Sunday 9 October 2011

குறள் அமுது - (2)


குறள்:
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”                               - 972

பொருள்:
இத்திருக்குறள் பெருமை என்னும் அதிகாரத்தில் இரண்டாவது குறளாக இருக்கிறது. ஏன் மனிதரிடையே பெருமையில் வேறுபாடுகள் இருக்கின்றன? என்பதற்கான விடையைச் சொல்லும் குறள் இது. மனிதர் எல்லோரும் பிறப்பால் ஒத்தவரே. ஆயினும் அவரவர் செய்யும் தொழில் வேறுபாட்டல் வரும் பெருமை ஒருவருக்கு ஒருவர் ஒத்திருக்காது வேறுபடுகின்றது.

விளக்கம்:
சிறப்பு என்பது இங்கே பெருமையை குறிக்கின்றது. ஒவ்வா ஒத்திருக்காத தன்மையாகும். பெருமை ஒருவருக்கொருவர் ஒத்திருக்காது என்பதையே வள்ளுவர் சிறப்பு ஒவ்வா என்கிறார். சிலர் அறிவால் பெருமை அடைவர். சிலர் ஆற்றலால் பெருமை உறுவர். சிலர் தம் முன்னோர் செய்த செய்கைகளால் பெருமை எய்துவர். நாம் செய்யும் தொழில் எப்படி எமது பெருமையை வேறுபடுத்துகிறது என்பதைப் பார்ப்போம். 
ஒருவர் தொழிற்சாலையின் அதிபராக இருப்பார், மற்றவர் அத்தொழிற்சாலையின் காவலாளியாக இருப்பார். சிலர் நிழலில் வேலை செய்வார். சிலர் வெய்யிலில் வேலை செய்வார். ஒருவர் உடல்வருந்தி உழைக்க, மற்றவரோ அறிவுத்திறனால் உடல் வருந்தாது வேலை செய்வார். ஒருவரிடம் அதிகாரம் இருக்கும், மற்றவரிடம் அதிகாரம் இருக்காது. சிலர் அறிவுரை கூறுபவராக இருக்க, சிலர் அறிவுரையைக் கேட்டுக் கற்பவராக  இருப்பர். ஒருவர் சேற்றிலும் மேட்டிலும் வேலை செய்வார் மற்றவரோ குளிரூட்டிய அறையில் சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி ஒய்யாரமாக வேலை செய்வார்.
இப்படி எங்கும் எதிலும் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் ஏற்றத் தாழ்வுகள் விரவிக் கிடக்கின்றன. மனிதர் தாம் வேலை செய்யுமிடம், தகுதி, தன்மை போன்ற பெருமையால் வேறுபடினும் பிறப்பால் எல்லோரும் மனிதரே. பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் ஆனால் சிறப்பு ஒவ்வா - பெருமை என்பது சமமாக இருக்காது. எப்போது தொழிலால் பெருமை மாறுபட்டதோ அப்போதே நாம் பிறந்த இடத்தைப் பொறுத்து பெருமையும் வேறுபடுகின்றதல்லவா? மனிதப்பிறப்பு ஒன்றேதான் அதில் எந்த கருத்து வேறுபாட்டிற்கும் இடமில்லை. 
                      “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் 
                       கருமமே கட்டளைக் கல்”                      - 505            
ஆதலால் பெருமை என்பது நாம் செய்யும் தொழிலால் மட்டும் வேறுபடாது.  நாம் செய்கின்ற நன்மை தீமைகளாலும் அது மாறுபடும். மனிதராகிய நாம் பிறப்பால் மனிதராய் இருந்தாலும் நாமொவொருவரும் செய்யும் தொழில்களாலும் செய்கைகளாலும் வேறுபடுவதால் எமது பெருமையால் வேறுபடுகின்றோம்.

No comments:

Post a Comment