குறள்:
“ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு” - 231
பொருள்:
ஈதலும் அதனால் வரும் புகழுடன் வாழ்தலும் அல்லாமல் உயிர்களுக்கு வேறு பயனனில்லை.
விளக்கம்:
நாம் எடுத்திருக்கும் மனிதப்பிறவி எந்த வினாடி எம்மைவிட்டு போகும் என்பது எமக்குத் தெரியாது. உலகில் பிறந்தோர் அனைவர்க்கும் மரணம் உண்டு. அது அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் எவரையும் விட்டுவைப்பதில்லை. மனிதர்களாகிய நாம் ஏன் பிறந்தோம்? ஏன் உயிர்வாழ்கிறோம்? உலக இயற்கையோடும் அரசியல் சூதாட்டங்களோடும் போராடி, பகட்டுக்கு மயங்கி, வஞ்சனைகளால் அலைக்கழிந்து வாழ்வதால் நாம் அடையும் பயன் என்ன? பயன் இல்லா வாழ்வு வாழ்வாகுமா?
நாம் இவ்வுலகில் வாழ்ந்ததால் அடைந்த பயனை, அதற்கான ஓர் அடையாளத்தை இங்கு விட்டுச்செல்ல வேண்டாமா? எமது இளமையும் உடலும் செல்வமும் என்றும் நிலைத்து இருப்பதில்லை. இந்த நிலை இல்லாதவற்றுள், இளமையும் உடலும் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் செல்வம் அப்படியானதல்ல. சிலரிடம் கொட்டிக்கிடக்கும் செல்வம் பலரிடம் இருப்பதில்லை. செல்வம் இருப்பவர்கள் இல்லாதவர்க்கு கொடுக்கலாம். இல்லாதோர்க்கு கொடுத்தலே ஈதலாகும். உங்களிடம் இருக்கும் கல்விச் செல்வத்தையோ, பொருட்செல்வத்தையோ இல்லாதவர்க்கு கொடுத்து புகழைத்தேடிக் கொள்ளுங்கள்.
நாம் இவ்வுலகில் வாழ்ந்ததால் அடையும் பயன் புகழேயாகும். எனெனில் எம்முடல் அழிந்து போனாலும் எமது புகழ் அழியாது என்றும் இருக்கும். புகழ் நம் பெயரை அழியாது நிலைத்து நிற்க வைக்கின்றது. நம் உயிரைச் சுமந்து வாழும் உடலாலேயே நாம் சுட்டப்படுகின்றோம். அவ்வுண்மையை உணர்ந்த திருவள்ளுவர் புகழில்லாத உயிருக்கு ஒருவித பயனும் இல்லை என்கிறார். நாம் அள்ளிக் கொடுத்த கொடையும் புகழுமே உயிர்வாழ்ந்தோம் என்பதற்கான மிச்சமாக இவ்வுலகில் நிலைத்து நிற்கும்.
No comments:
Post a Comment