Thursday 6 October 2011

குறள் அமுது - (1)





குறள்:
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.             - 236

பொருள்:
ஒருவர் எதைச் செய்தாலும் புகழ் உண்டாகும் படி அவரது புகழ் விளங்கச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யமுடியாதவர் அதனைச் செய்வதைவிட செய்யாதிருத்தல் நன்று. 

விளக்கம்:
இத்திருக்குறள் 'புகழ்' எனும் அதிகாரத்தில் உள்ள ஆறாவது குறளாகும். இக்குறள் புகழை அடைவதற்கான வழியைச் சொல்கிறது. ‘பூமி தோன்றியது’ எனச்சொன்னால் பூமி உண்டானது அல்லது உருவானது எனப்புரிந்து கொள்கிறோம். ‘பிரமாவே உலகைத் தோற்றுவித்தார்’ என்றால் பிரமா உலகைப்படைத்தார் எனப்பொருள் கொள்கிறோம். ‘மழை மேகங்களிடையே நிலவு தோன்றியது’ என்றதும் கருமுகில்களிடையே இருந்து நிலவு வெளிப்பட்டது என விளங்கிக் கொள்கிறோம். எனவே தோன்றல் என்றால் உண்டாக்குதல், உருவாக்குதல், படைத்தல், செய்தல், வெளிப்படல் போன்ற கருத்துக்களைத் தரும். இதுபோல் தோன்றாமையும் செய்யாதிருத்தல் வெளிப்படாதிருத்தல் என்ற கருத்துக்களைத் தரும்.

நீங்கள் எதனைச் செய்தாலும், உருவாக்கினாலும், எழுதினாலும், பேசினாலும், பாடினாலும்,  ஆடினாலும், கண்டுபிடித்தாலும் கூட; அதில் உங்கள் தனித்தன்மை விளங்கும்படி செய்யுங்கள். அப்படிச் செய்வதால் பிறரால் நீங்கள் அடையாளம் காணப்பட்டு உங்கள் புகழ் உலகெங்கும் வெளிப்படும். நீங்கள் ஒன்றைச் செய்து அதனை வெளிப்படுத்தும் போது அதனால் உங்களுக்கு புகழ் உண்டாக வேண்டும். இதனையே திருவள்ளுவர் ‘தோன்றின் புகழொடு தோன்றுக’ என்றார். தமது புகழை அப்படி நிலைநிறுத்த முடியாதவர்கள், மற்றவர்கள் செய்கிறார்களே என்று அவர்கள் செய்த செயல்களைத்  தாமும் செய்வதைவிட செய்யாதிருத்தல் நல்லது.

உங்கள் செயல் ‘கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற்’ போல் இருக்கக்கூடாது. அதனால் எவருக்குமே நன்மை உண்டாகாது.  உங்களிடம் ஏதோவோர் திறமை இருக்கும். அத்திறமையை வெளிப்படுத்தி புகழடையலாம். எனவே மற்றையோர் புகழ்வனவற்றைச்  செய்யுங்கள். பிறரால் இகழப்படுவனவற்றை விட்டுவிடுங்கள். எதனை உருவாக்குவதானாலும் பிறர் உங்களை புகழ்ந்து போற்றும்படி உருவாக்குங்கள். அப்படி உருவாக்க முடியாதோர் எதனையும் உருவாக்காது இருத்தல் நன்று.

No comments:

Post a Comment