Tuesday 25 October 2011

குறள் அமுது - (6)


குறள்:
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
  கைகொல்லும் காழ்த்த இடத்து”          - 879  

பொருள்: முள்ளுள்ள மரத்தை இளங்கன்றாக இருக்கும் பொழுதே  அழித்தொழிக்க  வேண்டும். வைரமுள்ள மரமாக வளர்ந்தபின் அழிக்க முற்படுவோரின் கையை அது குத்திக் கிழிக்கும்.

விளக்கம்:
இத்திருக்குறள் 'பகைத்திறம் தெரிதல்' எனும் அதிகாரத்தில் வரும் ஒன்பதாவது குறளாகும். பகையை வெல்வதற்கான தன்மையை அறிவதை பகைத்திறம் தெரிதல் என்கிறார். ஒருவரோடு உள்ள பகைமையை எப்போது அழித்தால் மிக இலகுவாக அழிக்கமுடியும் என்பதை இக்குறள் சொல்கிறது.

நம் ஒவ்வொருவரின் மனதுள்ளும் எத்தனையோ வகையான முள்மரங்கள் மண்டிக் கிடக்கின்றன. அவை நம் கண்ணுக்கு முள்மரங்களாகத்  தெரிவதில்லை. எனினும் பெரியோர்கள் தாம் கண்ட அனுபவத்தால் முள்மரங்கள் எவையெவை எனக்கூறிச் சென்றுள்ளனர். களவெடுத்தல், பொய்பேசுதல், சோம்பி இருத்தல், வஞ்சித்தல், மற்றவர் நன்றாய் இருப்பதைப் பார்த்துப் பொறாமைப்படுதல், கோபம் கொள்ளுதல், பகை கொள்ளுதல், கல்லாமை, மதுவருந்துதல்,  பெருந்தீன் உண்ணல், புகைப்பிடித்தல், அலைபேசியில் பேசிக்கொண்டே இருத்தல் எனப் பல்வேறுபட்ட முள்மரங்கள் நம்முள்ளே புகுந்து வளருகின்றன. 
மனிதவாழ்வை சீரழிக்கும் இம்முள்மரங்களை நாம் கெட்டபழக்கங்கள் என்கிறோம்.  இவற்றின் விதைகள்  மெல்ல இன்பமெனத் தவழ்ந்து ஆசையெனும் தென்றலோடு வந்து எம்முள்ளே புகும். தென்றலின் சுகத்தில் நாம் மூழ்கி இருக்க மெல்ல அரும்பி வளர்ந்து பெரிய முள்மரமாய் மாறி எம்மையே அழித்து ஒழிக்கும். அந்த அழிவிலிருந்து எம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளும் வழியை திருவள்ளுவர் இக்குறளில் கூறியுள்ளார்.
முள்ளுள்ள மரத்தை துளிர் விடும் பருவத்தில் இளஞ்செடியாகவே களைந்துவிட வேண்டும்.  சின்னஞ்சிறு செடியென அசட்டை செய்தால் சில வருடங்களின் பின் அது பெருமரமாக வயிரமான முட்களுடன் வளர்ந்து நிற்கும். அப்பொழுது அழிக்க முற்பட்டால் அழிப்பவரின் கையை அம்முட்கள் குத்திக் கிழிக்கும். எனவே உங்கள் தீயபழக்கங்களை அவை முளைத்து வளரத்தொடங்கும் போதே அகற்றிவிடுங்கள்.
தீயபழக்கங்களுள் பகைமை கொள்ளுதலே மிகவும் தீயபழக்கமாகும்.  ஆதலால்  பகைமை பாராட்டுதல் என்பது முள்நிறைந்த நச்சுமரத்தை வளர்ப்பதைப் போன்றது. பகைமை பொறாமையாலும் அதிகாரவேறியாலும் புரிந்துணர்வு இன்மையாலும் ஏற்படுகின்றது. உலகெங்கும் பத்துக்கோடி தமிழர் இருந்தும் நாடற்று இருப்பதற்குக் காரணம் பகைமையை துளிர்விடும் பருவத்தில் கிள்ளி எறியாமையேயாகும். பகையெனும் முள்மரம் ஆழவேரூன்றி வளர்ந்து முள்ளிவாய்க்கால் அவலமாய் குத்திக் கிழித்து நாற்பதாயிரம் உயிரைக்குடித்து தமிழர் நெஞ்சங்களில் இரத்தம் சிந்தவைத்தது. முள்ளிவாய்க்கால் அவலத்தையும் எடுத்துக்காட்டும் குறள் இது.

No comments:

Post a Comment