குறள்:
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும் - 885
பொருள்:
உறவு கொண்டு நெருங்கி வாழ்பவர்களிடையே உட்பகை தோன்றினால் அது இறந்து போகும் நிலையை உண்டாக்கும் தீமை பலவற்றைத் தரும்.
விளக்கம்:
மாற்றார் பகைவரானால் நாம் அதற்குப் பயப்படத் தேவையில்லை. எனெனில் அவர்களுக்கு எமது பலம், பலயீனம் பற்றி ஏதும் தெரியாது. அவர்கள் எமது எதிரிகள், பகைவர்கள் என அறிந்து கொள்வதால் அவர்களிடம் நாம் விளிப்பாய் இருப்போம். ஆனால் எம்மொடு நன்கு பழகுவோரிடம் என்றும் நாம் விளிப்பாய் இருப்பதில்லை.
எம்முடன் சேர்ந்து வாழ்வோருக்கும் எமக்குமிடையே ஏதோ ஓர் காரணத்தால் உட்பகை தோன்றினால் எம்மொடிருந்தே எம்மை அடியோடு அழிக்க வழிதேடுவர். உட்பகை கொண்டோருக்கு எம்மையும் எமது பொருள்களையும் அழித்தால் மட்டும் போதாது. எம் குழந்தைகளை சந்ததியினரை அழித்தே இன்பம் காண்பர். அதனாலேயே வள்ளுவர் இறன்முறையான் ஏதம் பலவும் தரும் என்று வேதனைப்பட்டுள்ளார். இறன்முறை என்று வரிசையாக அடுத்தடுத்து வரும் இறப்புக்களைக் காட்டுகிறார். அடுத்தடுத்து வரும் இறப்புக்களும் ஒன்று இரண்டல்ல பலவாகவரும் என்பதை ஏதம் பலவும் தரும் என்று சுட்டுகிறார்.
நம்மோடு வாழ்ந்து நம்மை ஆட்சிசெய்தோரே கல்விகற்கச் சென்ற நம் பிள்ளைகளின் மேல், விமானத்தில் வந்து கொண்டுகள் பொழிந்தனர். அக்குண்டுகள் நம் பிள்ளைகளின் பலரது உடலை அடையாளம் காணமுடியாது சிதறடித்ததே! குற்றுயிரும் குலை உயிருமாக, செஞ்சோலை என்ற பெயருக்கேற்ப அந்த இடமும் நமது குழந்தைகளின் குருதியால் செஞ்சோலையானது. தாய்மையின் தலைவாசலில் நின்று வருங்காலத்தில் எம் இனத்தை தாங்கவேண்டிய பெண்ணினம் பிஞ்சுகளாய் அழிக்கப்பட்டனர்.
ஒன்றாக வாழ்வோரிடையே உட்பகை தோன்றினால் பல இறப்புக்களை பார்க்க நேரிடும் எனக்கூறும் இக்குறளுக்கு நாம் நம் நெஞ்சில் சுமக்கும் செஞ்சோலை மலர்களே சாட்சி.
No comments:
Post a Comment