க முடியும் என்கின்ற எண்ணம் உறுதியாகின்றது. அந்த உறுதியின் ஆழ்மன உந்துதல்களே சாதனைகளைப் படைக்கத் தூண்டுகின்றன. அவ்வகைத் தூண்டுதல்களின் வெளிப்பாடே சாதனைகளாகின்றன.

சாதனையாளன் சாதித்தே தீரவேண்டுமென,  இரவு பகலாக துன்பப்பட்டு  முயற்சிசெய்தே  சாதனையை நிலைநாட்டி இன்பம் காண்கின்றான். அவன்பட்ட துன்பமே அவனது இன்பத்திற்கு வழிவகுத்தது. அத்தகைய சாதனையாளனையோ படைப்பாளனையோ பார்த்து பலர் மகிழ்ச்சி கொள்ளும் போது சிலர் பொறாமையால் பொருமுகின்றனர். அவனின் சாதனையை முறியடிப்பது எப்படியெனச் சிந்தித்து அதனை முறியடித்து சாதனையாளனையும் தடுமாறவைக்கின்றனர். தாமும் துன்பப்பட்டு மற்றவரையும் துன்பப்பட வைப்பதில் அவர்களது மனம் இன்பம் அடைகின்றது.

சாதனையாளர்களில் சிலர் இத்தகைய முறியடிப்புகளுக்கு முகம் கொடுத்து தமது சாதனைகளை நிலைநாட்டுகின்றனர். பலரோ இந்த உலகமாயையிலே இருந்த இடமும் தெரியாது அடிபட்டுப் போய்விடுகின்றார்கள். போலிகளுக்கும் பகட்டுக்கும் மயங்கும் இந்த உலகம் உண்மையான அந்தச் சாதனையாளர்களை குழிதோண்டிப் புதைத்து விடுகின்றது. இன்றைய உலக சீரழிவுக்கு இதுவும் ஒரு காரணமே. அடுத்தடுத்து வருகின்ற இன்பங்களும் வெற்றிகளும் சிலருக்கு மமதையைக் கொடுக்கிறது. என்ன செய்கின்றோம் என்பதே தெரியாமல் கூத்தாடுகிறார்கள். எனவே வெற்றியும் புகழும் வந்து சேரும் போது மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் எம்மை நாமே மறக்காது செருக்கோடு திரியாது முன்போல வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.

சிந்திதுப்பாருங்கள்! ஒருவருக்கு காரம் பிடிக்கும். மற்றவருக்கோ இனிப்புப் பிடிக்கும். ஒருவர் தேநீரை விரும்பிக் குடித்தால் மற்றவர் கோப்பியை விரும்பி அருந்துவார். ஒருவர் மீனை விரும்பிச் சுவைத்து உண்பார். மற்றவரோ அதனைக்கண்டாலே அருவெறுப்பால் வாந்தி எடுப்பார். மதுபானங்களை போத்தல் போத்தலாகக் குடிப்பவர்களை பார்த்திருக்கும் நீங்களே மதுவாசனையைப் பிடிக்காது மூக்கைச் சுழிப்பவர்களையும் பார்த்திருப்பீர்கள். வாய்ச்சுவையிலே தான் எத்தனை வேறுபாடு? ஒவ்வொரு பிள்ளைகளின் விருப்பத்திற்கும் கணவனின் விருப்பத்திற்குமாக வகைவகையாகச் சமைக்கும் தாய்மார்கள் இருக்கிறார்கள். இத்தாய்மார்களே இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக அனுபவிப்பவர்கள். மனைவி தாய்மை எனுமிரு பங்களிப்புகளுக்கு இடையிலான மாயையிலே சிக்குண்டு இருப்பதால் இன்ப துன்ப வேறுபாடுகளை அவர்கள் முழுமையாக உணர்வதில்லை.

ஒரே வீட்டில் இருப்பவர்கள் படம் பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒருவர் அசின் நடித்த படத்தைப்போடு அதை நான் பார்க்கவேண்டும் என்பார். மற்றவர் சூரியா நடித்த படம் பார்க்கவேண்டும் என்பார். இப்படி சிறிதுநேர இன்பத்திற்காக சண்டைபோட்டு கடைசியிலே படமே பார்க்காது இருவருமே துன்பப்படுவார்கள்.  அசின் நடித்த படத்தைப் பார்ப்பவர் இன்பம் அடையும் போது சூரியா நடித்த படத்தைப் பார்க்க விரும்பியவர்  துன்பப்படுவார். ஒருவர் பாடற்காட்சியை இரசிக்க மற்றவர் சண்டைக்காட்சியை இரசிப்பார். ஒருவர் இயற்கைக்காட்சிகளைப் பார்க்க மற்றவர் செயற்கைக் காட்சிகளைப் பார்ப்பார். யார்யாருக்கு எதுஎது பிடிக்குமோ அவற்றைப் பார்ப்பதில் அவரவருக்கு இன்பம் கிடைக்கிறது என நாம் நினைக்கின்றோம்.  சில குழந்தைகள் மிகச்சிறு வயதிலேயே பெரிய ஞானியர் போல் எல்லாவற்றையும் விட்டுக்கொடுப்பார்கள். இவர்களில் சிலர் வளர்ந்ததும் தம் செய்கைகள் மீது தாமே கோபப்பட்டு தம் இன்பங்களை மற்றவர்களுக்காக தொலைத்து விட்டோமே என்ற ஆதங்கத்துடன் வாழ்வார்கள்.

அறிவாற்றலால் பெறும் இன்பங்களைப் பார்ப்போமேயானால் அதுகூட ஆளுக்காள் மாறுபடுவதைக் காணலாம். எப்படி உலகம் தோன்றியது? எப்படி உயிர்கள் தோன்றின? ஆதிமனிதன் எப்படி இருந்தான்?  பனிக்கால மனிதன் எப்படி வாழ்ந்திருப்பான்? என பழமையை விரும்பி பழமையைப் பற்றிச் சிந்தித்து அவற்றையறிந்து சிலர் இன்பம் காண்கின்றனர். வேறுசிலரோ புதியதாக எதையும் உருவாக்கமுடியுமா? எனச்சிந்தித்து அவற்றை உருவாக்கி பிறரை மகிழவைத்து தாமும் இன்பமடைகின்றனர். இன்னும் சிலரோ இவை என்ன எமக்கு சோறா போடப்போகின்றது? நாம் வாழும் வாழ்வைப்பார்ப்போம் என்று இன்பம் தேடுகின்றனர்.

நட்பிற்கூட இன்பம் தரும் நட்பு, துன்பம் தரும் நட்பு என்ற வேறுபாடு உண்டு. உண்மையுடனும் நேர்மையுடனும் எதையும் பொறுமையுடன் ஆராய்ந்து பார்ப்பவராய் வாழ்பவர் நட்பு இன்பம் தரும். தாந்தோன்றித்தனமானவராய் நாவடக்கம் இல்லாது அகந்தையுடன் சுயநலமாக வாழ்பவர் நட்பு துன்பம் தரும். நட்புக்கொண்டால் அதிலிருந்து விடுபட முடியாது. தமது உயிரைக் கொடுத்து எம்மைக் காப்பாற்றும் நண்பர் அமைவது போல, நம் உயிரையே எடுக்கும் நண்பரும் கிடைக்கலாம். எனவே மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்த்து நட்புக்கொள்ள வேண்டும், இல்லையேல் நாம் இறந்து போகக்கூடிய துயரத்தை அது கொடுக்கும் என்பது வள்ளுவர் முடிவு.
 "ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
   தான்சாம் துயரம் தரும்"                                               
                                                                      - (குறள்: 792)
ஆதலால் நட்பும் ஒருவித மாயையே.

நல்ல இசையைக் கேட்பதும் பிறரின் நல்ல பண்புகளைப் பேசுவதும் உலகமுன்னேற்றத்திற்கு தேவயானவற்றைச் செய்வதும் தன்னலமற்று பிறர் நலம் பேணுவதும் இன்பத்தை அள்ளித்தரும். "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" எனும் முதுமொழியைப் புறக்கணித்து அளவுகடந்த சுகபோகங்களை அநுபவிப்பது, சோம்பலோடு படுத்துக்கொண்டு தொலைக்காட்சியே என்று கதியாய்க்கிடப்பது, விதவிதமான இறைச்சிவகைகளை காரமும் எண்ணெய்யும் போட்டுச்சமைத்து மதுவோடு தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருப்பதும் துன்பத்தையே தரும். இவையாவும் மனிதர்களாகிய நாமே தேடிக்கொள்ளும் இன்பதுன்பம் என்னும் ஒருவித மாயைத்தோற்றங்களாகும்.

இதனாலேயே நம்முன்னேர்கள் இவ்வுலக வாழ்க்கையை மாயை என்றனர். ஆசையுள்ளவன் போகி ஆகின்றான். ஆசை அறுத்தவன் யோகியாகின்றான். எனவே ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார்கள். அது பிழையான கருத்து. பேராசைக்காரனே யோகியாகின்றான். ஏனெனில் இவ்வுலக வாழ்வை துன்பமென வெறுத்து மிகப்பெரிய பேரின்பத்தை அனுபவிக்க ஆசைப்படுவதால் யோகி பேராசைக்காரன் தானே! இல்லையா?

எமது உடம்பானது - மெய்(தொடுகை), வாய் (சுவை), கண்(பார்வை), மூக்கு(மணம்), செவி(ஓசை) என்ற ஐந்து புலன்களாலும் மனத்தாலும் இந்த உலகிலுள்ள போகங்களை அநுபவிக்கின்றது. அந்தப் போகங்களுக்காக நாம் இன்பதுன்ப வெள்ளத்துள் புரண்டு சுழல்கின்றோம். அதாவது இன்பத்தைத் தேடியோடி துன்பத்துள் துவள்கின்றோம். அற்ப இன்பத்திற்காக பேரிடர்களையே தாங்குகின்றோம். அதுவும் ஒருவகை மாயையே. அந்த மாயையின் காரணத்தால் தனு கரண புவன போக்கங்களால் (தனு - உடம்பு, கரணம் - மனமும் ஐம்புலன்களும், புவனம் - உலகம், போகம் - அநுபவப்பொருட்கள்) உண்டாகும் துன்பங்களில் தோய்ந்து நாம் அதன் வசமாகின்றோம். இதனை திருமந்திரத்தில் திருமூலரும்
"மாயா உபாதி வசத்தாகும்"                          
                                                       - (திருமந்திரம்: 2014)
என்றுகூறியுள்ளார். அதாவது எமது உயிரானது மாயையால் உண்டாகும் துன்பத்துள் அகப்பட்டு தானும் மாயையின் வசமாகும் என்றார். உலகமாயையின் தோற்றத்திற்குள் நாம் மறைந்து போவதால் நமக்கு இவை புலப்படுவதில்லை. இன்பத்தையும் துன்பத்தையும் நாம் எதிர்கொள்ளும் பொழுது மனோரஞ்சித மலரின் மணம் வேறுபட்டதாக உணர்வது போன்றே மாயை எமக்குக் காட்சி தருகிறது. இயற்கையாக மனோரஞ்சித மலரின் மணம் ஒன்றேதான். அது வேறுபடுவதில்லை. நம் மனநிலையே அந்த வேறுபாட்டிற்குக் காரணம்.

ஈழத்தமிழர்களது இன்றைய நிலை உலகே மாயை என்பதை தெட்டத்தெளிவாக எமக்குப் புரியவைக்கின்றது. கொத்துக்குண்டுகளால் ஈழத்தமிழன் துடிதுடித்துச் சாகின்றான். அதைக்கண்டு உலகிலுள்ள மனிதநேயமுள்ள மனிதநெஞ்சங்கள் துன்பத்தால் துவள்கின்றன. ஆனால் அந்த இரத்த வெள்ளத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் ஆடிப்பாடி வெடிசுட்டு இன்பம்காணும் சமுதாயம் ஒன்றும் இருக்கிறதே! இது என்ன இன்பமா! துன்பமா! மாயையா! இதிலிருந்து ஒன்றைமட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மனிதனின் வாழ்க்கையை அவனது மனச்சாட்சி நிர்ணயிப்பதில்லை. அதற்கும் மேலாக அரசாங்கங்களும் பெரும்பான்மைச் சமுதாயங்களுமே மனிதமனச்சாட்சியை நிர்ணயிக்கின்றன.

மனிதநேயமே இவ்வுலகில் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. இன்பங்களும் துன்பங்களூம் சூழ்ந்த மாயா உலகம் இன்று மனிதநேய அடிப்படையைவிட்டு விலகி சமூக, சமய, பொருளாதார, அரசியல் நிலைப்பாட்டில் தங்கிய உணர்ச்சிமிக்க உலகமாக மிளிர்கின்றது. . . . ஆகையால் என் கண்ணே!
                    "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
                     இன்பம் சேர்க்கமாட்டாயா
                     எமக்கின்பம் சேர்க்கமாட்டாயா, கண்ணே....!"

இனிதே,
தமிழரசி                                                                         
(2009 தை மாதம் எழுதியது). 

No comments:

Post a Comment