Saturday, 27 July 2013

பக்திச்சிமிழ் - 62


வாதில் வென்ற வாதவூரர்
- சாலினி -

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலத்தில் ஈழம் முழுவதும் புத்தமதம் பரவி, சைவசமயம் அருகிவந்தது. அங்கு வாழ்ந்த சைவசமயத்துறவி ஒருவர் சிதம்பர நடராசரின் பெயரை மந்திரமாகச் சொல்லித் திரிந்தார். அவரின் செயல் புத்தமதத்துறவிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. சைவத்துறவி புத்த மதத்தை மதிக்காது எந்நேரமும் சிதம்பர நடராசரின் பெயரைச் சொல்லித்திரிவதாக அரசனிடம் போய்ச் சொன்னார்கள். இலங்கையை ஆண்ட அந்தச்சிங்கள அரசனும் சைவத்துறவியை அழைத்துக் காரணம் கேட்டான். சிதம்பர நடராசனே முழுமுதற்கடவுள் அவரை அல்லால் பிறரை வணங்க முடியாது என்றார். அரசனும் அதனை எப்படி அறிவது என்று கேட்டான். சிதம்பரம் நடராசர் கோவிலுக்குப் போனால் அறியலாம் என்றார் சைவசமயத்துறவி. 

புத்தமதத் துறவிகளோ அதனை ஏற்கவில்லை. அந்தச் சிங்களஅரசன், பிறவியிலேயே ஊமையாக இருந்த தன்மகளையும், புத்தமதத்துறவிகளையும் அழைத்துக்கொண்டு சிதம்பரம் வந்தான். தில்லைவாழ் அந்தணர்கள், பிறமதத்தவர்கள் சிதம்பர நடராசர் கோயிலினுள் செல்லமுடியாதெனத் தடுத்தனர். புத்தமதத்துறவிகள் தமது மதமே சிறந்தது என சைவசமயத்தோரை வாதத்திற்கு அழைத்தனர். அந்த புத்தமதத்துறவிகளோடு வாதவூரராகிய மாணிக்கவாசகர் எதிர்வாதம் செய்தார். அரசனும், இளவரசியாகிய ஊமைப்பெண்ணும் அவையில் இருந்தனர். மாணிக்கவாசகரின் வாதத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. விண்வாதமே செய்தனர்.

அவர்களின் வீண்வாதத்தைக் கண்ட மாணிக்கவாசகர், புத்தமதத்தோர் தன்னிடம் கேட்ட கேள்விகளை ஊமைப்பெண்ணைப் பார்த்துக் கேட்டார். அவள் பிறவி ஊமையாகவும், புத்தமதத்தவளாக இருந்தும் மாணிக்கவாசகரின் அருட்கனிவால் தமிழ்ப்புலமையும், சைவசமயத் தத்துவ நிறைவும் நிரம்பப் பெற்றாள். அவர் கேட்ட சமயதத்துவக் கேள்விகளுக்கு பதில் கூறினாள். அரசனும் அவையோரும் அதிசயித்தனர். அவள் பேச்சுத்திறமை மட்டும் பெறவில்லை. சிவசிந்தையளாகி, சிவதத்துவ விளக்கத்தை எடுத்தியம்பும் ஆற்றலும் பெற்றாள்.

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் ‘திருச்சாழல்’ என்னும் பகுதியில் வினா விடையாக வரும் பாடல்கள் அவள் கூறிய தத்துவவிளக்கத்தைச் சொல்லும்.

“பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ!
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ”

இந்த வரலாற்றை தாயுமானசுவாமிகள்
“புத்தர்தமை வாதில் வென்ற வாதவூர் ஐயன்”
எனத் திருவார்த்தையில் கூறி, மாணிக்கவாசகரைப் போற்றியுள்ளார்.

ஈழத்தில் அழிந்தொழியும் நிலையில் இருந்த சைவசமயம் அவ்வூமை அரசிளங்குமரியால் புத்துயிருடன் தலைத்தோங்கியது. 

Friday, 26 July 2013

ஓலைபின்னும் வேலைகிடைப்பதும் அரிது

சுந்தரகவிராயர் என்ற புலவரிடம் அறிவுச்செல்வம் கொட்டிக்கிடந்தது. ஆனால் பொருட்செல்வமோ தட்டுத்தடுமாறியது. வாழ்க்கைக்குத் தேவையான பொருளுக்காக இடையிடையே இடர்ப்பட்டார். அப்போது வறுமை கொடுத்த அநுபவத்தை புலமையால் கவிதையாக வடித்தார். வறுமை அவரோடு அழிந்தது. அவரது புலமையோ இன்றும் அவர் பெயர்சொல்லி நிலைத்து நிற்கிறது.

ஒரு மனிதனுக்கு வறுமை வந்தால் அவன் அநுபவிப்பதற்கு எவையெல்லாம் அரிதாகும் என்பதை பாடலில் பாருங்கள். இப்பாடலில் அரிதாம் என்ற சொல்லை ஐந்து இடத்திலும் அரிதாகும் என்ற சொல்லை ஓரிடத்திலும் வைத்து பாடலைப் புனைந்துள்ளார்.

“அன்னம்உணற்கு அரிதாம் ஆமாறுமூன்றும் அரிதாம்
பன்னம் அரிதாம் பகலின்கண் - துன்நிசியில்
நேயம் அரிதாகும் நித்திரைக்கும் பாய்அரிதாம்
காயக்கு அரிதாம் கலை”

ஒரு மனிதனுக்கு வறுமை வந்தால், உண்ணும் சோறு அரிதாய்ப் போய்விடும். கல்வியறிவைப் பெறத் தேவையான கேள்விகேட்டல், விமர்சித்தல், எண்ணிப்பார்த்தல் ஆகிய சித்தியடையும் வழிகள்  மூன்றும் அரிதாய்ப் போகும். பகலில் ஓலைபின்னும் வேலை கிடைத்தலும் அரிதாகும். நடுஇரவில்  காதல் மனையாளின் அன்பு  கிடைப்பதும் அரிதாய்விடும். படுத்துத்தூங்க பாய் கிடைப்பதும் அருமையாகும். இவை மட்டுமல்ல உடலை  மறைக்க ஆடை கிடைப்பதும் அரிதே என்கிறார். இது அவரது அநுபவ உண்மை.

சொல்விளக்கம்:
1. அன்னம் - சோறு
2. ஆமாறு - சித்தியடையும் வழி
3. பன்னம் - ஓலைபின்னும் வேலை
4. துன்நிசி - நடுஇரவு
5. நேயம் - அன்பு
6. காயம் - உடல்
7. கலை - ஆடை

Wednesday, 24 July 2013

நாளை உலகின் நட்சத்திரம்


நாளை உலகின் நட்சத்திரம்
          நானென நினைத்த தாயவளும்
வேளை தவறா துணவூட்ட
          வெந்து மடிந்தாள் தீயிடையே
நாளை உணவு யார்தருவார்
          நாலு சோதரர் எனைப்பார்க்க
ஆளை ஆளைப் பார்த்திருந்து
          ஆற்றா தெழுந்தேன் தொழில்தேடி
வேலை தந்தார் தீக்குச்சி
          வேண்டிய மட்டும் எண்ணுதற்கு
காலை எழுந்ததும் படிப்பென்றால்
          கால்வயிறு கஞ்சி யார்தருவார்?
வைத்ததோர் கல்வி பயிலாதே
          வாழ்க்கையின் பாடம் கற்றிட்டேன்
கைத்தொழில் ஒன்றைக் கற்று
          கவலைகள் இன்றி வாழ்கின்றேன்
நாளைய உலகின் நட்சத்திரம்
          நானென தெண்ணம் மாறவில்லை
கோழை உலகே உந்தனுக்கு
           குழந்தைகள் நாமென்ன கேடுசெய்தோம்?          
                                                              - சிட்டு எழுதும் சீட்டு 69

Tuesday, 23 July 2013

குறள் அமுது - (71)


 குறள்:
"ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது"                                     - 886

பொருள்:
ஒன்றாகச் சேர்ந்து ஒற்றுமையாய் வாழ்பவர்களிடையே பகைமை உண்டாகுமானால் எந்த நேரத்திலும் உயிரோடு இருத்தல் அரிதாகும். 

விளக்கம்:
ஒற்றுமை இன்மையை ஒன்றாமை என்று சொல்வர். ஒருவரோடு ஒருவர் ஒன்றி இணைந்து வாழ்வோரே ஒன்றியார். பொன்றுதல் என்றால் இறந்து போதலாகும். பொன்றாமை ஒன்றுதல் உயிர் வாழ்தலாகும். ஒன்றாகச் சேர்ந்து வாழும் கணவன் மனைவி இயிடையே ஆயினும், காதலரிடையே ஆயினும், ஒரே ஊரில் வாழ்வோரிடையே ஆயினும், ஒரே நாட்டில் வாழ்வோர் இடையே ஆயினும் ஒற்றுமையின்மை தோன்றினால் எந்தநேரத்திலும் உயிரோடு வாழ்தல் மிகவும் அரிய காரியமாகும். ஏனெனில் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தவர்களிடையே பகைமை தோன்றிவிட்டால் வலியவர் மெலியவரின் உயிரை எடுப்பார் என்பதை அழகாக இக்குறள் எடுத்துச் சொல்கிறது.

இக்கருத்தை தமிழ் இனத்துக்காக திருவள்ளுவர் சொல்லி இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் சென்றும் தமிழராகிய நாம் இன்னும் அதனைச் சற்றும் சிந்தித்துப் பார்க்காது இருக்கிறோம். அந்தப் பெருந்தகையின் சொற்களை சிந்தை செய்திருப்போமேயானால் இன்று இந்த உலகிலேயே தலை சிறந்த ஆற்றலும் அறிவும் உடையோராய், எமது தொழில் நுட்பம், கலை, பண்பாடுகளைப் பேணிப் பாதுகாத்து வளர்க்க எமக்கென்று ஒரு நாடு உள்ளவர்களாக வாழ்ந்திருப்போம்.

ஒற்றுமையின்றி வேற்றுமை தோன்றினால் அந்த மனிதமனங்களிடையே பகைமையும், வெறுப்பும், வஞ்சகமும் தலைதூக்கும். நல்ல நிழலைத்தருகின்ற மரமென்று நல்லபாம்புப் புற்று இருக்கும் மரத்தடியில் வீடுகட்டி வாழமுடியுமா? எந்த நேரத்திலும் அந்தப்பாம்பு கடித்து, எமது உயிரை எடுக்கக்கூடும். அது போலவே உட்பகை தோன்றிய வீடென்றாலும், நாடென்றாலும் இருக்கும்.
முப்பது வருடங்களின் முன்

அன்று திருவள்ளுவர் சொன்ன இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக ஈழத் தமிழினத்தின் உயிர்களும் உடைமைகளும் எறிக்கப்பட்டு, பறிக்கப்பட்டு, அநாதைகளாக்கிய செயல் நடந்து இன்றுடன் முப்பது வருடங்கள் ஓடிவிட்டன.  நாம் நம் நெஞ்சமதைக் கனலாக்கி எரித்தாலும், அந்நினைவு எரியாது கனன்று கொண்டே இருக்கிறதே. நம் இளம் சந்ததியினரை விளிப்போடு வாழச் செய்வதற்கு

"ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது" 

என இக்குறளை எடுத்துச் சொல்வோம்.

Sunday, 21 July 2013

மானமேது இப்போது!

ஆசைக்கவிதைகள் - 70

யாழ்ப்பாணத் தீவக மக்கள் தமக்கென்றொரு அழுத்தமான பண்பாட்டுடன் வாழ்ந்தவர்கள். அவர்களது பண்பாட்டின் நறுமணத்தை நாட்டுப்பாடல்களிலும் நுகரலாம். புங்குடுதீவில் வாழ்ந்த அண்ணனுக்கும் தங்கைக்கும் ஆண்குழந்தையும் பெண்குழந்தையும் பிறந்தது. அண்ணனும் தங்கையுமாகச் சேர்ந்து அந்தக் குழந்தைகள் வளர்ந்ததும் திருமணம் செய்து வைப்பதாகப் பேசிவந்தனர். அதைக் கேட்டு வளர்ந்த அண்ணனின் மகன் தங்கையின் மகளைச் சிறுவயதிலிருந்து காதலித்தான். அவளுக்கும் அது தெரியும். ஆனால் காலஓட்டம் இருவீட்டாரின் மனநிலையையும் மாற்றியது. இருவீட்டாரும் அவர்கள் திருமணத்தைப் பற்றி பேச்சே எடுப்பதில்லை. 

அவன் பன்னிரெண்டு வருடங்களாக அவளைக் காதலித்துக் களைத்துப் போனான். ஒருநாள் சாயந்தரம்  அவள் வீட்டுக் கன்று தாய்ப்பசுவிடம் பால்குடிக்க, கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. கன்றைத்  தேடிப்பிடித்துக் கட்டி இழுத்து வருவதற்காக, வீட்டின் கொல்லைப் புறம் கயிறு எடுக்க வந்தாள். கால் கொழுசுச் சத்தத்திலிருந்து அவள் வருவதை அறிந்த அவன், அவளைத் தன் கைகளுக்குள் கட்டிக் கொண்டான்.

எதற்காக அவளைக் கட்டி அணைத்தான் என்பதை அறியாதவள் போல் அவள் கேட்கிறாள். அவனது அணைப்புக்குள் இருந்த போதும் ஊரார் அறிந்தால் நடக்கக்கூடாதது நடந்துவிட்டது போல் ஒப்பாரி வைத்து அழுவார்கள். இருவரது பெயரும் அதனால் கெட்டுப் போய்விடும் எனத் துடித்தாள்.  ஊரென்ன சொன்னாலும் உறவென்ன சொன்னாலும் அவன் கவலைப்படப் போவதில்லை. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா? ஒரு மாமாங்கமாக [பன்னிரண்டு ஆண்டுளாக] அவளைக் காதலித்து பொறுமையைத் தொலைத்துவிட்டான். மற்றவர்களுக்காக அவளை இழந்துவிட அவன் தயாராய் இல்லை. ஒரு மாமாங்கமாகக் காத்திருந்த காதலர்க்கு மானமேது இப்போது?

உறவினரிடையே காதலுக்காகக் காத்திருந்து, காதலித்தவளுக்காகத் தன்மானத்தை கைவிட்ட அந்தப் புங்குடுதீவுக் காதலனால் காதல் வாழ்கிறது. புங்குடுதீவுக் காதலர் இருவரின் கையணைப்புக்குள் பிறந்த ஆசைக் கவிதை. உங்களுக்காக.

பெண்: கன்னுக்குட்டி காணமென்னு
                      கயிறெடுக்க வந்தவள
           கையிக்கிள்ள கட்டிகிட்ட
                      எண்ணமென்ன மச்சினரே!

ஆண்: கால்கொழுசு  சத்தமிட்டா
                    என்மனசு துடிக்குதல்லோ!
            நாலுபேரு அறிவாரோ
                      என்மனசு துடிப்பெல்லாம்

பெண்: ஊருசன மறிந்தாக்கா
                      ஒப்பாரி வைப்பாக! 
           பேருகெட்டு போயிடுமே
                     பேசாம போய்வாரும்

ஆண்: மாமன்மக என்னுசொல்லி
                    மனசபறி கொடுத்து
           மாமாங்கம் ஆயிடிச்சு
                    மானமேது இப்போது
                                                  - நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
                                            - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

Friday, 19 July 2013

இலஞ்சப் புலிகள்

பக்திச்சிமிழ் - 61

நம் தமிழ் முன்னோர்களால் கைக்கூலி என்றும், கையூட்டு என்றும் அழைக்கப்பட சொல்லை இப்போது இலஞ்சம் என்கின்றோம். இன்றைய உலகில் இலஞ்சம் இல்லாத நாடே இல்லை என்ற அளவுக்கு உலகம் எங்கும் இலஞ்சம் புரையோடிப்போய் இருக்கிறது. சேக்கிழார் மந்திரியாக வாழ்ந்தவர். அதனால் தான் என்னவோ ஒரு சரித்திர ஆய்வாளன் போல அன்றைய மக்களின் வாழ்வியலை தெட்டத் தெளிவாக பெரியபுராணத்தின் பல இடங்களிலும் பதித்து வைத்துள்ளார். அவற்றுள் ஒன்றாக அன்றைய தமிழரும் இலஞ்சம் கொடுத்தார்கள் என்பதையும் பதிவு செய்துள்ளார்.

திருநாவுக்கரசு நாயனார் வரலாற்றைச் சொல்லுமிடத்தில் - திருநாவுக்கரசு நாயனார் வாழ்ந்த காலத்திலேயே [6ம் நூற்றாண்டின் இறுதியில்] இலஞ்சம் இருந்ததை சேக்கிழார் மெல்லக் கோடிட்டுக் காட்டுகிறார். திருநாவுக்கரசு நாயனாருக்கு சூலைநோய் வந்ததால் அதன் வேதனையைப்  பொறுக்க முடியாது, சமணசமயத்திலிருந்து மீண்டும் சைவசமயத்திற்கு மாறினார். அதனை அறிந்த சமணசமயத்தவர்கள் அரசனிடம் சொன்னார்கள். அரசனும் சமணசமயத்தைச் சேர்ந்தவன். அருள் உணர்வும் இல்லாதவன். சமணசமயமே[நெறி] அறிவென்ற மயக்கத்தில்[மருள்] வாழும் அரசன், மந்திரிகளைப் பார்த்துச் “அறிவுத்தெளிவுடைய[தெருள்கொண்டோர்] சமணர்கள் சென்ன தீயவனான திருநாவுக்கரசரைத் தண்டிப்பதற்கு [செறுவதற்கு], பொருளைப் பெற்றுக்கொண்டு விட்டுவிடாமல் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று சொல்கின்றான். அதனை 

அருள்கொண்ட உணர்வின்றி நெறிகோடி அறிவென்று
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமைனோக்கித்
தெருள்கொண்டோர் இவர்சொன்ன தீயோனைச் செறுவதற்குப் 
பொருள்கொண்டு விடாதென்பால் கொடுவாரும் எனப்புகன்றான்”   
                                                   - (பெரியபுராணம்: 1355)
என மந்திரியாய் இருந்த சேக்கிழாரே குறிப்பிட்டுள்ளார்.

மந்திரிமார்கள் இந்தக்காலத்தில் மட்டுமல்ல அந்தக்காலத்திலும் மற்றவர்களிடம் கைக்கூலி வாங்கியே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை ஒரு வரலாற்றுப் பதிவாக சேக்கிழார் தந்துள்ளார். எனவே ஆயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளுக்கு மேலாக மந்திரிமார்கள் இலஞ்சப் புலிகளாக வாழ்ந்து வருகின்றனர் என்பதை நாமும் அறிந்து கொள்வோம்.
இனிதே,
தமிழரசி.

Thursday, 18 July 2013

தமிழிசை - 1மனிதமனம் அழகுணர்ச்சி உடையது. இனிமையை விரும்புவது. அந்த இனிமையை இசையில் கண்டவன் மனிதன். இசை மனிதமனத்தைப் பண்படுத்துகின்றது. மொழியிணர்வைக் கடந்து மனிதரை ஒன்றுபடச் செய்யவல்லதும் இசையே. இசைக்கு மொழிவேறுபாடு கிடையாது. ஆதலால் இவ்வுலகின் தனிமொழி இசையாகும். இசை என்ற சொல்லானது மனதை வயப்படுத்துவது, அசைவிப்பது என்ற கருத்தைத் தரும். அது உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்தது. அதுமட்டுமல்லாமல் இன்பத்தைத் தருவது, எழில்மிக்கது, எழுச்சியைக் கூட்டுவது, வீரத்தை ஊட்டுவது, இறையுணர்வை பெருக்குவது யாவும் இசையேயாகும்.

இசையால் இறைவனை இசைவித்தவன் இராவணன். அதாவது இறைவனை தன்வயப்படுத்தியவன். ஆதலால் சமயகுரவர் நால்வராலும் போற்றப்பட்டவன். சிறுகுழந்தையான சம்பந்தரின் மழழையில் “ஏழிசையாழ் இராவணன்” எனப்பாடப்பட்டவன். திருநீற்றின் பெருமையை கூறிய இடத்திலும் “இராவணன் மேலது நீறு” என்று மந்திரம் செய்திருக்கிறார். அவரின் கண்ணுக்கு மற்றைய எல்லோரது உடம்பிலும் பூசிய திருநீற்றைவிட, இராவணன் உடம்பில் இருந்த திருநீறே தெரிந்திருக்கிறது. ஏன்? அவன் தூய்மையான சிவபக்தன். அத்தகைய சிவபக்தனும், இசைவல்லவனுமான இராவணன் வாழ்ந்த நாடு, நம் நாடு. எனவே இசையைப் போற்றி, இசையோடு [புகழோடு] வாழவேண்டியது எமது கடமை.

திருநாவுக்கரசரும் சூலைநோயின் வயிற்றுவலியால் 
“தேற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு
             துடக்கி முடக்கியிட  
ஆற்றேன் அடியேன்”
எனக் கதறுகிறார். அந்த ஆற்றா நிலையிலும்
“சலம்பூவொடு தூப மறந்தறியேன்
           தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்”
என்று தமிழோடு இசைபாடுவதை தான் மறப்பதில்லை என அழுத்திச் சொல்லி இருக்கிறார். 

அதன் உண்மையை சுந்தரமூர்த்தி நாயனார் 
“நீர் தமிழோடு இசை கேட்கும் 
           இச்சையால் காசு நித்தம் நல்கினீர்”
என்று திருவீழிமிழலையில் இறைவன் திருநாவுக்கரசரின் தமிழிசையைக் கேட்டு, காசு கொடுத்ததைச் சொல்லுமிடத்தில் உறுதிப்படுத்துகிறார். 

தமிழ் இசை அது மிகமிகப் பழமையானது. பழந்தமிழ் உரைஆசிரியர்கள் தரும் உரையிலிருந்து தமிழிலே பல தமிழிசை நூல்கள் இருந்திருப்பதை அறியலாம். இசை நூல், இசை நுணுக்கம், இசைக்கூறு, இசை விளக்கம், பாட்டும் பண்ணும், பாடற் பண்பு, பண் அமைதி, பண்வரி விளக்கம், தாள சமுத்திரம், தாளவகையோத்து, சிற்றிசை, பேரிசை போன்ற பலவகைப்பட்ட இசைநூல்கள் அந்நாளில் இருந்ததை பட்டியலிட்டிருக்கிறார்கள். எத்தகைய உன்னத நிலையில் தமிழிசை இருந்திருந்தால் இத்தனை தமிழிசை நூல்கள் உருவாகியிருக்கும்?

பண்டைத் தமிழ்மக்கள் சுரங்களையும் சுருதிகளையும் இராகம் உண்டாக்கும் விதிகளையும், நன்கு உணர்ந்து பன்னிரண்டாயிரம் இராகங்களைப் பாடிவந்தார்கள் என்று பழந்தமிழ் இசை நூல்கள் கூறுகின்றன. பழந்தமிழ் இசைநூல்களில் அழிந்ததாகக் கருதப்பட்ட பஞ்சமரபு என்ற நூலில் கிடைத்த பாடல்களைத் தொகுத்து ‘பஞ்சமரபு’ என்ற பெயருடன் வெளியிட்டிருக்கிறார்கள். வாத்திய மரபு என்ற நூல் ஓலைச்சுவடியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைத்திருக்கிறது. இன்றைய இசையறிவுக்கும் எட்டாத பல அரிய கருத்துக்களை இந்நூல்கள் தருகின்றன. பண்டைய தமிழிசை நூல்கள் மட்டுமல்ல கல்வெட்டுக்கள், சிற்பங்கள், ஓவியங்கள் யாவுமே தமிழிசையின் தொன்மையைப் புலப்படுகின்றன. இவற்றுக்குக் காரணம் என்ன?  சிந்திப்போமா?

Wednesday, 17 July 2013

அடிசில் 61

கொள்ளுத்தோசை
                                                      - நீரா -தேவையான பொருட்கள்:
கொள்ளு  -  ½ கப் 
பச்சை அரிசி - 1 கப் 
புழுங்கல் அரிசி - 1 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -  3
உப்பு - தேவையான அளவு. 
நல்லெண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை:
1. கொள்ளு, பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, வெந்தயம் நான்கையும் கழுவித் தண்ணீரில் 5 மணி நேரம் ஊறவிடவும்.
2. ஊறியதும் வடித்து மிக்சியில் இட்டு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து பட்டுப்போல் அரைக்கவும்.
3. அரைபட்டு வரும்போது, பச்சை மிளகாயைச் சேர்த்து அரைக்கவும்.
4. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் இட்டு மூடி 6 மணி நேரம் புளிக்கவிடவும்.
5. புளித்ததும் உப்புச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்
6. தோசை வார்க்கும் போது கொஞ்சம் தடிப்பாக வார்க்கவும்.
7. தோசையின் மேல் அரைத்தேக்கரண்டி எண்ணெய் விட்டு புரட்டிப்போட்டு, பொன்னிறமாக வெந்து வரும்போது எடுத்து ஈரமற்ற தட்டில் வைக்கவும்.

Tuesday, 16 July 2013

[12] ஈழத்து......சென்றது...........
நாகநாட்டு அரசனான விசுவகர்மாவின் மகன் மயன். அவனின் மனைவி இளமதி. அவளை அவன் காதலித்த காலத்தில் உலகநாடுகளை சுற்றிவரும் வழியில் அரசமாசுணத்தால் தாக்கப்பட்ட அவனது நண்பன் முகிலனைக் காப்பாற்ற மலைவாசி போல் சித்தன் என்ற பெயருடன்  நாககடம் சென்றான். அங்கிருந்து அறுவை மருத்துவத்தின் பின்னர் போடும் நுதிமயிர்த்துகில் குப்பாயம் தைக்கச் சென்ற கறமன் கற்காட்டில்.........

கடறு மணி

“வெட்சிக்1 கானத்து2 வேட்டுவர் ஆட்டக்3
கட்சிக்4 காணாக் கடமா நல்லேறு5
கடறு6 மணிகிளரச்7 சிதறுபொன் மிளிரக்8
கடிய கதழு9 நெடுவரைப்10 படப்பை11
                                                          - கபிலர்

ஒய்யாரமாக12 கறமன் கடறுக்குள் விரைந்த கரியநிறப்புரவிக்கு மேலிருந்த நத்தன் கடறுப்பகுதிக்குள் செல்வது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்தான். கடறுக்குள் போவது கண்ணாமூச்சி ஆட்டம் போல்  திக்குத் திசை தெரியாது இருந்தது. அதுமட்டுமல்ல ஓவியபுரியின் எல்லையைத் தாண்டியதும் கடறுப் பகுதி எங்கும் காவல்மறவர்13 ஆங்காங்கே நிற்கக் கண்டான். அவர்கள் புரவியை மறித்து, அவனிடம் எங்கே போகிறான் என்பதைக் கேட்டனர். அவனும் மருத்துவர் கொடுத்த காணத்தைக்14 காட்டி, அவருக்கு நுதிமயிர்த் துகில்குப்பாயம் வாங்கப் போவதாகக் கூறி, அங்கு போகும் குறுக்குவழியையும் கேட்டு அறிந்தான். அவர்கள் சொன்ன வழியே புரவியில் சென்றான்.

நுதிமயிர்க் குப்பாயம் தைக்கும் இடத்திற்கு இவ்வளவு காவல்மறவர் தேவையா? காவலுக்கு இந்தக் கடறுகளே போதாதா? இந்தக் கடறுப் பகுதிக்கு எவனாவது வருவானா? இப்போ நாகநாட்டு அரசின் பொருளாதாரம் நுதிமயிரில் தங்கியிருக்கிறதோ என நினைத்துச் சிரித்தான். மிக்க அமைதியாக இருந்த வெட்சிக்காடு சூழ்ந்த அந்தக் கடறுகளில் இருந்த வெண்குரங்குகள் கூச்சல் இட்டு கடறுக்குக் கடறு தாவின. அவனது புரவியும் முன்னே செல்லாது பின்னடித்தது. புரவி இலக்கணம்15 கற்றிருந்த அவனுக்கு அதன் காரணம் புரிந்தது. புரவியைக் கொல்லக்கூடிய ஏதோவொரு மிருகம் மிக அருகேயிருப்பதை உணர்ந்தான். குதிரை கனைக்கவுமில்லை. மருளவுமில்லை. ஆதலால் அந்தமிருகம் புரவியையோ தன்னையோ உடனே தாக்காது என்பதும் அவனுக்கு விளங்கியது. 

குரங்குகளின் கூச்சல் கேட்ட பக்கம் பார்த்தான். கடறு மலையுச்சியின் பக்கமாக இருந்த ஒரு கடறில்  யாளி ஒன்று மலையுச்சிக்கு பாய்வதற்காகப் பதுங்குவது தெரிந்தது. அது பதுங்கி இருந்த விதம் கீழே அவனை நோக்கியும் பாயலாம், மேலேயும் பாயலாம் என்பது போலிருந்தது. யாளி அவனையோ குதிரையையோ பார்க்கவில்லை. எனினும் தனது கீற்றுவாளை16 எடுத்தான். கடறு மலையுச்சிக்கு வாலகனும் அதன் மேல் மயனும் வருவதைக் கண்டான். யாளி மனிதரைக் கொல்வதில்லை. கோபம் வந்தால் அல்லது அதைத் தாக்கினால் அது மனிதரைத் தாக்கும். ஆனால் யானைகளைக் கண்டால் யாளிகளுக்குக் கொண்டாட்டம் தான். மயனை எச்சரிப்பதற்கும் யாளியைத் தன் பக்கம் திருப்பவும் ‘சித்தா...!!!’ எனக் கத்தினான். கத்திக் கொண்டே யாளியின் துதிக்கைக்கு குறிவைத்து கீற்றுவாளை வீசினான். அது பறந்து சென்று துதிக்கையை வெட்டி வீழ்த்தி மீண்டும் அவனிடம் வந்தது.

அந்தக் காலத்தில் கரும்புச் சக்கரை ஆலைகளில் பல்லாயிரக் கணக்கான கரும்புகளைப் பிழிந்து கருப்பஞ்சாறு எடுக்கும் எந்திரங்கள் இயங்கும் போது ஏற்படும் ஒலி ஒரு பக்கம் கேட்கும். கருப்பஞ் சாற்றை சர்க்கரையாக ஆக்கும் எந்திரங்களின் ஒலி மறுபக்கம் கேட்கும். இவ்விரு எந்திர ஒலிகளும் ஒன்றாக மோதி, கரும்புச் சர்க்கரை ஆலைகளில் கேட்கும் பேரொலி போல, யானைகளும் யாளிகளும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு மோதிக்கொள்ளும் கம்பலையும்17 கேட்கும்.

வாலகன் வந்து நின்ற கடறு மலையுச்சியில் யாளி இட்ட முழக்கமும் வாலகனின் பிளிரலும் அந்தக்  கம்பலை போலவேகேட்டது. அந்த ஒலியோடு சித்தா.......!!! என்ற கூக்குரலின் எதிரொலிகளும் கலந்து பேரெதிரொலியாய் கடறு எங்கும் மோதின. அதற்கு முன்பு வாலகன் உடலைச் சிலிர்த்து இடது முன்னங்காலால் உதைத்ததும் அந்த இடத்தில் ‘தொட தொட, கொற கொறவென’ பெரும்பாறை உடையும் ஒலி எழுந்தது. வாலகன் பக்கத்தே இருந்த கடறுக்கல்லை துதிக்கையால் பற்றி இழுத்ததும் அது நின்ற தாங்கு தளம் மெல்லச் சரிந்து ‘கற கறவென’ கீழே இறங்கிச் சென்ற ஒலி, அந்த ஒலிகளுக்கு எல்லாம் மேலும் வலிமை சேர்த்துக் கொண்டிருந்தது.

சித்தா!!! என்ற கூக்குரலைக் கேட்டு மயன் திரும்பிப்பார்த்த இடத்தில் ஒருவன் கரியநிறப் புரவியில் வீற்றிருந்தான். கண்ணிமைக்கும் நேரத்திலும் குறைந்த நேரத்திலேயே மயனால் அவனைப் பார்க்க முடிந்தது. எனினும் மயன் அப்புரவி வீரனை அடையாளம் கண்டுகொண்டான். அப்போது மயனது பார்வையின் எதிரே, எழுந்து யாளிதான் என்பதை மயன் புரிந்துகொள்ள முன்னர், பறந்து வந்த கீற்றுவாள் துதிக்கையை வெட்டி வீழ்த்தியது. வெட்டி வீழ்ந்த துதிக்கை, யாளியின் துதிக்கை என்பதை அதன் செங்கருநிறம் காட்டியது. அத்துதிக்கை வீழ்ந்து கிடந்து புழுப்போல் துடித்தது. துதிக்கை வெட்டி வீழ்த்தப்பட்டதும் யாளி, சினதுடன் பெரிதாக முழங்கிக் கொண்டு, திரும்பிச் செல்லும் கீற்றுவாளை துரத்தியபடி, புரவி வீரனை நோக்கித் தாவிப்பாய்ந்து சென்றது.

வாலகனோடு மயனைத் தாங்கிநின்ற தாங்குதளம் இறங்கிச் செல்லச் செல்ல மயனின் பார்வையை விட்டு யாளியோடு புரவிவீரனும் மறைந்தான். எங்கே போகிறான் என்பதை அறியாதவனாய் பேரிரைச்சல் காதை அடைக்க இருந்த மயனை, பாதாளக்குகைக்குள் இழுத்துச்சென்ற தாங்கு தளம் ‘தடார்’ என்ற ஒலியோடு நின்றது. 

யாளிகள் குகைகளுக்குள் வருவதற்கு அஞ்சும். யாளிகளைக் கண்ட யானைகள் குகைகளுக்குள் சென்று முடங்கும். அதனால் வாலகனும் பாதாளக்குகைக்குள் செல்கிறது என்று மயன் நினைத்தான். அவனின் எண்ணம் பிழையானது என்பதை வாலகனின் அடுத்த செயல் உணர்த்திற்று. 

தாங்குதளம் நின்றதும், முன்னே இருந்த பாறையை தலையால் தள்ளிய வாலகன், அருகே இருந்த கற்றூணைப் பற்றி இழுத்தது. பேரிரைச்சலுடன் முன்னே இருந்த பாறை விலகிச் செல்ல எங்கும் காரிருள் சூழ்ந்தது. அச்சம் என்பதை அறியாத வாலகனும் பெரும் படையை நடைத்திச் செல்லும் படைத்தலைவன் போலத் துதிக்கையைத் தூக்கியபடி, காரிருள் சூழ்ந்த பிலத்துவாரத்தினூடாகச்18 சென்றது.

தன்னைச் சூழ நடப்பவற்றைக் கண்டும் செயலற்றிருந்த மயன், தன்னைப் பாதுகாக்க வாலகன் முயல்வதை உணர்ந்தான். வாலகன் கடறுமலை உச்சியில் இருந்து நிலவறைக்குள் செல்லும் இவ்வழியால் முன்பு சென்றிருக்கிறது. நிலவறைக்குள் செல்வதற்கு அமைக்கும் பெருங்கல் அடார்19 இருந்த இடத்தை அறிந்து, பெருங்கல் அடாரை இயக்கி, தன்னைச் சுமந்து செல்கின்ற வாலகனை வருடினான்.  அதுவும் தனது துதிக்கையால் அவனைத் தடவிக் கொடுத்தது. ஆகாயத்தில் பறக்கும் மயிற்பொறிகளையும், வானவூர்திகளையும் விட உயிருள்ள விலங்குகள் அறிவோடும் உணர்ச்சியோடும் நடந்து கொள்கின்றன என்பதைக் கண்டு தனக்குள்ளே சிரித்தான். 

வெள்ளை வெளேரென்ற வாலகன், பிலத்துவாரத்தினூடாக காரிருள் இடையே மின்னல் கீற்றென வேகமாகச் சென்றது. வாலகன் சென்ற வேகத்திலும் பார்க்க வேகமாக வந்த குளிர்காற்று மயனின் உடலைக்  குளிரவைத்தது. அப்பிலத்துவாரத்தின் முடிவில் பெரும் நீர்வீழ்ச்சி இருப்பதை அது காட்டியது. வாலகன் போகும் போக்கில் போகட்டும் என்று  விடுவிட்ட மயன் அதை உணரும் நிலையற்றவனாய் புரவி வீரனைப்பற்றிய நினைவில் மூழ்கினான்.

எப்போதும் மருந்தும், கவிதையும், ஏடும், நரயமும்20 கையுமாக திரியும் நத்தத்தனா? அவனா? கடறுமலை உச்சியில் நின்ற ஒர் யாளியின் துதிக்கையை வாள் எறிந்து வீழ்த்தினான்? மயனால் நம்பமுடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை. வாள் எறிந்த புரவிவீரன் நத்தத்தன் என்பதில் மயனுக்கு எதுவித சந்தேகமும் இல்லை. அதைத்தான் குடற்குணம் என்பார்களோ!! நத்தத்தனை அறியாமலே அவனைப் பத்து மாதம் சுமந்து பெற்ற நாகவள்ளித் தாயாரின் மாவீரம் இன்று புற்றில் இருந்து சீறி எழும்பாம்பு போல் வெளிப்பட்டிருக்கிறது. 

நாகநாட்டின் தானைகளுக்கு21 வேண்டிய புதுப்புதுக் கருவிகளும், கருவிகளால் துளைக்கமுடியாத கவசங்களும், தோல்களும்22 அவளது ஆலோசனைப்படியே வடிவமக்கப்படுகின்றன. அவளே நாகநாட்டின் வாள்நிலை கண்டவள். நாகநாட்டு அரசனான விசுவகர்மா கூட தனது தமக்கையின் வீரவாளுக்கு எதிர்வாள் தூக்கமாட்டார். அத்தகைய மாவீரை23 அவள். நாகவள்ளித்தாயார், மயன் சிறுவனாக இருந்த காலத்தில் ஒருநாள் நத்தத்தனுக்கும் மயனுக்கும் வாள் பயிற்சி பழகுவதற்கு முன்பு கற்பிக்கப்படும் மெய்ப்பயிற்று24 நிலைகளை கற்பித்தார். 

அப்போது, ‘முதலில் உங்கள் உடலை பாம்பு, பறவை, மீன், பூனை, குதிரை, சிங்கம், யானை, பன்றி போன்ற உயிரினங்களின் வடிவில் வளைத்து நிற்கப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்’ என்று நாகவள்ளித்தாயார் சொன்னார்.

‘என்னம்மா! நாகநாட்டு இளவரசியின் மகனான நானுமா பாம்பு, பறவை, பன்றி போல என் உடலை பழக்கவேண்டும்?’ என்றான் நத்தத்தன்.

‘அப்படி வளைத்து பழக்கினால் தானே வாற்பயிற்சியின் போது பாம்புபோல் சீறிப்பாயவும், பறவைபோல்  பறந்து தாக்கவும் முடியும்’ என்றார் தாயார்.

‘தாயே! எனக்கு நீங்கள் குதிரை, யானை, சிங்கம் போல் எனது மெய்யைப் பயிற்றும் விதத்தைச் சொல்லுங்கள் நான் அதனைப் பயின்று கொள்கிறேன். ஆனால் மனுடனாக இருப்பதே நல்லது’ என்றான்.

அதன் பின்னர் நாகவள்ளித் தாயார் அவனை வற்புறுத்தியதில்லை. அவனும் தன்விருப்பம் போலவே பயின்றான். அவன் சொன்னது போலவே இன்று மானுடவீரனாக ஓர் யாளியைத் தாக்கி, தன்னையும் வாலகனையும் காப்பாற்றி இருக்கிறான்.

அந்த பிலத்துவாரத்தினூடாக வந்த வாலகன் அடுத்தடுத்து இரண்டு பெருங்கல் அடார்களைக் கடந்து, முதலைகள் தினவெடுக்கும் ஓர் அகழியடிக்கு வந்தது. வீரமறவர்கள் கதையுடன் பாய்ந்து வந்தனர். வாலகன் அந்தக் கருங்கல் அகழியின் மேல்பகுதியில் தொங்கிய வடத்தை பிடித்து ஆட்டியது. மணி ஓசை கேட்டது. அகழியின் இரு கரையிலுமிருந்த ஆம்பிமனைகளில்25 இருந்தும் வீரமறவர்கள் வெளிப்பட்டனர். வாலகனைக் கண்டதும் “எங்கே போகிறீர்” என்று ஒருவன் சித்தனைப் பார்த்துக் கேட்டான். வாலகன் மேல் சித்தன் அமர்ந்திருந்ததால் மறவர்களுக்கு அவன் மேல் ஐயம் எழவில்லை.

சித்தனும் நுதிமயிர்துகிலை மறவர்களுக்குக் காட்டி “குப்பாயம் தைக்கும் இடத்திற்கு போகவேண்டும்” என்றான்.

‘இங்கு யாரும் குப்பாயம் தைப்பதில்லையே! குப்பாயம் தைக்கும் இடத்திற்கா? அல்லது நுதிமயிர்த் துகில் குப்பாயம் தைக்கும் இடத்திற்கா?’ என்று கேட்ட மறவன், தொடர்ந்து ‘எல்லோரும் அணியும் குப்பாயம் போல நுதிமயிர்த் துகில் குப்பாயம் தைக்கப்படுவதில்லை. அதைத் தைப்பதற்கெனத்  தயாரிக்கப்பட்ட நூலால் நுதிமயிர்த் துகில் குப்பாயத்தைத் தைத்து, மருந்துப்புகையூட்டிக் கொடுப்பார்கள்’ என்றான்.

தன் தவறை உணர்ந்த சித்தன் “நுதிமயிர்த் துகில் குப்பாயம் தைக்கும் இடத்திற்குப் போகவேண்டும்” என்றான். 

‘அகழியைத்தாண்ட இப்போதே ஏற்பாடு செய்கிறேன். யாரங்கே! உருள் கற்பாலத்தை26 இணையுங்கள்’ என்றான்.

அகழியின் இருகரையிலும் இருந்த வீரமறவர்கள் உருள் கற்பாலத்தின் எந்திரத்தை இயக்க, அகழியின் விளிம்பின் மேற்பகுதியில் இருகரையிலும் இருந்த பெரிய உருள் கற்கள் இரண்டும், இடமும் வலமுமாகச் சுழன்று ஒன்றோடொன்று பொருந்தி உருள் கற்பாலமானது.

சித்தனும் உருள் கற்பாலத்தின் மேல் வாலகனை நடத்திச் சென்றான். அகழியைத் தாண்டியதும் வாலகன் மீண்டும் ஒரு பிலத்துவாரத்தின் வழியாகச் சென்றது. அகலமாயிருந்த அப்பிலத்துவாரத்தை மூடிப் பெருங்கல் அடார் ஏதும் இருக்கவில்லை. காவல் மறவர்கள் ஆங்காங்கே காவலுக்கு நின்றனர்.  சிறிது தூரம் சென்றதும் பிலத்துவாரத்தினுள் காரிருளை நீக்கி ஒளி பரவியது. ஒளிபட்ட இடமெங்கும்  வைர, வைடூரிய, மாணிக்கக் கற்கள் காட்சியளித்தன. நாகநாட்டின் சிறப்புச் செல்வங்களான மலை பயந்த27 மணியும், கடறு பயந்த பொன்னும், கடல் பயந்த கதிர் முத்தும், பல்வேறு பட்ட உடையும், சேறுபட்ட தசும்பும்28 குவிந்து கிடந்தன.

நாகநாட்டின் நிலவறை நிதியம் இந்தக் கடறு பகுதியிலும் இருக்கிறதா? என்னை உலகநாடுகள் சென்று பார்த்து அநுபவப்பட்டு வரச் சொன்ன தந்தை ஏன் நாகநாட்டைப் பார்க்கச் சொல்லவில்லை. நான் நாகநாட்டில் அறியவேண்டியவை இன்னும் இருக்குமோ என மயன் எண்ணினான். நிலவறை நிதியம் இருக்கும் இடமனாதாலேயே அங்கு யாளியை உலாவரவிட்டிருக்கிறார்கள் என்ற உண்மையும் அவனுக்குப் புரிந்தது.
இரத்தினபுரி அருவி 
அருவி நீரோட்டத்தால் தேய்ந்தும் இன்றும் இருக்கும் கடறு 

வாலகனும் நிலவறையினுள் புகுந்து செல்லாது வேறு வழியாகச் சென்று, கொட்டும் அருவியின் ஊடாச் சென்றது. அது அப்படிச் சென்றதால் மயனும் வாலகனும் அருவியில் நனைந்தனர். நல்ல நேரம் நுதிமயிர்த் துகிலை மரைத்தோலால் செய்த பையினுள் போட்டுக் கொடுத்ததால் நனையவில்லை. வாலகன் அருவி வீழும் தடாகத்தில் சென்று படுத்தது. கலையுள்ளங் கொண்ட மயன் எழில் கொஞ்சும் அருவித் தடாகத்தின் இயற்கையை இரசித்தான். தனது ஈர ஆடையைக் களைந்து காயவிட்டான். வாலகனைக் குளிப்பாட்டி தானும் தடாகத்தில் நீந்தினான். இரண்டு ஆண்டுகளின் பின்னர் நாகநாட்டு அருவியில் நனைந்தது தாயின் அரவணைப்பில் இருப்பதுபோல் இருந்தது. வாலகனும் தடாக நீரை எடுத்து மயனின் மேல் துதிக்கையால் சொரிந்து விளையாடியது.

கடறு எங்கும் பரந்து கிடக்கும் மணிகள் மேலே கிளம்பி மிளிர, கற்களிடையே கிடக்கும் பொன் சிதறி ஒளிர மிகவிரைவாக மூன்று புரவிகள் பாய்ந்து வந்தன. முன்னே வந்த கரியநிறப் புரவி இரத்தத்தில் தோய்ந்த நத்தனுடன் வந்தது.

ஒளிரும்.........

சொல் விளக்கம்:
 1. வெட்சி - வெட்சிச் செடி[Ixora coccinea]
 2. கானத்து - காட்டில்
 3. ஆட்ட - துரத்த
 4. கட்சி - புகலிடம்/ பதுங்குமிடம்
 5. கடமா நல்லேறு - காட்டு எருது
 6. நெடுவரை - தொடர்ந்து செல்லும் மலை
 7. கடறு - கற்காடு
 8. மணிகிளர - இரத்தின மணிகள் மேலே கிளம்பிவர
 9. சிதறு பொன் மிளிர - சிதறும் பொன் ஒளிர
 10. கடிய கதழும் - விரைவாக ஓடும்
 11. படப்பை - பக்கம்
 12. ஒய்யாரம் - கர்வம் 
 13. காவல்மறவர் - காவல் காக்கும் வீரர்கள் [வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்; பதிற்றுப்பத்து] 
 14. காணம் - பொற்காசு
 15. புரவி இலக்கணம் - குதிரைகள் எப்படிப்பட்டவை? அவை என்ன செய்யும்? என்பவற்றைக் கூறும் நூல். [‘நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி,’  புரவி நூல்கூறும் முறைப்படி காற்றுப்போல் செல்லும் குதிரை;  அகநானூறு: 314]
 16. கீற்றுவாள் - சந்திரப்பிறையின் கீற்றுப்போல், கீற்றுவாள் 1200 வளைவுடைய வாளாகும்.
 17. கம்பலை - ஆரவாரம்; [‘அணங்குடை யாளி தாக்களிற் பலவுடன் கணஞ்சால் வேழம் கதழ்வுற்று ஆங்கு எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை’ - பெரும்பாணாற்றுப்படை: 258 - 260] 
 18. பிலத்துவாரம் - பாதளத்தினூடாகச் செல்லும் வழி.
 19. பெருங்கல் அடார் - கற்பொறி. [இயக்கத் தெரியாது இயக்கினால் அப்பொறிக்குள் அகப்படுவர்.] [‘பொறியறிந்து மாட்டிய பெருங்கலடார்’ - புறம்: 19;
 20. நரயம் - எழுத்தாணி [நர் + அயம் = நரயம்] [நர் - கூர்/நுண்மை; அயம் - வெந்த இரும்பு]
 21. தானைகளுக்கு - படைகளுக்கு 
 22. தோல்களும் - கேடகங்கள்
 23. மாவீரை - மிகுந்த வீரம் உள்ளவள் 
 24. மெய்ப்பயிற்று - உடலைப் பழக்குதல். [இன்றைய களரியிலும் மெய்ப்பயிற்று நிலை தொடர்கிறது.]
 25. ஆம்பிமனை - காளான் போன்ற வீடுகள் 
 26. உருள் கற்பாலம் - உருளும் கல்லால் ஆன பாலம்
 27. பயந்த - இருந்து பெற்ற
 28. தசும்பு - செம்பு [சேறுபட்ட தசும்பு - புறம்: 377]