Wednesday, 25 June 2014

காலை நேரக் கடற்கரைக் காட்சி

- எழுதியது வாகீசன் -

கடற்கரையில் நின்றுகொண்டு கதிரவன் உதிப்பதைக் கண்குளிரப் பார்க்க வேண்டும் என்ற பெரிய ஆசை என்னுள்ளே பலகாலமாக இருந்தது.  அந்த ஆசையைத் தீர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. என் நண்பன் ஒருவன் தன் வீட்டில் என்னை வந்து நிற்கும்படி கேட்டுக் கொண்டான். அவன் வீடு கன்னியாகுமரிக்கு அருகே இருந்ததால் நான் அங்கு சென்றேன்.

அதிகாலையிலே விடிவெள்ளி கிழக்கு வானிலே பவனி வந்தது. கோழிகள் கூவின. குருவிகள் கீச்சு கீச்சு என சத்தம் போட்டன. சங்குகள் முழங்கின.  ஆலயமணிகளின் ஓசை பக்தர்களை அழைத்தன. நான் மெல்லக் கண் விழித்து, என் நண்பனையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றேன்.

குளிர் காற்று என் உடலை வருடிச் சென்றது.  அக்காற்றை நுகர்ந்த போது உடலிலே ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. கிழக்கு வானம் சிவந்திருக்க அந்தக் கடல் நடுவே குன்றின் மேல் தெரிந்த விவேகானந்த மண்டபமும், கடற்கரையில் இருந்த குமரி அன்னையின் திருக்கோயிலும், மகாத்மா காந்தி நினைவு மண்டபமும் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டின.


அவை மட்டுமா? நீலக்கடல் அலைகள் ஏறி நுரை சீறி ‘ஓ’ என்று கதறி ஓலமிட்டு விழுந்தன. பாவம் அந்தக் கடலலைகள். இராமனுடன் வந்த வானரர்கள் கடலைக் கடந்து இலங்கை செல்ல மிதித்த வருத்தம் தாங்கமாட்டாது இன்றும் ‘ஓ’ என அழுகின்றன. 

கடற்கரையை அடுத்திருந்த மீனவக் குடிசைகளும், கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகளும் அந்தச் செவ்வானத்தின் ஜாலத்தில் ஒரு திறமை மிக்க ஓவியன் வரைந்த காட்சியாய் விரிந்தன. நடுக்கடலிலே மிகமிகச் சிறிய புள்ளிகளாய்த் தோன்றிய படகுகள், கரையை நோக்கி விரைந்து வந்தன. அமைதியாக இருந்த கடற்கரை படகுகளின் வரவால் மீனவர்களின் சுறுசுறுப்பைப் பெற்று விழித்து எழுந்தது.

கடலில் முத்துக் குளித்து எழுந்து வருபவன்போல சூரியன் செக்கர் வானத்திடையே எழுந்து வந்தான். சூரியனும் தன் இலட்சியத்தை நாடிச் செல்ல, கன்னியாகுமரிக் கடற்கரையில் இருந்த மக்களும் தத்தமது இலட்சியத்தை நாடி நடைபோட்டனர்.

குறிப்பு:
[இது 9 வயதுச்சிறுவன் எழுதிய கட்டுரை. இலண்டனில் நடைபெறும் GESE தமிழ்ப் பரீட்சையை அவனது 10 வயதில் எடுத்து, A தரத்தில் சித்தியடைந்தான். அவன் எழுதிய கட்டுரைகள் GESE தமிழ் பரீட்சை எடுப்போருக்கு மாதிரிக் கட்டுரையாகப் படிக்க உதவும் என்பதால் எனது வலைத்தளத்தில் இடுகிறேன். தமிழ் படிக்கும் பிள்ளைகள் இருப்போர் இதனைப் பயன் படுத்தலாம்]

5 comments: