Thursday, 13 October 2011

சங்கத்தமிழரின் மரநேயமும் புன்னைமரமும் - பகுதி 1

கடற்கரையில் செழித்து வளர்ந்து நிற்கும் புன்னைமரம்

சங்கத்தமிழரின் பழமையையும் அவர்கள் அறிந்திருந்த விஞ்ஞான உண்மைகளையும் தொல்காப்பியம் எமக்குச் சொல்கிறது. தமிழர் 2400 வருடங்களுக்கு முன்பே தாவரங்களை விஞ்ஞானமுறையில் பாகுபடுத்தினர் என்பதை தொல்காப்பியர் மிக நேர்த்தியாகக் காட்டுகிறார்.
தாவரங்கள் தாம் உயிர்வாழத் தேவையான உணவை தாமே தயாரிக்கின்றன. இலையில் உள்ள பச்சையம் சூரிய ஒளியின் சக்தியைப் பெற்று இலையினுடாக காற்றிலுள்ள காபனீரொட்சைட்டையும் வேரினூடாக நிலத்திலிருக்கும் நீரையும் எடுத்து  குளுக்கோசை தயாரிக்கின்றது. நீரும் தயாரிக்கப்பட்ட உணவும் தாவரத்தின் ஏனைய பகுதிகளுக்கு காழினூடாகவும் உரியத்தினூடாகவும் கடத்தப்படுகின்றன.
தாவரங்களில் காழிருந்த இடத்தை சங்கத்தமிழர் அறிந்திருந்தனர். தாவரத்தில் வெளிப்புறமாக காழ் இருப்பின் அதைப் புல் என்றும் உள்புறம் காழ் இருப்பின் அதை மரம் என்றும் பிரித்தனர். 
“புறக்காழனவே புல் என மொழிப” 
                               - (தொல்.பொரு.மரபு:86)
“அகக்காழனவே மரனென பொழிப” 
                                   - (தொல்.பொரு.மரபு:87)
என தொல்காப்பியப் பொருளதிகாரம் சொல்கிறது. 
“புறக்காழனவே புல் என மொழிப" என்பதில் புறக்காழ் இருப்பின் புல் எனச் சொல்வர் (மொழிப) எனத்  தொல்காப்பியர் கூறுவதால் அவர் இதைக் கூறவில்லை என்பதையும் அவருக்கு முன் வாழ்ந்த பண்டைத் தமிழரே கூறினர் என்பதையும் நாம் அறியலாம்.
இன்றைய தமிழில் புறக்காழ், அகக்காழ் என்பவற்றை புறவயிரம் அகவயிரம் என்கிறோம். நாம் தென்னைமரம் பனைமரம் என அழைக்கும் மரங்கள், புறக்காழ் உள்ள புற்கள் என தொல்காப்பியம் காட்டுகிறது. வெட்டப்பட்ட தென்னை, பனை என்பவற்றைப் பார்த்திருப்பீர்கள். அவற்றின் வெளிப்புறம் வயிரமாகவும் உள்ளே சோத்தியாகவும் இருக்கும். அப்படி வெளிப்புறம் வயிரமாக இருப்பதே புறக்காழ். புல் இனத்திற்கு கிளைகள் இரா. புற்களின் விதைகள் இரண்டாக பிளவு பட்டிருக்காது. மர இனத்திற்கு கிளைகள் இருக்கும். அவற்றின் விதைகள் இரண்டாகப் பிளவுபட்டிருக்கும் என அறிந்ததால் பண்டைய தமிழர் தென்னை, பனை, கமுகு, வாழை, நெல், கரும்பு, மூங்கில்  போன்றவை புல்லினம் என்றனர். 
கூரான இலையுள்ள மரங்கள் உயிர்வாயுவான ஒட்சிசனை கூடுதலாக வெளிவிடுகின்றன என்றும் மொட்டையான இலையுள்ள மரங்கள் குறைந்த அளவிலான உயிர்வாயுவை வெளிவிடுகின்றன என்றும் அறிந்திருந்தனர். அதனால் மனைவாழ் மரங்களாக கூரான இலையுள்ள மரங்களையே நட்டனர். நம்வீடுகளின் அருகே வேப்பமரம், மாமரம் போன்ற கூரான இலையுள்ள மரங்களை நடுவது சங்ககாலப் பழக்கமாகும். அதுபோல் புளியமரம் போன்ற மொட்டை இலையுள்ள மரங்களை அடிவளவில் நடுவதும் சங்கப் பழமையே.
அத்துடன் தாவரங்கள் ஓரறிவுள்ள உயிரினம் என்பதை
“புல்லும் மரனும் ஓரறிவினவே 
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”
எனவும் ஓரறிவு என்றால் தொட்டறிவது என்பதை
“ஒன்றறிவதுவே உற்றறிவதுவே” 
எனவும் தொல்காப்பியர் கூறுவதால் சங்கத்தமிழர் தாவரங்கள் பற்றிய அறிவை விஞ்ஞான முறையிலேயே அறிந்திருந்தனர் என்பது தெளிவாகின்றது. தாவரங்கள் ஓரறிவுள்ள உயிரினம் என அறிந்திருந்ததால் மரங்களையும் தம்மை ஒத்த உயிராக எண்ணி நேசித்தனர். ஆதலால் அவர்கள் வாழ்வியலில் மரநேயத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது. 

இன்றைய உலகில் மனிதநேயமே உதட்டளவில் பேசப்படும் பொருளாக சுருங்கிச் சீரழிகின்ற நிலையில் மரநேயத்தை எங்கு காண முடியும்? மனித இனம் மரங்களை காடுகளை அழித்து தன் அழிவுக்கு தானே வழிவகுத்துக் கொண்டிருக்கின்றது. காடுகளை அழிப்பது நம்மை நாமே அழித்துக் கொள்ளும் தற்கொலைக்குச் சமமாகும் என்பதை எப்போது நாம் உணரப்போகிறோம்? மரநேயம் மனிதனை விட்டு அகன்று போனதாலேயே வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் எனும் பசுமைப்புரட்சி தோன்றி இருக்கின்றது. ஐ நா வும் இந்த ஆண்டைக் காடுகள் ஆண்டாக அறிவித்து காடுக்ளைப் பாதுகாக்கும் தனக்கான கடமையை முடித்துக் கொண்டுள்ளது. இதுவே இக்கால மனிதர்களாகிய எமது மரநேயம். 

எம் தாய்மண்ணின் விடிவுக்காக நடந்த போரிலே எமது உற்றாரும் பெற்றாரும் மைந்தரும் மட்டுமா வீரகாவியமானார்கள்? அவர்கள் அன்பாக வளர்த்த, பார்த்து மகிழ்ந்த, எத்தனை ஆயிரம் பறவைகள், விலங்குகள், புல், பூண்டு, செடி, கொடி, மரங்கள் யாவுமே எமக்காகத் தம் இன்னுயிரை வீரகாவியமாக்கியுள்ளன என்பதையும் நாம் மனிதப்பண்புடன்  உள்வாங்க வேண்டும். சுயநலம் எம் கண்ணை மறைப்பதால் அன்பை கருணையை நாம் இழந்துவிட்டோம். 
"அன்பத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண் 
வற்றல் மரம் தளிர்த்தற்று” 
என்ற வள்ளுவர் சொன்ன வற்றல் மரமாக நிற்கிறோம்.

எனவே நாம் காடுகளையும் மரங்களையும் எம்மைப் போன்ற உயிர்கள் எனக்கருதி நேசிக்க வேண்டும் என்பதை சங்கத்தமிழர் வாயிலாக அறிவோமா! 21ம் நூற்றாண்டில் வாழும் எம்மைப் பார்த்து அரசாங்கங்களும் ஐ நா போன்ற  நிறுவனங்களும் மரங்களை அழிக்காதீர்கள் எனக் குரல் எழுப்பினாலும் எமது காதுகளில் அவை விழுவதில்லை. ஆனால் இரண்டாயிர வருடங்களுக்கு முன் வாழ்ந்த சாதாரண புலவர் ஒருவர்  அரசனைப் பார்த்து மரத்தை வெட்ட்டாதே! எனக்கூறி அவனை போர் செய்யவிடாது தடுத்ததை புறநானூறு சொல்கிறது.
‘அரசனாக அரசமரபுப்படி நீ செய்ய வேண்டிய எதனையும் உன் எண்ணம் போல் செய்துகொள் ஆனால் எக்காரணம் கொண்டும் மரத்தின் சிறுதுண்டையும் வெட்டாதே! என்ற பாடத்தை பாண்டியன் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறனுக்கு காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார் என்ற புலவரே புகட்டினார்.
“வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் 
புகழ்தல் உற்றோருக்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையேன் என்னெனின்
நீயே பிறர்நாடு கொள்ளுங்காலை அவர்நாட்டு
இறங்கு கதிர் கழனி நின் இளைஞரும் கவர்க
நனைந்தலைப் பேரூர் எரியும் நைக்க
மின்னி நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடுவேல்
ஒன்னார் செகுக்கினும் செகுக்க, என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்பு” 
                               - (புறம்: 57: 1- 10) 
‘மாறனே! அறிவில் வல்லவரானாலும் அறிவு குறைந்தவரானாலும் உன்னைப் புகழ்வோருக்கு மாயோனைப் போல (திருமால் போல) சொல்லக்கூடிய பெருமையுடையவன் நீ. உனக்கு ஒன்றைக் கூறவேண்டும். நீ பிறர் நாட்டை பிடிக்கும் போது, உன் வீரர் நெற்கதிர்கள் சாய்ந்து தூங்கும் வயல்களைக் கவர்ந்து கொள்க. பேரூரை எரிப்பினும் எரிக்க. பகைவரை அழிப்பினும் அழிக்க. ஆனால் சிறிதளவுகூட  காவன்மரத்தை வெட்டாது காப்பாயாக!’ எனச் சொன்னதால் புலவர் காரிக்கண்ணனார் சங்ககால மரக்காப்பாளனாகத் தெரிகிறார். 
அரசர்கள் காவல்மரத்தை பாதுகாத்ததன் காரணம் என்ன? பொருளாதாரமே. ஒரு நாட்டின் காவல்மரம் எதுவோ, அதுவே அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவியது. உதாரணமாக புன்னைமரம் காவல்மரமாக இருப்பின் அதன் மரப்பலகை வள்ளமாக, தோணியாக, நாவாயாக, மாறி கடற்படையாகவும் மீன்பிடித்தொழிலுக்கும் கைகொடுத்தது. புன்னை விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் எரிபொருளாகி வீடுகளிலும் வீதிகளிலும் கோவில்களிலும் விளக்கின் ஒளியாகியது.  புன்னைமலர்த்தேன் உணவாகியது. புன்னையின் இலை, பூ, பட்டை, விதை, எண்ணெய், தேன் யாவுமே மருந்தாகியது. இவ்வாறு அந்தந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மரத்தில் ஒன்றை மன்றத்தில் நட்டு காவல்மரம் எனப் போற்றினர். ஓவ்வொரு நாட்டரசரும் தம் நாட்டு காவல்மரத்தை பரம்பரை பரம்பரையாகக் காப்பது அந்நாளைய வழக்கமாகும். அந்தக் காவல் மரங்களின் எச்சமாக நிற்பதே இன்றைய கோவில் மரங்களாகும்.

