Monday, 31 October 2011

தாய்

































ம்மா என்ற போது
சையுடனே  சென்று
ன்பம் பொங்க அணைத்து
ன்ற பொழுது போல
வகை கொண்டு சொன்னாள்
"ஊரும் உலகும் மெச்ச
ன்றன் குழந்தை நன்றாய்
ற்றமுடனே படித்து
யம் ஏதும் இன்றி
ட்பம் பெற்றுப் புகழில்
ங்கி நாளும் வளர்ந்து
வியம் அகற்றி உலகின்
கல் நீக்கி வைப்பான்"
இனிதே,
தமிழரசி.                                        

குறிப்பு: 
           சொல்விளக்கம்:
1. மெச்ச - மதிக்க 
2. ஐயம் - சந்தேகம்
3. ஒட்பம் - அறிவு
4. ஔவியம் - பொறாமை
5. அஃகல் - வறுமை

Friday, 28 October 2011

வெற்பொடித்த வேலன்

சிக்கல் சிங்காரவேலன்

                                     பல்லவி
வெற்பொடித்த வேலனைக் காணவில்லையே  அந்த
வேதனையில் என் மனம் ஆழுகின்றதே
                                                - வெற்பொடித்த வேலனை

                                 அனுபல்லவி
கற்பனையில் காணும் அவன் கவின் வதனம்
சொற்பனத்தில் காணேனடி தோழி!
                                                - வெற்பொடித்த வேலனை

                                     சரணம்
நித்திரை இழந்து நினைவெலாம் அவனாய்
பித்தியைப்போல பிதற்றுகின்றேன் அந்த
சித்தனை! சிவன்மகனை! சிங்காரவேலனை!
அத்தனை! அழைத்துவாடி தோழி!
                                                - வெற்பொடித்த வேலனை
இனிதே,
தமிழரசி.
 குறிப்பு:
மகளின் பரதநாட்டியத்திற்காக 2000ம் ஆண்டு எழுதியது.

Wednesday, 26 October 2011

விரைந்துநானும் வந்திடட்டா?

                           

பெண்:  கட்டவெளி காட்டுக்குள்ள
                      கடுகிவழி போறவரே
             காட்டெருமை கத்துதய்யா
                      கவனமா போய்வாரு(ம்)

ஆண்:  கட்டவெளி காட்டுக்குள்ள
                      கிளையொடிக்கு மச்சியரே
            காட்டெருமை வீரரென்னு
                      கானமயில் சொல்லலையோ

பெண்:  காட்டெருமை வீரரென்னு
                       கானமயில் சொல்லலையே
             வீட்டெருமை வாகனத்தார்
                       வீறுகொண்டு வருவாரா(ம்)

ஆண்:  வீட்டெருமை வாகனத்தார்
                       வீறுகொண்டு வந்தாக்கா
            வீரகத்திவாள் எடுத்து
                       விலாப்புடைக்க வெட்டிடுவே(ன்)

பெண்:  வீரகத்திவாள் எடுத்து
                       விலாப்புடைக்க வெட்டயில
             வீடிக்கை பாப்பதற்கு
                       விரைந்துநானும் வந்திடட்டா?
                                                                    - நாட்டுப்பாடல் (மாந்தை)
                                                                    (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இனிதே,
தமிழரசி.

Tuesday, 25 October 2011

குறள் அமுது - (6)


குறள்:
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
  கைகொல்லும் காழ்த்த இடத்து”          - 879  

பொருள்: முள்ளுள்ள மரத்தை இளங்கன்றாக இருக்கும் பொழுதே  அழித்தொழிக்க  வேண்டும். வைரமுள்ள மரமாக வளர்ந்தபின் அழிக்க முற்படுவோரின் கையை அது குத்திக் கிழிக்கும்.

விளக்கம்:
இத்திருக்குறள் 'பகைத்திறம் தெரிதல்' எனும் அதிகாரத்தில் வரும் ஒன்பதாவது குறளாகும். பகையை வெல்வதற்கான தன்மையை அறிவதை பகைத்திறம் தெரிதல் என்கிறார். ஒருவரோடு உள்ள பகைமையை எப்போது அழித்தால் மிக இலகுவாக அழிக்கமுடியும் என்பதை இக்குறள் சொல்கிறது.

நம் ஒவ்வொருவரின் மனதுள்ளும் எத்தனையோ வகையான முள்மரங்கள் மண்டிக் கிடக்கின்றன. அவை நம் கண்ணுக்கு முள்மரங்களாகத்  தெரிவதில்லை. எனினும் பெரியோர்கள் தாம் கண்ட அனுபவத்தால் முள்மரங்கள் எவையெவை எனக்கூறிச் சென்றுள்ளனர். களவெடுத்தல், பொய்பேசுதல், சோம்பி இருத்தல், வஞ்சித்தல், மற்றவர் நன்றாய் இருப்பதைப் பார்த்துப் பொறாமைப்படுதல், கோபம் கொள்ளுதல், பகை கொள்ளுதல், கல்லாமை, மதுவருந்துதல்,  பெருந்தீன் உண்ணல், புகைப்பிடித்தல், அலைபேசியில் பேசிக்கொண்டே இருத்தல் எனப் பல்வேறுபட்ட முள்மரங்கள் நம்முள்ளே புகுந்து வளருகின்றன. 
மனிதவாழ்வை சீரழிக்கும் இம்முள்மரங்களை நாம் கெட்டபழக்கங்கள் என்கிறோம்.  இவற்றின் விதைகள்  மெல்ல இன்பமெனத் தவழ்ந்து ஆசையெனும் தென்றலோடு வந்து எம்முள்ளே புகும். தென்றலின் சுகத்தில் நாம் மூழ்கி இருக்க மெல்ல அரும்பி வளர்ந்து பெரிய முள்மரமாய் மாறி எம்மையே அழித்து ஒழிக்கும். அந்த அழிவிலிருந்து எம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளும் வழியை திருவள்ளுவர் இக்குறளில் கூறியுள்ளார்.
முள்ளுள்ள மரத்தை துளிர் விடும் பருவத்தில் இளஞ்செடியாகவே களைந்துவிட வேண்டும்.  சின்னஞ்சிறு செடியென அசட்டை செய்தால் சில வருடங்களின் பின் அது பெருமரமாக வயிரமான முட்களுடன் வளர்ந்து நிற்கும். அப்பொழுது அழிக்க முற்பட்டால் அழிப்பவரின் கையை அம்முட்கள் குத்திக் கிழிக்கும். எனவே உங்கள் தீயபழக்கங்களை அவை முளைத்து வளரத்தொடங்கும் போதே அகற்றிவிடுங்கள்.
தீயபழக்கங்களுள் பகைமை கொள்ளுதலே மிகவும் தீயபழக்கமாகும்.  ஆதலால்  பகைமை பாராட்டுதல் என்பது முள்நிறைந்த நச்சுமரத்தை வளர்ப்பதைப் போன்றது. பகைமை பொறாமையாலும் அதிகாரவேறியாலும் புரிந்துணர்வு இன்மையாலும் ஏற்படுகின்றது. உலகெங்கும் பத்துக்கோடி தமிழர் இருந்தும் நாடற்று இருப்பதற்குக் காரணம் பகைமையை துளிர்விடும் பருவத்தில் கிள்ளி எறியாமையேயாகும். பகையெனும் முள்மரம் ஆழவேரூன்றி வளர்ந்து முள்ளிவாய்க்கால் அவலமாய் குத்திக் கிழித்து நாற்பதாயிரம் உயிரைக்குடித்து தமிழர் நெஞ்சங்களில் இரத்தம் சிந்தவைத்தது. முள்ளிவாய்க்கால் அவலத்தையும் எடுத்துக்காட்டும் குறள் இது.

சங்கத்தமிழ் சொல்வதென்ன? - பகுதி 1


சங்கத்தமிழ் என்றால் என்ன? என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும் எமது இளம் தலைமுறையினருக்காக அதனை சொல்ல வேண்டியவளாக இருக்கிறேன். ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ்ப்புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களையே சங்கத்தமிழ் என்கிறோம்.  அவற்றின் மேலெல்லை எப்போது என்பதைக் கூறமுடியாத நிலை இருக்கிறது. சங்கத்தமிழ்ப் பாடல்களை எழுதிய சங்கப்புலவர்கள் குறிப்பிடும் அரசர்களின் கல்வெட்டு, முத்திரை மோதிரம், காசுகள் போன்ற ஆதாரங்கள் கிடைக்கும் வரை சங்ககாலத்தின் மேல் எல்லையைக் கணிப்பது கடினமே. எனினும் அறிஞர் பலர் சங்கத்தமிழின் மேலெல்லை கி மு 700 என்றும் கீழெல்லை கி பி 200 என்றும் கூறுகின்றனர். அதனை அறிய பலரும் பலவிதமாக ஆய்வு செய்கின்றனர். அவற்றின் முடிவுகள் சங்கத்தமிழின் மேல் எல்லையை இன்னும் மேலே கொண்டு செல்லும் என நம்புகின்றனர்.
சங்கத்தமிழில் இலக்கண இலக்கிய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் பல நூல்களாக வெளிவந்த போதும்  இன்னும் எத்தனையோ ஏடுகள் ஏடுகளாகவே அழிகின்றன. என்தந்தையிடம் இருந்தவையும் இன்று அழிந்து போயின. அழிந்தவற்றில் இலக்கியங்கள் மட்டுமல்ல கணித, வானசாஸ்த்திர ஏடுகளும், வைத்திய வாகடங்களும் அடங்கும். அதனாலேயே இதனை இங்கு சொல்லமுடிகிறது.
'சங்க இலக்கியம் என்றால் இதயத்தில் இன்பம் பொங்கியவர் வாழ்ந்த காலம் போய் சங்க இலக்கியத்தைக் கண்டு வெறுப்புக் கொள்பவர் வாழும் காலத்தில் வாழ்கிறேனா?' என்ற ஐயம் எழுகிறது. அதுவும் சங்க இலக்கியமா! அது எமக்கு விளங்குமா? என ஒதுங்கிப் போகிறவர்களையும் அது கொடுந்தமிழ் அல்லவா? எனக் கேட்கிறவர்களையுமே காணக்கூடியவளாக இருக்கிறேன். பட்டங்களைப் பெற்ற பெரியோர் என நாம் மதிப்பவர் வாயிலிருந்து "சங்கத்தமிழா அதை நான் படிப்பதில்லை, பண்டைக்கால பட்டிக்காட்டு புலவர்களின் பிதற்றல்களால் என்ன பயன்?" என  முத்துக்கள் உதிர்கின்றன. 
07.03.2007 ஆனந்தவிகடனில் வெ இறையன்பு ( ஐ ஏ எஸ்) என்பவர்,"'வந்தார்கள் வென்றார்கள்' என்ற தலைப்பில், சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதிய தாங்கள், சோழப் பேரரசு பற்றியும் அதுபோன்ற ஆதாரபூர்வ நூல் ஒன்றை எழுதினால் பெரும் பங்களிப்பாக இருக்குமே" எனக்  கேட்டதற்கு திரு மதன் கொடுத்த பதிலைப்பார்த்து மனம் வெதும்பியவர்களில் நானும் ஒருத்தி. 

திரு மதன் தனது பதிலில் "தமிழ் மன்னர்களைப் பற்றிய பாடல்களும் கல்வெட்டுகளுந்தான் மிஞ்சி இருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முந்தியபாடல்கள் (தமிழில்) அனேகமாக தற்போது ஏதும் இல்லை. புலவர்களுக்கு தமிழ்மன்னர்கள் நிறைய மதுவும் பொற்காசுகளும் தந்தது உண்மை," என்றெல்லாம் எழுதியிருந்தார். அது ஆனந்தவிகடன் தானா? என அறிய முன்னட்டயைத் திருப்பிப் பார்த்தேன். ஆனந்தவிகடன் வாசகர்கள் கேட்கும் பலதரப்பட்ட கேள்விகளுக்கும் பதில் எழுதும் திரு மதன் அவர்களே, தமிழரின் வரலாற்றுச் சுரங்கமான சங்கத்தமிழ் பற்றி தப்பான எண்ணத்துடன் இருக்கிறார் என்றால் எம் இளம் தலைமுறையினர் நிலை என்னாவது?
எனவே சங்கத்தமிழின் எளிமையையும் அதில் மண்டிக்கிடக்கும் பண்டைத் தமிழர் வரலாற்றையும், அவர்களின் அறிவியல், அரசியல், பொருளாதார, சமயக் கருத்துக்களையும், கல்வியையும்,  காதலையும், குழந்தை வளர்ப்பையும், பெண்ணியக் கோட்பாட்டையும் கொஞ்சம் சொல்லலாம் என நினைக்கிறேன். சங்கத்தமிழை குறைத்து எடைபோட்டு எழுதுவதையும் சொல்வதையும் பார்க்கும் பொழுதும் கேட்கும் போதும் நெஞ்சம் துவள்கிறது. சங்கத்தமிழை கொடுந்தமிழ் எனச்சொல்பவர் சொல்லைக் கேட்கும் போது அள்ளூர் நன்முல்லையார்
            "குக்கூ என்றது கோழி அதன் எதிர்                              
                        துட்கென் அற்று என்தூஉ நெஞ்சம்
             தோள்தோய் காதலர் பிரிக்கும்
                        வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே" 
                                                              - (குறுந்தொகை: 157)


எனும் குறுந்தொகைப் பாடலின் தலைவியின் நெஞ்சம் போலவே என் நெஞ்சமும் துட்கென அற்றுப்போகிறது. 

உதாரணத்திற்கு இப்பாடலையே எடுத்துக் கொள்வோம். (குக்கூ என்றது கோழி) கோழிச் சேவல் குக்கூ எனக் கூவ, (அதனெதிர் துட்கென் அற்று என்தூஉ நெஞ்சம்) அதனெதிரே என் நெஞ்சம் துட்கென அறுந்தது. (தோள்தோய் காதலர் பிரிக்கும்)  தோளோடு சேரும் காதலரைப் பிரிக்கும், (வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே) வாள் போல விடியற்காலை வந்ததென்று. 

தலைவி ஒருத்தி தலைவனின் தோளோடு தோள் சேர்த்துத் தூங்கிக்கொண்டிருக்கிறாள்.  அதிகாலை நேரம் கோழி கூவுயது. கண்விழித்தவளின் நெஞ்சம் பட்டென அறுந்தது. தலைவனின் தோளில் தலைவைத்து நிம்மதியாக தூங்கியவளின் தூக்கத்தை கோழிச்சேவல் குக்கூ எனக்கூவிக் கெடுத்துவிட்டது. 

காலையில் பொழுது விடிந்ததும் அவளுக்காக எத்தனை எத்தனை வேலைகள் காத்திருக்கின்றன. இனி காதலனுடன் சேர்ந்து காதலில் களித்துத் தூங்கமுடியுமா? காதலனின் தோளில் தோள் வைத்துத்  தூங்கும் அவளையும் காதலனையும் பிரித்தெடுக்கும் வாளைப் போல் விடியல் வந்துவிட்டதே! நெஞ்சம் சட்டென அறாமல் என்ன செய்யும்?

இப்பாடல் பிறந்து இரண்டாயிர வருடங்களாகியும் காலையில் தூக்கம் கலையும் பொழுது எவருக்கும் வரும் மனநிலை இதுவே. அதிலும் இளம் காதலரின் மனநிலையைச் சொல்ல முடியுமா? அன்று கோழி கூவித் துயில் எழுப்பியது. இன்று அலாரம் கூவித்துயில் எழுப்புகிறது. இதுவே எமது வளர்ச்சி. ஆனால் மனிதமனநிலை அன்றும் இன்றும் ஒன்றாகத்தான் இருக்கிறது.
            "குக்கூ என்றது கோழி அதன் எதிர்                              
                            துட்கென் அற்று என்தூஉ நெஞ்சம்
             தோள்தோய் காதலர் பிரிக்கும்
                            வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே"
இப்பாடல் என்ன கொடுந்தமிழிலா இருக்கிறது? இப்பாடல் படிப்பவர்க்கு புரியாதா? இனிமையாக இராகத்துடன் பாடக்கூடிய விதத்திலும் இருக்கிறதல்லவா? நாமே கொடுந்தமிழர்களாக சங்கத்தமிழைப் புறக்கணித்து வாழ்கிறோம். ஒரு நாளில் பத்து நிமிட நேரமாவது சங்கத்தமிழைப் படித்துப் பாருங்கள் நாம் அறியாத எத்தனை செய்திகள் அதனுள் புதைந்துள்ளன என்பது தெரியவரும்.

இன்று எமக்குக் கிடைத்துள்ள சங்கத்தமிழ் நூல்களிலே காலத்தால் முந்தியது தொல்காப்பியம் என்னும் இலக்கணநூலாகும். இது கி மு 700ல் எழுதப்பட்டதாகச் சிலர் கூறுகின்றனர். இந்நூல் தொல்காப்பியர் என்னும் பெயருடைய சங்கப்புலவரால் எழுதப்பட்டது. தொல்காப்பியர் பல இடங்களில் 'என்மனார் புலவர்'- புலவர் சொல்வர் என்றும் 'தொல்லியல் மருங்கின் மரபே' - பண்டைக்காலத்து வழக்கப்படி வந்த இலக்கண முடிவாகும் எனவும் சொல்வதால் தொல்காப்பியம் எழுத முன்னரே பல இலக்கண நூல்கள் தமிழுக்கு இருந்திருக்கின்றன என்பதை அறியலாம். 

ஒரு மொழியில் இலக்கியங்கள் உருவாகிய பின்னரே இலக்கணங்கள் உருவாகும். ஆதலால் தமிழில் இலக்கியம் உருவாகி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். தொல்காப்பியம் ஓர் இலக்கணநூல் என எண்ணி அதனை விட்டுவிலகிப் போக வேண்டாம். அதனுள் தமிழ் இலக்கணம் மட்டுமல்ல தமிழருடைய சமுதாய விஞ்ஞானக் கருத்துக்கள் சிதறிக்கிடக்கின்றன. 

எடுத்துக்காட்டாக தொல்காப்பியர் சொன்ன தமிழரது விஞ்ஞானக் கருத்து ஒன்றினை இங்கு கூற விரும்புகிறேன்.  டார்வின் என்பவர் ஆங்கிலேய இயற்கையியல் விஞ்ஞானி. இவரின் கண்டுபிடிப்பை evolution என்பார்கள். நாம் அதனை கூர்ப்பு அல்லது பரிணாமம் என்போம். ஈழத்தமிழரே கூர்ப்பு எனச் சொல்வர். கூர்ப்பு என்றால் என்ன? இயற்கையின் உந்துதலால் அல்லது இயற்கையின் தேவையால் ஓர் உயிர் படிப்படியாக பலவகை உயிர்களாக வளர்நிலை அடைந்து சிறத்தலைக் கூர்ப்பு என்பர். டார்வின் இக்கொள்கையைக் கூறி நூற்றைம்பது வருடங்களே ஆகின்றன.

தொல்காப்பியர் டார்வின் பிறப்பதற்கு இரண்டாயிரத்து ஐஞ்நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர். அவர் தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில் உரிச்சொற்களுக்கு [ஒன்றின் குணத்தை, வடிவத்தை, பண்பை உணர்த்தும் சொல் உரிச்சொல்லாகும்] சிறப்பிலக்கணம் கூறிய போது 'கூர்ப்பு' என்ற சொல்லுக்கு
                    "கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்"
                                                             - (தொல்: சொல்:314) 
என இலக்கணம் கூறியுள்ளார். இயற்கையின் தேவையால் உயிர்கள் வளர்நிலை அடைந்து சிறத்தல் - உள்ளது சிறத்தல் தானே! இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியர் கூறிய கூர்ப்பின் இலக்கணத்தை டார்வின் விரிவாகத்தந்திருக்கிறார். எனவே கூர்ப்பின் இயல்பை சங்கத்தமிழர் அறிந்திருந்தனர் என்பது தெளிவாகின்றது. 

இது மட்டுமல்ல தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலும் உயிர்களின் பாகுபாடு பற்றிக்கூறுமிடத்தில் தொல்காப்பியரின் காலத்திற்கு முன்பு, தமிழராய்ப் பிறந்து வாழ்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் உயிர்கள் வளர்நிலை அடைந்ததை எப்படி ஒழுங்குபடுத்தி வைத்துள்ளனர் என்பதைக் கூறியுள்ளார். அவர்கள் கூர்ப்பின் நிலையை எவ்வாறு ஒழுங்கு செய்தனர் என்பதை பார்க்கும் வரை...
இனிதே,
தமிழரசி.
(2009 வைகாசி எழுதியது)

Sunday, 23 October 2011

இலங்கை வேந்தன்

                                              

திருநாவுக்கரசு நாயனார் அருளிய கடைசித் தேவாரத்தில் இலங்கை ஏலக்காடு நிறைந்த கரிய மலைகளால் சூழ்ந்த கடற்கரைச் சோலையை உடையது என்றும் அதன் அரசனான இராவணன் அதிவேகமாகச் செல்லும் தேர் வைத்திருந்தான் என்றும் கூறியுள்ளார்.
 "ஏலக் கருவரைசூழ் கானல்
                  இலங்கை வேந்தன் கடுந்தேர்"  
                                   - (பன்னிருதிருமுறை: 6: 99: 10)

இந்தச்சிற்பம் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன் எல்லோராக் குகையில் செதுக்கப்பட்ட இராவணனின் சிற்பமாகும். 

இராமாயணக் காட்சியே இதில் செதுக்கப்பட்டிருக்கின்றது. இராவணன் சடாயுப் பறவையுடன் சண்டை செய்வதையும் தூரத்தே நிற்கும் அவனின் தேரில் சீதை நிற்பதையும் பாருங்கள்.

திருநாவுக்கரசு நாயனாரும் ஏறக்குறைய இந்த எல்லோராச் சிற்பம் செதுக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். 

இச்சிலையை எல்லோராக் குகையில் செதுக்கிய சிற்பிக்கும் திருநாவுக்கரசு நாயனாரைப் போல இலங்கை வேந்தனாக - அரசனாக - மனிதனாகவே இராவணன் தெரிய நமக்குமட்டும் ஏன் அவன் அரக்கனானான்?......??
இனிதே, 
தமிழரசி.

செந்தமிழ்த்தாயே!



செந்தமிழ்த்தாயே! செந்தமிழ்த்தாயே!
        செங்கதிர் செல்லுந்திசை எங்கனும் நின்புகழ்
                சென்று பரவுது பாரிங்கே!

செம்மொழி நின்மொழி என்னும்
        சேதியைக் கேட்டு செய்கை
                இழந்தார் சிலரிங்கே பாரிங்கே!

சேரமைந்தன் செய்த சிலம்பது போல நின்
        சேவடிமீது கொஞ்சும் சதங்கை
                தரவந்தோம் நாமிங்கே பாரிங்கே!

சிற்றிடை மேல்மின்னு மணிமேகலைக்காக
        சரிமணிக்கோவை தரவந்தோம்
               நாமிங்கே பாரிங்கே! பாரிங்கே!

சிந்தாமணியும் சூடாமணியும் சூடிய நினக்கே
        சூடிகை கண்டிகை மஞ்சிகை மாதணி
              சேர்த்துத் தருவோம் நாமிங்கே பாரிங்கே!

மத்தளம் கொட்ட சலஞ்சலம் ஊத
       இத்தரை மீதில் இன்புற வாழ்வாய்!
               பல்லாண்டு! பல்லாண்டு!
                      பல்லாயிரத்தாண்டு!
                              பலகோடி நூறாயிரத்தாண்டு!
                                                

சொல்விளக்கம் 
1.  சேரமைந்தன் - இளங்கோவடிகள்
2.  கொஞ்சும்சதங்கை - காற்சலங்கை 
3.   மணிமேகலை - ஏழுவரிசையில் கட்டிய மணிவடம் (இடையணி)  
4.  சரிமணிக்கோவை - பதினாறு வரிசையில் கட்டிய மணிவடம் (இடையணி)  
5.  சூடிகை -  மணிமுடி
6.  கண்டிகை -  தோளணி 
7.  மஞ்சிகை - குழை (காதணி)  
8.  மாதணி - பதக்கம்  
9.  சலஞ்சலம் - வலம்புரிச்சங்கு ஆயிரம் சூழந்திருக்க நடுவே இருக்கும் சங்கு.

குறிப்பு
தமிழைச் செம்மொழியாக இந்திய அரசாங்கம் 12/10/2004ல் அறிவித்த போது எழுதியது. 

இனிதே,
தமிழரசி.

Wednesday, 19 October 2011

ஆசைக்கவிதைகள் - 4

                                மச்சானின் அழகு

மச்சாள்: மச்சான்ட அழகுக்கும்
                        மான்கொம்பு மீசைக்கும்
               ஏலரிசிப் பல்லுக்கும்
                        என்னசொல்லிக் கூப்பிடட்டோ

மச்சாள்: சிங்கநடை அழகும்
                        சின்னமச்சான் சிரிப்பழகும்
               கன்னக்குழி அழகும்
                        கண்டுமனம் சிரிப்பதெப்போ

மச்சாள்: கன்னங் கறுத்த மச்சான்
                        கண்ணாடி போட்ட மச்சான்
               இங்கிலிசு படிச்ச மச்சான்
                        என்னை விரும்புவாரோ
                                        (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)


இன்பமா! துன்பமா! மாயையா!

மனோரஞ்சித மலர்

மானுடவாழ்க்கையில் இன்பம் துன்பம், பிறப்பு இறப்பு, வரவு செலவு, உறவு பகை, ஆக்கல் அழித்தல் என்ற மாயைக்குள் நாம் தடுமாறிக் கொண்டிருக்கின்றோம். இந்தத் தடுமாறுதலுக்கெல்லாம் அவரவரது மனநிலையே காரணமாகும். நாம் அதனைப் புரிந்து கொள்வதில்லை. புரிந்தவர் சொன்னாலும் நாம் நம்புவதில்லை. எமக்கு என்று ஓர் அனுபவமுதிர்ச்சி ஏற்படும் போதே அவற்றை நாம் நம்ப முற்படுகிறோம். அதற்குள் எம் வாழ்நாளில் அரைவாசியைத் தொலைத்துவிட்டு நிற்போம். அதுவும் அவரவர் குடும்பசூழல், நண்பர், வாழுமிடம், அறிவுமுதிர்ச்சி போன்றவற்றால் மாறுபடும்.

எமது வாழ்வில் சிறுசிறு வெற்றிகள் கிடைக்கும் போது எம்மால் ஒன்றைச் செய்யமுடியும் என்று நம்பிக்கை கொள்கின்றோம். மனம் மட்டற்ற மகிழ்ச்சியில் குதிக்கின்றது. எம்மைச் சூழ இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் யாவருமே மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். எம்மால் சாதிக்க முடியும் என்கின்ற எண்ணம் உறுதியாகின்றது. அந்த உறுதியின் ஆழ்மன உந்துதல்களே சாதனைகளைப் படைக்கத் தூண்டுகின்றன. அவ்வகைத் தூண்டுதல்களின் வெளிப்பாடே சாதனைகளாகின்றன.

சாதனையாளன் சாதித்தே தீரவேண்டுமென,  இரவு பகலாக துன்பப்பட்டு  முயற்சிசெய்தே  சாதனையை நிலைநாட்டி இன்பம் காண்கின்றான். அவன்பட்ட துன்பமே அவனது இன்பத்திற்கு வழிவகுத்தது. அத்தகைய சாதனையாளனையோ படைப்பாளனையோ பார்த்து பலர் மகிழ்ச்சி கொள்ளும் போது சிலர் பொறாமையால் பொருமுகின்றனர். அவனின் சாதனையை முறியடிப்பது எப்படியெனச் சிந்தித்து அதனை முறியடித்து சாதனையாளனையும் தடுமாறவைக்கின்றனர். தாமும் துன்பப்பட்டு மற்றவரையும் துன்பப்பட வைப்பதில் அவர்களது மனம் இன்பம் அடைகின்றது.

சாதனையாளர்களில் சிலர் இத்தகைய முறியடிப்புகளுக்கு முகம் கொடுத்து தமது சாதனைகளை நிலைநாட்டுகின்றனர். பலரோ இந்த உலகமாயையிலே இருந்த இடமும் தெரியாது அடிபட்டுப் போய்விடுகின்றார்கள். போலிகளுக்கும் பகட்டுக்கும் மயங்கும் இந்த உலகம் உண்மையான அந்தச் சாதனையாளர்களை குழிதோண்டிப் புதைத்து விடுகின்றது. இன்றைய உலக சீரழிவுக்கு இதுவும் ஒரு காரணமே. அடுத்தடுத்து வருகின்ற இன்பங்களும் வெற்றிகளும் சிலருக்கு மமதையைக் கொடுக்கிறது. என்ன செய்கின்றோம் என்பதே தெரியாமல் கூத்தாடுகிறார்கள். எனவே வெற்றியும் புகழும் வந்து சேரும் போது மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் எம்மை நாமே மறக்காது செருக்கோடு திரியாது முன்போல வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.

சிந்திதுப்பாருங்கள்! ஒருவருக்கு காரம் பிடிக்கும். மற்றவருக்கோ இனிப்புப் பிடிக்கும். ஒருவர் தேநீரை விரும்பிக் குடித்தால் மற்றவர் கோப்பியை விரும்பி அருந்துவார். ஒருவர் மீனை விரும்பிச் சுவைத்து உண்பார். மற்றவரோ அதனைக்கண்டாலே அருவெறுப்பால் வாந்தி எடுப்பார். மதுபானங்களை போத்தல் போத்தலாகக் குடிப்பவர்களை பார்த்திருக்கும் நீங்களே மதுவாசனையைப் பிடிக்காது மூக்கைச் சுழிப்பவர்களையும் பார்த்திருப்பீர்கள். வாய்ச்சுவையிலே தான் எத்தனை வேறுபாடு? ஒவ்வொரு பிள்ளைகளின் விருப்பத்திற்கும் கணவனின் விருப்பத்திற்குமாக வகைவகையாகச் சமைக்கும் தாய்மார்கள் இருக்கிறார்கள். இத்தாய்மார்களே இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக அனுபவிப்பவர்கள். மனைவி தாய்மை எனுமிரு பங்களிப்புகளுக்கு இடையிலான மாயையிலே சிக்குண்டு இருப்பதால் இன்ப துன்ப வேறுபாடுகளை அவர்கள் முழுமையாக உணர்வதில்லை.

ஒரே வீட்டில் இருப்பவர்கள் படம் பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒருவர் அசின் நடித்த படத்தைப்போடு அதை நான் பார்க்கவேண்டும் என்பார். மற்றவர் சூரியா நடித்த படம் பார்க்கவேண்டும் என்பார். இப்படி சிறிதுநேர இன்பத்திற்காக சண்டைபோட்டு கடைசியிலே படமே பார்க்காது இருவருமே துன்பப்படுவார்கள்.  அசின் நடித்த படத்தைப் பார்ப்பவர் இன்பம் அடையும் போது சூரியா நடித்த படத்தைப் பார்க்க விரும்பியவர்  துன்பப்படுவார். ஒருவர் பாடற்காட்சியை இரசிக்க மற்றவர் சண்டைக்காட்சியை இரசிப்பார். ஒருவர் இயற்கைக்காட்சிகளைப் பார்க்க மற்றவர் செயற்கைக் காட்சிகளைப் பார்ப்பார். யார்யாருக்கு எதுஎது பிடிக்குமோ அவற்றைப் பார்ப்பதில் அவரவருக்கு இன்பம் கிடைக்கிறது என நாம் நினைக்கின்றோம்.  சில குழந்தைகள் மிகச்சிறு வயதிலேயே பெரிய ஞானியர் போல் எல்லாவற்றையும் விட்டுக்கொடுப்பார்கள். இவர்களில் சிலர் வளர்ந்ததும் தம் செய்கைகள் மீது தாமே கோபப்பட்டு தம் இன்பங்களை மற்றவர்களுக்காக தொலைத்து விட்டோமே என்ற ஆதங்கத்துடன் வாழ்வார்கள்.

அறிவாற்றலால் பெறும் இன்பங்களைப் பார்ப்போமேயானால் அதுகூட ஆளுக்காள் மாறுபடுவதைக் காணலாம். எப்படி உலகம் தோன்றியது? எப்படி உயிர்கள் தோன்றின? ஆதிமனிதன் எப்படி இருந்தான்?  பனிக்கால மனிதன் எப்படி வாழ்ந்திருப்பான்? என பழமையை விரும்பி பழமையைப் பற்றிச் சிந்தித்து அவற்றையறிந்து சிலர் இன்பம் காண்கின்றனர். வேறுசிலரோ புதியதாக எதையும் உருவாக்கமுடியுமா? எனச்சிந்தித்து அவற்றை உருவாக்கி பிறரை மகிழவைத்து தாமும் இன்பமடைகின்றனர். இன்னும் சிலரோ இவை என்ன எமக்கு சோறா போடப்போகின்றது? நாம் வாழும் வாழ்வைப்பார்ப்போம் என்று இன்பம் தேடுகின்றனர்.

நட்பிற்கூட இன்பம் தரும் நட்பு, துன்பம் தரும் நட்பு என்ற வேறுபாடு உண்டு. உண்மையுடனும் நேர்மையுடனும் எதையும் பொறுமையுடன் ஆராய்ந்து பார்ப்பவராய் வாழ்பவர் நட்பு இன்பம் தரும். தாந்தோன்றித்தனமானவராய் நாவடக்கம் இல்லாது அகந்தையுடன் சுயநலமாக வாழ்பவர் நட்பு துன்பம் தரும். நட்புக்கொண்டால் அதிலிருந்து விடுபட முடியாது. தமது உயிரைக் கொடுத்து எம்மைக் காப்பாற்றும் நண்பர் அமைவது போல, நம் உயிரையே எடுக்கும் நண்பரும் கிடைக்கலாம். எனவே மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்த்து நட்புக்கொள்ள வேண்டும், இல்லையேல் நாம் இறந்து போகக்கூடிய துயரத்தை அது கொடுக்கும் என்பது வள்ளுவர் முடிவு.
 "ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
   தான்சாம் துயரம் தரும்"                                               
                                                                      - (குறள்: 792)
ஆதலால் நட்பும் ஒருவித மாயையே.

நல்ல இசையைக் கேட்பதும் பிறரின் நல்ல பண்புகளைப் பேசுவதும் உலகமுன்னேற்றத்திற்கு தேவயானவற்றைச் செய்வதும் தன்னலமற்று பிறர் நலம் பேணுவதும் இன்பத்தை அள்ளித்தரும். "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" எனும் முதுமொழியைப் புறக்கணித்து அளவுகடந்த சுகபோகங்களை அநுபவிப்பது, சோம்பலோடு படுத்துக்கொண்டு தொலைக்காட்சியே என்று கதியாய்க்கிடப்பது, விதவிதமான இறைச்சிவகைகளை காரமும் எண்ணெய்யும் போட்டுச்சமைத்து மதுவோடு தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருப்பதும் துன்பத்தையே தரும். இவையாவும் மனிதர்களாகிய நாமே தேடிக்கொள்ளும் இன்பதுன்பம் என்னும் ஒருவித மாயைத்தோற்றங்களாகும்.

இதனாலேயே நம்முன்னேர்கள் இவ்வுலக வாழ்க்கையை மாயை என்றனர். ஆசையுள்ளவன் போகி ஆகின்றான். ஆசை அறுத்தவன் யோகியாகின்றான். எனவே ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார்கள். அது பிழையான கருத்து. பேராசைக்காரனே யோகியாகின்றான். ஏனெனில் இவ்வுலக வாழ்வை துன்பமென வெறுத்து மிகப்பெரிய பேரின்பத்தை அனுபவிக்க ஆசைப்படுவதால் யோகி பேராசைக்காரன் தானே! இல்லையா?

எமது உடம்பானது - மெய்(தொடுகை), வாய் (சுவை), கண்(பார்வை), மூக்கு(மணம்), செவி(ஓசை) என்ற ஐந்து புலன்களாலும் மனத்தாலும் இந்த உலகிலுள்ள போகங்களை அநுபவிக்கின்றது. அந்தப் போகங்களுக்காக நாம் இன்பதுன்ப வெள்ளத்துள் புரண்டு சுழல்கின்றோம். அதாவது இன்பத்தைத் தேடியோடி துன்பத்துள் துவள்கின்றோம். அற்ப இன்பத்திற்காக பேரிடர்களையே தாங்குகின்றோம். அதுவும் ஒருவகை மாயையே. அந்த மாயையின் காரணத்தால் தனு கரண புவன போக்கங்களால் (தனு - உடம்பு, கரணம் - மனமும் ஐம்புலன்களும், புவனம் - உலகம், போகம் - அநுபவப்பொருட்கள்) உண்டாகும் துன்பங்களில் தோய்ந்து நாம் அதன் வசமாகின்றோம். இதனை திருமந்திரத்தில் திருமூலரும்
"மாயா உபாதி வசத்தாகும்"                          
                                                       - (திருமந்திரம்: 2014)
என்றுகூறியுள்ளார். அதாவது எமது உயிரானது மாயையால் உண்டாகும் துன்பத்துள் அகப்பட்டு தானும் மாயையின் வசமாகும் என்றார். உலகமாயையின் தோற்றத்திற்குள் நாம் மறைந்து போவதால் நமக்கு இவை புலப்படுவதில்லை. இன்பத்தையும் துன்பத்தையும் நாம் எதிர்கொள்ளும் பொழுது மனோரஞ்சித மலரின் மணம் வேறுபட்டதாக உணர்வது போன்றே மாயை எமக்குக் காட்சி தருகிறது. இயற்கையாக மனோரஞ்சித மலரின் மணம் ஒன்றேதான். அது வேறுபடுவதில்லை. நம் மனநிலையே அந்த வேறுபாட்டிற்குக் காரணம்.

ஈழத்தமிழர்களது இன்றைய நிலை உலகே மாயை என்பதை தெட்டத்தெளிவாக எமக்குப் புரியவைக்கின்றது. கொத்துக்குண்டுகளால் ஈழத்தமிழன் துடிதுடித்துச் சாகின்றான். அதைக்கண்டு உலகிலுள்ள மனிதநேயமுள்ள மனிதநெஞ்சங்கள் துன்பத்தால் துவள்கின்றன. ஆனால் அந்த இரத்த வெள்ளத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் ஆடிப்பாடி வெடிசுட்டு இன்பம்காணும் சமுதாயம் ஒன்றும் இருக்கிறதே! இது என்ன இன்பமா! துன்பமா! மாயையா! இதிலிருந்து ஒன்றைமட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மனிதனின் வாழ்க்கையை அவனது மனச்சாட்சி நிர்ணயிப்பதில்லை. அதற்கும் மேலாக அரசாங்கங்களும் பெரும்பான்மைச் சமுதாயங்களுமே மனிதமனச்சாட்சியை நிர்ணயிக்கின்றன.

மனிதநேயமே இவ்வுலகில் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. இன்பங்களும் துன்பங்களூம் சூழ்ந்த மாயா உலகம் இன்று மனிதநேய அடிப்படையைவிட்டு விலகி சமூக, சமய, பொருளாதார, அரசியல் நிலைப்பாட்டில் தங்கிய உணர்ச்சிமிக்க உலகமாக மிளிர்கின்றது. . . . ஆகையால் என் கண்ணே!
                    "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
                     இன்பம் சேர்க்கமாட்டாயா
                     எமக்கின்பம் சேர்க்கமாட்டாயா, கண்ணே....!"

இனிதே,
தமிழரசி                                                                         
(2009 தை மாதம் எழுதியது). 

குறள் அமுது - (5)


குறள்:
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்                            - 457

பொருள்:
மனம் நல்லதானால் மனித உயிர்க்கு ஆக்கம் வரும், சேரும் இனம் நல்லதானால் எல்லாவிதப் புகழும் கிடைக்கும். 

விளக்கம்:
இத்திருக்குறள் சிற்றினம்சேராமை எனும் அதிகாரத்தில் ஆறாவது குறளாக இருக்கிறது. சிறுமைக்குணம் உடையோருடன் சேர்ந்து பழகாதிருப்பதால் வரும் நன்மைபற்றி இவ்வதிகாரம் சொல்கிறது. மனிதவாழ்வு மனிதமனத்தைச் சார்ந்ததாக இருக்கின்றது. மனிதர் பொன், பொருள், பதவி, என அலைவதும், உணவு, உடை என உழல்வதும் மனித மனத்தின் கவர்ச்சியாலேயே ஆகும். இவை மட்டுமல்ல பொய், புரட்டு, கோபம், பொறாமை, வஞ்சனை, வீறாப்பு, பகை என கெட்ட உணர்ச்சிகளுக்கு மனிதரை உள்ளாக்குவதும் மனமே. உலகம், ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரின் மனதின் இயல்பைக் கொண்டே எடை போடுகின்றது. 

மனிதமனம் கட்டுக்கடங்காத ஒரு குதிரை போன்றது. மனதைக் கட்டுப்படுத்தி நல்வழிப்படுத்த வேண்டியது எமது கடமையாகும். எனெனில் சிலர் போட்டி, பொறாமை, கரவு என தம் மனம் போனபோக்கில் வாழ்வதாலேயே கொலை, களவு, போர் என்ற பெரும் சூறாவளியுள் மனித இனமே சிக்கிச் சுழல்கிறது. 

ஒரு சிலரின் கெட்ட செயல்கள் பல்லாயிரக் கணக்காணோரின் வாழ்க்கையைப் சீரழிக்கிறது. மொழி, மதம் என்ற போர்வையில் உண்டாகும் போர்கள் மனித இனத்தை மட்டுமல்ல உலகில் வாழும் உயிர்களையும் மரங்களையும் அழித்து ஒழிக்கின்றது. அதனாலேயே வள்ளுவரும் மனம் நல்லதானால் உலக உயிர்கட்கு அழிவில்லை என்ற கருத்தில் மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் எனக்கூறியுள்ளார். மனநலம் ஒருவர்க்கு வாய்க்கவில்லை என்றால் எவ்வளவு கோடி பணம் இருந்தாலும் வாழ்வு சிறக்காது. இதனையே நம் முன்னோர் ‘மனம் போல வாழ்வு’ என்றனர். 

எமது மனம் தூய்மையாக இருக்கின்றது, நாம் சேரும் இனம் எப்படி இருந்தால் என்ன? என நினைத்து வாழ்வதும் தவறு. களவு எடுப்பாரோடு சேர்ந்தால் களவெடுப்பதும் கடை உடைப்பாரோடு சேர்ந்தால் கடை உடைப்பதும் மனித இயல்பு. நாம் சேரும் இனத்தின் தன்மையைக் கொண்டே எடை போடப்படுகின்றோம்.  ஆதலால் நாம் வாழும் இனமும் சேரும் இனமும் நல்லதாக இருக்க வேண்டும். நீங்கள் பிறந்த குடியால், உங்கள் குணத்தால், அறிவால், செய்கையால், பணத்தால் என பலவையாகப் புகழ் பெறலாம். எனினும் அறிவால் ஆற்றலால் தன்னலம் அற்ற பொது நலத்தொண்டால் - பெருகின்ற எல்லாவிதப் புகழையும் சேர்த்துத் தருவது இனநலமேயாகும். 

உலக உயிர்களுக்கு ஆக்கம் வருவதற்கு நம் மனதைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எல்லாப்புகழும் கிடைப்பதற்கு சேரும் இனம் நல்லதா என்று பார்த்துச் சேரவேண்டும் என்பதே திருவள்ளுவர் முடிபாகும். 

Tuesday, 18 October 2011

சொல்லிடுவாய் நாயகனே!


                             பல்லவி
சொல்லிடுவாய் நாயகனே!
சொக்கனெனும் சோதியனே!
                                                 - சொல்லிடுவாய்

                 அனுபல்லவி
நில்லாத ஆக்கையின் பொல்லாத் தனத்தை
கல்லா மனத்து கயவள் எந்தனுக்கு
                                                  - சொல்லிடுவாய்

                   சரணம்
அல்லல் எல்லாம் எனதாக்கி
அவனிதனில் அவதரித்தே
தொல்லை எல்லாம் தொலைத்தாலும்
தொன்று தொட்டு வருமிந்த
எல்லையில்லாப் பிறப்பெல்லாம்
என்று மாளும் என்றே
                                                  - சொல்லிடுவாய்
இனிதே,
தமிழரசி,   

சொல் விளக்கம்:
ஆக்கை - உடம்பு
கல்லா - அறிவற்ற
கயவள் - கொடியவள்
அவதரித்து - பிறந்து
தொல்லை - துன்பம்
தொலைத்தாலும் - சிதைத்தாலும்
தொன்று தொட்டு  - ஆன்மா படைக்கப்பட்ட பொழுதிலிருந்து
எல்லையில்லா - முடிவில்லா
மாளும் - அழியும்

Sunday, 16 October 2011

காதற்கவிஞன் கண்ணதாசன்

                                                                  

காதலனாய் இருப்பதற்கு என்ன தகுதி வேண்டும்? காதலிக்கத் தெரிந்தால் மட்டும் போதுமா? இன்னும் வேண்டுமா? என்ன வேண்டும்? தனது காதலை துணிந்து சொல்லத் தெரிய வேண்டும். இரசிக்கத் தெரியவேண்டும். இரசித்ததை இரசனையோடு (உண்மையோ பொய்யோ) சொல்லத் தெரியவேண்டும். உணர்ச்சிகளை கவிதைகளாகக் கொட்டத் தெரியவேண்டும்.
        "மானல்லவோ கண்கள் தந்தது
         மயிலல்லவோ சாயல் தந்தது
         தேனல்லவோ இதழைத் தந்தது
         சிலையல்லவோ அழகைத் தந்தது"   என்றோ அல்லது
                   
         "பேசுவது கிளியா - இல்லை
          பெண்ணரசி மொழியா
          கோயில் கொண்ட சிலையா
          கொத்து மலர்க் கொடியா"
என்றோ கவிதை சொல்லத் தெரிந்திருந்தால் காதல் பள்ளியிலே ஐம்பது வீதம் புள்ளிகள் பெற்று காதலனாக சித்திபெற முடியும் என்பதே எழுபதுக்கு(1970) முன்னர் தமிழ் சினிமாப் படத்துறை காட்டிய தமிழகத்தின் நிலைப்பாடு. 1943ல் 'சிவகவி' படத்திற்காக பாபநாசம்சிவனால் மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டு தியாகராஜ பகவதரால் பாடப்பட்ட
      "வதனமே சந்திர விம்பமோ 
      மலர்ந்த சரோஜமோ...........
      மின்னுமோகனத் துடியிடையாள்
      அன்னமோ மடப்பிடிநடையாள்" 
போன்ற சினிமாப் பாடல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளிகை இட்டு, ஐம்பதற்கு (1950) முன்னர் தியாகராஜபகவதர் காலத்தில் தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்திருந்த மணிப்பிரவாள நடையை
        "உன் அழகைக் கண்டு கொண்டால்
        பெண்களுக்கே ஆசை வரும்
        பெண்களுக்கே ஆசை வந்தால் 
        என்நிலைமை என்ன சொல்வேன்"

        "நின்றால் கோயில் சிலையழகு
         நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு
         நடந்தால் அன்னத்தின் நடையழகு
         நாடகம் ஆடும் இடையழகு"
என மாற்றி, நல்ல கொஞ்சு தமிழ்க் கவிதைகளை எழுதி, சினிமாவில் புகுத்திய பெருமை கவியரசு கண்ணதாசனையே சாரும். அதற்காகயேனும் தமிழ்கூறும் நல்லுலகம் கண்ணதாசனுக்கு கடமைப்பட்டிருக்கிறது.

இந்த உலகிலுள்ள கலைகள் யாவும் மனிதனின் ஐம்புல உணர்வுகளின் உந்துதல்களால் தோன்றியவைகளாகும். அதனாற்றான் மனிதன் கலைகளுடன் உணர்ச்சியினாலேயே ஒன்றுபடுகிறான். உலக இயற்கைகளையும் கலைகளையும் தன்னையும் இரசிப்பவர்களாலேயே அழியாக் கவிதைகளை வடிக்க முடியும். அத்தகைய கவிஞர்கள் பலவிதமான கலைகளில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள்.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த செட்டிநாட்டுச் செம்மல் கவியரசு கண்ணதாசனும் பல்கலை வல்லுனராகவே வலம் வந்தார். எட்டாம் வகுப்பை எட்டிப்பிடித்தேன் என தான் கற்றதைச் சொன்னவரது புகழ், பட்டி தொட்டி எல்லாம் பரவக்காரணம் அவரின் கலையுள்ளமே.
         "கல்லெல்லாம் சிலை செய்தான் பல்லவராசன் - அந்த
          கதைசொல்ல வந்தேன் நான் சின்னராசன்"
என்று தன்னை சின்னராசனாய் - கவிதைராசனாய் இனம் காட்டியவர். கதை சொல்வதிலும் வல்லவர்.
        "வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
        முன்னோர்க்கு முன்னவா மூண்ட கதை சொல்லவா"
என அசுரருக்கும் தேவருக்கும் யுத்தம் மூண்ட கந்தபுராணக் கதையைச் சொன்னவர், ஆறுபடை வீட்டின் கதைகள் ஆறையும் இரத்தினச் சுருக்கமாக
         "ஆறுபடை வீடு கொண்ட திருமுருகா - திரு
         முருகாற்றுப் படைதனிலே வருமுருகா
         பாட்டுடைத் தலைவன் என்று உன்னைவைத்தேன் - உன்னை
         பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன்"
என்று தொடங்கி இப்பாடலில் தந்ததோடு தான் ஒரு முருகபக்தன் என்பதையும் பதிவுசெய்து வைத்துள்ளார். இந்துமதம் திருமாலின் பத்து அவதாரங்களையும் மச்சபுராணம், கூர்மபுராணம் என ஒவ்வொரு புராணமாக விரித்துக் கூறும். அக்கதைகளிலுள்ள கருத்தின் சாறு எடுத்து
        "திருமால் பெருமைக்கு நிகரேது - உந்தன் 
         திருவடி நிழலுக்கு இணையேது
         பெருமானே உன்றன் திருநாமம் - பத்து
         பெயர்களில் விளங்கும் அவதாரம்"
எனத் தொடங்கி மிக இலகுவாக படம் பார்க்கும் அனைவருக்கும் புரியும்படி கதைசொல்லி இருக்கிறார். இவ்வாறு இதிகாச புராணக்கதைகள் யாவுமே அவரின் கவிதை உருவில் புதுப்பிறவி எடுத்திருக்கின்றன. முன்னோரின் கதைகளைக் காதலித்து அவற்றை கவிதையாகத் தந்து எம்மையும் இதிகாச, புராணக் கதைகளை காதலிக்க வைத்த மிகச்சிறந்த காதற்கவிஞனே கண்ணதாசன்.

காதல் இன்பத்தேன் அருந்தி தான் சுவைத்ததை சுவைபடச் சொன்ன காதலர்களில் திருவள்ளுவருக்கு அடுத்தாக கண்ணதாசனைச் சுட்டலாம். காதலைக் கண்டு "காதல் எனும் வடிவம் கண்டேன்" என்று பாடி, காதலில் மயங்கி நின்றவர் "காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்" என காதல் பாடம் படிக்க அழைத்து, "ஆதிமனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இதுதான்" என்றுகாட்டி, "காதற்சிறகை காற்றினில் விரித்து வானவீதியிற் பறக்கவா" எனப் பறந்தவர், காதற்றோல்வியில் துவண்ட போது 'காதல் போயின் சாதல் சாதல்' சொன்ன பாரதியாரின் அடியையொற்றி
                    "காதலே போ! போ!
                      சாதலே வா! வா!" என உரக்கக் கூச்சலிட்டதுடன் கடவுளையே
         "கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
         காதலித்து வேதனையில் சாகவேண்டும்"
என்று பாட்டெழுதிக் கொடுத்து  T M சௌந்தரராஜன் கேட்டதற்காக 'சாகவேண்டும்' என்பதை 'வாடவேண்டும்' என மாற்றி எழுதிக்கொடுத்தார்.

சங்க இலக்கியப்பாடல்களின் தாக்கத்தையும் அவர் பாடல்களில் காணலாம். அதுவும் பாரிமகளிரின்
         "அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
         எந்தையும் உடையோம் எம் குன்றும் பிறர் கொளார்
         இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
         வென்று எறி முரசின் வேந்தர் எம்
         குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே"
என்ற அற்புதவரிகளை உள்வாங்கி
         "அன்று வந்ததும் இதே நிலா
         இன்று வந்ததும் அதே நிலா
         இன்பம் தந்ததும் ஒரே நிலா
         ஏங்க வைப்பதும் ஒரே நிலா"
எனவும்
         "அன்றொரு நாள் இதே நிலவில்
         அவர் இருந்தார் என் அருகே - நான்
         அடைக்கலம் தந்தேன் என் அழகை - நீ
         அறிவாயோ வெண்ணிலவே
         அந்த ஒரு நாள் ஆனந்தத் திருநாள்
         இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ"                      
எனவும் சில காதற்கவிதைகளில் சொன்ன வித்தகர்.


கண்ணதாசன் பல்வேறு மொழிகளில் உள்ள கவிதைகளை படித்துச் சுவைத்து,  தமிழில் மிகக்குறைந்த சொற்களில் இனிமையாக அவற்றிற்கு மெருகேற்றினார். பிரான்ஸிஸ் வில்லியம் போர்டிலோனின் "The night has a thousand eyes" என்ற எட்டுவரிக் கவிதையை பன்னிரண்டு சொற்களில் கவிதையாகப் புனைந்தவர். அப்பாடல்கள்:
                      
                      "The night has a thousand eyes,
                             And the day but one;
                      Yet the light of the bright world dies
                             With the dying of the sun.
    
                      The mind has a thousand eyes,
                              And the heart but one;
                      Yet the light of a whole life dies
                              When love is done."
                                       - by Francis William Bourdillon
                  
        "இரவுக்கு ஆயிரம் கண்கள்
        பகலுக்கு ஒன்றே ஒன்று
        அறிவுக்கு ஆயிரம் கண்கள்
        உறவுக்கு ஒன்றே ஒன்று"
கண்ணதாசன் காதலிக்காதது உலகிலே எதுவும் இல்லையெனும் அளவிற்கு மங்கையை, மதுக் கிண்ணத்தை, எல்லாவற்றையும் காதலித்தார். நாத்திகத்தை காதலித்து நாத்திகனாக வலம் வந்து பின்னர் கடவுளைக் காதலித்து 'அர்த்தமுள்ள இந்துமதம்' எழுதிக்குவித்தார். நாடகங்களைக் காதலித்து 'அனார்க்கலி', 'சிவகங்கைச் சீமை' போன்ற நாடகங்களை வடித்தார். பண்டைய வரலாற்றைக் காதலித்து 'கடல் கொண்ட தென்னாடு', 'சேரமான் காதலி' போன்ற சரித்திர நாவல்களைப் படைத்தார்.

ஐந்தே கவிதைகளை எழுதியிருந்த கண்ணதாசனுக்கு 'கவிஞர்" என்ற பட்டத்தைக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. இருப்பினும் கண்ணதாசன் அரசியலைக் காதலித்த நேரம், அறிஞர் அண்ணாத்துரை, கலைஞர் கருணாநிதிக்கு  மேடையில் மோதிரம் அணிவிப்பதைக் கண்டு, உள்ளம் குமைந்து அரசியல் ஒரு சூதாட்டமென வெறுத்தார். அவர் காதலித்தவற்றுள்ளே தன் அன்னையின் அன்பை நினைந்து
        "என்னை தனக்குள் வைத்திருக்கும்
        அன்னை மனமே என்கோயில்
        அவளே என்றும் என் தெய்வம்"
என்கின்ற சொற்களைச் சொல்லிச் சொல்லி பெருமையுடன் காதலில் உருகிக்கரைந்தார். இப்படி தன்னைப் பெற்ற அன்னையை நினைந்து உருகிய கண்ணதாசன் தான் கற்ற கன்னித்தமிழ் அன்னை மேற்கொண்ட காதலால் 
        "செந்தமிழா எழுந்து வாராயோ - உன்
        சிங்காரத் தாய்மொழியப் பாராயோ
        சிந்தை எல்லாம் இனிக்கும் தேனாகும் 
        செல்வமிதே........."
என ஓங்கிக் குரல் கொடுத்தவர், இறப்பதற்கு முன் சிக்காக்கோ நகரிலிருந்து கடைசியாகப் பதித்த வரிகளில் கூட
        "மனிதனில் ஒன்று பட்டு சேர்ந்திருப்பீர் - இங்கு 
         மழைகள் தமிழ்பேசச் செய்து வைப்பீர்
         தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை - பெற்ற
         தமிழையும் விட்டுவிட்டால் வாழ்கையில்லை"
என்பதை நயமாகச் சொல்லி தமிழின் நிலையை எண்ணி காதலிற் கலங்கிய காதற்கவிஞன். தமிழே எமது வாழ்க்கை என்பதைக் காட்டித்தந்த காதற்கவிஞன். தமிழ்க்காதலில் தன்னையே ஆழ்த்திய காதற்கவிஞன் கண்ட கனவை நனவாக்க எங்கள் குழந்தைகளுக்கு தமிழைப் பிழையில்லாது பேசவும் எழுதவும் கற்றுக் கொடுப்போம்.
இனிதே, 
தமிழரசி.