Sunday, 16 October 2011

காதற்கவிஞன் கண்ணதாசன்

                                                                  
காதலனாய் இருப்பதற்கு என்ன தகுதி வேண்டும்? காதலிக்கத் தெரிந்தால் மட்டும் போதுமா? இன்னும் வேண்டுமா? என்ன வேண்டும்? தனது காதலை துணிந்து சொல்லத் தெரிய வேண்டும். இரசிக்கத் தெரியவேண்டும். இரசித்ததை இரசனையோடு (உண்மையோ பொய்யோ) சொல்லத் தெரியவேண்டும். உணர்ச்சிகளை கவிதைகளாகக் கொட்டத் தெரியவேண்டும்.
        "மானல்லவோ கண்கள் தந்தது
         மயிலல்லவோ சாயல் தந்தது
         தேனல்லவோ இதழைத் தந்தது
         சிலையல்லவோ அழகைத் தந்தது"   என்றோ அல்லது
                   
         "பேசுவது கிளியா - இல்லை
          பெண்ணரசி மொழியா
          கோயில் கொண்ட சிலையா
          கொத்து மலர்க் கொடியா"
என்றோ கவிதை சொல்லத் தெரிந்திருந்தால் காதல் பள்ளியிலே ஐம்பது வீதம் புள்ளிகள் பெற்று காதலனாக சித்திபெற முடியும் என்பதே எழுபதுக்கு(1970) முன்னர் தமிழ் சினிமாப் படத்துறை காட்டிய தமிழகத்தின் நிலைப்பாடு. 1943ல் 'சிவகவி' படத்திற்காக பாபநாசம்சிவனால் மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டு தியாகராஜ பகவதரால் பாடப்பட்ட
      "வதனமே சந்திர விம்பமோ 
      மலர்ந்த சரோஜமோ...........
      மின்னுமோகனத் துடியிடையாள்
      அன்னமோ மடப்பிடிநடையாள்" 
போன்ற சினிமாப் பாடல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளிகை இட்டு, ஐம்பதற்கு (1950) முன்னர் தியாகராஜபகவதர் காலத்தில் தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்திருந்த மணிப்பிரவாள நடையை
        "உன் அழகைக் கண்டு கொண்டால்
        பெண்களுக்கே ஆசை வரும்
        பெண்களுக்கே ஆசை வந்தால் 
        என்நிலைமை என்ன சொல்வேன்"

        "நின்றால் கோயில் சிலையழகு
         நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு
         நடந்தால் அன்னத்தின் நடையழகு
         நாடகம் ஆடும் இடையழகு"
என மாற்றி, நல்ல கொஞ்சு தமிழ்க் கவிதைகளை எழுதி, சினிமாவில் புகுத்திய பெருமை கவியரசு கண்ணதாசனையே சாரும். அதற்காகயேனும் தமிழ்கூறும் நல்லுலகம் கண்ணதாசனுக்கு கடமைப்பட்டிருக்கிறது.

இந்த உலகிலுள்ள கலைகள் யாவும் மனிதனின் ஐம்புல உணர்வுகளின் உந்துதல்களால் தோன்றியவைகளாகும். அதனாற்றான் மனிதன் கலைகளுடன் உணர்ச்சியினாலேயே ஒன்றுபடுகின்றான். உலக இயற்கைகளையும் கலைகளையும் தன்னையும் இரசிப்பவர்களாலேயே அழியாக் கவிதைகளை வடிக்க முடியும். அத்தகைய கவிஞர்கள் பலவிதமான கலைகளில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள்.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த செட்டிநாட்டுச் செம்மல் கவியரசு கண்ணதாசனும் பல்கலை வல்லுனராகவே வலம் வந்தார். எட்டாம் வகுப்பை எட்டிப்பிடித்தேன் என தான் கற்றதைச் சொன்னவரது புகழ், பட்டி தொட்டி எல்லாம் பரவக்காரணம் அவரின் கலையுள்ளமே.
         "கல்லெல்லாம் சிலை செய்தான் பல்லவராசன் - அந்த
          கதைசொல்ல வந்தேன் நான் சின்னராசன்"
என்று தன்னை சின்னராசனாய் - கவிதைராசனாய் இனம் காட்டியவர். கதை சொல்வதிலும் வல்லவர்.
        "வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
        முன்னோர்க்கு முன்னவா மூண்ட கதை சொல்லவா"
என அசுரருக்கும் தேவருக்கும் யுத்த்தம் மூண்ட கந்தபுராணக் கதையைச் சொன்னவர், ஆறுபடை வீட்டின் கதைகள் ஆறையும் இரத்தினச் சுருக்கமாக
         "ஆறுபடை வீடு கொண்ட திருமுருகா - திரு
         முருகாற்றுப் படைதனிலே வருமுருகா
         பாட்டுடைத் தலைவன் என்று உன்னைவைத்தேன் - உன்னை
         பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன்"
என்று தொடங்கி இப்பாடலில் தந்ததோடு தான் ஒரு முருகபக்தன் என்பதையும் பதிவுசெய்து வைத்துள்ளார். இந்துமதம் திருமாலின் பத்து அவதாரங்களையும் மச்சபுராணம், கூர்மபுராணம் என ஒவ்வொரு புராணமாக விரித்துக் கூறும். அக்கதைகளிலுள்ள கருத்தின் சாறு எடுத்து
        "திருமால் பெருமைக்கு நிகரேது - உந்தன் 
         திருவடி நிழழுக்கு இணையேது
         பெருமானே உன்றன் திருநாமம் - பத்து
         பெயர்களில் விளங்கும் அவதாரம்"
எனத் தொடங்கி மிக இலகுவாக படம் பார்க்கும் அனைவருக்கும் புரியும்படி கதைசொல்லி இருக்கிறார். இவ்வாறு இதிகாச புராணக்கதைகள் யாவுமே அவரின் கவிதை உருவில் புதுப்பிறவி எடுத்திருக்கின்றன. முன்னோரின் கதைகளைக் காதலித்து அவற்றை கவிதையாகத் தந்து எம்மையும் இதிகாச, புராணக் கதைகளை காதலிக்க வைத்த ஒரு காதற்கவிஞனே கண்ணதாசன்.

காதல் இன்பத்தேன் அருந்தி தான் சுவைத்ததை சுவைபடச் சொன்ன காதலர்களில் திருவள்ளுவருக்கு அடுத்தாக கண்ணதாசனைச் சுட்டலாம். காதலைக் கண்டு"காதல் எனும் வடிவம் கண்டேன்" என்று பாடி, காதலில் மயங்கி நின்றவர் "காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்" என காதல் பாடம் படிக்க அழைத்து, "ஆதிமனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இதுதான்" என்றுகாட்டி, "காதற்சிறகை காற்றினில் விரித்து வானவீதியிற் பறக்கவா" எனப் பறந்தவர், காதற்றோல்வியில் துவண்ட போது 'காதல் போயின் சாதல் சாதல்' சொன்ன பாரதியாரின் அடியையொற்றி
                    "காதலே போ! போ!
                      சாதலே வா! வா!" என உரக்கக் கூச்சலிட்டதுடன் கடவுளையே
         "கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
         காதலித்து வேதனையில் சாகவேண்டும்"
என்று பாட்டெழுதிக் கொடுத்து  T M சௌந்தரராஜன் கேட்டதற்காக 'சாகவேண்டும்' என்பதை 'வாடவேண்டும்' என மாற்றி எழுதிக்கொடுத்தார்.

சங்க இலக்கியப்பாடல்களின் தாக்கத்தையும் அவர் பாடல்களில் காணலாம். அதுவும் பாரிமகளிரின்
         "அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
         எந்தையும் உடையோம் எம் குன்றும் பிறர் கொளார்
         இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
         வென்று எறி முரசின் வேந்தர் எம்
         குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே"
என்ற அற்புதவரிகளை உள்வாங்கி
         "அன்று வந்ததும் இதே நிலா
         இன்று வந்ததும் அதே நிலா
         இன்பம் தந்ததும் ஒரே நிலா
         ஏங்க வைப்பதும் ஒரே நிலா"
எனவும்
         "அன்றொரு நாள் இதே நிலவில்
         அவர் இருந்தார் என் அருகே - நான்
         அடைக்கலம் தந்தேன் என் அழகை - நீ
         அறிவாயோ வெண்ணிலவே
         அந்த ஒரு நாள் ஆனந்தத் திருநாள்
         இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ"                      
எனவும் சில காதற்கவிதைகளில் சொன்ன வித்தகர்.

கண்ணதாசன் பல்வேறு மொழிகளில் உள்ள கவிதைகளை படித்துச் சுவைத்து,  தமிழில் மிகக்குறைந்த சொற்களில் இனிமையாக அவற்றிற்கு மெருகேற்றினார். பிரான்ஸிஸ் வில்லியம் போர்டிலோனின் "The night has a thousand eyes" என்ற எட்டுவரிக் கவிதையை பன்னிரண்டு சொற்களில் கவிதையாகப் புனைந்தவர். அப்பாடல்கள்:
                      
                      "The night has a thousand eyes,
                             And the day but one;
                      Yet the light of the bright world dies
                             With the dying of the sun.
    
                      The mind has a thousand eyes,
                              And the heart but one;
                      Yet the light of a whole life dies
                              When love is done."
                                       - by Francis William Bourdillon
                  
        "இரவுக்கு ஆயிரம் கண்கள்
        பகலுக்கு ஒன்றே ஒன்று
        அறிவுக்கு ஆயிரம் கண்கள்
        உறவுக்கு ஒன்றே ஒன்று"
கண்ணதாசன் காதலிக்காதது உலகிலே எதுவும் இல்லையெனும் அளவிற்கு மங்கையை, மதுக் கிண்ணத்தை, எல்லாவற்றையும் காதலித்தார். நாத்திகத்தை காதலித்து நாத்திகனாக வலம் வந்து பின்னர் கடவுளைக் காதலித்து 'அர்த்தமுள்ள இந்துமதம்' எழுதிக்குவித்தார். நாடகங்களைக் காதலித்து 'அனார்க்கலி', 'சிவகங்கைச் சீமை' போன்ற நாடகங்களை வடித்தார். பண்டைய வரலாற்றைக் காதலித்து 'கடல் கொண்ட தென்னாடு' போன்ற சரித்திர நாவல்களைப் படைத்தார்.

ஐந்தே கவிதைகளை எழுதியிருந்த கண்ணதாசனுக்கு 'கவிஞர்" என்ற பட்டத்தைக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. இருப்பினும் கண்ணதாசன் அரசியலைக் காதலித்த நேரம், அறிஞர் அண்ணாத்துரை, கலைஞர் கருணாநிதிக்கு  மேடையில் மோதிரம் அணிவிப்பதைக் கண்டு, உள்ளம் குமைந்து அரசியல் ஒரு சூதாட்டமென வெறுத்தார். அவர் காதலித்தவற்றுள்ளே தன் அன்னையின் அன்பை நினைந்து
        "என்னை தனக்குள் வைத்திருக்கும்
        அன்னை மனமே என்கோயில்
        அவளே என்றும் என் தெய்வம்"
என்கின்ற சொற்களைச் சொல்லிச் சொல்லி பெருமையுடன் காதலில் உருகிக்கரைந்தார். இப்படி தன்னைப் பெற்ற அன்னையை நினைந்து உருகிய கண்ணதாசன் தான் கற்ற கன்னித்தமிழ் அன்னை மேற்கொண்ட காதலால் 
        "செந்தமிழா எழுந்து வாராயோ - உன்
        சிங்காரத் தாய்மொழியப் பாராயோ
        சிந்தை எல்லாம் இனிக்கும் தேனாகும் 
        செல்வமிதே........."
என ஓங்கிக் குரல் கொடுத்தவர், இறப்பதற்கு முன் சிக்காக்கோ நகரிலிருந்து கடைசியாகப் பதித்த வரிகளில் கூட
        "மனிதனில் ஒன்று பட்டு சேர்ந்திருப்பீர் - இங்கு 
         மழைகள் தமிழ்பேசச் செய்து வைப்பீர்
         தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை - பெற்ற
         தமிழையும் விட்டுவிட்டால் வாழ்கையில்லை"
என்பதை நயமாகச் சொல்லி தமிழின் நிலையை எண்ணி காதலிற் கலங்கிய காதற்கவிஞன். தமிழே எமது வாழ்க்கை என்பதைக் காட்டித்தந்த காதற்கவிஞன். தமிழ்க்காதலில் தன்னையே ஆழ்த்திய காதற்கவிஞன் கண்ட கனவை நனவாக்க எங்கள் குழந்தைகளுக்கு தமிழைப் பிழையில்லாது பேசவும் எழுதவும் கற்றுக் கொடுப்போம்.
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment