மிகவும் விரைவாக காகிதம் நெருப்பில் எரிந்துவிடும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதிலும் எண்ணெய் ஊறிய காகிதம் மிகமிக விரைவாக எரியும். ஆனால் நம் தமிழ் முன்னோர் காகிதத்தில் தொன்னை செய்து அதனை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு வடை சுட்டு சாப்பிட்டிருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா? நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ அவர்கள் எப்படி காகிதத்தில் சமைத்தார்கள் என்பதையும் எமக்காகச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
மா, பலா, வாழை, பூவரசு போன்ற இலைகளிலும், வாழைப் பட்டை, கமுகம் பட்டை போன்ற பட்டைகளிலும் ஈர்க்கினால் குத்தி விரும்பியவடிவத்தில் செய்து எடுக்கும் பாத்திரத்தை ‘தொன்னை’ என்று அழைப்பர். ஆனால் பனை ஓலையில் செய்வதை பிளா என்றும் தட்டுவம் என்றும் அழைப்பர். பிளாவை திரவப் பொருட்களை விட்டுக் குடிப்பதற்கும், தட்டுவத்தை உணவை இட்டு உண்பதற்கும் பயன்படுத்தினர். தொன்னை, பிளா, தட்டுவம் போன்றவற்றை ஒருமுறை பாவித்த பின் எறிந்து விடுவார்கள். மீண்டும் மீண்டும் கழுவிப் பயன்படுத்தமாட்டார்கள். அதனால் நம் முன்னோர் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணினர் என்பதை நாம் அறியலாம்.
சித்தர்களில் பெரும் சித்தராகப் போற்றப்படும் போகர் - ‘கொஞ்சம் தடிப்பான காகிதத்தில் தொன்னை [பாத்திரம்] செய்து, அதன் வெளிப்புரத்தில் பிரண்டையை அரைத்து எடுத்த விழுதைப் பூசிக் காயவிட்டு, மீண்டும் மீண்டும் இப்படி மூன்றுமுறை பூசிக் காயவிட்டு எடுத்த தொன்னையை அடுப்பில் வைத்து, எண்ணெய்விட்டு சூடானதும் வடை, போளி, அதிரசம் சுடலாம்’ என்கிறார்.
பிரண்டை என்பது ஒரு வகைக் கொடியாகும். பலவகை நோய்களை நீக்கும் தன்மையுடையது. சித்தமருத்துவத்தில் பிரண்டையைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்துவர்.
பிரண்டை
போகர் ஒன்பது நஞ்சுகளைக் [நவபாசாணம்] கலந்த கலவையைக் கொண்டு வடித்த சிலையே பழனி முருகன் சிலையாகும். அந்தப் போகர் தந்த மாயாஜாலப் பரிசை நீங்களும் செய்து பாருங்கள்:
தேரரிய பிரண்டைதனை அரைத்துக் கொண்டு
திடமான காகிதத்தாற் தொன்னை செய்து
மாரியே பின்புறத்தில் மூன்று பூசல்
மைந்தனே உலரவைத்துப் பூசிவாங்கி
கோரியே மூன்றுகல்லை அடுப்பு போல
கூட்டியே தொன்னையதன் மேலேவைத்து
வாரப்பா எண்ணையது காய்ந்த பின்பு
வடை போளி அதிரசங்கள் சுட்டுவாங்கே!
இனிதே,
தமிழரசி.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment