Wednesday 25 June 2014

இறைவனை அடைய சிறந்த வழி என்ன?




உலக உயிர்கள் யாவும் உயிர் எனும் தன்மையால் ஒன்றுபடுகின்றன. உயிர் என்னும் தன்மை எங்கே  இருக்கிறது? அதாவது உயிர்நிலை எங்கே தங்கி இருக்கிறது? உயிரே அன்பில் தங்கி நிற்கிறது என்கிறார் திருவள்ளுவர்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு’
அன்பு என்பது ஓர் இன்ப ஊற்று. நீர் ஊற்றுக்கள் இடத்துக்கு இடம் நிலத்துக்கு நிலம் மாறுபடுவது போல அன்பும் உயிர்களுக்கு உயிர் மாறுபடுகிறது. ஆனால் அன்பின் வழிப்பட்டதாய் உயிர்நிலை இருப்பதால் அன்பெனும் இன்ப ஊற்றில் திளைக்கும் உயிர்கள் அன்பு வடிவாய் இருக்கின்றன. 'அப்படி அன்பை வெளிப்படுத்த முடியாதோர், உயிர் அற்ற வெற்று எலும்புக் கூட்டை தோலால் போர்த்தியிருக்கும்  பிணமே ஆவர்' என்கிறது இந்தத் திருக்குறள். 

இன்னொரு விதத்தில் சொல்வதானால் அன்பு என்னும் இன்ப ஊற்றாம் அருள் வெள்ளம் பாய்கின்ற வழி உயிராகும். அன்பே சிவம் ஆதலால் சிவத்தின் அருள் வெள்ளம் பாயும் வழியே உயிராகும் என்றும் சொல்லலாம். அதனால் அன்பெனும் சிவத்தின் அருள் வெள்ளம் பாயும் உடலே உயிருள்ள உடம்பாகும். அப்படியில்லாத உடம்பு வெறும் பிணமே. எனவே உடல் இருப்பது அன்பு பாய்ந்து செல்லும் வழியாகிய உயிரைப் பாதுகாக்கவே.

அன்பென்னும் இன்ப ஊற்று பாய்ந்து பாய்ந்து உணர்வோடு ஒன்ற - உள்ளே பாயும் அருள் வெள்ளத்தில் உடல் என்னும் தன்மை கரைந்து உருகிப் போக அதனுள் நின்ற உயிர் அன்பாய் சிவமாகும்.

நாம் நாமாக வாழ்ந்து கொண்டு, நம் அன்பை பிற உயிர்கள் இடத்தில் பெருக்கினால் போதும் இறைவனை அடையும் வழியில் நாம் எட்டி நடைபோடத் தொடங்கிவிடுவோம். அதனை மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் 
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் - தெய்வம் 
உண்மை என்று தான் அறிதல் வேண்டும்” 
என்றார். தெய்வம் நம்மோடு அன்புவடிவாய் இருக்கும் உண்மையை நாமேதான் அறிந்து கொள்ள வேண்டும்.

எமக்குள் இருக்கும் அன்பாம் சிவனை உணர்ந்து அறிய முடியாதவர்களாக நாம் வாழ்கிறோம். ஆனால் எம்மைப்போல் மானுடனாய்ப் பிறந்த திருமூலர், ‘எலும்பை விறகாக எரித்து, தசையை அறுத்து அந்த நெருப்பில் பொரியலாக வறுத்தாலும் அன்போடு உருகி மனம் குளிர்வார்க்கு அல்லாமல் தன்னைப்போல் தெய்வமணியை [இறைவனை] அடையமுடியாது’ என்று தனது மார்பில் தட்டிச் சொல்கிறார்.

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போல கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குளிர்வார்க்கு அன்றி
என்போல் மணியினை எய்தல் ஒண்ணாதே          
                                                -  (திருமந்திரம்: 272)

இறைவனை அடைவதற்கு அன்போடு உருகி மனம் குளிர்வதே சிறந்த வழியாகும் என்கிறது இத்திருமந்திரம். எனவே  கோயில்களிலும், குருக்கள்மாரிடத்திலும், சுவாமிமாரிடத்திலும் இறைவனை அடையும் வழியைத் தேடுவதை விடுத்து திருமூலர் சொல்வது போல் நாமும் அன்போடு உருகி எமது உள்ளத்தே இறைவனைத் தேடுவோம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment