Monday 2 June 2014

உல்லாசப் பிரயாணம்

- எழுதியது வாகீசன் -

பால் போன்ற நிலவொளி தாஜ்மகாலின் வெள்ளிப் பளிங்குக் கற்களில் பட்டு அதனை ஒரு சுவர்க்கமாக மாற்றிக்கொண்டிருந்தது. நான் சுவர்க்கத்தில் இருக்கிறேனா? என்னால் நம்பமுடியவில்லை. இந்தச் சுவர்க்கத்தை சாஜகான் தன் மனைவி இறந்த பொழுது அவளின் நினைவிற்காகக் கட்டினான்.

இந்தியாவிலுள்ள அக்ரா என்னும் இடத்தில் இருக்கும் இத்தாஜ்மகாலைக் கட்ட இருபது  வருடங்கள் எடுத்தனவாம். விலைமதிக்க முடியாத கற்கள் பதிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட சுவர்களையுடையது. அழகிய பூந்தோட்டத்தின் நடுவேயிருக்கும் தாஜ்மகாலின் முன்னுள்ள தடாகத்தின் நீரினுள் பார்க்கும் போது, தலைகீழாக இன்னொரு தாஜ்மகால் கட்டப்பட்டிருப்பது போன்ற எண்ணத்தை அது உண்டாக்குகிறது. நாங்கள் இந்த இடத்தைப் பார்க்க இரண்டு நாட்கள் செலவிட்டோம்.


பின்னர் நாங்கள் உலகிலேயே மிகப்பெரிய மலைக்கோயில்கள் உள்ள அஜந்தா, எல்லோரா குகைகளுக்குச் சென்றோம். அங்கு ‘கைலாசா’ என்னும் இந்துக் கோயிலை முதலில் பார்த்தோம்.
முப்பது இலட்சம் சதுர அடி பரப்புள்ள மலையக் குடைந்து ‘கைலாசநாதர்’ என்னும் கோயிலை உருவாக்க எத்தனை ஆண்டுகள் எடுத்திருக்கும்? முகம் தெரியாத சிற்பிகளின் கை வண்ணத்தையும் கற்பனைத் திறத்தையும் கண்டு வியந்தேன். அந்தக் கைலாசநாதரை காவடி தூக்குவது போல் இராவணன் தூக்குவதையும் கண்டு மகிழ்ந்தேன். அந்தக் கோயில் உலக அதிசயங்களில் ஒன்றாகும்.

குகைகளாக இருந்தும் அவற்றின் வண்ண ஓவியங்களாலும், சிற்பங்களாலும் அவை உலகில் புகழ் பெற்றிருப்பது எனக்கு ஓர் உற்சாகமூட்டிய அனுபவமாக இருந்தது. இந்த உலகப்புகழ் பெற்ற அஜந்தாச் சித்திரங்கள், இயற்கை நிறங்களால் தீட்டப்பட்டு, இந்தியாவின் பழைய கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்து காட்டுகிறது.

அது ஓர் அற்புதமான கவர்ச்சி நிறைந்த உற்சாகத்தை தந்த பிரயாணமாக இருந்தது. அந்நாளில் அவற்றைக் கட்டிய மனிதர்களின் ஆற்றலுக்கு நிகர் ஏது? ஆனந்தமான மனநிறைவைத் தந்த அந்த நாட்களை என் வாழ்க்கையில் என்றுமே மறக்க மாட்டேன்.

குறிப்பு:
[இது 9 வயதுச்சிறுவன் எழுதிய கட்டுரை. இலண்டனில் நடைபெறும் GESE தமிழ்ப் பரீட்சையை அவனது 10 வயதில் எடுத்து, A தரத்தில் சித்தியடைந்தான். அவன் எழுதிய கட்டுரைகள் GESE தமிழ் பரீட்சை எடுப்போருக்கு மாதிரிக் கட்டுரையாகப் படிக்க உதவும் என்பதால் எனது வலைத்தளத்தில் இடுகிறேன். தமிழ் படிக்கும் பிள்ளைகள் இருப்போர் இதனை பயன் படுத்தலாம்]

No comments:

Post a Comment