புலவர் காரிக்கண்ணனார் போலவே வேளிர்குல சிற்றரசனான எவ்வியையும் மரக்காப்பாளனாக சங்க இலக்கியம் எமக்குக் காட்டுகிறது. மாங்குடிக் கிழார் இவ்வரசனை மாவேள் எவ்வி என அழைப்பதால் இவன் வேளிர் குலத்தவனாவான். எவ்வியின் நாடு வளம்  கொழிக்கும் பல ஊர்களையுடையது. அதில் ஒன்று வண்டுகள் மொய்ப்பதால் மலர்ந்து மணம் பரப்பும் புன்னை, முள்ளி போன்ற மரங்கள் நிறைந்த சோலையை உடையது. அவ்வூர் ஆடவர் புன்னை மலர்க்கண்ணியைச் சூடியிருப்பர். அவ்வாடவர் குரவைக்கூத்தின் தாளத்திற்கேற்ப அசைந்தாடும் மகளிரை, முன்கை நீட்டி தம்மோடு குரவையாட வருமாறு அழைப்பர். இவ்வாறு குரவை ஆடுவோர் புன்னைமரச் சோலையில் குரவை ஆட, முள்ளி மலர்களை கூந்தலில் அணிந்த இளம் பெண்கள் பனை நுங்கின் நீரும், கரும்புச்சாறும், இளநீரொடு கலந்த, முந்நீரைக் குடித்து, கடலில் பாய்ந்து விளையாடுவர். இவ்வாறு கூடி, ஆடி மகிழ்ந்து வாழ்ந்த மக்கள் தொகை நிறைந்த பல நல்ல ஊர்களைக் கொண்ட நாட்டின் அரசனே எவ்வி. அவன் தனக்கென பொருளை பாதுகாக்காது பிறருக்குக் கொடுப்பவன்.
“தண்குரவை சீர் தூங்குந்து
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கண்ணி மிலைத்த மைந்தர்
எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
இரும்பனையின் குரும்பை நீரும்
பூங்கரும்பின் தீஞ்சாறும்
ஓங்கு மணற் குவவுத் தாழை
தீநீரொடு உடன் விராஅய்
முந்நீர் உண்டு முந்நீர் பாயும்
தங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
ஓம்பா ஈகை மாவேள் எவ்வி” 
                                            - (புறம்:24)
நுங்கும், கரும்புச்சாறும், இளநீரும் கலந்த முந்நீரை குடித்துப் பாருங்கள். அதன் சுவையே சுவை. அதற்குள் நுங்குத்துண்டும் வழுக்கையும் சேர்க்க மறக்கவேண்டாம். ஆற்றுநீரும் ஊற்றுநீரும் மழைநீரும் சேர்வதால் கடல் முந்நீர் என அழைக்கப்படும். எவ்வியின் நாட்டைப் போன்று நம் நாட்டில் குரவைக்கூத்திற்குப் பேர்போன இடம் மட்டக்களப்பு. அங்கே இன்றும் புன்னைச்சோலை என்ற இடம் புன்னை மரங்களுடன்  இருக்கின்றது. புங்குடுதீவிலும் புன்னைமரம் இருந்தது. இருக்கும். 

எவ்வியின் இன்னோர் ஊரின் வளத்தையும் பார்ப்போம். கடற்கரையே கரைந்து போகக் கூடியதாக காவிரியாறு பெருகிவந்து கடலுடன் கலக்கும் துறை அது. அந்த காவிரி நீரைக் கிழித்தபடி நள்ளிரவில் சென்ற படகில் தமயன்மார் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அதிகாலையில் அவர்கள் பிடித்து வந்த வாளைமீன்களை கூடையில் எடுத்துக்கொண்டு தங்கை விற்பனைக்குச் சென்றாள். அவள் அழகிய உந்தியுடன் கிளிமொழி பேசுபவளாக இருந்தாள். உயர்ந்த கொடிகள் அசையும் கடைத்தெருக்கள் நோக்கி நடந்தாள். (சங்ககாலத்தில் கடைகளின் பெயர்களை கொடிகளில் எழுதி உயரப்பறக்கவிட்டனர். எந்தக் கடைக்குச் செல்வது என்பதை தூரத்தில் வரும்போதே பார்த்து அறிந்து கொள்ள அது ஏதுவாக இருந்தது.) அவள் 'கள்' மலிந்த கடைத் தெருவிற்கு வந்தாள். அவள் கொணர்ந்த மீனுக்கு விலையாக பழைய செந்நெல் தருகிறோம் எனக்கேட்டார்கள். அவள் கொடுக்கவில்லை. கடைத்தெருக்களில் பணம் பாவிப்புக்கு வராத பண்டை மாற்றுக்காலம் அது. பெரிய முத்துக்களையும் நகைகளையும் விலையாக வாங்கிக் கொண்டே வாளைமீன்களைக் கொடுத்தாள். மீன்களை வாங்கியவர்கள் முத்துக்களையும் நகைகளையும் அவளின் அழகிற்கா! சொல்லிற்கா! மீனுக்கா! கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் முத்துக்களும் நகைகளும் கொடுத்து மீன் வாங்கும் அளவிற்கு வளம்கொழித்த ஊராக எவ்வியின் ஊர் இருந்தது தெரிகிறது.  

எவ்வி மரங்களின் மேல் காதல் கொண்டவன். மரங்களின் மேல் கொண்ட மரநேயத்தால்  அன்னி என்பவனை புன்னை மரத்தை வெட்டாதே! மரத்தை வெட்டுவது நல்லதல்ல என பல நீதி மொழிகளைக் கூறித்தடுதான். எவ்வி தான் வளர்த்த மரத்தையா அன்றேல் தன் நாட்டு மரத்தையா வெட்டாதே என்று தடுத்தான்?  இல்லவே இல்லை. அங்கு தான் எவ்வியின் மரநேயம் துலங்குகின்றது. 

மிகவும் தொன்மையான புன்னைமரம் ஒன்று திதியன் என்ற ஒரு சிற்றரசனின் காவல்மரமாக இருந்தது. அப்புன்னை மரம் வயதாகியும் பொன்போல் பூத்துக் குலுங்கி செழிப்புடன் நின்றது. இன்னொரு சிற்றரசனான அன்னி அந்த தொன்மையான புன்னைமரத்தை விரும்பி திதியனுடன் பகைகொண்டான். அவன் திதியன் மேல் கொண்ட பொறாமையால் திதியனின் காவல் மரத்தை தூள் தூளாக வெட்டி திதியனை அவமதிக்க நினைத்தான். அதனை அறிந்த எவ்வி, திதியனின் புன்னைமரத்தை வெட்டாதே என அன்னியைத் தடுத்தான். எவ்வி எடுத்துச் சொன்ன நன்மொழிகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காயின. எவ்வியின் சொற்கேட்டு அடங்காத அன்னி, திதியனின் புன்னைமரத்தை வெட்டிச்சாய்த்தான். புன்னைமரத்தை வெட்டியதால் அன்னியும் வெட்டிச் சாய்க்கப்பட்டான். எவ்வியின் நாட்டில் வாளைமீனுக்கு விலையாக பெருமுத்துக்களும் நகைகளும் வாங்கிய இளம் பெண்ணையும், எவ்வி தடுத்ததையும்  கேளாது திதியனுடன் சண்டையிட்ட அன்னியையும் நக்கீரர்
"அறல்வார் நெடுங்கயத்து அருநிலை கலங்க
மாலிருள் நடுநாட் போகித் தன்னையர்
காலை தந்த கணைக்கோட்டு வாளைக்கு,
அவ்வாங்கு உந்தி அஞ்சொல் பாண்மகள்
நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில்,
பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயங்கெழு வைப்பிற் பல்வேல் எவ்வி
நயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான்,
பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித்
திதியனொடு பொருத அன்னி
                                                                - (அகம்: 126) 
எனக் காட்டுகிறார். திதியனின் காவல்மரமான புன்னை பொன்போல் பூத்துக் குலுங்கிய போதல்லவா அன்னி அதனை வெட்டினார். அப்போது ‘அது எப்படித் துடிதுடித்திருக்கும்?’ என ஒரு தாய் கூறுவதாக கயமனார் என்ற சங்கப்புலவரும் சொல்கிறார். அன்னிவெட்டிய ஒவ்வொரு வெட்டிலும் புன்னைமரம் துடி துடித்ததை உணரும் கயமனாரின் மரநேயத்தை அகநானூற்றின் 145ம் பாடல் சொல்கிறது.
அப்புன்னை மரத்தின் அவலம் சங்கப்புலவர்களை மட்டுமல்ல திருநாவுக்கரசு நாயனாரையும் ஓர்  உலுக்கு உலுக்கியிருக்கிறது. அவரும் அப்புன்னைமரத்தின் துயரத்தை 
“மன்றத்துப் புன்னைபோல மரம்படு துயரம் எய்தி 
ஒன்றினால் உணரமாட்டேன்”
எனத்தேவாரத்தில் பதிவு செய்து தமது மரநேயத்தை எமக்கு தெளிவுபடுத்தியுள்ளார். 

மரத்தை வெட்டினால் மரமும் துன்பப்படுமென எவராவது எண்ணுகிறோமா?  நாம் கவனிக்க வேண்டியது அப்பரின் 'மரம்படு துயரம்' எனும் அறிவு பூர்வமான சொற்களையே. மரம்படு துயரத்தை உணர்வால் அறியமுடியாது. அதற்கு ஆழ்ந்த மெய்யறிவு வேண்டும். அந்த மெய்யறிவு எம்மிடம் இன்மையாலேயே இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறோம். புன்னைமரம் எப்படி இருக்கும் என்பதைத் தொடர்ந்து பகுதி-2ல் பார்ப்போம்
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment