Sunday 15 June 2014

நாண்மங்கலமும் சிலந்தியும்


பண்டைத் தமிழர் பிறந்தநாள் விழா கொண்டாடியதில்லை, மேற்கத்தைய நாட்டினரே பிறந்தநாள் விழா கொண்டாடினர் என்று சொல்கின்றனர். அதிலும் ஆங்கிலேயர் வருகைக்கு பின்னரே தமிழர் பிறந்தநாள் கொண்டாடத் தொடங்கினர் என்பது நகைப்பிற்கு உரியது.

அப்படிச் சொல்வது சரியா என்பதை அறிய நமது பண்டைத் தமிழ் நூல்களில் தேடிப்பார்த்தேன். என் தேடலுக்கு கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பண்டைத்தமிழ் நூல்களிலே காலத்தால் முந்திய தொல்காப்பியம். அது என்ன சொல்கின்றது என்று பார்ப்போமா? அதில் தொல்காப்பியர்

பிறந்த நாள்வயின் பெருமங் கலமும்”             
                                                        - (தொல்: பொருள்: 30: 8)

என புறத்திணை இயலில் கூறுகிறார். இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியரே பிறந்தநாள் என்ற சொல்லைத் தொல்காப்பியத்தில் பதிவு செய்து வைத்துள்ள போது எமக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்? பிறந்த நாளின் போது, விழா எடுத்து வாழ்த்தியதை ‘பெருமங்கலம்’ என்னும் சொல்லால் குறித்தும் வைத்திருக்கிறார். 

கி பி 11ம் நூற்றாண்டுக்கு பின்னர் இலத்தின், நோர்மன், பிரஞ்சு மொழிகளாகிய மூன்று மொழிக்கலப்பால் உண்டான முக்கூட்டு மொழியே ஆங்கிலம். அதிலும் உலகமொழிகள் எல்லாம் கலந்த தற்கால ஆங்கிலம் கி பி 15ம் நூற்றாண்டுக்கு பின்னரே உருவானதாகும். தற்கால ஆங்கிலம் உருவாகுவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்டைத்தமிழர் பிறந்தநாள் கொண்டாடினர் என்பதை தெட்டத்தெளிவாகத் தொல்காப்பியம் எடுத்துச் சொல்கிறது. இதைவிடவா தமிழர் பிறந்தநாள் கொண்டாடினர் என்பதற்குச் சான்று வேண்டும்? அதிலும் நம் நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி கி பி 1815ல் இருந்தே நிலைகொண்டது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

பண்டைத் தமிழர் பயன்படுத்திய பல ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்களை நாம் புறக்கணித்து வருகிறோம். அதுவும் நம் அறியாமைகளுக்குக் காரணமாகும். தொல்காப்பியம் மட்டுமல்ல சங்கத்தமிழ் இலக்கியங்களும் பிறந்தநாள் விழாவை ஆட்டைவிழா, வெள்ளணிவிழா, நாண்மங்கலம் என்று பல பெயர்களால் குறிப்பிடுகின்றன. 

“எற்றப் பகலினும் வெள்ளணிநாள்
இருநிழலுற்ற
கொற்றக்குடையினைப் பாடீரே”           - (கலிங்கத்துப் பரணி)

எனப் பிறந்தநாளை, ‘வெள்ளணிநாள்’ என்று கலிங்கத்துப்பரணி மட்டுமல்லாமல் புறப்பொருள்வெண்பா மாலையும் சொல்வதைக் கீழேயுள்ள வெண்பா எடுத்துக் காட்டுகிறது.  

“கரும்பகடுஞ் செம்பொன்னும் வெள்ளணிநாட் பெற்றார்
விரும்பி மகிழ்தல் வியப்போ - சுரும்பியிமிர்தார்
வெம்முரண் வேந்தரும் வெள்வளையார் தோள்விழைந்து
தம்மதி றாந்திறப்பர் தாள்”                                                 - (பு. வெ. பா: படாண்திணை: 23)

பிறந்த நாளைக்குறிக்கும் ‘நாண்மங்கலம்’ என்ற சொல்லும் வெள்ளணிநாள் போல் நம்மால் புறக்கணிக்கப்பட்ட சொற்களில் ஒன்றே.

“மண மங்கலமே பொலிவு மங்கலமே
நாள் மங்கலமே பரிசில் நிலையே”                                      - (பு. வெ. மா: சூத்திரம்: 9: 12 - 13)
என்றும் புறப்பொருள் வெண்பாமாலை சொல்கிறது.

நம் தமிழ் முன்னோர்கள் நாண்மங்கலம் என்ற பெயரில் பிறந்த நாளைக் கொண்டாடியது மட்டுமல்லாமல் ‘வீரபாண்டியன் நாண்மங்கலம்’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதி வைத்திருந்ததையும் தென்காசி விஸ்வநாதர் கோயில் கோபுரவாயில் கல்வெட்டு எமக்கு அறியத்தருகிறது. 

நாள் + மங்கலம் = நாண்மங்கலம் எனப்புணரும்.
நாள் என்பது காலம், நேரம் என்பவற்றைக் குறிப்பது போல் பிறப்பு என்பதையும் குறிக்கும். புதிது புதிதாகப் ஒவ்வொரு நாளும் பிறப்பதால் நாள் என்ற சொல்லால் பிறப்பைக் குறித்தனர். மங்கலம் என்றால் வாழ்த்து, சிறப்பு போன்ற கருத்துக்களையும் தரும். ஆதலால் நாண்மங்கலம் என்பது பிறந்த நாளை மட்டுமல்லாது பிறந்தநாள் வாழ்த்தையும் குறித்து நிற்கிறது. 

சோழன் இலங்கிலை வேல்கிள்ளியின் பிறந்தநாள் விழாவை முத்தொள்ளாயிரத்தின் ஒரு பாடல் சொல்கிறது.

அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்திரம்போல் மாண்ட களிறு ஊர்ந்தார் - எந்தை
இலங்கிலை வேல்கிள்ளி இரேவதிநாள் என்னோ
சிலம்பிதன் கூடிழந்த வாறு                                            
                                                        -(முத்தொள்ளாயிரம்: 46)

இப்பாடலின் கருத்தைக் சொல்வற்கு முன் ஒரு சிலந்தியின் கதையைக் கூறலாம் என நினைக்கிறேன். நான் சிறுமியாய் இருந்த காலத்தில் என் தந்தை சொன்ன கதையே இது. 

ஒரு பெரிய தீவு. அங்கே வாழ்ந்து வந்த சிலந்தி ஒன்று காய்ச்சலுடன் நட்புக்கொண்டது. சிலந்தியும் காய்ச்சலுமாகச் சேர்ந்து தாம் எந்த வீட்டில் வாழலாம் என்பதை முடிவு செய்வதற்காக அந்தத் தீவில் இருந்த எல்லா வீடுகளையும் சுற்றிப் பார்த்தன. கடைசியாகச் சிலந்தி, சிறிய குடிசைகளில் வாழ்வதை விட அரண்மனையில் வாழ்ந்தால் பெரிய பெரிய சிலந்திவலைகளைக் கட்டலாம் என நினைத்தது. தன் எண்ணத்தைக் காய்ச்சலிடம் சொல்லி காய்ச்சலையும் தன்னோடு அரண்மைக்கு வருமாறு அழைத்தது. 

அரண்மனைக்குச் செல்ல காய்ச்சல் விரும்பவில்லை. அரண்மனை வைத்தியர் காய்ச்சலுக்கு மருந்து கொடுத்து விரட்டி அடிப்பார் எனப்பயந்தது காய்ச்சல். அத்தீவின் கடற்கரை ஓரத்தில் பரதவர் சேரி இருந்தது. அவர்கள் அன்றாடம் கடலில் மீன்பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். அவர்கள் வாழும் குடிசைகளில் கட்டிலும் மெத்தையும் மட்டுமல்ல படுக்க நல்ல பாய் கூட இருக்கவில்லை. அப்படிப்பட்ட வறுமை உள்ள இடத்தில் காய்ச்சல் வந்தால் வைத்தியருக்குப் பணம் கொடுக்க யாரால் முடியும்? எனவே பரதவ சேரிக்குப் போவதே நல்லது எனக் காய்ச்சல் சொல்லியது.

நண்பர்கள் இருவரும் மாதம் ஒருமுறை சந்தித்துக் கொள்வதாகக் கூறிப் பிரிந்தனர். சிலந்தி அரண்மனை நோக்கிப் போக, காய்ச்சலும் பரதவ சேரிக்குச் சென்றது. பரதவசேரி முழுவதும் தேடிப் பார்த்து மிகவும் வறுமை உள்ள குடிசைக்குள் காய்ச்சல் சென்றது. அங்கே தாய் மடியில் தலைவைத்து ஓர் இளைஞன் தூங்குவதைக் கண்டது. அந்த இளைஞனைப் பார்த்ததும் அவனே தான் வாழ ஏற்றவன் என நினைத்த காய்ச்சல் அவனைப் பிடித்துக் கொண்டது. அவன் காய்ச்சலில் முனங்கினான். தன் மகனுக்கு காய்ச்சல் வந்துவிட்டதே என தாயும் பதறினாள்.

அந்த இளைஞனின் வயதான தந்தை, இரவு மீன்பிடிக்கச் சென்ற களைப்புத்தீரத் தூங்கி எழுந்து வந்தார். தாய் மகனுக்குக் காய்ச்சல் என்று சொன்னதையும் பொருட்படுத்தாது மீன் வலையைச் சரிபார்த்து, வள்ளத்துள் எடுத்துப்போட்டார். வளமைபோல் மீன்பிடிக்கச் செல்வதற்கு அவர் ஆயத்தமானார். மகனையும் கூப்பிட்டார். 

‘அவனுக்குக் காய்ச்சலாக இருக்கிறதே’ என்றாள் தாய். 

‘இந்த வயதில் காய்ச்சல் என்று முடங்கிக் கிடந்தால் வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றுவது யார்? கடல் நீரில் முழுகினால் காய்ச்சல் இருந்த இடம் தெரியாது ஓடிப்போகும்’ என்றார் தந்தை.

அவனும் காய்ச்சலோடு மீன்பிடிக்கத் தந்தையுடன் சென்றான். தந்தையும் மகனுமாக வலைவீசி மீன்பிடித்தனர். வலையில் சிக்கிய மீன்களை வள்ளத்துள் ஏற்றுவதற்காக அந்த இளைஞன் கடலினுள் குதித்தான். கடலின் உப்பு நீருள் அவன் மூழ்கியதுமே காய்ச்சல் அவனை விட்டு ஓட்டம் பிடித்தது. அவனும் தனக்குக் காய்ச்சல் போய்விட்டதை உணர்ந்தான். தந்தை சொன்னது சரியே என்று தந்தைக்கும் சொன்னான். ஆனால் அவன் வீடு திரும்பியதும் காய்ச்சல் அவனை மீண்டும் பிடித்துக் கொண்டது. இப்படி காய்ச்சல் அவனைப் பிடிப்பதும் அவன் கடலில் மூழ்க காய்ச்சல் ஓடுவதுமாக காலம் ஓடியது.

அரண்மனைக்குச் சென்ற சிலந்தி அரண்மனை விட்டத்தில் இரவு முழுவதும் பாடுபட்டு மிகப்பெரிய சிலந்திவலையைக் கட்டியது. ஆனால் அதிகாலையிலேயே அரண்மனையைத் தூசுதட்டி சுத்தம் செய்வோர் வந்து சிலந்தி வலையை அறுத்து எறிந்தனர். உயிர் தப்பினால் போதும் என்று சிலந்தி அடுத்த அறைக்கு பாய்ந்து ஓடியது. இப்படி சிலந்தி வலையைக் கட்டுவதும் சுத்தம் செய்வோர் ஒரு நொடியில் அதைத் துடைத்து எறிவதுமாகக் காலம் ஓடியது. 

மாதம் ஒன்றானது. சிலந்தியும் காய்ச்சலும் பேசிக்கொண்டது போல் மீண்டும் சந்திப்பதற்காக குறித்த இடத்திற்கு வந்தனர். இருவர் முகத்திலும் களைப்பும் கவலையும் காணப்பட்டது. நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து திகைப்படைந்தனர். தத்தமது சோகாக் கதையைச் சொல்லிக் கொண்டனர். அரண்மனையில் வாழச்சென்ற சிலந்தியாவது சந்தோசமாக இருக்கும் என்று நினைத்து வந்த காய்ச்சலுக்கு சிலந்தியின் கதையைக் கேட்டு அழுகையே வந்துவிட்டது.

அழுது கொண்டே சிலந்தியைப் பார்த்து, காய்ச்சல் சொன்னது, ‘சிலந்தியே! நீ பரதவ சேரியில் நான் இருந்த குடிசைக்குப் போ. அங்கே வாழுபவர்களுக்குத் தூசு தட்டிச் சுத்தம் செய்ய நேரம் இல்லை. அங்கே நீ விரும்பியபடி எல்லா இடத்திலும் உனது சிலந்திவலைகளைக்கட்டி மகிழ்ச்சியாக வாழலாம்’ என்றது.

சிலந்தியும் காய்ச்சலைப் பார்த்துச் சொன்னது, ‘நானும் அதையே நினைத்தேன். நீ அரண்மனைக்குச் செல். அங்கே இருக்கும் இளவரசி எந்நேரமும் மஞ்சத்தில் படுத்தே கிடக்கிறாள். நோய் ஒன்றும் இல்லாமல் தனக்கு நோய் என்று சொல்கிறாள். அவளின் நோய்க்கு மருந்து கொடுத்து மருத்துவர் களைத்துப் போய்விட்டார். எனவே நீ அங்கு போய் இளவரசியைப் பிடித்துக் கொண்டால் மருத்துவர் அவளுக்கு மருந்தாகத் தண்ணீர் கொடுப்பார். நீ உன் விருப்பம் போல் அவளைப்பிடித்து ஆட்டலாம்' என்றது. காய்ச்சல் அரண்மனைக்கும் சிலந்தி சேரிக்கும் சென்று மகிழ்வுடன் வாழ்ந்தன. ஒரு தொழில் செய்வதற்கு ஏற்ற இடம்வேண்டும் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது.

இப்போ முத்தொள்ளாயிரம் கூறும் சோழனின் பிறந்தநாள் விழாப் பாடலைப் பார்ப்போம். 
அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்திரம்போல் மாண்ட களிறு ஊர்ந்தார் - எந்தை
இலங்கிலை வேல்கிள்ளி இரேவதிநாள் என்னோ
சிலம்பிதன் கூடிழந்த வாறு                                            
                                                           -(முத்தொள்ளாயிரம்: 46)

இலங்கிலை வேல்கிள்ளி என்ற சோழ அரசன் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தான். அவனது பிறந்தநாளான ரேவதி நட்சத்திரத்தன்று நாடே விழாக்கோலம் பூண்டது. ஒவ்வொரு வீடும் தங்கள் வீட்டு பிறந்த நாள் போல வீடுகளை, வீதிகளை அலங்கரித்தனர். சோழன் இலங்கிலை வேல்கிள்ளி தன்னை வாழ்த்த வந்தோருக்கு அள்ளிக் கொடுத்தான். அப்போது அந்தணர் பசுவும் பொன்னும் பெற்றனர். நாவில் வல்ல அறிஞர்களும் புலவர்களும் மந்திரமலை போன்ற யானைகளைப் பரிசாகப் பெற்று அதில் ஏறிச்சென்றார்கள். இப்படி எல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்க இலங்கிலை வேல்கிள்ளியின் நாட்டில் வாழ்ந்த சிலந்தி இனமே தத்தம் கூடிழந்து எப்படியோ? என்று கேட்கிறது முத்தொள்ளாயிரம்.

முத்தொள்ளாயிரம் கேட்கும் கேள்வியின் விடையை மேலேயுள்ள சிலந்திக் கதை உங்களுக்கு நன்கு எடுத்துச் சொல்லியிருக்கும் என நினைக்கிறேன். இலங்கிலை வேல்கிள்ளியின் நாண்மங்கலத்திற்காக வீடுகள், வீதிகள், வேலிகள் யாவும் தூசு தட்டித் துப்பரவு செய்யப்பட்டதாலேயே சிலந்திகள் தம் கூடுகளை இழந்து குற்றுயிராய், முடமாய் நாட்டைவிட்டே ஓடின. 
இனிதே, 
தமிழரசி

No comments:

Post a Comment