Friday, 13 June 2014

பார்த்தீர்களா பெண்களே!

கடம்பவனம் - மதுரை 1858

பன்னெடுங்காலமாக தமிழ் நாட்டில் உள்ள மதுரை கடம்பவனம் என அழைக்கப்பட்டு வந்தது. கடம்பு மரங்கள் நிறைந்த காடாக மதுரை இருந்ததால் கடம்பவனம் என்று அழைத்தனர். மதுரை மீனாட்சி அம்மனின் கணவரான சுந்தரேசருக்கு கடம்பவனத்து ஈசர் என்ற பெயரும் உண்டு.

காளமேகப்புலவர் ஒரு நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கே அடியார்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பூப்பல்லக்கில் வைத்து நாதசுரம் இசைக்க, வீதிவலமாகக் கொண்டு வந்தனர். பெண்கள் ஒவ்வொரு நாற்சந்தியிலும் நின்று மல்லாரி பாடியாடினர். இவற்றைக் கண்ட காளமேகப் புலவர் அப்பெண்களைப் பார்த்து,
கண்டீரோ பெண்காள் கடம்பவனத்து ஈசனார்
பெண்டீர் தமைச்சுமந்த பித்தனார் - எண்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பை இட்டார்
அக்காளை ஏறினா ராம்                             
                                         - (காளமேகப்புலவர் தனிப்பாடல்)
எனப்பாடினார். 

அதைக்கேட்ட அடியவர்களும் பெண்டிரும் “ஓய்! காளமேகம் என்ன காணும் சொல்லுறீர்! கடம்பவனத்து ஈசர் பெண்களைச் சுமந்து திரியும் பித்தனா? எட்டுதிசையிலும் சிறப்புடைய தங்கைக்கு மேல் தீ வைத்தாரா? அக்காவை மோதி [ஏறுதல்] வீழ்த்தினாரா? உமது தொழிலே வசைபாடுவதாக இருந்தாலும் கடம்பவனத்து ஈசனாருக்குமா வசைபாடுவீர்?” என்று சீறி விழுந்தனர். வீதிவலம் வந்த நேரம் ஆதலால் யாரும் காளமேகப்புலவரை அடிக்கப் போகவில்லை. ஆனால் அவர்களின் கோபத்தை முணுமுணுப்பும் சலசலப்பும் கண்களும் காட்டின.

நீங்கள் நினைப்பது போல் நான் பாடவில்லையே என்று அவர்களைப்பார்த்துச் சிரித்தபடி காளமேகம் சொன்னார். “பெண்களே பார்த்தீர்களா! கடம்ப வனத்து ஈசனார் பெண்களாகிய பார்வதிக்கும் கங்கைக்கும்  மதிப்பளித்து இடப்பாகத்திலும், தலையிலும் தாங்கிய  சிவனார் அல்லவா? எட்டுத் திசைகளிலும் சிறந்த தனது கைக்கு மேலே நெருப்பைத் தாங்கி இருப்பவர், அந்தக் காளை மாட்டில் ஏறி வருபவர் தானே! இதில் என்ன வசை இருக்கிறது என்று கேட்டார்.

மீண்டும் எல்லோரும் கேட்கத் தன் பாடலைப் பாடினார்.
கண்டீரோ பெண்காள்! கடம்பவனத்து ஈசனார்
பெண்டீர்தமைச் சுமந்த[தாங்கிய] பித்தனார்[சிவனார்] - எண்டிசைக்கும்
மிக்கான[சிறந்த] தம்[தமது] கைக்கு மேலே நெருப்பை இட்டார்
அக்[அந்தக்] காளை ஏறினா ராம்”   

காளமேகப்புலவரின் பாடலின் உண்மையான கருத்தை அறிந்த அடியார்களும் பெண்களும் தமது தவறுக்கு வருந்தினராம்.

நம்முன்னோரால் வனங்கள் என அழைக்கப்பட்ட சில இடங்களும் கோயில் மரங்களும்:

வனங்கள் இடங்கள் கோயில் மரங்கள்
கடம்பவனம் மதுரை கடம்பமரம்
தில்லைவனம் சிதம்பரம் தில்லைமரம் - கண்டல் மரம்.
முல்லைவனம் திருமுல்லைவாயில் முல்லைக்கொடி
செண்பகவனம் தென்காசி செண்பகமரம்
வேணுவனம் திருநெல்வேலி வேணுமரம் - மூங்கில்காடு
மருதவனம் மருதமலை மருதமரம் 

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment