அதிகாலை நேரம் காளமேகப்புலவர் ஓர் அழகிய பூந்தோட்டத்தினூடாக நடந்து சென்றார். பூக்களில் தேன் உண்ணும் வரிவண்டொன்றும் அவர் செல்லும் வழியில் இருந்த மலர்களில் பறந்து பறந்து தேன் முகர்ந்து சென்றது. அதனைப் பார்த்து இரசித்த காளமேகப் புலவர் பறந்து பறந்து மலர்களின் தேன் உண்ட வரிவண்டிடம் கேள்வி கேட்டார். அவர் புலவராதலால் கேள்வியும் பாடலாகவே வந்தது.
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது
என்ன பாடலைவாசிக்கும் போது நாக்கு சுளுக்குதா? மதுவுண்ட போதையில் ரீங்காரமிடும் வண்டிடம் கேள்வி கேட்பதானால் அக்கேள்வியும் ஒருவகை ரீங்காரம் போல் இருந்தால் தானே வரிவண்டுக்கு விளங்கும். எனவே வரிவண்டின் மொழியில் காளமேகப்புலவர் கேள்வி கேட்டிருப்பார் என்று நினைக்க வேண்டாம். அது தமிழ் நாட்டு வரிவண்டல்லவா! அதற்கு தமிழ் நன்கு விளங்கும். ஆதலால் தமிழிலேயே கேள்வி கேட்டிருக்கிறார். பாடலைக் கொஞ்சம் பிரித்துப் பார்ப்போம்.
தத்தி தாது ஊதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைத் அத்தாது ஊதிதி
தித்தித்த தித்தித்த தாது எது தித்தித்தது
எத்தாதோ தித்தித்த தாது?
வண்டே! தாவிச்சென்று [தத்தி] மகரந்தத்தை [தாது] ஊதி, மகரந்தத்தை ஊதிய பின்னர் [தாதூதித்] திரும்பவும் தத்திப் போகிறாய் [தத்துதி], துத்தி என்று ரீங்காரம் செய்தபடி [துத்தி] இன்னொரு பூவிற்குச் செல்கிறாய் [துதைதி] அந்தப்பூவை நெருங்கி [துதைத்து] அதன் மகரந்தத்தை [அத்தாது] உண்கிறாய் [ஊதி], உனக்குத் தித்திக்கத் தித்திக்க இனிமையாய் [தித்தித்த தித்தித்த] இருந்த பூ [தாது] எது? நீ சுவைத்த தாதுக்களில் [தித்தித்த தாது] இனிமையைத் தந்தது [தித்தித்தது] எந்தப்பூந்தாதோ? [எத்தாதோ]
என்று பழகு தமிழில் காளமேகப்புலவர் வரிவண்டிடம் கேள்வி கேட்டார். அதற்கு அது என்ன பதில் சொல்லியிருக்கும்?
குறிப்பு:
காளமேகப் புலவரை தமிழின் ‘த’கரவரிசையை மட்டும் வைத்துப் பாட்டு எழுதும்படி கேட்டதற்கு அவர் இப்பாடலை எழுதியதாகாக் கூறுவாரும் உளர்.
இனிதே,
தமிழரசி.
க வரிசையிலும் ஒரு பாடல் உள்ளது. அதையும் பகிருங்கள்
ReplyDeleteஎழுதுகிறேன்.
Deleteதமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.
Deleteகாக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).
இது கீழே கொடுக்கப்பட்டுள்ள திரு. நடராச தீட்சிதர் என்பாரின் வலைதளப் பக்கத்தில் இருந்து எடுத்து பகிரப்படுகிறது. அன்னாருக்கு நன்றி!
நி.த. நடராஜ தீக்ஷிதர்
yanthralaya@yahoo.co.in
94434 79572
N.D. NATARAJA DEEKSHIDHAR
காக்கைக்கா..... என்ற காள்மேகப் புலவரின் பாடலுக்கான விளக்கத்தை நான் 9 December 2013 அன்று பகிர்ந்துள்ளேன். அதனை பார்க்க...
Deletehttps://inithal.blogspot.com/2013/12/blog-post_9.html
தமிழ் தேனினும் சுவைக்க சுவைக்க இனிமையானது
ReplyDelete