நான் யார்? எனது எண்ணங்கள் யாவை? அவை ஏன் எழுகின்றன? அந்தத்தன்மைகள் ஏன் மனிதருக்கு மனிதர் வேறுபடுகின்றன? அப்படி வேறுபடுவதால் மற்றவர்களை நான் வணங்க வேண்டுமா? என்ற பலவகையான கேள்விகள் என் சிறுவயதிலேயே என்னுள் எழுந்தன. அவற்றுக்கு விடை காணமுடியாது நான் தவித்ததும் உண்டு. என் தந்தையிடம் கேட்டேன். உன் மன விசாரணைக்கு நீதான் பதில் தேடிக் கொள்ளவேண்டும் எனக்கூறி தப்பிக் கொண்டார்.
அறிஞர் என நான் நினைத்த பலரிடமும் கேட்டேன். அதற்கான சரியான விடையை அவர்கள் சொல்லக்கூடிய விதத்தில் என் கேள்விகளை நான் கேட்கவில்லைப் போலும், அதனால் அவர்களால் பதில் சொல்லமுடியவில்லை என நினைக்கிறேன். காலஓட்டம் எனக்குப் பலவகையான புதிய பாடங்களைக் கற்றுத் தந்தது. எமது ஆன்மீகத் தேடலுக்கான விடை எம்மிடமே இருக்கின்றது என்பது அதில் ஒன்றாகும். என் தந்தை சொன்னது சரி என்பதையும் உணர்ந்தேன்.
மற்றைய பொருள்களின் தன்மைகளை நாம் ஆராய்ந்து அறிவது போல் நம்முடைய இயல்புகளையும் நாமே நடுநிலையோடு நின்று ஆராய்ந்து அறியவேண்டும். அப்படிச்செய்வதால் எமக்கு எக்கேடும் வந்துவிடாது. நம்மை நாம் அறியாததால் கெட்டுப்போகின்றோம். நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து அறியும் அறிவைப் பெறுவோமேயானால் நாமே இறை என்பதை உணர்ந்து நம்மை நாமே வழிபடுவோம் என்கிறார் திருமூலர்.
தன்னை அறியத் தனக்கொரு கேடு இல்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே - (திருமந்திரம்: 2355)
தன்னைத்தான் அறிதல் என்பது உணர்வின் தேடலாகும். அது, கடல் நீர் ஆவியாகி மேலே சென்று மழையாகப் பொழிதல் போன்றது. துன்பம் எனும் உப்புக் கரிக்கும் கடல் நீராகிய எம்மை, சூரியக் கதிர் போன்ற அருட்கதிர்களால் தாங்கிக் குளிர்வித்து, நன் மழையாய் பொழிவித்து [அர்ச்சித்து] நாமே தான் என்பதைக் காட்டும் செயலை அறிதலாகும்.
எம் மனத் தேடுதலுக்கு நாம் விடைகாண வேண்டுமாயின் நம்மை நாமே முதலில் அறிந்து கொள்ள வேண்டும். நம்மை நாம் அறிந்து கொள்ளாமல் தட்டுத்தடுமாறுவதாலேயே நாம் கெடுகின்றோம். நம்மை நாம் எப்படி அறிவது? என்னும் அறிவுத்திறமையை [அறியும் அறிவை], அறிந்த பின்னர், அதாவது சுட்டறிவுக்கும் பேரறிவுக்கும் இடைப்பட்ட உண்மையான வேறுபாட்டை நாம் அறிவதால் பேரறிவான பேரொளியாகிய சிவமே நாம் என்பதை உணர்ந்து வழிபடுவோம் என்கிறார்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment