Thursday, 24 October 2013

ஆசைக்கவிதைகள் - 77

பட்டு செஞ்சி தந்தவரே!
(பெருக்கமரத்தில் நார் எடுத்தல் - Photo: source: Royal Pavilion, Museums & Libraries)

போத்துக்கீசரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் நம் நாட்டிற்கு வருவதற்கு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பட்டு உடுத்தித் திரிந்தார்கள். அவர்கள் தாழை, பெருக்கு போன்றவற்றின் நார்களில் இருந்து பட்டு நெய்திருக்கிறார்கள். அவற்றை இன்றும் தாழை நார்ப்பட்டு என்றும் பெருக்குப் பட்டு என்றும் அழைப்பதிலிருந்து அறியலாம். ஈழத்திலும் பெருக்கு மர நாரில் பட்டு நெய்து உடுத்ததை நெடுந்தீவின் நாட்டுப்பாடலாலும் மாந்தையின் நாட்டுப்பாடலாலும் அறியலாம். 

நெடுந்தீவுக் கன்னியொருத்திக்கு அவளின் காதலன் பெருக்கம் பட்டையில் நார் எடுத்து, பட்டு செய்து கொடுத்தான். அவள் அவனிடம் அந்தப் பட்டை, பொழுது சாய்ந்த கருக்கல் நேரம் வந்து தனக்கு கட்டிவிட்டு போகும்படி கேட்கிறாள்.

பெண்: பெருக்குப் பட்டையில
                      பட்டுசெஞ்சி தந்தவரே
             கருக்கலுக்கு வந்து
                      கட்டிவிட்டு போனாலென்ன  
                                                            -  நாட்டுப்பாடல் (நெடுந்தீவு)
                                                           - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

ஆனால் மாந்தையில் இருந்த ஒரு கன்னிப் பெண்ணைச் சுற்றிச்சுற்றி வாலிபன் ஒருவன் திரிந்தான். பெருக்குப் பட்டில் பட்டுச் சேலை செய்து அவளுக்குக் கொடுக்கப் பார்த்தான். கருக்கல் நேரம் வந்து கட்டிக் கொள் என்றான். கருக்கு மட்ட வண்டிகட்டிக்கொண்டு அவள் போகும் வயலுக்கும் வந்தான். அவனின் தொல்லை தாங்க இயலாமல் அவளைச் சுற்றித்திரியும் வாலிபனிடம் இப்படியெல்லாம் வந்தால் எருக்கம் பால்விட்டு கஞ்சி காய்ச்சி கொடுத்து அவனைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாள்.

பெண்: பெருக்குப் பட்டெடுத்து பட்டுசெஞ்சி தந்தாலு
            கருக்கலுக்கு வந்துநின்னு கட்டிகிடு என்னாலு
            கருக்குமட்ட வண்டிகட்டி கழனியடி வந்தாலு
             எருக்குபாலு கஞ்சிசெஞ்சி எட்டிநின்னு தந்திடுவே
                                                                   -  நாட்டுப்பாடல் (மாந்தை)
                                                                   - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

இந்த நாட்டுப் பாடல்கள் இரண்டும் பெருக்குப் பட்டில் செய்த பட்டை, பெண்கள் கருக்கல் நேரத்தில் [பகல் முடிந்து மாலை தொடங்கும் நேரத்தில்] உடுத்தார்கள் என்ற செய்தியை மிகத்தெளிவாகச் சொல்கின்றன. வண்டியில் கருக்கு மட்டை கட்டியிருந்த செய்தியையும் மாந்தை நாட்டுப்பாடல் அறியத்தருதிறது.

No comments:

Post a Comment