Tuesday, 10 June 2014

பார்த்தெடுக்க வேணுமெடி!சங்க இலக்கியத்தில் நூற்றுக்கனக்கான பாடல்களைப் பாடி தனக்கென்று ஓர் இடத்தை நிலைநாட்டிக் கொண்டவர் கபிலர். தனது பாடல்களில் தமிழரின் நாகரீக உயர்வைச் சித்தரித்துக் காட்டும் கபிலரிடம் விடத்தல்தீவு கன்னியும் படித்திருப்பாளே என நாம் எண்ணும் அளவுக்கு அவளின் நாட்டுப்பாடலின் கருத்து அமைந்திருக்கிறது.

கன்னிப்பெண் ஒருத்தி தனக்கு ஏற்ற கணவனை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதைக் கபிலர், பாரிமகளிர்க்குச் சொன்னதாக சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடலை
“மாயோன் அன்ன மால்வரைக் கவான்
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம்மலைக்கிழவோன் நம்நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி,
அறிவு அறிந்து அளவல் வேண்டும், மறுத்தரற்கு
அரிய வாழி! தோழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே”
                                                   - (நற்றிணை: 32)
என நற்றிணை காட்டுகிறது.

ஒரு கன்னிப் பெண் 'தன்னுடன் வாழ ஒருவனைத் தெரிந்தெடுப்பதற்கு, முதலில் அவனின் குணநலங்களைப் பார்த்து [நீயும் கண்டு], பிடித்திருந்தால் உற்றோருடன் ஆராய்ந்து [நுமரொடும் எண்ணி] மேலும் உணர்ச்சிக்கு இடம் கொடுக்காது, அறிவால் அறிந்து பழக வேண்டுமாம். [அறிவு அறிந்து அளவல் வேண்டும்]  சான்றோர்களைப் போல ஆராய்ந்து பார்த்து நட்புச்செய் [நாடி நட்பின்], அல்லது நட்புச் செய்த பின் ஆராயப் போகாதே [நட்டு நாடார்], இது மறுக்கமுடியாதது' என்று கபிலர் சொல்கிறார்.

ஒருவன் - திருமால் போல் அழகாய், பெரிய மலைநாட்டையும், நன்னீர் ஆற்றையும் உடைய செல்வனாய், உன்னை விரும்பி வருந்தினாலும் உண்மை என நம்பாதே! என்று ஓர் இனிய எச்சரிக்கை விடுக்கிறார். நீயும்காண் - நுமரோடும் எண்ணு - அறிவு அறிந்து அளவளாவு [பழகு] - நாடி நடு - நட்டு நாடாதே என எத்தனை கோணங்களில் “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்” என்பதை உணராது, காதல் எனத்துடிக்கும் வெள்ளை உள்ளம் கொண்ட கன்னியர்க்கு புத்தி புகட்டுகிறார்.

விடத்தல்தீவுக் கன்னியர் சேர்ந்து பேசிச் சிரித்து விளையாடினர். அவர்களின் பேச்சு எத்தகைய கணவனைத் தேர்ந்தெடுப்பது எனும் கேள்விக்கு திரும்பியது. ஒவ்வொருத்தியும் தத்தம் எண்ணத்தைச் சொல்ல, அவர்களில் ஒருத்தி
என்னில் அழகருமாய் இருசிவப்புக் காரருமாய்”
என்றாள். 

மற்றவர்கள் அவளைப் பார்த்துச் சிரித்து ‘அது என்னடி, இருசிவப்புக்காரர்? அப்படி ஒன்று இருக்கா என்றனர்? ‘எனக்கு கருப்பாய் இருப்பவனையோ, நல்ல சிவப்பாய் இருப்பவனையோ பிடிக்காது. அதனால் பொது நிறமானவனை இருசிவப்புகாரர் என்றேன். என்றவள் தொடர்ந்து
பல்லில் அழகருமாய் பார்த்தெடுக்க வேண்டுமெடி”
என்றாள்.

தெத்துப்பல், காவிப்பல் என விதவிதமான பற்களுடன் வாலிபரை கண்டிருக்கிறாள். அவர்களின் சிரிப்பைப் பார்த்து எரிச்சல் வந்திருக்கிறது. கணவனின் சிரிப்பில் மகிழ்ந்திருக்க விரும்பியவளுக்கு அழகான வரிசையான பற்கள் தேவையாக இருந்திருக்கிறது. எனவே ‘பல்லில் அழகருமாய்’ தேடி எடுக்க வேண்டும் என்றாள். அவள் சொல்வதைக் கேட்ட
தோழியர்: என்னில் அழகருமாய்
                     இருசிவப்பு காரருமாய்
             பல்லில் அழகருமாய்
                     பார்த்தெடுக்க வேண்டுமெடி
எனப்பாடிப் பாடி கேலி செய்தனர்.

இன்னொருனாள் அவள் வருவதைக் கண்ட அவளின் தோழி ஒருத்தி ‘என்ன பல்லில் அழகரைப் பார்த்தாயா?” எனக்கேட்க, ‘ஆமாம் பார்த்தேன்’ என்று அவர்கள் கிண்டலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தாள். யாரடியவன்? எப்படி இருப்பான்? எங்கடி பார்த்தாய்? சொல்லடி என கேள்விகள் வந்து விழ
அவள்: உற்றாரை உசாதற்கு
உருவிலே மன்மதனும்
         உளத்திலே மயனாம்
உத்தமரை பார்த்தேனடி
                             - நாட்டுப்பாடல் (விடத்தல் தீவு) 
                                               -  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
எடுத்த உடனேயே ‘உற்றாரை உசாதற்கு’ என்கிறாள். அதாவது தன்னைப் பெற்று வளர்த்த பெரியோர்களிடம் கேட்டு அவர்கள் சம்மதத்தைப் பெறுவதற்கு ஏற்ற வாலிபனைக் கண்ட மகிழ்ச்சியில் அவன் அழகில் மன்மதன் போன்றவன் உளத்திலோ [ஊக்கத்தில்] மயன் போன்ற உத்தமன் என்று பரவசப்படுகிறாள்.

அவள் கூறும் மன்மதனை நாம் அறிவோமா? அவள் உத்தமர் எனக்கூறும் மயன் யார்? மாந்தையத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஓர் அரசன் - இராவணன் மனைவி வாண்டோதரியின் தந்தை - கலைஞன் - சிற்பி - அவன் இயற்றிய நூல்களுள் ‘மயமதம்’ என்ற நூல் சிற்பிகளால் போற்றப்படுகிறது. ஈழத்தவரின் மூதாதையரான மயனை, விடத்தல்தீவு நாட்டுப்பாடல் மூலமாவது நாம் மீண்டும் அறிவோம்.

கபிலர் ‘நீயும் கண்டு’ எனச் சொன்னதை விடத்தல்தீவுக் கன்னி தன் ஆசைகளையும் சேர்த்து ‘பார்த்தெடுக்க வேணுமடி’ என்கிறாள். அடுத்து கபிலர் ‘நுமரொடும் எண்ணி’ என்றதை ‘உற்றாரை உசாவுதற்கு’ என்றும் ‘அறிவறிந்து அளவல் வேண்டும்’ எனக் குறித்ததை ‘உளத்திலே மயனாம் உத்தமர்’ என்று கூறி அவன் பண்பானவன் என்பதை உறுதி செய்கிறாள்.  தனது கணவனாக வரவேண்டியவனைத் தெரிந்தெடுக்க ‘நாடி நடு’ எனக் கபிலர் சொன்னதையே அந்தக் கன்னியும் செய்திருக்கிறாள்.

இப்போது சொல்லுங்கள் விடத்தல்தீவுக் கன்னி, கபிலரிடம் படித்திருப்பாளோ என்ற சந்தேகம் உங்களுக்கு வரவில்லையா? சங்கத் தமிழர் வாழ்ந்த வாழ்க்கையை ஈழத்தமிழர் வாழ்ந்தனர் என்பதற்கு இந்த நாட்டுப் பாடலும் ஓர் எடுத்துக் காட்டாகும்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment